மிழ்நாட்டின் ஆளுநர் R.N.ரவி, தமிழக அரசு செயல்பாட்டில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார் என்ற சர்ச்சைகள் அன்றாடம் எழுகின்றன. மாநிலத்திற்கு புதிதாக பதவியேற்கும் ஆளுநரை மரியாதை நிமித்தமாக மாநில முதலமைச்சர் நேரில் சந்திப்பது வழமையானது.
ஆளுநருக்கு மாநில அரசிடமிருந்து விவரங்கள் ஏதேனும் தேவையெனில் முதலமைச்சரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் மாநில அரசின் தலைமை செயலரையும், போலீசுத்துறை டிஜிபி-யையும் நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு மட்டுமே கட்டுப்பட வேண்டியவர்களை, நேரடியாக தனிப்பட்ட முறையில் நேரில் அழைத்துப் பேசுவது வழமைக்கு மாறானது. ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
அழைத்துப் பேசியது அல்லாமல் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிக்கை தரும்படி தலைமை செயலரிடம் கோரியதும், அவரும் அவருடைய பங்கிற்கு முதலமைச்சரிடம் கலந்து ஆலோசிக்காமல் ஒவ்வொரு துறை அரசு செயலரிடமும் அவரவர் துறை குறித்து அறிக்கையை தயாராக வைத்திருக்கும்படி உத்தரவுகளை அனுப்பியிருந்தார்.
அதேபோல் ஆளுநர் டிஜிபி-யை அழைத்து பேசிய பிறகு ரவுடிகள் கைது – ஆயுதங்கள் பறிப்பு என்ற ஆரவாரங்களை அரங்கேற்றினார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான அண்ணாத்துரை, ஆட்டுக்குத் தாடியும் மாநிலத்துக்கு ஆளுநரும் தேவையில்லை என்று விமர்சித்தவர். கடந்த ஐந்தாண்டுகளில் அடிமை எடப்பாடி அரசு ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாநில அரசு நிர்வாகத்திற்குள் தலையை நுழைத்ததைக் கண்டித்து போராட்டம் நடத்தியது அன்று எதிர்க்கட்சியாக இருந்த திமுக.
படிக்க :
ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !
சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை – கருத்துக் கணிப்பு
ஆளுநர் சென்ற இடங்களில் எல்லாம், எதிர்க்கட்சிகள் நேரடியான எதிர்ப்பும் ஆர்ப்பாட்டங்களும் பண்ணியதைக் கண்டு ஆத்திரமடைந்த பன்வாரிலால் புரோகித், “ஆளுநரை வேலை செய்யவிடாமல் தடுத்தால் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்” என்று ஆத்திரமும், அதிகாரத் திமிரும் தலைக்கேறியதன் விளைவாகக் கதறினார்.
ஆனால் இன்று ஆர்.என். இரவியின் நடவடிக்கைகளுக்கு ஆளும்கட்சியான திமுக என்ன எதிர்வினை ஆற்றியுள்ளது ?
யார் இந்த ஆளுநர்?
கவர்னர் (ஆளுநர்), வைசிராய் பதவிகள் ஆங்கிலேய காலனிய அரசால் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவில் 1935-ஆம் ஆண்டில் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தின்கீழ் மாகாண ஆட்சியினைக் கண்காணிக்க ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். உழைக்கும் வர்க்கத்தை ஒட்டப் பிழிந்து எடுக்க எஸ்டேட்டுகளில் பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் தான் கங்காணிகள். அவ்வகையில் மாநில ஆட்சியைக் கண்காணிக்க 1947-ஆம் ஆண்டு அதிகார மாற்றம் நடைபெற்ற பிறகு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ‘கங்காணி’ பதவி முறையை ஒழித்துக் கட்டியிருக்க வேண்டும்.
அக்காலகட்டத்தில், ஆளுநர் பதவி குறித்து அரசியல் நிர்ணய சபையில் கடும் விவாதங்கள் நடந்தன. விவாதங்களின் அடிப்படையில் இரண்டு வரைவுகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று, ஆளுநர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற வரைவு. இது ஒரு மாநிலத்தில் இரு முதலமைச்சர்களை உருவாக்கிவிடும் என்று இவ்வரைவு நிராகரிக்கப்பட்டது.
மேலும், ஆளுநருக்கான வேட்பாளர் பட்டியல் ஒன்றை சட்டமன்ற ஒப்புதலுடன் குடியரசுத்தலைவர் தேர்வுக்கு அனுப்புவது என்ற மற்றொரு வரைவும் மாநிலத்தில் ஆளும் கட்சியின் ஆதரவாளர் தான் ஆளுநராக வரமுடியும் என்ற வரைவும் முன் வைக்கப்பட்டது. ஆனால், இதில் மாநிலத்தில் பிரிவினைவாதம் வளர்வதற்கான  வாய்ப்புள்ளதால், இவ்வரைவும் நிராகரிக்கப்பட்டது.
இதற்குக் காரணம், இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைச்சாலையில் இருந்து ஏதேனும் தேசிய இனம் தனது விடுதலையைத் தேடி பிரிந்துவிடும் என்ற அச்சம்தான். இதனால் மாநிலத்துக்கு நெருக்கமான ஒருவரை அந்த மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். மேலும், ஆளுநர்கள் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநில / மாகாண பிரிவினை உணர்ச்சியும் குறுகிய மாநில / மாகாண உணர்வுகளையும் ஊக்கப்படுத்திவிடும். ஆகையால், மாநிலத்திற்கு தொடர்பு இல்லாத ஒருவரையே நியமிக்க வேண்டுமென்பதில் நேரு உறுதியாக இருந்தார்.
இதனடிப்படையில் ஒன்றிய ஆளும் கட்சி கைக்காட்டும் நபரை ஆளுநராக குடியரசு தலைவர் நியமிக்க வேண்டும் என்பதையும், அனைத்து மாநிலங்களிலும் ஒன்றிய அரசின் அதிகாரம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டது. ஆனால், ஆளுநர் நியமனத்தில் மாநில அரசுடன் கலந்தாலோசித்து ஆளுநரை நியமிக்க வேண்டும் என்ற மத்திய – மாநில உறவுகள் குறித்த ஆணையங்களின் பரிந்துரை காலங்காலமாக உதாசீனப்படுத்தப் பட்டுள்ளது.
ஒன்றிய அரசு கைக்காட்டும் நபர் குடியரசு தலைவரால் மாநில அரசின் கங்காணியாக ஆளுநர் என்ற பெயரில் நியமிக்கப்படுவார். இதிலிருந்தே அவர் யாருக்கு விசுவாசமாக இருப்பார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இதனடிப்படையில்தான் மோடி பிரதமரானவுடன் நான்கு மாநிலங்களின் ஆளுநர்களை – எம்.கே. நாராயணன் (மேற்குவங்கம்), இஹ் வனி குமார் (நாகாலாந்து), பி.எல். ஜோஷி (உ.பி), சேகர் தத்தா (சத்தீஷ்கர்) – கட்டாயப்படுத்தி விலகவைத்தார். குஜராத் ஆளுநர் கம்லா பெனிவுர் மிசோரம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார்.
ஒன்றிய அரசின் கங்காணிகளான ஆளுநர்களின் பிரதான வேலை, பதவிப் பிரமாணம் செய்து வைப்பதுதான். அமைச்சர்கள், நீதிபதிகள், முக்கிய அதிகாரிகள், வாரிய தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதும், மாநிலங்களைப் பற்றி மத்திய அரசுக்கு  aறிக்கை அனுப்புவது, மாநில நலன் கருதி எடுக்கப்படும் முடிவுகள், மத்திய அரசுக்கு விரும்பத்தகாததாக  இருந்தால் அவற்றுக்கு முட்டுக்கட்டை போடுவது இதுதான் ஆளுநரின் பணி. இந்த வேலை செய்பவருக்கு ஆடம்பர மாளிகை எதற்கு? சொகுசு வாழ்க்கை எதற்கு? இதற்காக கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணம் செலவழிப்பது எதற்கு?
ஆளுநர் மாளிகைகள் ஆடம்பரங்களில், வீண் செலவுகளில் கொழுத்துப் போய்க் கிடக்கின்றன. நேருவின் சகோதரியாகிய விஜயலட்சுமி, மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக சிறிது காலம்  பணியாற்றி, பின்னர் அப்பதவியைத் துறந்தார். “ஆளுநர் பதவியே பயனற்றது. அரசமைப்பு சட்டத்திலிருந்தே ஆளுநர் பதவியை நீக்கிவிட வேண்டும்” என்று தன் விலகலுக்குப் பிறகு கூறினார்.
இதன்படி, மாநிலத்திற்கு ஆளுநர் தேவையில்லை என்பதை நடைமுறைப்படுத்தினால் ஒரு ஊதாரியான கங்காணிச் செலவு மிச்சப்படும். அந்தப் பணத்தை வளரும் தொழில்களுக்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் வேலைவாய்ப்பும் சமூகத்தில் வாங்கும் சக்தியும் பெருகும்.
ஆளுநரின் அதிகார மீறலும் அவர் மாநிலங்களில் கங்காணி வேலை பார்ப்பதும் இன்று மட்டுமா நடக்கிறது? இல்லை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தேதான் நடந்து வருகிறது. தனக்கு சாதகமான நபரை ஆளுநராக குடியரசுத் தலைவர் மூலம் நியமிப்பது, அவர் மூலம் மாநிலத்தின் செயல்பாட்டை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது காலங்காலமாக நடக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இன்றைய சூழல் வழக்கமான காலகட்டத்தைப் போன்றது அல்ல.
ஒட்டுமொத்த மாநிலங்களையும் தனது பாசிச வளையத்திற்குள் கொண்டு வருவதற்கு தமிழ்நாட்டிலும் ஆளுநரைக் கொண்டு தனது பாசிச நோக்கங்களுக்கு முரணான நடவடிக்கைகளை தடுத்திருக்கிறது ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு.
நீட் தேர்விலிருந்து விலக்கு, 7 பேர் விடுதலை, விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள், மசோதாக்களின் மீது கருத்துக்கள் கூறாமல் காலவரையின்றி தள்ளிப்போடுவது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் போடுவது; இதன்மூலம் தீர்மானங்களை மசோதாக்களை நீர்த்துப்போக வைத்து மாநில அரசிற்கு நெருக்கடியை உருவாக்குவது என ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு மாநில அரசின் உரிமைகளில் தலையிட்ட சம்பவங்கள் ஏராளம்.
பாசிச பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல், தமிழக அரசால் நிராகரிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையை ’இல்லம் தேடி கல்வி’ போன்ற திட்டங்கள் மூலம் படிப்படியாக அரங்கேற்றுவது, இக்கல்வியில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களையும்  உறுப்பினர்களையும் புகுத்துவதன் மூலம் பிஞ்சு மனதில் பார்ப்பனிய – மதவெறி நஞ்சை விதைப்பது என ஒரு புறத்தில் பாசிச நஞ்சை அடித்தளத்தில் விதைத்துக் கொண்டிருக்கையில், அதற்குச் சாதகமாக மேல்தளத்தில் ஆளுநரையும் மாநில அரசின் உயர் அதிகாரிகளையும் வைத்து காய்நகர்த்துகிறது.
மேலும், தற்போது ஆர்.என். ரவியின் மூலம் பாஜக மேற்கொள்ளும் நகர்வுகள் மிகவும் முக்கியமானவையாகப் பார்க்க வேண்டியவை. தமிழகத்தில் இல்லாத நெருக்கடியை இருப்பது போலக் காட்டுவது, சட்டம் ஒழுங்கு கெட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும், இலஞ்ச ஊழல் பெருகியதைப் போன்ற அறிக்கையை பெறுவது  என ஆட்சியைக் கலைப்பதற்கோ அல்லது ஆட்சியைக் கலைப்பதாக மிரட்டி தொடைநடுங்கி திமுக அரசின் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்கோ தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதி தான், இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட, ஆளுநரின் தலைமைச் செயலர், டி.ஜி.பி சந்திப்புகள்.
டெல்லியில் அம்மாநில முதல்வருக்கு தொல்லை கொடுத்து, அம்மாநில அதிகாரிகளைச் செயல்படவிடாமல், டெல்லி மாநில அரசை முடக்கியதைப் போலவே தமிழ்நாட்டிற்கு தொல்லைகள் கொடுப்பது, மறைமுக சதிகளை அரங்கேற்றுவது, அடக்குமுறைகளை அரங்கேற்றி தங்களது நோக்கத்தை நிறைவேற்றுவது என்பது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிஸ்ட்டுகளுக்கு கைவந்த கலை. இதற்குப் பொருத்தமாகத்தான் முன்னாள் உளவுத்துறை அதிகாரியான R.N.ரவி யை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்திருக்கிறது மோடி கும்பல்.
படிக்க :
சூரப்பாவை இடைநீக்கம் செய்வாரா தமிழக ஆளுநர் ?
ஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் !
நம் நாட்டில் யார் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களுக்கே இல்லாத – அதாவது ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் மக்களுக்கே இல்லாத – ஆட்சியைக் கலைக்கும் அதிகாரத்தை இந்தக் கங்காணித் தொழிலுக்காக நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு வழங்கியிருக்கிறது அரசியல் சாசனச் சட்டம். இந்த நடைமுறை ஒழிக்கப்படும் வரை, மாநில மக்களின் உணர்வுகளும், தேவைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறைவேற்றப்படுவது சாத்தியமில்லை.
சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, மோடி நடத்திய சட்டமன்ற சபாநாயகர்களின் கூட்டத்தில் கலந்து கொள்கையில், மாநில அரசின் தீர்மானங்களின் மீது ஆளுநர் முடிவெடுப்பதற்கு கால வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் ஒரு போதும் பலனளிக்காது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் எடுக்கப்பட்ட முடிவை யாரோ நியமித்த ஒரு கங்காணி நிறுத்தி வைப்பதற்கு அனுமதிக்க முடியாது என்ற போர்க்குரலை எழுப்புவதுதான் அவசியமானது. அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுதான் அவசியமானது!

கதிரவன்