தனியார் கல்வி நிறுவனத்தின் உழைப்புச் சுரண்டல்
ஒரு ஆய்வு மாணவரின் அனுபவம் !
டந்த வாரம் நண்பரை சந்திப்பதற்காக கிண்டி இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள டீ கடையில் காத்திருந்தேன். எனக்கு அருகில் நின்றிருந்த ஒரு இளைஞர் ஆய்வு உதவித்தொகை வரவில்லை, சர்டிபிகேட் தரமாட்டேங்கிறான் என்று கோபமாக தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆராய்ச்சிப் படிப்பில் ஏதாவது பிரச்சனையா என்று பேச ஆரம்பித்தேன்.
“என் பெயர் ஜெகதீஷ் சார், எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ராமாபுரம் வளாகத்தில் (SRM-IST, Ramapuram Campus), இயற்பியல் துறையில் முழுநேர ஆராய்ச்சி படிப்பு படிக்கிறேன். இந்த வருடம் ஜனவரியில் அங்கு சேர்ந்தேன். என்னோடு சேர்த்து 48 ஆய்வு மாணவர்கள் சேர்ந்தோம். மாணவர்கள் சேர்க்கைக்கான விளம்பரத்தில் மாத உதவித் தொகை ரூ. 25,000 என குறிப்பிட்டிருந்தனர்.
படிக்க :
SRM பல்கலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை : நிர்வாகத்தைப் பணிய வைத்த மாணவர்கள்
எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவுக்கு மோடியின் தபால்துறை சீர்வரிசை
மாணவர் சேர்க்கை சமயத்தில் மாதம் ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நிர்வாகம் வழங்கும் என்றும் கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தது. எங்களுக்கு கொடுக்கப்பட்ட கடிதத்திலும் ரூ.25,000 ஆய்வு உதவித்தொகை எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், கல்லூரியில் சேர்ந்து ஏழு மாதங்கள் ஆகியும் எங்களுக்கு மாத உதவித் தொகையை தராமல் இழுத்தடித்தனர். இது பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோதெல்லாம் அடுத்த மாதம் வரும் என்று தள்ளிக் கொண்டே சென்றனர்.
ஆய்வு மாணவர்கள் வாரத்திற்கு 9 மணி நேரம் இளங்கலை மாணவர்களுக்கான ஆய்வக வகுப்புகளை எடுக்கவேண்டும் என்று ஆரம்பத்தில் கல்லூரி நிர்வாகம் கூறியது. சில மாதங்களுக்கு பிறகு கூடுதலாக, பி.டெக் பாடத்திட்டத்தின் ஒரு முழு பாடத்தை  மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என்று கூறினர். இது ஒரு உதவி பேராசிரியருக்கான   வேலையாகும். இதை ஆய்வு மாணவர்களைக் கொண்டே முடிக்க கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.
எஸ்.ஆர்.எம். – ராமாபுரம் வளாகம்
இந்த பணிச்சுமைக்கிடையே எவ்வாறு ஆராய்ச்சி செய்வது என்று நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினோம். இதனை நாங்கள் மறுத்தபோது ஆய்வு மாணவர்கள் கட்டாயம் பாடம் எடுக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியது. கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதமாகியும் ஆராய்ச்சி உதவித்தொகையும் தரவில்லை, மேலும் கூடுதல் வகுப்புகள் போன்ற தேவையற்ற பணிச் சுமைகளால் நாங்கள் அனைவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானோம்.
இதற்கிடையில், இரண்டாவது செமஸ்டர் கல்விக் கட்டணம் மற்றும் முதல் செமஸ்டர் தேர்வு கட்டணத்தை 10 ஜூலை 2021-க்கு முன் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால், உதவித்தொகை பிரச்சனை மற்றும் கடுமையான பணிச்சுமை ஆகியற்றுக்கு தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கல்விக் கட்டணத்தை செலுத்த மறுத்தோம். இதைத் தொடர்ந்து, எந்தவொரு முறையான காரணத்தையும் குறிப்பிடாமல் உதவித்தொகை தொகை ரூ.25,000 லிருந்து ரூ. 16,000 ஆக குறைக்கப்படும் என்று நிர்வாகம் வாய்மொழியாக அறிவித்தது. கூடவே ஆண்டுக்கொரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்க வேண்டும் இல்லையெனில் உதவித் தொகை 16,000-மும் நிறுத்தப்படும் என்று நிர்வாகம் கூறியது.
மாத உதவித்தொகை (ரூ. 25,000-/மாதம்) மற்றும் ஆய்வக வசதிகள் போன்ற காரணங்களுக்காகத்தான் நாங்கள் இக்கல்லூரியில் சேர்ந்திருந்தோம். ஆனால், கல்லூரி நிர்வாகத்தின் இந்த அறிவிப்புகள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இது குறித்து எஸ்.ஆர்.எம் கல்லூரியின் ராமாபுரம் வளாக(SRM-IST, Ramapuram Campus) நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவொரு பலனும் இல்லாததால், முதன்மை வளாகமான எஸ்.ஆர்.எம். – காட்டாங்குளத்தூர் வளாக (SRM-IST, Kaatankulathur Campus) நிர்வாகத்திடம் நாங்கள் முறையிட்டோம். அவர்களிடமிருந்தும் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. நான், என்னுடைய சக ஆராய்ச்சி மாணவர்களோடு சேர்ந்து எங்களுடைய பிரச்சனைகளை தொகுத்து (ஆதாரங்களோடு) எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர், துணைவேந்தர், பதிவாளர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பினோம். அவர்களிடமிருந்தும் பதில் வரவில்லை.
நான் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். இனி அங்கு படிப்பினைத் தொடர முடியாது என முடிவு செய்தேன். எங்களுடன் சேர்ந்த 48 பேரில் 7 மாணவர்கள் ஏற்கனவே ஆய்வு படிப்பிலிருந்து வெளியேறிவிட்டனர். சக மாணவர்களிடம் இது குறித்து பேசியபோது, இதற்குமேல் என்ன செய்வது? பொறுமையாக காத்திருக்க வேண்டியதுதானே என்றனர். இறுதியாக, நானும் மற்றொரு ஆய்வு மாணவரான சுரேஷும் ஆய்வுப் படிப்பிலிருந்து வெளியேறுவதாக முடிவு செய்து 26 ஜூலை 2021 அன்று எங்களுடைய விடுப்புக் கடிதத்தைக் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்தோம்.
எஸ்.ஆர்.எம். – காட்டாங்குளத்தூர் வளாகம்
அதில், மேற்கூறிய பிரச்சனைகளின் காரணமாக ஆய்வு படிப்பிலிருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டிருந்தோம். கூடவே எங்களுடைய கல்விச் சான்றிதழ்களையும் (original certificates) திருப்பி தருமாறு கேட்டிருந்தோம். ஆனால், நிர்வாகமோ சொந்தக் காரணங்களினால் படிப்பிலிருந்து வெளியேறுவதாகக் குறிப்பிட்டால் மட்டுமே கல்விச் சான்றிதழ்களை திருப்பித் தருவோம் என்றது.
பொதுவாக, பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக வாங்குகிறோம் என்று காரணம் கூறும் தனியார் கல்லூரிகள் அவற்றைத் திருப்பி தராமல் தங்களிடமே வைத்துக்கொள்கின்றன. இது பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நட்பக் கல்விக்குழு (AICTE) விதிகளின்படி, தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால், தனியார் கல்லூரிகள் தாங்கள் செய்யும் முறைகேடுகளை மறைப்பதற்காக பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களை மிரட்டுவதற்கான கருவியாகவே இதனைப் பயன்படுத்துகின்றனர். இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திடமோ UGC அல்லது AICTE இடமோ புகார் அளித்தாலும் பெரிதாக நடவடிக்கை எடுப்பதில்லை.
இறுதியாக, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் மேற்குறிப்பிட்ட முறைகேடுகள் குறித்த  கடிதத்தை (ஆதாரங்களையும் இணைத்து) பல்கலைக்கழக மானியக் குழு (UGC), உயர்கல்வி அமைச்சகம் (MoE), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) ஆகியவற்றுக்கு பதிவு அஞ்சலில் (Registered Post) அனுப்பினோம். கூடவே மின்னஞ்சலும் செய்திருந்தோம். அக்கடிதத்தில் எங்களது ஏழு மாத உதவித்தொகை மற்றும் கல்விச் சான்றிதழ்களையும் பெற்றுத் தரும்படி கோரிக்கை வைத்திருந்தோம்.
மேலும், பொய்யான வாக்குறுதிகளை கூறி மாணவர் சேர்க்கை நடத்தி 40-க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களின் வாழ்க்கையை சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ள பல்கலைக்கழகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியிருந்தோம். ஆனால் UGC-யோ, SRM பல்கலைக்கழகத்தின் மீது எந்தவொரு குறிப்பான நடவடிக்கையும் எடுக்காமல் ஒப்புக்காக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு பிரச்சினையை முடித்துவிட்டனர்” என்றார் அந்த ஆய்வு மாணவர்.
* * *
ஒரு ஆய்வு மாணவருக்கு ஒன்பது மணிநேரம் ஆய்வக வகுப்பு, ஒரு பாட வகுப்பு, வருடத்திற்கு ஒரு ஆய்வுக் கட்டுரை என்பது சாத்தியமற்ற இலக்கு. இதில் உதவிப் பேராசிரியர்களோ இதைவிட கூடுதலான பணிச்சுமையோடு பணியாற்றுகின்றனர்.
படிக்க :
தனியார் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உரிமைகள் வழங்கு !
உயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் !
உயர்கல்வியில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று NEP-2020 சொல்லுகிறது. இதன் விளைவாக NIRF, NAAC மதிப்பீடுகளில் ஆராய்ச்சிக்கு என கணிசமான மதிப்பெண்கள்  ஒதுக்கியுள்ளனர்.  NIRF, NAAC-ல் உயர் இடத்தை பிடிப்பதின் மூலம் ‘கல்விக் கொள்ளையை’ சுகந்திரமாகவும் விரிவாகவும் செய்ய முடியும் என்பதால் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக்கு தற்போது முக்கியத்துவம் தருகின்றனர்.
பொய்யான வாக்குறுதிகளை அளித்தும் சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்தும் ஆய்வு மாணவர்களையும் பேராசிரியர்களையும் கசக்கி பிழிவதன் மூலமே இப்பல்கலைக்கழகங்கள் தங்களை முன்னணி உயர்கல்வி நிறுவனங்களாக காட்டிக் கொள்கின்றன. இந்த கட்டற்ற சுரண்டலானது உயர்கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோரின் கூட்டு நடவடிக்கையாலேயே சாத்தியப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இதனை அம்பலப்படுத்தாமல் இத்தகைய சுரண்டலுக்கு தீர்வு கிடையாது !
ஸ்டீபன்
CCCE-TN

குறிப்பு : இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாணவரின் பாதுகாப்பு கருதி முதலில் புனைப்பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த மாணவரின் ஒப்புதலின் பெயரில், அவரது உண்மையான பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.