‘Dying for an iphone’ APPLE, FOXCONN AND THE LIVES OF CHINA’S WORKERS
லகின் பொருள் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் இலக்கு. இந்தியாவில் முதலீடு செய்யப்படும் மூலதனங்களுக்கு எந்தப் பாதகமும் வராது. உலகச் சந்தைக்காக அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி, உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்று கூறி “மேக் இன் இந்தியா” திட்டத்தை மோடி முன்வைத்தார்.
தன்னுடைய கார்ப்பரேட் சேவைக்காக தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றும் பொருட்டு, இந்தியாவில் நடைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலம் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை  இயற்றி, அவற்றைச் சட்டமாக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது மோடி அரசு.
மறுபுறம் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஆதரவாக, சீனாவிலிருந்து பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவில் தொழில் தொடங்கப் போகின்றன என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மோடியின் துதிபாடிகள்..
சீனாவில் உள்ள பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி சீனத் தொழிலாளர்களை சுரண்டுகின்றன? இந்நிறுவனங்கள் இந்தியாவிற்கு நுழைந்தால் அச்சுரண்டல் எப்படி நம் நாட்டு தொழிலாளர்கள் மீது தீவிரமடையும் என்பதை எந்த நிறுவனமயமாக்கப்பட்ட பத்திரிக்கைகளும் தொழிலாளர்களுக்கு கூறுவதில்லை.
சீனாவில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்களின் நிலைமைகளையும், அவர்கள் மீதான சுரண்டல்களையும் படம் பிடித்து காட்டுகிறது இப்புத்தகம்.
படிக்க :
மக்கள் சீனக் குடியரசு – 72 : சீனா சிவப்பானது எப்படி ?
கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
சீனாவில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் நடந்த தொடர் தற்கொலைகளை மையமாக வைத்து ‘Dying for an iphone’ APPLE ,FOXCONN AND THE LIVES OF CHINA’S WORKERS என்ற புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் நிலைமைகள் ஏதோ இங்கிலாந்தில் தொழிற் புரட்சி ஏற்பட்ட காலத்தில் நடந்தது அல்ல. இது நடப்பது நாம் வாழும் காலத்தில்தான்.
இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் கிராமப்புறத்திலிருந்து வந்து நகர்ப்புறத்தில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்கின்றனர். நெரிசலான தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் தங்கி இருக்கின்றனர். இதற்காக அவர்களின் சம்பளத்திலிருந்து வாடகை பணம் கழிக்கப்படுகிறது . அமெரிக்காவிற்காக 24 மணி நேரமும் உற்பத்தி நடக்கிறது.
தொழிலாளர்கள் தங்கள் மீதான துஷ்பிரயோகம், குறைந்த ஊதியம், அலுமினியத் தூசுகள் போன்ற இராசயன நச்சு கழிவுகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
சீனாவின் பல தொழிற்துறை நகரங்களில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
பாக்ஸ்கான் நிறுவனம் முதன்மையாக ஆப்பிள் நிறுவனத்திற்காக உற்பத்தி செய்கிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமில்லாமல் ஆல்பபெட், பிளாக்பெர்ரி, சிஸ்கோ, டெல், புஜிட்சு, க்யூ ஹப், ஜபம், இன்டெல், லஃப், மைக்ரோசாப்ட், நிண்டெண்டோ, பானோசோனிக், பிலிப்ஸ், சாம்சங், சோனி மற்றும் தோஷிபா போன்ற நிறுவனங்களுக்கும் மேலும் சீன நிறுவனங்களான லெனோவா, ஹவாய், ZTE போன்றவைகளுக்கும் உற்பத்தி செய்கிறது. பாக்ஸ்கான் iPhones, iPads, iPods, Macs, TVs, Xboxes, PlayStations, Wii U’s, Kindle, printer போன்றவற்றை அசெம்பிள் செய்கிறது. இந்நிறுவனம் 2018-ம் ஆண்டில் சீனாவின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் 4.1% பங்கை கொண்டுள்ளதோடு 175 பில்லியன் டாலரை வருவாயாக பெற்றுள்ளது.
’Dying for an iphone என்ற புத்தகத்தின் ஆசிரியர்களான ஜென்னி சான், மார்க் செல்டன் மற்றும் புன் ங்காய், சீன நகரங்களான ஷெஞ்ஜன், ஷாங்காய், குன்ஷான், ஹாங்சோ, நாஞ்சிங், தியான்ஜின், லாங்ஃபாங், தையுவான் மற்றும் வுஹான் ஆகிய நகரங்களில் உள்ள ஃபாக்ஸ்கானின் முக்கிய உற்பத்தித் தளங்களில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் பல வருடங்களாக ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையிலேயே இப்புத்தகத்தை எழுதியுள்ளனர்.
தொழிலாளர்கள் எப்போதும் கண்காணிப்பிலேயே வாழ்கின்றனர். அவர்கள் அந்நிறுவனத்தின் பாதுகாப்பு படைப்பிரிவால் காவல் காக்கப்படுகிறார்கள். அடுக்கு மாடியிருப்பிலான தங்கும் விடுதிகளில் ஒரே அறையில் எட்டு முதல் பத்து தொழிலாளர்கள் தூங்குகிறார்கள். முன்பு இந்த அடுக்குமாடி குடியிருப்பு விடுதிகளில் ஏற்பட்ட தற்கொலை நிகழ்வுகளை தடுப்பதற்காக தற்போது வலைகள் மற்றும் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன.
ஒரேபகுதியில் இருந்து வரும் தொழிலாளர்களோ அல்லது ஒரே இடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களோ ஒரே அறையில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றனர். திருமணமான ஆணும் பெண்ணும் பணியாற்றினால் அவர்களை ஒரே அறையில் தங்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை. பிற தொழிலாளர்களை அறைக்குள் கூட்டி வருவதற்கே பல கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதித்திருக்கிறது.
தங்குமிடமும், பணியிடமும் அருகருகே இருப்பது நிறுவனத்திற்கு 24 மணிநேர அதிவேக உற்பத்திக்கு வழிவகுக்கிறது. பிற மனிதர்களின் அன்பு இல்லாமை, ஒரு திரைச்சீலை, பங்க் வடிவிலான படுக்கை, சிறிய அறை இது தான் தொழிலாளர்கள் வாழ்விடம் என்று தொழிலாளர்களின் வாழ்நிலையை குறிப்பிடுகிறார்கள் இந்த நூலின் ஆசிரியர்கள்.
ஒரு மணி நேரத்திற்கு இரண்டு டாலர்கள் அல்லது மாதத்திற்கு சராசரியாக 390 டாலர்கள் வழங்கப்படுகிறது. நிறுவன வளாகத்திலேயே ஏ.டி.எம் இயந்திரம் மூலம் இதை பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் 10-12 மணி நேரம் வேலை. மேலாளர்கள், லைன் லீடர்கள், போர்மேன் போன்றோர்கள், தொழிலாளர்களை வேலை நேரத்தின் போது பேச விடாமல் கண்காணிக்கின்றனர். அசெம்பிளி லைனில் மெதுவாக வேலை செய்தால் இவர்கள் கண்டிப்பார்கள். குறைபாடுள்ள பொருட்களை உற்பத்தி செய்தால் தொழிலாளர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
ஒரு தொழிலாளர் ஆலையின் விதிகளை மீறினால், சக தொழிலாளர்கள் மத்தியில் சுய விமர்சனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தகுதி மதிப்பீட்டில் ‘D’ grade பெறும் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர்.
அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை கிடையாது. ஒவ்வொரு இரண்டாவது வாரத்தில் ஒரு விடுமுறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை விடுமுறை எடுக்கலாம். அவ்வளவுதான். இது போக தொழிலாளர்கள் பகலிலிருந்து இரவு ஷிப்டிற்கு மாற வேண்டியது இருக்கும்.
காலை ஏழுமணிக்கு வேலைக்கு போகும் தொழிலாளர்களின் அன்றாட நிலைமைகளை இந்நூலின் ஆசிரியர்கள் விளக்குகின்றனர். “அங்க அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தொழிற்சாலையின் உள்ளே செல்ல தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலை வாயிலில் நுழைந்தவுடன் அடுத்தடுத்த கண்காணிப்பு கருவிகளால் கண்காணிக்கப்படுகின்றனர். ஒரு நாட்டிற்குப் பாதுகாப்பு படை இருப்பது போல, பாக்ஸ்கானுக்கு ஒரு தனி படை இருக்கிறது” என்று குறிப்பிடுகின்றனர்.
ஆலையின் உள்ளே நுழைந்தவுடன், தொழிலாளர்கள் சந்திக்கும் (சகித்துக் கொள்ளும்) வழக்கமான சடங்கைப் பற்றி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
“ஷிப்ட் தொடங்கும் போது, ஆரம்பக் கூட்டத்தில் மேலாளர் தொழிலாளர்களிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் (How are you?) என்று கேட்பார். இதற்கு தொழிலாளர்கள் Good! Very good! Very very good! என்று சத்தமாக கத்த வேண்டும். இது தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக நடக்கும் பயிற்சி என்று கூறப்படுகிறது.
ஷிப்ட் ஆரம்பிக்கும் முன்பு மூன்று முறை விசில் ஒலிக்கும். முதல் விசில் ஒலிக்கும் போது தொழிலாளர்கள் தங்கள் இருக்கைகளை சரிசெய்ய வேண்டும். இரண்டாவது விசிலின் போது தொழிலாளர்கள் தங்கள் கையுறைகள் மற்றும் உபகரணகங்களை அணிய வேண்டும். மூன்றாவது விசிலில் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும்.” என்று இந்நூலில் குறிப்பிடுகின்றனர்.
“வேலை நேரத்தின் போது நாங்கள் பேசக்கூடாது, சிரிக்க கூடாது, தூங்க கூடாது, சாப்பிடகூடாது. இது தொழிற்சாலையின் முதல் விதி” என்கிறார் லேசர் சால்டிரிங் தொழிலாளி.
ஒரு லைன் லீடர் கூறும் போது “பத்து நிமிடங்களுக்கு மேல் கழிவறைக்கு சென்று வந்தால் அத்தொழிலாளி வாய்மொழி எச்சரிக்கைக்கு உள்ளாக்குப்படுவார். வேலை நேரத்தில் பேசினால் எழுத்துப்பூர்வ எச்சரிக்கை விடப்படும்“ என்கிறார்.
“இந்நிறுவனத்தில் கையில் நகம் வளர்த்து இருந்ததற்காக நான் என்னுடைய மதிப்பெண்களை இழந்தேன். இவ்வாறு மதிப்பெண்களை இழப்பது என்னுடைய போனசு இழப்புக்கு வழிவகுக்கும்” என்கிறார் இங்குள்ள பெண் தொழிலாளி. எப்படியெல்லாம் நூதனமாக தொழிலாளர்களின் காசைத் திருடித் தின்றிருக்கிறது இந்தக் கும்பல் ?
“என் நண்பன் ஒரு தடவை மொபைல் போனில் ஒரு திருகாணியை அசெம்பிள் செய்யாமல் விட்டதற்காக, பாக்ஸ்கான் சேர்மனின் பொன்மொழி ஒன்றை முந்நூறு தடவை எழுத நிர்ப்பந்திக்கப்பட்டான்” என்கிறார் அப்பெண் தொழிலாளி.
பாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை என்பது சோர்வாகவும், திரும்ப திரும்ப அதே வேலையே செய்வதாகவும், மன அழுத்தத்தை தருவதாக உள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஒரு ஐ போனில் நூற்றுக்கு மேற்பட்ட பாகங்கள் உள்ளன. ஒவ்வொரு தொழிலாளியும் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்காக வேலை செய்ய வேண்டும். .இவர்கள் இந்த செயலை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் தினசரி பத்து மணிக் கணக்கில், மாதக் கணக்கிலும் இந்த இயக்கத்தை தொடர வேண்டும்.
இந்தப் புத்தகத்தில் அசெம்பிளி லைனில் விஷுவல் இன்ஸ்பெக்டராக வேலைபார்க்கும் பெண் தொழிலாளி, தனது நேர்காணலில், “மதர்போர்டு ஓவனில் இருந்து என் கைகள் மதர்போர்டை எடுக்க நீளும். என் தலை இடமிருந்து வலது பக்கமாக இயங்கும். கண்கள் இடமிருந்து வலது பக்கமாகவும், மேலிருந்து கீழாகவும் குறுக்கீடு இல்லாமல் அசையும். நான் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான தடவை இதை செய்கிறேன். என் மூளை துருப்பிடிக்கிறது” என்கிறார்.
அமெரிக்காவின் டெய்லரிசம், முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாளிகளின் மூளைகளில் இது போன்ற இரசாயன மாற்றத்தை தான் ஏற்படுத்துகின்றன போலும் !
தான் பார்க்கும் வேலை நிலைமைகளை பற்றி விளக்கும் போது , “இந்நிறுவனத்தில் ஒவ்வொரு விநாடியும் இலாபத்தை நோக்கியே எண்ணப்படுகின்றன. 1. மதர்போர்டை நான் எடுக்க வேண்டும்; 2. அதன் லோகோவை ஸ்கேன் செய்ய வேண்டும்; 3. அதை ஒரு பையில் இட வேண்டும்; 4. அதன் மீது லேபிளை ஒட்ட வேண்டும்; 5. அதை அசெம்பிளி கன்வேயரில் வைக்க வேண்டும். இதை நான் பத்து விநாடிக்குள் செய்ய வேண்டும். ஒவ்வொன்றையும் இரண்டு விநாடிக்குள் செய்து முடிக்க வேண்டும்” என்கிறார் ஒரு தொழிலாளி.
“தொழிற்சாலை எஞ்சினியர்கள் ஸ்டாப் வாட்ச்களோடு அசெம்பிளி லைனுக்கு வரும் போது நாங்கள் மெதுவாக வேலை பார்க்க ஆரம்பிப்போம். நான் 7விநாடிகளில் 8 ஸ்குருக்களை ஒரு ஸ்மார்ட் போனில் அசெம்பிள் செய்வேன். அவர்கள் வரும் போது நாங்கள் வேகமாக வேலை செய்தால் நாங்கள் இதை மாதக்கணக்கில் தொடர வேண்டும். அதற்காக நாங்கள் அவர்கள் வரும் நேரம் பார்த்து மெதுவாக வேலை பார்போம் என்கிறார் ஒரு தொழிலாளி. இந்த எஞ்சினியர்களுக்கு எங்களுடைய வலது கையோ அல்லது இடது கையோ ஒரு விநாடி கூட சும்மா இருந்து விடக்கூடாது. வலது கை எலக்ட்ரானிக் ஸ்குரு டிரைவரை இயக்கும் போது இடது கை ஸ்குருக்களை எடுக்க வேண்டும்” என்று அங்குள்ள உற்பத்தி திறனுக்காக வடிவமைக்கப்பட்ட டெய்லரிசத்தை விவரிக்கிறார் ஒரு தொழிலாளி.
லைன் லீடர்களின் வேலை நிலைமைகள் பற்றியும் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன்ர.
“நாங்கள் ஒரு ஷிப்ட் உற்பத்தியில் 99.65% உற்பத்தி பொருட்களை தரத்தோடு உற்பத்தி செய்ய வேண்டும். இது ஒரு ஷிப்டில் 4 தரமற்ற பொருட்களாக இருக்கலாம். மாணவப் பயிற்சியாளர்கள் அதிகமாக வந்ததால் நாங்கள் இந்த சதவீதத்தை சாத்தியமாக்குவதற்கு மிகவும் திணறுகிறோம்.”
“எங்கள் மேலதிகாரிகள் அவர்களின் கோபத்தை எங்கள் மீது காட்டுகிறார்கள்; நாங்கள் தொழிலாளிகள் மீது காட்டுகிறோம். தொழிலாளிகள் தங்கள் கோபத்தை யார் மீது காட்டுவார்கள்? இதுதான் அவர்களை கட்டத்தின் மீதிலிருந்து குதிக்கத் தூண்டுகிறதோ?” என்கிறார் ஒரு லைன் லீடர்.
“வேலை முடிந்த பிறகு உங்கள் கண்கள் உற்சாகமிழந்து, உணர்ச்சியிழந்து, உயிரற்று போய், உங்கள் முகமும் தலையும் அழுக்கோடு இருந்தால் நீங்கள் ஒரு பாக்ஸ்கான் தொழிலாளி” என்கிறார் ஒரு தொழிலாளி.
“அங்குள்ள வேலை சுற்றுப்புறமும் மோசமானதாக இருக்கிறது. பாலிசிங் இயந்திரம் அலுமினிய தூசுகளை உமிழ்கிறது. இந்த தூசு கண்ணில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு கண்ணீரை வரவைக்கிறது. நுண்ணிய அலுமினிய தூசு தொழிலாளர்களின் முகங்களிலும் ஆடைகளிலும் பூசுகிறது” என்கிறார்கள் ஆசிரியர்கள். ஒரு தொழிலாளி, “நான் பாக்ஸ்கானில் அலுமினிய தூசுகளை ஒரு vacuum cleaner போல சுவாசிக்கிறேன்” என்கிறார். ஆலையின் சன்னல்கள் மூடப்பட்டிருப்பதால் தொழிலாளர்களுக்கு சுவாசப் பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
செங்குடு பகுதியில் உள்ள ஆலையில் மே20, 2011 அன்று தீப்பிடிக்க இந்த அலுமினியத் தூசு வழிவகுத்தது. எலெக்டிரிக் சுவிட்ச் போடும் போது அலுமினிய தூசுகள் மூலம் தீப்பிடித்து நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இது நடந்த ஏழு மாதங்களுக்கு பின்பு ஷாங்காயில் உள்ள ஐ போன் உற்பத்தி ஆலையில் அலுமினியத் தூசு மூலம் தீப்பிடித்து 61 தொழிலாளிகள் கடுமையாக தீக்காயத்திற்கு உள்ளாகினர். பலர் நிரந்தர ஊனமுற்றனர் என்று சுட்டிக் காட்டுகின்றனர், இந்நூலின் ஆசிரியர்கள்.
ஒரு ஷிப்ட்டுக்கு ஆயிரக்கணக்கான தொடுதிரைகளை தொழிலாளிகள் சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு தொழிற்சாலை ஆல்கஹாலை விட வேகமாக ஆவியாகும் என்–ஹெக்சேன் என்ற வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதை ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தும் போது இந்த வேதிப் பொருளால் கண் எரிச்சல், தசைப் பிடிப்பு, தலை வலி, நடுக்கம், மங்கலான பார்வை போன்ற உடல்ரீதியிலான பிரச்சினைகள் தொழிலாளிகளுக்கு ஏற்படுகிறது. சுவாசக் கருவிகள் அணிந்து நல்ல காற்றோட்டமான இடத்தில் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். இந்த வசதி இல்லாமல் தொழிலாளர்கள் நோய் வாய்ப்பட்டுள்ளனர். இது குறித்து பலரும் குரல் எழுப்பவே இந்த வேதிப் பொருள் ஆலை வளாகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த பாக்ஸ்கான் ஆலைகள் அதிகளவு உலோகங்கள் மற்றும் கழிவு நீரை ஆறுகள் மற்றும் நிலத்தடி நீரில் கலக்கச் செய்கின்றன. ஆலைகளுக்கு அருகில் உள்ள ஆறுகள், கருப்பு நிறத்தில் ஓடுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிகின்றன. குடிநீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
முன்பு அசெம்பிளி லைனின் நவீன ரோபாக்கள் தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்றியது. அவர்கள் ஏற்கெனவே பார்த்த சால்டிரிங், வெல்டிங், ஸ்பிரே, தர பரிசோதனை, PCB அசெம்பிளி போன்ற வேலைகள் ரோபோக்கள் மூலம் செய்யப்பட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிரந்தர தொழிலாளர்கள் ரோபோக்கள் மூலம் வேலை இழப்பதில்லை.
அத்தொழிலாளர்கள் பெருகி வரும் மாணவப்பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவன் மூலம் வெளியேற்றப்படுகிறார்கள். பாக்ஸ்கானில் ஆயிரக்கணக்கான தொழிற்பயிற்சி மாணவர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்கள் நன்னடத்தை காலத்தை கடந்தாலும் 400 யுவாங் கூட வழங்கப்படுவதில்லை.
தொழிலாளர்களின் போராட்டங்கள் பாக்ஸ்கானில் நடந்து வருவதை பற்றி ஆசிரியர்கள் கூறும் போது ஆப்டிக்ஸ் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் ஹூபேயின் கிழக்கு ஏரியின் உயர் தொழில்நுட்ப மேம்பாட்டு மண்டலத்தில், ஜனவரி 3, 2012 அன்று 150 பாக்ஸ்கான் தொழிலாளர்கள் தங்களுடைய ஊதிய பிரச்சினை மற்றும் கட்டாய இடமாற்றங்களை எதிர்த்துப் போராடியுள்ளனர். தங்கள் கோரிக்கைகளை மேலாளர் ஏற்காவிட்டால் தாங்கள் கட்டத்தின் மேலிருந்து தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளனர்.
வேலை நிறுத்தங்கள் , போராட்டங்கள் பற்றி சீன அரசு இரகசியம் காத்தாலும் அவை இப்போது அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன என்கிறார்கள் நூல் ஆசிரியர்கள். வேலை நிறுத்தங்கள் விரைவாகவும் கொடூரமாகவும் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகளாலும், காவல் துறையினராலும் ஒடுக்கப்படுகின்றன. வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தும் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
தொழிற்புரட்சியின் காலக்கட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் நிலைமைகளை விட தற்போதைய தொழிலாளி வர்க்கம் உரிமைகளை இழந்து நிற்கிறது.
தொழிற்சங்களுக்குத் தடை, அதிக வேலை நேரம், வேலைப் பறிப்பு, தொடர் கண்காணிப்பு, விதிமீறல்களுக்கு தண்டனை, பல நோய்களின் உருவாக்கம், வயது முதிர்ந்த தொழிலாளிகள் நசுக்கப்படுதல் இன்னும் பிற சுரண்டல்கள் தீவிரமாயிருக்கிறது.
படிக்க :
ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !
பழைய ஐ – போன்களின் செயல்திறனை குறைக்கும் 420 ஆப்பிள் நிறுவனம் !
உலகில் நடக்கும் வர்த்தக உடன்படிக்கை அனைத்தும் தொழிலாளர்கள் சுரண்டலின் தீவிரத்தை அதிகமாக்குவதையே முனைப்பாக்குகிறது.. இலட்சக்கணக்கான வேலைகள் வளரும் நாடுகளிலிருந்து மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் மீதான தீவிர சுரண்டல் சீனாவில் மட்டும் இல்லை; உலகம் முழுவதும் தீவிரமாயிருக்கிறது. இந்த வர்க்க சுரண்டலில் அமெரிக்க, ஜப்பானிய, ஐரோப்பா பனிப்போர் எல்லாம் இல்லை. உலக முதலாளிகள், முதலாளித்துவ வர்க்க உணர்வோடு ஓரணியில் நிற்கிறார்கள்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் அந்நாடுகளிலிருந்து உற்பத்தி தளங்களை இடம் மாற்ற செய்யும் போது தன் நாட்டு தொழிலாளர்களை கைவிடும். அதே சமயத்தில் மற்ற நாடுகளின் தொழிலாளர்களை சுரண்டுவதில் கூட்டுச் சேர்கின்றன. அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களும், சீன உற்பத்தி நிறுவனங்களும் தொழிலாளர்களை நெருக்கமான தங்கும் விடுதிகளில் உலக பெருந்தொற்று காலகட்டத்தில் அடைத்து வைத்திருக்கின்றனர்.
தொற்று நோய்க்காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் தன் தயாரிப்புகளை அதிகளவில் விற்று இலாபம் ஈட்டியுள்ளது. ஜனவரி 2021- மார்ச் 2021 வரையிலான காலாண்டில் மட்டும் இதன் இலாபம் இரட்டிப்பாகியுள்ளது. ( 23.6 பில்லியன் டாலர்). வருவாய் 54% உயர்ந்துள்ளது.
இது இன்று சீன தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் என்று நாம் ஒதுக்கி விட முடியாது. நாளை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இலாப வேட்கைக்காக குறைந்த கூலி பெறும் இந்தியா போன்ற நாடுகள் நோக்கி தங்கள் உற்பத்தி தளங்களை மாற்றலாம். அப்போது மோடி அரசும் கார்ப்பரேட் கூட்டுகளும் தொழிலாளர்களை சுரண்டுவதில் ஓரணியில் நிற்பார்கள்.
நாம் அவர்களை எதிர்க்க வேண்டுமானால் ஒப்பந்த தொழிலாளர்கள், அப்ரடிண்ஸ் பயிற்சியாளர்கள், மாணவப்பயிற்சியாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், என்று தனியே பிரிந்து நின்று காவி- கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க சாத்தியமில்லை. மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’! என்ற முழக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் போது தான் இந்த காவி- கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து முறியடிக்க முடியும்!

தாமிரபரணி