மணி ஹெய்ஸ்ட் (Money Heist) இணையத் தொடரின் (Web Series) இறுதிப் பாகமான 5-வது சீசனின் இரண்டாவது பாகத்தின் வெளியீட்டிற்காக (டிசம்பர் 3) காத்திருக்கிறீர்களா ?
நெட்பிளிக்ஸ் OTT தளத்தின் மூலம் உலகெங்கும் ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் துவக்கத்தில் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டாலும், உலகம் முழுவதும் அதற்கு ரசிகர் கூட்டம் பெருகவே தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.
கோடிக்கணக்கான ரசிகர்கள் இதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர், வெளியிடப்பட்டவுடன் இரவோட இரவாக அனைத்துப் பாகங்களையும் பார்த்துவிட்டுதான் மறுவேலை பார்க்கின்றனர். நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் இளைஞர்களும் மாணவர்களும் “பெல்லா சாவ்” என்கிற ஸ்பானிஷ் பாடலை உச்சரிப்பு வரவில்லையென்றாலும், அதன் அர்த்தம் புரியவில்லை என்றாலும், சக நண்பர்களிடமிருந்து தனிமைப்பட்டு விடுவோமோ என்ற ‘அச்சத்தில்’ மெனக்கெட்டு மனப்பாடம் செய்கின்றனர். குறைந்தபட்சம் வார்த்தைகளின்றி முணுமுணுக்கின்றனர்.
இதிலென்ன புதுவிசயமென நினைக்கலாம். ஹாலிவுட் படங்கள் கூட ‘பெருத்த வரவேற்புடன்’ வெளியிடப்படவில்லையா? அதற்கும் உலகம் முழுக்க ரசிகர்கள் கூட்டம் இருப்பதில்லையா என்று கூடக் கேட்கலாம். ஆனால், அவற்றிற்கும் இதற்கும் ஒரு வேறுபாடு உண்டு.
படிக்க :
♦ ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !
♦ நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !
இந்தத் தொடர், வெறுமனே வியாபாரரீதியாக ஹிட் கொடுக்கும் படங்கள் போல அல்லாமல், ‘இயல்பாக’ பிரபலமாகி பலரின் ரசனையையும் அதாவது தேசம், இனம், மொழி கடந்து உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் உள்ள பலரின் கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளது.
இத்தொடர் எவ்வாறு தேசங்களைக் கடந்து அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வெற்றி ஈட்டியது என்பதையும், அது சுரண்டலுக்கு எதிரான நமது உணர்வை எந்தத் திசையை நோக்கித் திருப்பிவிடுகிறது என்பதையும்தான் நாம் பரிசீலிக்க வேண்டியது இருக்கிறது.
முதலில், கதைச் சுருக்கத்தைப் பார்த்து விடுவோம்.
பல்துறை ஆற்றல் மற்றும் வெவ்வேறு தனித் திறமைகள் கொண்ட ஒரு குழு, பல ஆண்டுகள் திட்டமிட்டு, அக்குழுவுக்கு பல மாதங்கள் பயிற்சி அளித்து ஒரு கொள்ளையை நடத்தி முடிக்க வழிகாட்டும் ஒரு ‘புரோஃபஸர்’. இவர்கள்தான் படத்தின் ‘நாயகர்கள்’
ஸ்பெயினின் பணம் அச்சடிக்கும் வங்கியான “ராயல் மின்ட்”டில் அக்குழு நுழைந்து, அங்குள்ளவர்களை பணயக் கைதியாக பிடித்து, தங்களுடைய ‘சிவப்பு’ நிற சீருடை மற்றும் ‘டாலி’ முகமூடியை பணயகைதிகளுக்கும் அணிவித்து, கொள்ளைக் கும்பலான தங்களுக்கும் பணய கைதிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லாத வகையில் போலீசுத்துறையை குழப்புவதே அக்குழுவின் திட்டம்.
பணயக்கைதிகள் சிலரிடம் ஆசைவார்த்தை காட்டியும், அச்சுறுத்தியும், தங்களுக்கு தேவையான பணத்தை அச்சடிக்க வைத்து, போலீசுத்துறையின் கண்ணில் மண்ணைத் தூவி பணத்துடன் தப்பிக்கிறது.
இரண்டாவது முறை, “பேங்க் ஆஃப் ஸ்பெயின்”-ல் நுழைந்து, அங்குள்ள பெருமதிப்பிலான தங்கக் கட்டிகளை உருக்கி கடத்துகிறது. இதை அனைத்தையும் வெளியில் இருந்து இயக்குகிறார் இக்குழுவின் தலைவர் புரோஃபஸர். அதி நவீன தொழில்நுட்பமும், பிளான் பி, பிளான் சி என்று அதிரடியான, அறிவுப்பூர்வமான வியூகங்கள் மூலம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதும்தான் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
இத்தொடர் பெருவாரியான மக்களை தன்வசம் கவர்ந்திழுத்ததற்கான பிற காரணங்களான திரைக்கதை, பின்னணி இசை, கதையில் திருப்பங்கள், சுவாரசியங்கள் போன்ற பல்வேறு நுணுக்கங்களை அலசி ஆராய விமர்சகர்களும் நிபுணர்களும் நிறைந்துள்ளதாலும், நமது விமர்சனத்தின் நோக்கம் அவை இல்லை என்பதாலும், நாம் ‘கவனிக்க’ வேண்டிய விசயத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்துவோம்.
இத்தொடரில் வரும் கொள்ளைக் குழுவில் உள்ளவர்கள் மிகவும் சாதாரணமான, பல்வேறு துயரமான வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டவர்கள். அவர்களில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், தந்தை மகன் உறவு, காதல், சகோதர நேசம், தாய்-மகள் பாசம் உள்ளிட்ட உணர்வுகள் கதையோடு ஒன்றிவருகின்றன. இவற்றின் காரணமாகவே இந்தக் கொள்ளைக் கும்பலில் உள்ள கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ‘காண்போரின்’ குடும்ப நபர்களில் ஒருவராக எளிதில் மாறிவிடுகின்றனர். அவர்களில் யாரேனும் இறந்தால், துன்பப்பட்டால் தம் குடும்ப உறுப்பினரின் இழப்பைபோல் கண்ணீர் விடும் அளவுக்கு ரசிகர்களை ஒன்றிவிட வைத்துவிடுகின்றனர்.
கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களது உண்மை அடையாளத்தை மறைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளும் டோக்கியோ, பெர்லின், மாஸ்கோ போன்ற நாடுகளின் தலைநகரங்களின் பெயர்கள் நமக்கு ஏற்கெனவே பரீட்சயமானதாக இருப்பதால், இவர்களும் நமக்கு ‘பரீட்சயமானவர்களாக’ நெருங்கிவிடுகின்றனர்.
இக்குழுவின் தலைவராக வரும் புரோஃபஸர் கதாபாத்திரம், நமது பக்கத்து வீட்டில், நமது நண்பர்களில் ஒருவரைப் போன்ற எளிமையான தோற்றத்தையும், பண்பையும் உள்ளவராகக் காட்டப்படுகிறார். கதாநாயகன் என்றால் அதீத ஆற்றல், வீர சாகசம், சூப்பர் ஹீரோ போன்று இல்லாமல், நம்மில் ஒருவர், அறிவாற்றலுடன், உணர்வுடன் செயல்பட்டால் எப்படி இருக்குமோ அத்தகைய தன்மையில் இந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே கதாநாயகனும் விரைவில் ‘நம்மில்’ ஒருவராக மாறிவிடுகிறார். இன்னும் சொல்லப்போனால் இத்தொடரைப் பார்க்கும் ரசிகர் ‘புரொஃபசராக’வே மாறிவிடுகிறார்.
இவை அனைத்தையும் விட இவர்கள் கொள்ளையடிப்பதற்கான ‘தர்க்க நியாயத்தை’, மக்களிடமுள்ள இந்த சமூக கட்டமைப்பின் மீதான எதிர்ப்பு உணர்வின் பிரதிபலிப்பாக வடிவமைத்துள்ளனர்.
பழைய ராபின்ஹூட் கதைகளில், கொள்ளையடித்து, சுரண்டப்படும் ஏழைகளுக்குத் தானமாக வழங்கும் ஹீரோ சுரண்டப்படும் வர்க்கத்தினரின் ஆதர்ச நாயகரானார். அங்கு எதிரிகள் தனிநபர்களாகக் (பணக்காரர்களாக) காட்டப்பட்டனர்.
உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் கொடூரமான முறையில் பகிரங்கமாக அரங்கேறிவரும் இன்றைய காலகட்டத்தில், எதிரிகளாக கார்ப்பரேட்டுகளை பெருவாரியான மக்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருக்கும் அரசுகள் மக்கள் மீது தொடுத்துவரும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும் போராடிவருகின்றனர்.
அத்தகைய கார்ப்பரேட்டுகளை மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்க வைக்கும் அரசின் மீதான மக்களின் கோபத்தை தனக்குச் சாதகமாக மடைமாற்றிக் கொண்டு இந்தத் தொடரின் கதையை வெற்றியடையச் செய்திருக்கிறது படக்குழு.
உதாரணமாக இத் தொடரிலிருந்து சிலவற்றைப் பார்க்கலாம்.
-
முதல் கதையில் புரோஃபஸர், பெண் போலீசு அதிகாரியிடம் மாட்டிக்கொள்வார். அப்பொழுது தங்களது கொள்ளைக்கான தர்க்க நியாயத்தை அவரிடம் அடுக்குவார்.
“நாங்கள் கொள்ளைக்காரர்களா? நாங்கள் செய்வதை மற்றவர்கள் செய்யும்போது அவர்களை நீங்கள் கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கவில்லையே. ஐரோப்பிய மத்திய வங்கி 2011-ல் 171 பில்லியன் யூரோக்களை அச்சடித்தது, 2012-ல் 185 பில்லியன், 2013-ல் 145 பில்லியன் யூரோக்கள். அந்தப் பணம் எங்கே போனது தெரியுமா? அச்சடிக்கப்பட்டு நேரிடையாக பணக்காரர்களின் பாக்கெட்டுக்கு சென்றது. ஐரோப்பிய மத்திய வங்கியை யாராவது கொள்ளைக்காரன் என்று அழைத்தீர்களா? அவர்கள் அதை “Liquidity injection” என்று அழைத்தனர். ஆனால், அது பணப்புழக்கத்தை ஏற்படுத்தவில்லை.
நாங்கள் யாருடைய பணத்தையும் திருடவில்லை, யாரையும் கொல்லவில்லை, வெற்று காகிதங்களை, நாங்களே அச்சடித்து பணமாக்கி, பணப்புழக்கத்தை ஏற்படுத்துகிறோம், நாங்கள் இந்த சமூகத்தால் பாதிப்படைந்த சாதாரணமானவர்கள்”
என்கிற விதத்தில் பேசும் வசனம் முதல் கொள்ளைக் கதையில் வருகிறது. சமூகத்திலிருந்து அரசுடன் சேர்ந்து கார்ப்பரேட்டுகள் அடிக்கும் கொள்ளையை அம்பலப்படுத்துவதன் மூலம், தார்மீக ரீதியாகவே ‘நாயகர்களுக்கு’ (கொள்ளையர்களுக்கு) ஆதரவான மனநிலையை உருவாக்கிவிடுகிறது.
-
இந்த கொள்ளை கும்பலிலிருந்த ஒருவரை போலீசுத்துறை சத்தமின்றி கைது செய்து ரகசியமான இடத்தில் வைத்து கொடூரமாக சித்தரவதை செய்கிறது. அந்த நபரைக் காப்பதற்காகவும், பழி வாங்குவதற்காகவும், அவர்களுக்கு தாங்கள் யார் என்பதைக் காட்டுவதற்காகவும் ஸ்பெயினின் ரிசர்வ் வங்கியிலுள்ள தங்கத்தைக் கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர்.
அதற்கான நியாயத்தை,
“நாம் தற்பொழுது தங்கத்தை கொள்ளையடிக்கப் போகிறோம், இந்த முறை பணத்துக்காக அல்ல ! நாம் யார் என்பதை அவர்களுக்கு தெரிய வைப்பதற்காக !, நமது நிலைபாட்டை சொல்வதற்காக !, நம்மில் ஒருவரை கடத்தி சட்ட விரோதமாக டார்ச்சர் செய்வது, நம்மை போருக்கு அழைப்பதற்கு சமம்! நாம் அநீதியான அவர்களின் கட்டமைப்பை (System) எதிர்த்து புரட்சி செய்யப்போகிறோம்!”
என்கிற விதத்தில் புரட்சி, போராட்டம் என்று வீரவசனம் பேசுகிறார் புரொஃபசர்.
//ஆளும் வர்க்கத்தின் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள், புரட்சிகள் சமூகத்தில் எதார்த்தமாக மாறும்போது, இத்தகைய கற்பனைகளை ரசிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இல்லாமல் போகும்.//
நெத்தியடி பதில் …
Money Heist : நம் எதிர்ப்புணர்வை மடைமாற்றும் வடிகால் !
மக்களின் உழைப்பைச் சுரண்டுவதைத் தாண்டி, மக்களின் எதிர்ப்புணர்வையும், தமக்கு ஆபத்தில்லாத வகையில் மடைமாற்றுவதோடு அதைக் காசாக்கும் ‘கலை’யிலும் கார்ப்பரேட்டுகள் கரைகண்டவர்கள் ..so what?
ஆளும் வர்க்கத்தின் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள், புரட்சிகள் சமூகத்தில் எதார்த்தமாக மாறும்போது, இத்தகைய கற்பனைகளை ரசிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இல்லாமல் போகும்.
புரட்சிகள் சமூகத்தில் எதார்த்தமாக மாறும் காலம்வரை வரும் ஓராயிரம் Money Heist களுக்கு எதிராக நாம் என்ன வினையாற்றப்போகிறோம்?
கட்டுரையில் கூறுவதுபோல் பழைய ராபின்ஹூட் கதைகளின் இன்றைய வடிவம்தான் Money Heist.
இந்த தெளிவிலிருந்து நாம் பெறும் படிப்பினை என்ன?தற்போதைய நெட்ப்ளிக்ஸ் யுகத்தில் நமக்கான கலை வெளியை கைக்கொள்ள நாம் எங்கிருந்து தொடங்குவது ?அதில் தேர்ச்சி பெறுவது எவ்வாறு?
கதைப்பாடல்களும் வீதி நாடகங்களும் தற்போது உருமாறி மீம்ஸ்,டிக்டாக் என்று வர்க்கம் கடந்துபயணிக்கின்றன. பல வண்ண கலைப்புவாத அரசியலுக்கு எதிராக வர்க்க அரசியலை கலை இலக்கிய தளத்தில் கொண்டுசெல்லும் காந்திரமான விவாதத்தை கட்டுரையில் துவக்கியிருக்க வேண்டும்.