ந்தியா முழுவதும் இன்றுவரை பகத் சிங் எனும் பெயர் புரட்சியின் அடையாளமாகப் பார்க்கப்படுவதன் காரணம் என்ன ? பகத் சிங் நாடாளுமன்றத்தில் குண்டு வீசியது காரணமா ? அல்லது சாண்டர்ஸ்ஐ கொலை செய்தது காரணமா ? இவைதான் பகத்சிங்ஐயும் அவரது தோழர்களையும் கண்டு பிரிட்டிஷ் அரசு மிரண்டதற்கான காரணங்களா ? கண்டிப்பாக கிடையாது. இந்த இரண்டு சம்பவங்களால் மட்டுமே அவர் புரட்சியாளராக கொண்டாடப்படவில்லை.
தோழர் பகத் சிங்கின் 114-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த வேளை வரையில் எந்த ஒரு வெகுஜன ஊடகங்களோ, முதலாளித்துவ அரசியல் கட்சிகளோ அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்ற உண்மையை வாய்திறந்து சொன்னதில்லை. அவரை ஒரு தேசியவாதியாக, தீவிரவாதியாக மட்டுமே காட்டிக் கொண்டிருக்கின்றன. அதனால் தான் பகத் சிங்கால் அதிகம் வெறுக்கப்பட்ட இந்து மகாசபை உள்ளிட்ட மதவாதக் கும்பல்களும் கூட இன்று தைரியமாக அவருக்கு உரிமை கொண்டாடுகின்றன.
விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்ற பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்த பகத் சிங்கிற்கு இயல்பாகவே அடிமைத்தனத்தை வெறுத்து எதிர்க்கும் போக்கு வளர்ந்து வந்தது.
பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த பகத்சிங்கின் மனதில், ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்த தேசத்தின் விடுதலையை சாதிக்க வேண்டும் என்ற உணர்வை தீவிரமாக வளர்த்துக் கொண்டார் பகத்சிங்.
பதினாறாம் வயதில் திருமணம் செய்யுமாறு குடும்பத்தினர் வலியுறுத்திய நிலையில், அதனை எதிர்த்தார். தொடர்ந்து குடும்பத்தில் இருந்து அழுத்தம் வந்தபோது வீட்டை விட்டு வெளியேறினார் பகத் சிங் !
படிக்க :
தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே !
மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்
தேசத்தின் விடுதலை தான் இலக்கு. என்ன செய்வது? எப்படி செய்வது ? எதுவும் தெரியாது. 1923-ம் ஆண்டு தனது 16-ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறிய பகத் சிங் 1924-ம் ஆண்டு கான்பூருக்குச் செல்கிறார். கான்பூரில் பி.கே. தத், சிவ வர்மா ஆகிய தோழர்களை சந்திக்கிறார். அதே ஆண்டில் இந்தியப் புரட்சியை இலட்சியமாகக் கொண்ட இந்துஸ்தான் ரிபப்ளிக்கன் அசோசியேசன் எனும் அமைப்பில் இணைந்தார்.
இந்திய சமூகத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக கவனித்தார், பகத்சிங். 1926-ம் ஆண்டில் லாகூருக்குச் சென்று இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசனின் இளைஞர் அமைப்பான நவ ஜவான் பாரத் சபாவை உருவாக்கினார். அப்போது அவருக்கு வயது வெறும் 18 தான்.
வெள்ளையர்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான அமைதியான, ‘சுதந்திரப்’ போராட்டத்தை காங்கிரஸ் நடத்திவந்த காலகட்டம் அது. எதிலும் கேள்வி கேட்டு விடை தேடும் இளைஞரான பகத்சிங், காந்தியும் காங்கிரசும் அமைதி வழியில் பிரிட்டிஷாரிடம் கோரிக்கை விடுக்கும் சுதந்திரத்தின் மீது ஒரு கேள்வியை எழுப்பினார். “யாருக்கான சுதந்திரம் அது ? “ என்பதுதான் அக்கேள்வி.
சமூகத்தின் அசைவுகள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக கவனிப்பதும், சமூகத்தின் அனைத்து அசைவுகளையும் ஆய்வதும், ஒவ்வொரு கணத்தின் மீதும் கேள்வி எழுப்பி அதற்கு விடை தேடுவதும்தான் பகத் சிங் என்ற தேச பற்றாளனை புரட்சியாளனாக மாற்றியது.
பிரிட்டிஷுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களை இந்துத்துவ மற்றும் முசுலீம் மதவாத கிரிமினல் கும்பல்கள் பிளவுபடுத்துவதை கவனித்து அவற்றைக் கடுமையாகச் சாடுகிறார். இந்தக் காலகட்டங்களில் பகத் சிங்கிற்கு மார்க்சியம் அறிமுகம் ஆகிறது. புரட்சி தனது இளமைக்கால கம்பீரத்தோடு ரசியாவில் ஆட்சி அரியணையில் இருந்த காலகட்டம் அது. தமது அமைப்பின் பெயரை இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி என்று மாற்றியமைக்கிறார். உழைக்கும் மக்களின் அதிகாரமே தீர்வு என்பதை முன் வைக்கிறார்.
இந்தியாவில் மதவாத பிரச்சினைகளின் அடிப்படை எங்கிருந்து வருகிறது என்பதையும், சாதிய தீண்டாமை எவ்வளவு இழிவானது என்பதையும் இளைஞர்கள் மத்தியில் விரிவாக விளக்கினார் பகத் சிங். எச். எஸ். ஆர்.ஏ அமைப்பின் சார்பாக கீர்த்தி எனும் பத்திரிகையில் தொடர்ந்து இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்து கட்டுரைகள் எழுதினார் பகத்சிங்.
மார்க்சியம் அவருக்கு வர்க்கப் பார்வையை ஊட்டியது. மதவாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரே வழி வர்க்கப் போராட்டங்களே என தனது 20-வது வயதில் பிரகடனப்படுத்தினார் பகத்.
பகத்சிங் நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிவிட்டு, அங்கு வீசிய பிரசுரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது அவரது அரசியலை பறைசாற்றியது.
இன்று மோடி கும்பல் கொண்டுவந்திருக்கும் தொழிலாளர் விரோத ஒடுக்குமுறைச் சட்டங்களைப் போல அன்று பிரிட்டிஷ் அரசாங்கம் தமது முதலாளிகளுக்குச் சாதகமான வகையில் தொழிலாளர் விரோத சட்டங்களைக் கொண்டுவந்தது. வீதியில் இறங்கிப் போராடிய தொழிலாளர்களின் மீது போலீசு வெறிநாய்களைக் கொண்டு தாக்குதல் தொடுத்தது வெள்ளை ஏகாதிபத்திய அரசு.
தொழிலாளர்களின் பிரச்சினை நாடாளுமன்றத்தில் ஒலிக்கவில்லை. அது அவர்களுக்கு தேவையானதும் இல்லை. அதனால் தான், ”கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்காக இது உரத்த குரலைத் தேர்ந்தெடுக்கின்றது” என தனது பிரசுரத்தை துவங்குகிறார் பகத்சிங்.
வெள்ளை கொள்ளைக்காரனிடமிருந்து ஆட்சியைப் பறித்து இங்கிருக்கும் முதலாளிகள் மற்றும் பண்ணையார்களின் கைகளில் ஆட்சியை கொடுப்பது தமது நோக்கமல்ல என்பதை தமது ஒவ்வொரு கட்டுரைகளிலும் கடிதங்களிலும் தெளிவாக கோடிட்டுக் காட்டுகிறார் பகத் சிங். உழைக்கும் மக்களின் விடுதலைதான் தமது தேவை என்பதையும் அதைப் புரட்சியின் மூலம் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையும் அறுதியிட்டுப் பறைசாற்றுகிறார் பகத் சிங்.
அதை நோக்கியே கேள்வி எழுப்பினார். அதற்காக இந்தச் சமூகத்தின் நிகழ்வுகளை உற்று நோக்கினார். அதற்காகவே தேடித் தேடி படித்தார். அதற்காக திட்டமிட்டு செயல்பட்டார். இந்தப் பண்புதான் ஒரு தியாகி என்பதிலிருந்து புரட்சியாளன் என்ற தகுதிக்கு பகத் சிங்கை உயர்த்தியது.
தன்னை தூக்கிலிருந்து விடுவிக்க தனது தந்தை எடுத்த அத்தனை முயற்சிகளையும் கடுமையாகச் சாடி மறுக்கிறார். ஈவிரக்கமற்று தனது தந்தையை விமர்சிக்கிறார். தனது விடுதலைக்காக வெளியில் நடக்கும் போராட்டங்கள் அனைத்தையும் அறிந்திருந்தார் அவர். தனது மரணம் அந்த மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். அது பல நூறு பகத்சிங்களை உருவாக்கும் என்று நம்பினார். தூக்குமேடையை புரட்சியின் விளைநிலமாக மாற்றினார் பகத் சிங்.
படிக்க :
செளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் !
இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, பஞ்சாப் மாகாண கவர்னருக்கு பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகிய மூவரும் தங்களை அரசுக்கு எதிராக போர் தொடுத்தவர்கள் என்ற வகையில், தூக்கிலிடாமல் இராணுவத்தால் சுட்டுக் கொல்ல வேண்டும் எனக் கூறி கடிதம் எழுதினர். அதில்,
விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும் அவர்தம் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் வரை இந்தப் போர் தொடரும்; தொடர வேண்டும். அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளியாக இருக்கலாம். அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள், இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம், அல்லது கலப்பற்ற இந்திய முதலாளிகளாகக் கூட இருக்கலாம்.” என்று குறிப்பிட்டிருந்தனர்
இன்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒட்டுண்ணிகளாலும், இந்துராஷ்டிரக் கனவுடைய விசப் பாம்புகளாலும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது. நமது போரும் தொடர்கிறது !
நாம் தேசப் பற்றாளர்களாக இருக்கலாம். சமூகத்தை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்கும் புரட்சியாளனாக மாற வேண்டுமெனில், பகத்சிங் புரட்சியாளனாக மாறிய வழிமுறையைப் பின்பற்றுவதுதான் ஒரே வழி !

சரண்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க