பு.ஜ.தொ.மு சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்ட இணைப்பு சங்கத்தின் குடும்ப விழா !
டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் பத்தாவது ஆண்டு விழா குடும்ப விழாவாக 19.09.2021- தேதியன்று கொண்டாடப்பட்டது. இதில், தொழிலாளர்களும், தொழிலாளர்களின் குடும்பத்தினரும், சமூக நண்பர்களும், இணைப்பு / கிளைச் சங்க தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் யோகராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் மு. சரவணன் அவர்கள் தலைமை  உரையாற்றினார். அவர் தனது தலைமையுரையில், “இந்த பத்தாவது ஆண்டு விழாவை நாம் எட்டுவதற்கு தொழிலாளர்களும் முன்னாள் நிர்வாகிகளும் தங்களால் முடிந்த அளவுக்கு உழைப்பும், அர்ப்பணிப்பும் செய்து உள்ளனர். அவர்களை இந்த நேரத்தில் நாங்கள் நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று கூறினார்.

This slideshow requires JavaScript.

பொதுச்செயலாளர் தோழர் ப.சக்திவேல், துணைத்தலைவர் தோழர் தனசேகர் ஆகியோர் உரையாற்றினர். முத்தாய்ப்பாக, சங்கத்தின் முதல் நிர்வாகக்குழு உறுப்பினர்களும், அடுத்தடுத்த ஆண்டுகளில் சங்கத்தின் நிர்வாகிகளாக பொறுப்பேற்று வழிநடத்திய ஏனைய நிர்வாகிகளும் தங்களது போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
கடந்த பத்தாண்டுகளில் நாம் எவ்வாறு சங்கத்தை வழிநடத்தி சென்றோமோ அதேபோல எதிர்வரும் காலங்களில் மேலும் மேலும் நாம் சங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை உயர்த்திப்பேசினார்கள்.
அதனைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளை / இணைப்புச் சங்க தோழர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். அதில், 10 ஆண்டுகளில் சங்கத்தின் நடவடிக்கை மற்றும் சங்கம் ஒரு குடும்ப விழாவாக நடத்துவதை வாழ்த்திப் பேசினார்கள்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்ட குழு தலைவரும், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான தோழர் ஆ.கா.சிவா அவர்கள் தனது வாழ்த்துரையில் “தொழிலாளி வர்க்கம் தொழிற்சங்கம், ஆலையைத் தாண்டி சமுதாயத்தில் நாம் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளுக்கு எதிராகப் போராட வேண்டும்” என்பதை விளக்கிப் பேசினார்.
அடுத்ததாக, சங்கத்தின் ஆலோசகரும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினரும், சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டக் குழு செயலாளருமான தோழர் ம.சரவணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
தனது வாழ்த்துரையில், தொழிலாளர்கள் ஏட்டறிவு எழுத்தறிவை தாண்டி அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு நாம் அரசியல் அறிவை வளர்த்துக் கொள்கின்றோமோ அந்த அளவுக்கு நம்முடைய விடுதலை சாத்தியம் அடையும் என்பதை விளக்கி பேசினார்.
இறுதியாக, டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவரும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் முன்னாள் மாநில பொருளாளருமான தோழர் பா.விஜயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
சிறப்புரையில், “இந்த சங்கத்தை தனது குடும்பத்தில் ஒன்றைபோல நான் பார்க்கின்றேன். தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பாக சங்கப் பணியாற்றினர்; சங்கத்தை நேசித்தார்கள்; ஒற்றுமையாக இருந்தார்கள், தலைமையின் வழிகாட்டுதலை தவறாமல்  கடைபிடித்தார்கள். இதுவே சங்கத்தின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது” என்பதை அழுத்தமாக பதிவு செய்தார்.

This slideshow requires JavaScript.

இனி வரும் காலங்கள் மிகவும் கடுமையான அடக்குமுறை கொண்டதாக இருக்கும். தொழிலாளர் நல சட்டங்கள் அனைத்தும் இந்த அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தியுள்ளது. நாம் முன்புபோல தற்போது மிகவும் கடுமையான போராட்டங்களை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு தொழிலாளர்கள் மிகவும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். அது வரலாற்று கடமை என்பதை விளக்கிப் பேசி இறுதியாக அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொழிலாளர்களின் துணைவியர் சிலர் தங்கள் பெருமிதத்தை வெளிப்படுத்தி உரையாற்றினார்கள். அதற்கு பிறகு, சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் பா.விஜயகுமார் அவர்களுக்கு சங்கத்தின் 10 ஆண்டுகால நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து நினைவு பரிசு வழங்கினார்கள். ஆலோசகர் தோழர் ம.சரவணன் அவர்களுக்கு சங்கத்தின் முதல் செயற்குழு உறுப்பினர்களும், தற்போதைய செயற்குழு உறுப்பினர்களும் இணைந்து நினைவுப்பரிசு வழங்கினார்கள்.
பிறகு சங்கத்தின் 10 ஆண்டுகால நிர்வாகிகளுக்கும், சங்கத்தின் முதல் செயற்குழு உறுப்பினர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிய கிளை / இணைப்பு சங்க தோழர்களுக்கும்,  தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக, சங்கத்தின் பொருளாளர் தோழர் வேல்முருகன் அவர்களது நன்றியுரையுடன்  குடும்ப விழா நிறைவு பெற்றது.
இவண்,
டி.ஐ.மெட்டல் பார்மிங் தொழிலாளர்கள் சங்கம்.

இணைப்பு:
பு. ஜ. தொ. மு (மாநிலஒருங்கிணைப்புக் குழு)
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க