அரியலூர் : ராம்கோ சிமெண்ட் ஆலை விரிவாக்கத்தை எதிர்க்கும் பகுதி மக்கள் !
கார்ப்பரேட்டின் பணியாளாகச் செயல்படும் மாவட்ட நிர்வாகம் !

ராம்கோ சிமெண்ட் லிமிடெட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம், அரியலூர் ரெட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட முனியங்குறிச்சி கிராமத்தில் உள்ளது. இதை விரிவாக்கம் செய்வது தொடா்பான கருத்துக்கேட்புக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை (12.08.2021) அன்று நடைபெற்றது. அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கத் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி ஆலைக்கு ஆதரவான கும்பல்களை ‘கருத்துக்கேட்பு’ கூட்டத்தில் நுழைத்து ஆலை விரிவாக்கத்திற்கு ஆதரவாகப் பேசி கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான ராம்கோ சிமெண்ட், புதிய சந்தைகளை கைப்பற்றுவதற்காக, 2022 நிதியாண்டுக்குள் 20 MTPA-ஐ (ஆண்டுக்கு 20 மில்லியன் டன்) உற்பத்தி செய்வதற்கு இலக்கு வைத்துள்ளது. இதற்காக ஆண்டுக்கு 3,600 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

ஆந்திரத்திலும் ஒரிசாவிலும் உள்ள தனது ஆலைகளில் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது ராம்கோ நிறுவனம். இவ்விரிவாக்கத்தின் மூலம் புதிய சந்தைகளை 2021-2022 நிதி ஆண்டுக்குள் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.

படிக்க :
♦ ராம்கோ ராஜாவுக்கு அடியாளாக போலிக் கம்யூனிஸ்டு தளபதிகள் !
♦ ராம்கோ குரூப்பின் முதலாளித்துவ பயங்கரவாதம்

கொரோனா ஊரடங்குக்கு இடையிலும்  2021-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர இலாபம் 54% அதிகரித்து 169 கோடியாக இருந்தது. கொரோனா ஊரடங்குக்கு முன்னால் மார்ச் 2020 வரையிலான முதல் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.214 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இந்தியாவின் தெற்கு, கிழக்கு சந்தைகளைக் கைப்பற்றுவதற்காக இந்தியா முழுவதும் ஆலை விரிவாக்கத்தையும் ஒருங்கிணைந்த ஆலையையும் நடத்த திட்டமிட்டுள்ளது ராம்கோ நிறுவனம். அதன் ஒரு பகுதியாகத்தான் தமிழகத்தில் ரூ.636 கோடியில் ஆலை விரிவாக்கத்தைச் செய்யவுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே உள்ள, இந்நிறுவனத்தின் 75 சுரங்கங்களினால் நீர் ஆதாரங்களும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து சரக்குகளை எடுத்துச் செல்லும் லாரிகள் வேகமாகச் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அரியலூர் பகுதியில் 150 பேருக்கு வேலை வாய்ப்புப் தருவதாக வாக்குறுதியளித்துவிட்டு வெறும் 30 பேருக்கு மட்டுமே வேலை கொடுத்துள்ளது. மேலும் ஏற்கனவே 63.60 ஹெக்டேர் நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் 31 ஹெக்டேர் நிலத்தைச் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து சுரங்கங்களை அமைத்துள்ளது ராம்கோ நிறுவனம்.

இவற்றை எதிர்த்து, நீர் மாசடைந்துவிட்டதால் மினரல் வாட்டர் சப்ளை ஏற்பாடு செய்து தருமாறும், லாரிகளை வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துமாறும் அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் விரோதமாகச் செயல்படும் ராம்கோ நிறுவனத்திற்கு எதிரான மக்களின் சிறு கோரிக்கைகளையும் கூட காது கொடுத்துக் கேட்காத மாவட்ட நிர்வாகமோ, இன்று ஆலை விரிவாக்கத்துக்காக ஆட்சியர் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திமுடித்து தனது வர்க்கச் சேவையைச் செய்துள்ளது அதிகார வர்க்கம்.

மக்களுக்கு விடியல் தருவதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசின் கீழ் செயல்படும் மாவட்ட ஆட்சியரும் போலீசுத்துறையும் இந்நிறுவனத்துக்கு எதிராகப் பேசக்கூடிய மக்களை அடக்கி உட்கார வைத்துள்ளனர். மொத்த அரசுக் கட்டமைப்பும் ராம்கோ நிறுவனத்திற்குத் துணையாக நிற்கிறது. பெரும்பாலான ஊடகங்களும் இதைப் பெரிய செய்தியாகக் கூட வெளியிடவோ பேசவோ இல்லை.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் கீழ், எந்தக் கட்சியின் ஆட்சி வந்தாலும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்குச் சேவை செய்வதே நடக்கிறது என்பதையும், மாவட்ட நிர்வாகம், போலீசு உட்பட அரசு நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளுக்காக மக்களை அடக்கி ஒடுக்குவதையே தொழிலாகக் கொண்டுள்ளன என்பதையும் இச்சம்பவம் நமக்கு மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.


வினோத்
செய்தி ஆதாரம் : Constructionworld, The Hindu, Financialexpress

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க