Wednesday, September 27, 2023
முகப்புகுழந்தைகளின் 'கொலை'க்காட்சி !
Array

குழந்தைகளின் ‘கொலை’க்காட்சி !

-

குழந்தைகளின் கொலைக்காட்சி

vote-012இரண்டு அல்லது மூன்று நாள் விடுமுறையின் சிக்கல்கள் இரண்டு, ஒன்று சொந்த ஊருக்குப்போவதற்கு பேருந்தை பிடிப்பது. திருப்பூரில் விடுமுறை நாட்களிலும் திருமண நாட்களிலும் பேருந்தில் இடம் பிடிப்பதை விட ரேஷனில் சீமெண்னை வாங்குவது சுலபமானது. இரண்டாவது பிரச்சினை ஊரில் உள்ள தொலைக்காட்சிப்பெட்டி. தோராயமாக ஒரு நாளில் ஆறு மணி நேரம் சீரியல் ஓடுகிறது எல்லா வீடுகளிலும். அவ்வப்போது பார்த்த வகையில் எல்லா நெடுந்தொடரிலும் ஒரே கதைதான் ஓடுவதாக தெரிகிறது. கதை என்கிற சமாச்சாரத்தில் யாரும் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை என்பது வேறு விஷயம், ஆனாலும் ஒரே மாதிரியான காட்சிகளின் தொகுப்பாகத்தான் எல்லா தொடர்களும் இருக்கின்றன. ஒரே நடிகர் வெவ்வேறு தொடர்களில் ஒரே மாதிரி பாத்திரத்தில் நடிக்கிறார். நம் வீட்டு ஆட்கள் எப்படி அவர் பாத்திரத்தின் பெயர்களை சரியாக நினைவு வைத்திருக்கிறார்கள் என்பது ஆராயப்படவேண்டிய அதிசயம்.

தொடர்களும் இரண்டு வகையாக காணக்கிடைக்கின்றன. சிவனே என இருக்கும் கதாநாயகியை ஊரில் இருக்கும் பாதி பேர் பாடாய்ப்படுத்தி கதையை வளர்த்துவார்கள். இன்னோர் வகை கதாநாயகி கொஞ்சம் அதிரடி நாயகி, இவர்கள் ஊரில் உள்ள ஆட்கள் பாதி பேரின் பிரச்சனைகளை கவனிப்பதன் மூலம் கதையை கொண்டு செல்வார்கள். தன் அப்பா வயது கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிக்க விருப்பமில்லாத முன்னாள் கதாநாயகிகளின் முதல் தேர்வு நெடுந்தொடர்தான் என்பது எல்லோரும் அறிந்ததுதான். அதிலும் தன் மகன் வயது ஆளுக்கு ஜோடியாக நடித்து தன் பழைய கதாநாயகர்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் தரும் பாக்கியம் சிலருக்குத்தான் கிடைக்கிறது.  ரம்யா கிருஷ்ணன்  தன் அத்தையை ‘அத்தை’ என விளிக்காவிட்டால் யார் யாருக்கு அத்தை என நமக்கு குழப்பம் வந்துவிடும்.

சீரியல் கதாநாயகிகளை ஒரு சூப்பர்வுமனாக சித்தரிப்பதில் பெரும் வெற்றி கண்டவர் ராதிகா. அவரது சமீபத்து தொடர் ஒன்றில் அதன் அதிகபட்ச எல்லையை தொடுவதுபோல தெரிகிறது. காபிக்கு சர்க்கரை போடுவதில் தொடங்கி கல்யாணத்தை நிறுத்துவது வரை சகல விஷயங்களிலும் ராதிகாவின் கருத்தை எல்லோரும் பயபக்தியோடு ஆதரிக்கிறார்கள். முன்பு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான புராணத்தொடர்களில் வரும் கடவுளரைப்போல ஒரு மர்மமான புன்னகையோடு தொடர் முழுக்க வலம்வருகிறார் ராதிகா, தலைக்கு பின்னால் ஒரு ஒளி வட்டமும் ஆசீர்வாதம் செய்வது போல கைகளையும் வைத்திருந்தால் செல்லம்மா ஒரு அவதாரமாகத்தான் காட்சியளிப்பார்.

கதாநாயகி மற்றும் வில்லனை தவிர்த்து நெடுந்தொடரில் வரும் கதாபாத்திரங்களையும் இரு பிரிவுக்குள் அடக்கிவிடமுடியும். ஒன்று கொஞ்சம் வில்லன் சாயலில் இருக்கும் குரூப், கோள் மூட்டுவதும் கழுத்தை வெட்டி ஜாடை பேசுவதும் இவர்கள் அன்றாடப்பணி. செய்வினை வைப்பது மற்றும் சாப்பாட்டில் விஷம் வைப்பது மாதிரியான பணிகளையும் அவசியம் ஏற்படின் இவர்கள் மேற்கொள்வார்கள். இன்னொரு குழு கொஞ்சம் அப்பிராணி உறுப்பினர்களைக்கொண்டது. இவர்கள் எந்நேரமும் கதாநாயகியோடோ அல்லது கதாநாயகிக்காகவோ ஒப்பாரி வைத்தவண்ணமிருப்பார்கள். ஒப்பாரி வைத்த நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் கதாநாயகியின் கஷ்டங்களையோ அல்லது பராக்கிரமங்களையோ மற்றவர்களுக்கு மறு ஒளிபரப்பு செய்வார்கள். நாயகியின் கணவனும் இந்த இரு பிரிவுகளின் ஒன்றின் கீழ்தான் அடங்குவார், எனவே கதாநாயகன் என ஒரு பாத்திரம் இங்கு கிடையாது.

தொடரின் கதைகளுக்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதாவது தொடரில் வரும் ஒரு குடும்பம் கூட மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது. ஒரு அதிர்ச்சிகரமான செய்திக்கு வீட்டில் உள்ள எல்லோரையும் குளோசப்பில் காட்ட வேண்டும். உதாரணமாக பாத்ரூம் குழாயில் தண்ணீர் வரவில்லை என்ற வசனம் சொல்லப்பட்ட பிறகு வீட்டு நாய்க்குட்டி உள்ளிட்ட சகல உறுப்பினர்களின் முகத்தையும் மாற்றி மாற்றி காட்டுவது அவசியம். கூடுதல் அதிர்ச்சியைக்காட்டும் காட்சிகளில் கேமராவை மேலிருந்து கீழ், கீழிருந்து மேல், இடமிருந்து வலம் மற்றும் வலமிருந்து இடமென நடிகரின் அல்லது நடிகையின் முகத்தை நோக்கி நான்கு திசைகளிலிருந்தும் வேகமாக திருப்பவேண்டும் ( ‘என்னது இரண்டு நாள் தண்ணீர் வராதா’ என்ற டயலாக்கிற்கு இந்த நுட்பத்தை பயன்படுத்தலாம் ).

சாதாரண  நிகழ்வுகளையும் உணர்வுபூர்வமாகத்தான் காட்ட வேண்டும், உடம்பு சரியில்லாத நபருக்கு சாப்பாடு ஊட்டுவதை நைட்டிங்கேல் அம்மையாரின் சேவைக்கு நிகரானதென நம்பும்படிக்கு காட்சி நீளமாக இருப்பதும் முக்கியம். கல்யாணமானவர்கள் ஆறு மாதத்திற்குமேல் சேர்ந்திருப்பது எந்த சீரியலுக்கும் அடுக்காது.

சித்தி தொடர் ஓடிய நேரத்தில் சென்னை ரங்கநாதன் தெருவில் கூட்டம் கணிசமாகக் குறைந்திருந்தது. மெட்டிஒலி தொடர் ஒளிபரப்பாகும் பொழுது வீட்டில் சேனல் மாற்றுவது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டது. இப்போது நிலைமை அப்படி இல்லை என்றாலும் நெடுந்தொடர்கள் ஓயாமல் வீட்டில் ஓடியவண்ணமிருக்கின்றன. அடுத்து வரப்போகும் காட்சிகளை அனுமானிக்கும் அளவு வல்லமை பெற்ற பிறகும்கூட யாரும் நெடுந்தொடர் பார்ப்பதை நிறுத்தக்காணோம்.

என் கவலை பெரியவர்களின் சீரியல் மோகம் பற்றியதல்ல. வீட்டு குழந்தைகள் நம்முடன் சேர்ந்து தொடர்களைப்பார்க்கும் நிர்பந்தத்திற்க்கு ஆளாகிறார்கள். நான் பார்த்த பல சிறார்கள் தொடர்களின் கதையையும் பாத்திரங்களின் பெயர்களையும் நினைவு வைத்திருக்கிறார்கள். நயவஞ்சகம், முறைகேடான உறவு, ஆள் கடத்தல்,கொலை, பழி வாங்குவது என சமூகத்திற்க்கு ஆகாத செயல்கள் விதிவிலக்கில்லாமல் எல்லா நெடுந்தொடர்களிலும் நிரம்பிவழிகிறது. எல்லா வீடுகளிலும் நடக்கும் சம்பவங்களாக இவை தொடர்களில் காட்டப்படுகின்றன. குழந்தைகள் அடுத்தவர்களை பார்த்து அதேபோல செய்வதன் மூலம்தான் (இமிடேஷன் ) பெரும்பாலானவற்றை கற்கின்றன. ஐந்து வயது வரை டிவியில் வருவது நாடகம் என்பது அவர்களுக்கு தெரியாது, கண்ணில் தெரிவது எல்லாம் அவர்களுக்கு ஒரே மாதிரியானவைதான்.

எனவே சமூகம் பற்றிய  குழந்தைகளின் மதிப்பீடு சீரியலையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்கும்.குழந்தைகள் தங்கள் சுற்றத்தைப் பற்றி பெருமளவு கற்பது  முன்பள்ளிப்பருவம் வரையிலான காலம்தான். இப்படி இபிகோ வின் எல்லா சட்டப்பிரிவுகளின் கீழ் அடங்கும் அனைத்துக்குற்றங்களும் நிரம்பிய தொடர்களைப் பார்த்துக்கொண்டுதான் நம் குழந்தைகளின் ஆளுமை இப்போது வளர்கிறது. இது எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கை முறையில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும் இது தொடர்பில் எந்த ஒரு ஆய்வும் இதுவரை செய்யப்படவில்லை.

நாம் எப்படி ? டிவியை நிறுத்திவைக்கப்போகிறோமா அல்லது ஆராய்சி முடிவுகள் வரும் வரை காத்திருக்கப்போகிறோமா ??

வில்லவன்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

  1. .நல்ல பதிவு. எங்கள் வீட்டில் கேபிளை பிடுங்கி விட்டு ஒரு வருடத்துக்கு மேலாகி விட்டது. கேபிள் இருக்கும் பொழுதும் சீரியல்கள் பக்கம் எட்டி பார்ப்பதில்லை. உண்மையில் உங்கள் கவலை முக்கியமானது.

    சீரியல்கள் பார்ப்பதில்லை. இருப்பினும் சில கேள்விகள் மண்டையை குடைந்து கொண்டே இருக்கின்றன. முடிந்தால், பதில் சொல்லுங்கள் வில்லவன்.

    * பாலச்சந்தர், பாரதிராஜா – போன்றவர்களின் வரவு சீரியல் தரத்தை உயர்த்திருக்கிறது என்கிறார்கள். உண்மையா?

    * குடும்பம் – மாமியார் – மருமகள் என்ற மரங்களை சுற்றி வந்த சீரியல்கள் இப்பொழுது, காதல், ஆக்சன் என மாறத் தொடங்கிவிட்டதாமே!

    * சீரியலில் வரும் வாண்டுகள் அல்லது குழந்தைகளுக்காக எடுக்கப்படும் தொடர்களில் வாண்டுகளின் பாத்திரப்படைப்பு எவ்வாறு இருக்கிறது?

    * சகுனம், சாத்திரம், ஜாதகம், தலையெழுத்து – தொடர்களில் சர்வ சாதாரணமாய் வருகிறது என்கிறார்கள். உண்மையா?

    * சில பெரிய திரை நடிகர்கள் பெரிய திரையில் நடித்ததே கிடையாது. அவர்கள் சின்னத் திரையில்.. முதன்முறையாக ‘நடிக்கும்’ தொடர் என விளம்பரப்படுத்திகிறார்கள். அந்த நடிகைகள் உண்மையில் சின்ன திரையி நடிக்கிறார்களா? – உதாரணம் – சங்கவி.

    * இன்னும் கேள்விகள் இருக்கின்றன. மீண்டும் தொடர்கிறேன்.

    • கேபிளை பிடுங்கிவிட்டது… சீரியல்களிலிருந்து மற்ற குப்பை நிகழ்ச்சிகளிலிருந்து தப்பிப்பதற்காக அல்ல! பல புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக… சில காலம் கேபிள் இல்லாமல் இருக்கலாம் என முடிவெடுத்து தான் கேபிளை எடுத்துவிட்டோம். இது எதற்காக சொல்கிறேன் என்றால்… இதற்கு பின்பு பின்னூட்டங்கள் இட்டவர்கள் வேறுமாதிரி புரிந்து கொண்டதாக தெரிகிறது.

  2. கேரளத்துப் பெண்கள் பற்றி தற்போது ஒரு ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கேரளத்தில் உள்ள பெண்களில் 54 % பேர் சினிமா, சீரியல் போன்றவற்றைப் பார்த்துத் தொலையாமல், தற்கால நிகழ்வுகள், செய்திகள் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்களாம். இந்த ஆய்வை கேரள பெண்கள் மையம் (Media Monitoring Cell of the Kerala Women’s Commission ) என்ற அமைப்பு செய்துள்ளது.

  3. ஆண்கள் பெண்களுக்கு பக்க வாத்தியம் போல இருந்தால் உங்களால் சகித்துக் கொள்ள முடியாதா

    குழந்தைகள் கல்விக்கூடத்திற்கு சென்ற பிறகு சுற்றத்தை அறிந்து கொள்ளவில்லையா… இது ஒரு இயக்கமறுப்பியல் பார்வை போல உள்ளதே…

    மற்றபடி சீரியல்கள் அழுதுவடித்த காலம் மலையேறுவதும், ஆக்ஷன் வருவதும் ஒரு பெரிய மாற்றம் இல்லை. மாறாக டிவி வருவதற்கு முன் ராணி தேவி வாரமலர் ஆனந்தவிகடன் எனத் தொடர் படித்த பழைய காலத்து பெண்கள் இன்று அதனை டிவி க்கு ஊடகப்பெயர்ப்பு செய்துள்ளனர்.

    ஆனாலும் வெறும் ஊடகப்பெயர்ப்பு மாத்திரமே அவர்களை திசைதிருப்ப முடியாத போது ஆக்ஷன் கொஞ்சம், சமூக அக்கறையுள்ள பாத்திரம், என தேர்வு நடக்கிறது.

    மற்றபடி உப்புச்சப்பில்லாத நிகழ்கால வாழ்க்கை குழந்தைப் பருவத்திலேயே நமது சமூக வாழ்வில் துவங்குவதால் அதனை உப்பிப் பெருக்கதான் ராணியும உதவியது பிறகு சீரியலும் உதவி வருகிறது. இதில் அயற்சி ஏற்பட சமூகத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடக்காத போது, வாழ்க்கை பளுவாக மாறும் தருணங்களில் அது சுகமாக வாழ்ந்த கடந்த காலத்தை அசைபோடுகிறது.

    இத்தகைய அசைபோடல்கள் எல்லா ஊடகங்களிலும் நிரம்பி வருகின்றது. கலையின் எழுச்சியை தரிசிக்க இயலாத ஒரு சமூகத்தைப் பெற்ற நாம் அதனை அதற்கு பழக்கப்டுத்த வேண்டும். (சரியானதை சோல்லித் தந்தாலும் பாரம்பரியமான கலாச்சாரம் அத்தரத்தில் இல்லாத்தால்) அதற்குள் மூழ்கி விமர்சித்துதான் சரியாகச் சொன்னால் சாட்டையை எடுத்துதான் வார்த்தைகளில் திருத்த வேண்டியிருக்கும். மற்றபடி பொதுவில் பேசுவதால் எந்த புண்ணியுமும் இல்லை.

    சீரியலின் கதை இல்லாத போது கூட பார்க்க முடிவதற்கு அதனை விட அவர்களது உண்மை வாழ்க்கை அதல பாதாளத்தில் இருப்பதுதான். ஒருவேளை அத்தொடர்கள் நடக்கும் தருணத்தில் கரண்ட் கட் ஆனால் அவர்கள் பயத்துடன் ஆத்திரமும் அடைவர். தங்களது இழிவான சமூக அந்தஸ்தை மறந்து ஒரு குழந்தையின் மனநிலையில் வாழ விரும்பும் போலி மனிதர்களின் உலகம் அது.

    • மன்னிக்கவும், உங்கள் பின்னூட்டம் சொல்ல வருவதை என்னால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியவில்லை. நெடுந்தொடர்கள் குழந்தைகள் வளர்ச்சியில் செய்யும் ஆபத்தான விளைவுகளை சுட்டிக்காட்டத்தான் பதிவு எழுதப்பட்டிருக்கிறது. ஒருவேளை இக்கருத்தை கட்டுரை தெளிவாக வலியுறுத்துவதாக தெரியாதபட்சத்தில் பின்வரும் பத்திகள் கொஞ்சம் தெளிவாக்க உதவும் என நினைக்கிறேன்.
       குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியில் அவர்களின் 5 வயது வரையிலான பருவம் மிக முக்கியமானது. இந்தப் பருவத்தில் அவர்கள் தீவிரமாக தங்கள் சுற்றத்தை கவனிக்கிறார்கள்.இந்த பழக்கம்தான் அவர்களை விரைவாக கற்றுக்கொள்ள வைக்கிறது. எது சரி எது தவறு என்பதை குழந்தைகள் தங்களை சுற்றி இருப்பவர்களின் செயல்பாடுகளின் மூலமும் அந்த செயல்பாடுகளுக்கு மற்றவர்கள் தரும் எதிர்வினை மூலமும் தீர்மானிக்கிறார்கள். இதன் மூலம்தான் அவர்களது பிற்கால வாழ்வின் குணாதிசயங்கள் தீர்மானிக்கப்படுகிறது.
       ஆனாலும் தொலைக்காட்சியில் வரும் காட்சிகள் வெறும் பிம்பம்தான் என்பதை அவர்கள் புரிந்துகொள்வது  சற்று வளர்ந்த பிறகுதான்.இந்த நிலையில் நெடுந்தொடர்கள் என்பவை குழந்தைகளை பொருத்தவரை அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்களாகத்தான் தெரியும், பக்கத்து வீட்டு சம்பவம் போல. நிஜ வாழ்வில் எத்தனை பேர் குரூரமாக அடுத்தவர்கள் வாழ்வை  சிதைக்கத்திட்டமிடுகிறார்கள் ? ஆள் கடத்தலும் கொலையும் உங்கள் தெருவில் சர்வ சாதாரணமாகவா நடக்கிறது ? ஆனால் தொடர்களில் இவை எல்லா குடும்பங்களிலும் நடக்கும் அன்றாட நிகழ்வாக காட்டப்படும்போது, இது ஒரு இயல்பான விஷயம் என்று புரிந்துகொள்வார்களா இல்லையா ? கொலையை ஒரு குடும்பத்தில் நடக்கும் சாதாரண சம்பவமாக பார்க்கும் பிள்ளைகளைத்தான் நீங்கள் உலகிற்கு தர விரும்புகிறீர்களா ? 
      குழந்தைகள் முன்னால் பெற்றவர்கள் சண்டையிடுவதைக்கூட தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இதைவிட மோசமான செயல்களை அவர்கள் தினசரி காணும்படி செய்கிறோமே, இது எப்படி சரியாகும் என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி. 

      • வில்லவன் நான் தமிழில்தான் எழுதியுள்ளேன். கருத்துக்களை கூட ஒட்டி ஒட்டிதான் எழுதி இருக்கிறேன். எப்படி புரியாமல் போனது என தெரியவில்லை. எனவே சிறிது எளிமைப்படுத்த முயற்சிக்கிறேன்.

        குழந்தைகள் தங்களது வீட்டினர் சீரியலில் மூழ்கும்போது கூட அதனை விரும்புவது இல்லை. வேறு வழியே இல்லாமல் பார்த்தாலும் புரியுமா என்று தெரியவில்லை. அவர்களை கெடுத்துக் கொண்டிருக்கும் டிவி இன் வேறு அம்சங்களை குறிப்பாக விளம்பரம், மட்டமான நகைச்சுவை, பேய், பிசாசு, பில்லிசூனியம், ஸ்டார் வார் போன்ற அம்சங்களை விமர்சித்து இருக்க வேண்டும். மாறாக இதுவும் பிரச்சனை என்ற முக்கியமல்லாத அல்லது வலிந்து ஒட்ட வைக்க வேண்டிய பிரச்சினையை பேசி உள்ளீர்கள்.

        5 வயது வரை பள்ளிக்கு போவதற்கு முன்னர் கற்பதுதான் அவர்களது பிற்கால ஆளுமையை தீர்மானிக்கின்றது என்பது அறிவியல் ஆய்வின்படியே கூட தவறுதான• தற்கால அறிவியலாளர்கள் அதனை டீன் ஏஜூவில் கற்பதுதான் பின்னர் வாழ்வை தீர்மானிக்கும் என்கின்றனர். அதுவும் கூட சமூக வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வுகளைக் கணக்கில் கொள்ளாத ஆய்வக ஆய்வுதான். மா.லெனிய அமைப்புக்கு 25 வயதில் அறிமுகமாகி ஒருவர் முன்னுதாரணமான தோழராக மாற முடியாது என்பதுதான் அந்த வாத்த்தின் அபத்த்த்திற்கு எடுத்துக்காட்டு.

        விமர்சனம் மாத்திரமே போதுமா.. என்ன முறையில் அவர்கள் சிந்திக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை இதற்கு தர முடியும். டிவி யில் மாத்திரமே இருப்பதுதான் அவர்களது சமூக வாழ்வை குறைக்குமே தவிர டிவி யில் இருந்தே ஓடுவது அல்ல• மாறாக வீட்டில் டிவி யை வைக்காமல் இருந்தால் மக்களிடம் உங்களது கருத்துக்களை சொல்லும்போது அதன் தீய பக்கங்களை விளக்க கூட உங்களால் இயலாது. அதனுடைய எக்ஸ்ட்ரீம் என்ன முடிவுன்னா, கம்யூனிஸ்டுகள் நல்லவங்க•. இன்னிக்கு உள்ள உலகத்துல கம்யூனிசம் ஆட்சி செய்யல .. அதுனால அவங்க எல்லாம் இந்த உலகத்துல இருக்க கூடாது, அப்படின்னு யோசிச்சா அது எவ்வளவு அபத்தம்.

        கம்யூனிஸ்டுகள் மீனைப் போன்றவர்கள். ஓடும் ஆற்றின் நீரின் அடர்த்தியைக் கண்டு அஞ்சுபவர்களல்ல• குளிரால் நீர் உறைந்துவிடும் என்பதற்காக நிலத்தை நோக்கி ஓடும் கோழைளுமல்ல•. அப்படிப்பட்ட கோழைகள்தான் டிவி பெட்டியை தூக்கி விட்டால் வீட்டை மாற்றி விடலாம் என்று நம்ப முடியும்.

    • பெற்றோர்கள் சீரியலைப் பார்க்கும்போது குழந்தைகளும் அதைப்பார்த்து கெட்டுப்போகிறார்கள் என்பது உண்மைதான்.

      இதைவிட பெரிய ஆபத்து குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் விளம்பரங்களைப் பார்க்கத்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் குழந்தைகள். அது மட்டுமல்ல, குழந்தைகளுக்காக ஒளிபரப்பப்படும் சேனல்கள் அவர்கள‍ை இன்னும் ஒருபடி ‍மேலே சென்று புதைக்குழிக்குள் அமிழ்த்துகிறது.

      பெரியவர்களும், குழந்தைகளும் எப்படி எதார்த்த உலகிலிருந்து விலகி நிற்கிறார்கள். இதற்கான சமூக, உளவியல் காரணம் என்ன? என்ற கேள்விகளை முன்வைத்து கட்டுரை விளக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  4. Idha Idha Idhaan ya sola nenacheyn….

    Mikka nandri Vilavan

    Neenga Romba Valavan, Nalavan !!!

    Mega serial and other unnecessary things kept me from buying TV. Still thinking whether to buy T.V.

    🙂

    • I am thinking of cutting the cable connection and dispose TV. If you don’t have TV better avoid buying the same. You can read newspaper, magazines instead.

      • பத்திரிக்கைகள், ஆங்கிலமோ, தமிழோ மூன்று நான்கு பக்கங்கள் அரை நிர்வாணம் மற்றும் முக்கால் நிர்வாண வண்ண படங்களை சுமந்து வருகின்றன. மேற்கத்திய கலாச்சார உடையணிந்து விருந்துண்ணும் நிகழ்வு படங்கள், முறையற்ற காதல் செய்திகள் அதன் தொடர்பான கொலைகள், கொள்ளை போன்ற செய்திகள் இவை மட்டுமே பிரதான.முக்கிய செய்திகள் அவர்களுக்கு. இருப்பினும் இவைகளை புரிந்து கொண்டு புறந்தள்ளும் மனம் அனைவருக்கும் வேண்டும்

  5. மிகவும் வரவேற்க வேண்டிய பதிவு. இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பை மறைத்த நமது பிரபல?? தொலைக்காட்சி அலைவரிசைகளின் துரோகத்திற்குப் பின், நான் கொலைஞர் மற்றும் சான் குழும சானல்களைப் பார்ப்பதில்லை, எனது குடும்பத்தினரும் தவிர்க்கின்றனர். அதேபோல் சமீபத்திய திரை உலகத் தியாகிகளின் முற்சந்திப் பேச்சுகளுக்குப் பின், எந்த திரைப்படங்களையும் பார்ப்பதில்லை, திரைப்பட தியாகிகள் பற்றிய செய்திகளைப் படிப்பதில்லை/கேட்பதில்லை, அதைப் பற்றி யாரிடமும் விவாதிப்பதில்லை என முடிவெடுத்துவிட்டேன். திரைப்படங்களும் சரி, நெடுந்தொடர்களும் சரி எனக்கு தொடர்பிள்ளாதவைகளாகிவிட்டன. எவ்வளவோ நேரம் பயனுள்ள வகையில் செலவழிக்கப்படுகின்றது.

  6. ராசாத்தின்னு எழுதுனவுக ஆணா, பெண்ணா? இயக்க மறுப்பியலுன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசுதாக, முடிக்கிற இடத்துல சீரீயல் பாக்கும் மக்கள குழந்தை மனநிலைன்னு பிளேட்டை கவுத்துப்போட்டாகளே?

    //தங்களது இழிவான சமூக அந்தஸ்தை மறந்து ஒரு குழந்தையின் மனநிலையில் வாழ விரும்பும் போலி மனிதர்களின் உலகம் அது.//

    ராணி படிக்கதுக்கும் சீரியல் பாக்கதுக்கும் ஒருபாடு வித்தியாசமுண்டுல்லா? சீரியல் கதைங்க என்ன உளவியல் தாக்கத்தை உண்டுபண்ணும்கிறதை நீங்க நிறைய குறைச்சு மதிப்பிடுதீகன்னு நினைக்கேன்.

  7. அய்யா காளமேகம்

    ஆணா பெண்ணா என்ற அடையாளம் தெரிந்தால்தான் கதைப்பீர்களா… ஆணாதிக்கவாதியின் கண்ணோட்டத்தில் கட்டுரை உள்ளது என்பதை சொல்ல ஒரு பெண்தான் வர வேண்டுமா…

    இயக்க மறுப்பியல் என்பது பெரிய வார்த்தையா.. படிக்கப் போன பிறகு சுற்றத்தாருடன் கலந்து பழக மாட்டார்கள் குழந்தைகள் என்பது என்ன பார்வை. உலகம் இயங்கிக் கொண்டிருப்பதில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்க முடியாத சிறுமை அல்லவா அது. இத்தகைய பார்வை இயந்திரகதியாக (மெக்கானிக்கலாக) பார்க்கும் பார்வைக் குறைபாட்டால் ஏற்படுவதுதானே…

    நான் சேம் சைடு கோல் போடவில்லை. மாறாக பின்னூட்டமிட்ட பலரும் அதனைச் செய்துள்ளனர் எனக் கருதுகிறேன். அதாவது நான் டிவி வாங்கவே மாட்டேன், வாங்கினாலும் பாக்க மாட்டேன் என்று பரிசுத்தமான வாதங்களுக்குள் சிக்கி விட்டனர். பெரும்பான்மை மக்கள் எதனை ரசிக்கிறார்கள் என்பது கூட தெரிந்து கொள்ள முடியாத அதாவது நிகழ்கால சமூகத்தில் உரையாட முடியாத படிப்பறை வாதிகளாக மாறி வருபவர்கள்தான் இதனை வழிமொழிய முடியும்.

    மற்றபடி ராசாவும் நானே ராசாத்தியும் நானே…

    • டி.,வி வாங்காம ஒதுக்கது நல்ல விசயம். இதனாலேயே கம்யூனிஸ்ட்டுகள் மக்களுடன் பேசுவது முடியாதுன்னு நீங்க சொல்லத்தை ஒப்ப முடியல. சாதி கூடாதுன்னு பேசுத கம்யூனிஸ்ட்டுக சாதிய விட்டு கல்யாணம் செய்யுதாக. இதுக்காக சாதியோட வாழுத மக்களோட கம்யூனிஸ்ட்டுக பேச முடியாதுன்னு ஆகுதே, என்ன சொல்லுதீக ராசா?

      டி.வி தொடரை பாக்காதிகன்னு சொன்னா அது தப்புன்னு எப்படி விளக்குதீக? நீங்க சொல்லுத பாத்தா கம்யூனிஸ்ட்டுக டி.வி ஆரம்பிச்சு நல்ல சீரியலை காட்டணுங்கீகளா? நடக்குத கதையைப் பேசுங்க ராசா. டி.வியினால புள்ளைக எப்படி வன்முறை கொணம் கொண்டவுகளாக மாறுதான்னு வினவுல சில கட்டுரைக வந்திருக்கே, அதையும் கொஞ்சம் படிச்சுப்பாருங்க ராசா

      • டிவி வாங்காம இருந்தா உங்க புள்ள நல்லவனா வளர்ந்து விடுவானா… சமூகத்தில் தீமை நிறைய இருக்கிறது என்பதற்காக ஒரு குழந்தையை வாழ விடாமல் செய்வதுதான் அறிவுடைமையா… டிவி யில் நல்ல விசயங்கள் எதுவுமே இல்லையா… ஒருவேளை எல்லாமே கெட்டது என்றாலும் அது கெட்டது எனத் தெரிவதற்கு நீங்கள் அவ்வப்போது எவ்வளவு கெடுத்து இருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்வதற்கு டிவி பார்ப்பது அவசியமில்லையா.. கெட்டதையும் நல்லதையும் அருகருகே வைத்து நல்லதை எப்படி தேர்வு செய்வது எனக் குழந்தைக்கு உபதேசிப்பது சரியா… அல்லது சுத்தாதன்ன் சித்தார்த்தனை வளர்த்த்து போல வளர்க்கப் போகின்றீர்களா…அதுவும் சாத்தியமா..

        சாதி அப்படினு சொல்லி சேம் சைடு கோல் போட்டுட்டீங்க•..மிஸ்டர் காளமேகம்

        டிவி ஐ க்மயூனிஸ்டுகள் ஆரம்பிக்கணும்னு சொல்லவில்லை. மாறாக மக்கள் எப்படி சமூக வாழ்க்கைக்கு உட்படுத்துவது என்றுதான் கூறியுள்ளேன். புள்ளைங்க சீரியல் பாத்து கெட்டுப் போனாங்களா, டிவி யப் பாத்து கெட்டுப் போனாங்களா

  8. உண்மையான செய்தி
    இது பெண்களுக்கான பொழுதுபோக்கு பெட்டி, படித்தவர், படிக்காதவர், வேலைக்கு செல்பவர், செல்லாதவர் எல்லோருக்கும் பொழுதுபோக்கும் பெட்டி. அதை தூற்றுவதா
    உலகத்தை அடுப்பங்கரையில் தரும் அவதாரம் அவமதிக்கலாமா. நடக்காததையா நெடுந்தொடரில் நீட்டி முழக்குகிறார்கள். தேவைக்காக- சந்தோசத்திறகாக சில ஜோடனைகள்.. செய்திகள்……. அரசு தொலைகாட்சியில் பாருங்கள் அல்ல அம்மா தொலைகாட்சியில் பாருங்கள் உலக நடப்பா, வீட்டு நடப்பா தெரியும். குழந்தைகளுக்கான தொலைகாட்சி 4 உள்ளன. அ, ஆ, இ சொல்லி தரும் நிகழ்ச்சி ஒன்று மட்டுமே. மற்றவை உங்களுக்கே தெரியும்
    இதற்கு வீட்டில் நடக்கும் சண்டை

    சுட்டி டிவியும் கார்ட்டூனும் குழந்தை கேட்க, செய்திக்கு தாத்தா சண்டையிட, நெடுந்தொடருக்கு மாமியாரும் மருமகளும் முகத்தை திருப்பிக் கொள்ள அந்த ரிமோட் உடைந்ததுதான் மிச்சம்.

    ஒன்று தெரியுமா சென்னையில் வசிக்கும் எனது வீட்டில் இந்த பிரச்சினை ஏதம் இல்லை. ஏன் தெரியுமா எனது வீட்டில் தொலைகாட்சி பெட்டியே கிடையாது

  9. நான் படித்த மின்னஞ்சல் இது…இது மிக நீளமான பின்னூட்டம்தான்…ஆனாலும் 26/11 தாக்குதல் நடந்து ஓராண்டு ஆவதாலும், இந்தக் கட்டுரை சார்ந்த விவரங்கள் உள்ளதாலும்…இதை இட விரும்புகிறேன்.

    “நூறு பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு நிகரான பயங்கரவாதிகள் இருக்க முடியுமா? ஆங்கில டி.வி சேனல்கள்தான் அப்படிப்பபட்டவர்களாக எனக்கு இப்போது தெரிகிறார்கள். மழையில் மூழ்கிய சென்னைக்குத் திரும்புவதை விட மும்பையில் இருப்பதே பாதுகாப்பானது என்று சென்னை நண்பர்கள் எச்சரித்ததால், மும்பை வீட்டிலேயே மேலும் ஒரு வாரம் இருந்தபோது தொடர்ந்து 60 மணி நேர மீடியா பயங்கரவாதத் தாக்குதலை நான் அனுபவிக்க நேர்ந்தது.

    திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லி நம் தலைக்குள் அதைப் பதியவைக்க முயற்சி செய்துகொண்டே இருந்தன இந்த டி.வி சேனல்கள். இந்தியாவின் அடையாளச் சின்னமான ஹோட்டல் தாஜ் தாக்கப்பட்டுவிட்டது என்று இன்னமும் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். எந்த இந்தியாவில் யாருடைய அடையாளச் சின்னம் ஹோட்டல் தாஜ் ?
    மும்பையில் முதலில் தாக்குதலுக்கு உள்ளான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் தான் மும்பையின் உண்மையான அடையாளச் சின்னம். இங்குதான் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக பீஹார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு முதலியவற்றிலிருந்து சக இந்தியர்கள் தினசரி வந்து இறங்கி மும்பையையும் தங்களையும் கடும் உழைப்பால் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த ரயில் நிலையத்தின் நடை மேடையில்தான் அறுபது பிணங்கள் முதலில் விழுந்தன.

    ஆனால் இன்று வரை ஒரு சேனலும் இந்த ரயில் நிலையக் காட்சிகளைக் காட்டவில்லை. நட்சத்திர ஓட்டல்களான தாஜ், ஓபராய் இரண்டிலும் உடைந்த சோபாக்கள், எரிந்த திரைச் சீலைகளைக் காட்டுவதற்கு இந்தியாவின் நம்பர் ஒன் பெண் டி.வி அறிவிப்பாளர் பர்க்கா தத் முண்டியடித்துக் கொண்டு காமராவுடன் அலைகிறார். ஆனால் அரசு மருத்துவமனையில் இன்னமும் அடையாளம் தெரியாமல் கிடந்துகொண்டிருக்கும் ரயில் நிலையப் பிணங்களையோ, அடையாளம் தெரிந்த பிணங்களைப் பெற்றுச் செல்ல சாதாரண மக்கள் படும் பாட்டையோ எந்த டி.வி சேனலும் கண்டுகொள்ளவே இல்லை.

    பயங்கரவாதத் தாக்குதல்களினால் மும்பை நகரமே ஸ்தம்பித்துப் போய் விட்டதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை இந்த சேனல்கள் ஏற்படுத்தின. அப்படி எதுவும் நடக்கவில்லை. சிவாஜி ரயில் நிலையம் மறு நாள் விடியற்காலையிலிருந்து இயங்கத் தொடங்கிவிட்டது. பயங்கரவாதிகளின் முற்றுகை நீடித்த இடங்களான ஹோட்டல் தாஜ், ஓபராய், நாரிமன் பவன் என்ற யூதர் குடியிருப்புக் கட்டடப் பகுதிகளைத் தவிர மீதி மும்பை சகஜமாக செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தது.

    மும்பையின் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாஜ், ஓபராய் ஹோட்டல்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மும்பையின், இந்தியாவின், உலகத்தின் மிகப் பெரும் பணக்காரர்கள் மட்டுமே புழங்கும் இடங்கள் அவை. தாக்குதலைப் பதிவு செய்ய 60 மணி நேரம் தாஜ் ஓட்டலுக்கு வெளியே முகாமிட்டிருந்த சுமார் 300 டி.வி நிருபர்கள், ஒளிப்பதிவாளர்களில் பத்துப் பதினைந்து பேரைத் தவிர வேறு யாரும் சாதாரண நாட்களில் அந்த ஹோட்டலுக்குள் போய் ஒரு காபி கூடக் குடிக்க முடியாது.

    தினசரி 60 லட்சம் பயணிகளை காலையும் மாலையும் சுமந்து சென்று வரும் மும்பையின் உள்ளூர் ரயில்களில் குண்டு வெடித்தபோது, அதில் நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் இறந்தபோது, மும்பை நகரமே தாக்கப்பட்டுவிட்டதாகவோ, இந்தியாவே தாக்கப்பட்டுவிட்டதாகவோ கூக்குரல் எழுப்பாத இந்த சேனல்கள், நட்சத்திர ஓட்டல்கள் மீதான தாக்குதல்களின் போது மட்டும் ஓவராக புலம்பி வருவது ஏன் ?

    இந்தியாவை ஆட்டிப் படைக்கும் அதிகார சக்திகளின் சந்திப்பு இடம் இவை. பெரும் தொழிலதிபர்கள், உலக வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள், இடைத்தரகர்கள், சினிமா நட்சத்திரங்கள், சினிமா, அரசியல், பயங்கரவாதம் அத்தனைக்கும் நிதியுதவி வழங்கும் மாஃபியா ரவுடி கும்பல் தலைவர்கள் தினசரி இந்த ஹோட்டல்களில்தான் சந்திக்கிறார்கள். நடைபாதையில் தூங்கும் சாதாரண மக்கள் மீது கார் ஏற்றிக் கொன்றுவிட்டு, காரை ஓட்டியது தானல்ல, டிரைவர்தான் என்று இன்னொரு சாதாரண மனிதனைச் சிறைக்கு அனுப்பி வைக்கும், பணக்கார வீட்டுப் பொறுக்கி வாரிசுகள்தான் லியோபோல்ட் கிளப்புகளின் முக்கிய வாடிக்கையாளர்கள்.

    அதிகாரத்தின் சின்னம் இந்த ஹோட்டல். தேசத்தின் சின்னமோ, மக்களின் சின்னமோ அல்ல.

    அதனால்தான் பயங்கரவாதிகள் இந்த முறை இதைத் தேர்ந்தெடுத்துத் தாக்கியிருக்கிறார்கள். சாதாரண மக்களைத் தாக்கி எந்தப் பயனும் இல்லை என்பது பயங்கரவாதிகளுக்கும் புரிந்து விட்டது. மார்க்கெட்டில், பஸ்களில், ரயிலில் குண்டு வைத்தால், சாதாரண மக்கள் சாகிறார்கள். ஆனால், மறு நாளே சகஜ நிலைக்கு வந்துவிடுகிறார்கள். எதுவுமே நடக்காதது போல அவரவர் வேலைக்குப் போகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், சாதாரண மக்கள் சாகும்போது, எதுவுமே நடக்காதது போல தங்கள் ஊழல் அராஜக ஆட்சிப் பணிகளைத் தொடர்கிறார்கள்.

    நட்சத்திர ஓட்டல்களை தாக்கிய வுடன்தான் அதிகார சக்திகளுக்கு பதற்றம் ஏற்படுகிறது. அவர்களை அண்டிப் பிழைக்கும் டி.வி சேனல்கள் எல்லாம் ஒப்பாரி வைக்கின்றன. `பொறுத்தது போதும். பொங்கி எழு’ என்கின்றன.

    பஸ், ரயில், மார்க்கெட் குண்டு வெடிப்புகளில் மறு நாளே நகரம் சகஜ நிலைக்குத் திரும்பியபோது, அதை `ஸ்பிரிட் ஆஃப் மும்பை’, `விழ விழ, எழுவோம்’ என்றெல்லாம் கொண்டாடியவர்கள் இவர்கள். ஏனென்றால் அடுத்த நொடியிலேயே சாதாரண மனிதன் சகஜ நிலைக்குத் திரும்பியதால்தான், இந்தப் பணக்காரர்களுடைய ஆலைகள், அலுவலகங்கள், ஓட்டல்கள், சினிமா படப்பிடிப்புகள் எல்லாம் தடையின்றி இயங்க முடிந்தது. தங்கள் தொழிலுக்கு பாதிப்பு வராதவரை அது `ஸ்பிரிட் ஆஃப் மும்பை.’

    இப்போது இந்தப் பெரும் பணக்காரர்களே நேரடியாகத் தாக்கப்படும்போது, பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சாதாரண மக்களைத் தூண்டி விடுகிறார்கள். தங்கள் நீச்சல் குளங்களுக்கும், குடித்து கும்மாளம் போடும் ரெஸ்டாரண்ட்டுகளுக்கும் பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமை என்று அதை நெருக்குகிறார்கள். திவாலாகும் வரை லாபம் எல்லாம் தங்களுடையது. திவாலானால், காப்பாற்றவேண்டியது அரசின் பொறுப்பு என்று சிட்டி பேங்க் முதல் ஜெனரல் மோட்டார்ஸ் வரை சொல்லும் அதே அணுகுமுறை.

    காவல் அதிகாரிகள் முதல் கமாண்டோக்கள் வரை பலர் உயிரிழந்தது பெரும் தியாகம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் அறிவைப் பயன்படுத்தாத தியாகத்துக்கு ஒரு அர்த்தமும் இல்லை. மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் கர்காரேவும் இன்னும் இரு உயர் போலீஸ் அதிகாரிகளும் ஒரே ஜீப்பில் சென்று பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு இரையானது முட்டாள்தனமானது. உயர் தலைமையில் இருப்பவர்கள் நெருக்கடியான நேரங்களில் ஒன்றாகப் பயணம் செய்வது கூடாது என்பது அடிப்படை விதி. பிரதமரும் ஜனாதிபதியும் ஒரே காரில் வருவதில்லை. இந்த சாதாரண அடிப்படை விதிகளைக் கூடப் பின்பற்றாமல் உயிர்த் தியாகம் செய்வதில் என்ன பயன்?

    பேட்டி தந்த கடற்படை கமாண்டோவின் தலைவர், முகம் தெரியக்கூடாது என்று ஒரு துணி கட்டியிருக்கிறார். சினிமா கதாநாயகிகள் போடுகிற மாராப்பு மாதிரி; உள்ளே இருப்பதெல்லாம் தெரிவதற்கென்றே போடுகிற மறைப்பு போல. தாஜ் ஓட்டலின் உட்புற அமைப்பு எப்படி இருக்கும் என்று கமாண்டோக்களுக்குத் தெரியாதாம். அதனால் கடுமையாகப் போராட வேண்டியிருந்ததாம். ஆனால் பயங்கரவாதிகளுக்கு ஒட்டலின் அத்தனை பகுதிகளும் அத்துப்படி என்று அவரே சர்ட்டிஃபிகேட் தருகிறார்.

    பல மணி நேரம் போட வேண்டிய சண்டை என்று தெரிந்தே செல்கிற கமாண்டோக்கள், ஏன் மேலும் ஒரு மணி நேரம் ஓட்டலின் வரைபடத்தைப் பார்த்துப் படித்து திட்டமிட்டுவிட்டு நுழைந்திருக்கக்கூடாதா ? ஓட்டல் அதிபர் ரத்தன் டாட்டா நினைத்தால் அரை மணி நேரத்தில் ஓட்டலின் வரைபடத்தை வரவழைத்துத் தரமுடியாதா ? பயங்கரவாதிகளிடம் சேட்டிலைட் படங்களெல்லாம் இருந்ததாம். ஏன், அதெல்லாம் இந்திய அரசிடம் கிடையாதா ?

    இந்தக் கேள்விகளையெல்லாம் எழுப்பாத டி.வி.சேனல்கள், வசதியாக எல்லா பிரச்சினைகளுக்கும் அரசியல்வாதிதான் காரணம் என்று குற்றம் சாட்டுவதை, ஒரு இயக்கமாக ஒரு வாரமாக செய்து வருகின்றன. தேசத்துக்கே நெருக்கடியான இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியும் மும்பைக்கு சேர்ந்து வரக்கூடாதா, தனித்தனியாக வரவேண்டுமா என்று ராஜ்தீப்பும் அர்னாபும் கேட்கிறார்கள்.

    தேச நெருக்கடி என்றால் அரசியல்வாதிகள் கருத்து வேறுபாட்டை ஒதுக்கிவிட்டு ஒன்று சேரவேண்டுமாம். அந்த நேரத்தில் அரசியல் செய்யக்கூடாதாம். சரி. சேனல்கள்? அவை எப்படி நடக்க வேண்டும்? அவையும் ஒவ்வொரு இடத்துக்கும் தனித் தனி கேமரா, தனித் தனி நிருபர் அனுப்பாமல், ஒளிப்பதிவை, பேட்டிகளை பகிர்ந்துகொள்ளலாமே. மிச்சப்படும் நிறைய பேரை இன்னும் அதிக இடங்களுக்கு அனுப்பலாமே. மாட்டார்கள். சேனல்களில் பத்து நிமிடத்துக்கொரு முறை என்ன சொன்னார்கள் தெரியுமா? `இந்த செய்தி எங்கள் சேனலின் பிரத்யேக செய்தி. இதை முதலில் சொன்னது நாங்கள்தான்.’

    தேச நெருக்கடியில் நீங்கள் இப்படி வியாபாரம் செய்யலாமென்றால், அரசியல்வாதி அரசியல் செய்யக் கூடாதா ?

    உண்மையில் அரசியல் செய்வது சேனல்கள்தான். இந்த நாட்டின் பெரும் பணக்காரர்கள் சார்பான அரசியல். சாதாரண மக்கள் தாக்கப்படும்போதெல்லாம் பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சொல்லாதவர்கள், நட்சத்திர ஓட்டல் தாக்கப்பட்டதும் பொங்கி எழச் சொல்லி தூண்டுகிறார்கள். அமிதாப், அமீர்கான் எல்லாரும் இணையத்தில் புலம்புகிறார்கள்.

    சேனல்களின் தொடர் பிரசார அரசியல் வெற்றி பெறுகிறது என்பது இன்னொரு வேதனை. பாபர் மசூதி இடிப்புக்கு, பாராளுமன்றம் தாக்கப்பட்டதற்கு, பஸ், ரயில் குண்டு வெடிப்புகளுக்கு, குஜராத் கோவில் தாக்குதலுக்கு, முஸ்லிம்கள் படுகொலைக்கு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தற்கொலைக்கு ராஜினாமாக்கள் இல்லை. ஆனால் நட்சத்திர ஓட்டல் தாக்குதலுக்கு ஒரு மத்திய உள்துறை அமைச்சர், மாநில முதலமைச்சர், உள்துறை அமைச்சர் என்று மூன்று தலைகள் உருட்டப்பட்டிருக்கின்றன.

    எல்லா அரசியலும் எல்லா அரசியல்வாதியும் மோசம் என்ற கருத்தை இந்த சேனல்கள் பரப்புகின்றன. ஒரு சர்வாதிகாரி நாட்டுக்குத் தேவை என்ற மனநிலையை மறைமுகமாகப் பரப்புகின்றன. சர்வாதிகாரிகளும் பயங்கரவாதிகளும்தான் பணக்காரர்களுக்கு உகப்பானவர்கள். ஏனென்றால் பேரம் பேச வசதியானவர்கள் அவர்கள்தான். ஜனநாயகத்தின் அரசியல்வாதிகள் ஒரு கட்டத்துக்கு மேல் மக்களுக்கு பயந்தாக வேண்டும்.

    மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டு அரசியல்வாதிகளின் மீதான ஒட்டுமொத்த அவ நம்பிக்கையை ஏற்படுத்துவது ஜனநாயகத்துக்கே ஆபத்தானது. எல்லை கடந்த பயங்கரவாதத்தை விட ஆபத்தானது இந்த உள்ளூர் பயங்கரவாதம். கத்தியின்றி ரத்தமின்றி நடத்தப்படும் இந்த யுத்தம் நம் உடல் மீது அல்ல, உள்ளத்தின் மீது, சிந்தனை மீது. உஷாராக இருப்போம்”..

      • //நான் படித்த மின்னஞ்சல் இது…//
        என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளேன்…ஞானி எழுதியதா என்று எனக்கு தெரியாது…மன்னிக்கவும்.

  10. கோலங்கள் என்ற ஒரு சிந்துபாத் கதை கடந்த 5 வருடங்களுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது, எப்போ முடியும்னு கதை டைரக்டருக்கே தெரியுமோ என்னவோ. தாங்கமுடியல. அதில் வரும் ஆதி என்ற கழிசடை கேரக்டரை என்னவோ ஒசாமா பின்லேடன் ரேஞ்சுக்கு விவரிக்கிறார்கள். ஒருவன் மொள்ளமாரித்தனம், கேப்மாரித்தனம், ஊரை அடிச்சு உலைல போடுறது இதையெல்லாம் கத்துக்கணுமின்னா இந்த பண்ணாடை கேரக்டரை பார்த்தால் போதும், இதில் அபின்னு ஒரு ரெண்டும்கெட்டான் கேரக்டர் இன்னவரைக்கும் இவனுக்கு ஆப்பு வைக்க யோசிச்சு யோசிச்சு கிறுக்கு புடிச்சு அலைகிறாள். இந்த ஆதியும் அபியும் அக்கா தம்பியாம், ஆதி தனது எதிரிகளை அஃதாவது சொந்த தம்பியாய் இருந்தாலும் போட்டு தள்ளிக்கினு போய்க்கிட்டே இருப்பாராம். இந்த கேரக்டரை காப்பியடிச்சு எவனாவது சொந்த குடும்பத்துக்கே குழி வெட்டாம இருந்தா சரி. இதில் தோழர் என்ற கேரக்டர் செந்தமிழிலேயே இலங்கை தமிழரை மனதில் வைத்து பேசி பேசியே போட்டுத்தள்ளப்பட்டுவிட்டார். என்னத்தை சொல்ல‌…………….

    • //கோலங்கள் என்ற ஒரு சிந்துபாத் கதை கடந்த 5 வருடங்களுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது, எப்போ முடியும்னு கதை டைரக்டருக்கே தெரியுமோ என்னவோ. தாங்கமுடியல. அதில் வரும் ஆதி என்ற கழிசடை கேரக்டரை என்னவோ ஒசாமா பின்லேடன் ரேஞ்சுக்கு விவரிக்கிறார்கள். ஒருவன் மொள்ளமாரித்தனம், கேப்மாரித்தனம், ஊரை அடிச்சு உலைல போடுறது இதையெல்லாம் கத்துக்கணுமின்னா இந்த பண்ணாடை கேரக்டரை பார்த்தால் போதும், இதில் அபின்னு ஒரு ரெண்டும்கெட்டான் கேரக்டர் இன்னவரைக்கும் இவனுக்கு ஆப்பு வைக்க யோசிச்சு யோசிச்சு கிறுக்கு புடிச்சு அலைகிறாள். இந்த ஆதியும் அபியும் அக்கா தம்பியாம், ஆதி தனது எதிரிகளை அஃதாவது சொந்த தம்பியாய் இருந்தாலும் போட்டு தள்ளிக்கினு போய்க்கிட்டே இருப்பாராம். இந்த கேரக்டரை காப்பியடிச்சு எவனாவது சொந்த குடும்பத்துக்கே குழி வெட்டாம இருந்தா சரி. இதில் தோழர் என்ற கேரக்டர் செந்தமிழிலேயே இலங்கை தமிழரை மனதில் வைத்து பேசி பேசியே போட்டுத்தள்ளப்பட்டுவிட்டார். என்னத்தை சொல்ல‌…………….//

      வூட்டுக்காரம்மா தெனம் கோலம் போட்டு டார்ச்சர் பன்னுவது நல்லாவே தெரியுது… எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

      பெண்களின் ரசனையுணர்வு இது போல இருப்பதில் பெண்ணடிமைத்தனத்தின் பாத்திரம் மிக முக்கிய பங்காற்றுகிறது என்பது எனது கருத்து. இதனை சிறிது அனுதாபத்துடன் அனுகிதான் அவர்களிடம் போராட வேண்டியுள்ளது.

  11. வில்லவன், 

    நியாயமாக கவலைப்படுகிறீர்கள். வேலைத்தளத்தில் ஆங்கிலம் பேசி, கேட்டு அலுத்துப்போய் வீட்டில் காதுகுளிர என் தாய்மொழியை கேட்கலாமே என்று தமிழ் தொலைக்காட்சியை பார்த்தால் அவ்வப்போது இப்படி ஓரிரு நெடுந்தொடர் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் நான் பார்த்ததிலிருந்து சொல்கிறேன். நீங்கள் சொல்வதில் இரண்டு விடயங்கள் என் மனதிலும் அடிக்கடி தோன்றியதுண்டு. ஒன்று, குழந்தைகளை இந்த நெடுந்தொடர் இம்சைகள் எப்படி பாதிக்கிறன என்பது. அடுத்தது, சாதாரண மனித உணர்வுகளை இந்த நெடுந்தொடர் கதாபாத்திரங்கள் மூலம் ஏனோ அசாதாரணமான ஓர் உணர்வாக அல்லது அளவுக்கு மீறி சித்தரித்து அதற்கு பிழையான ஓர் வடிகால் தேடுவது போலுள்ளது. அன்றாட வாழ்க்கைப்பிரச்சனைகளை அதற்குரிய பரிமாணங்களோடு சொல்லி, நீட்டி முழக்காமல் அவற்றை தீர்ப்பதற்கு நடைமுறைச்சாத்தியங்களோடு கூடிய தீர்வை சொல்ல நெடுந்தொடர் காதிசிரியர்கள் கொஞ்சம் பொறுப்போடு முயற்சி செய்யவேண்டும். அப்படி செய்வார்களா தெரியவில்லை. அல்லது, நாங்கள் தொலைக்காட்சியை மூடிவைத்துவிட்டு ஏதாவது நல்ல விடயங்களை சொல்லும் நல்ல புத்தகங்களை வாசிக்க கற்றுக்கொள்ளவேண்டும் என்பது என் கருத்து. குழந்தைகளிடமும் விஜய் போல், சூர்யா போல் நடனமாடுவது எப்படி என்று கற்றுக்கொடுக்காமல் (எங்களுக்கு தற்போது விஜய் தொலைக்காட்சி இலவசமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் தான் இதையெல்லாம் பார்த்தேன்) அவர்களுக்கு ஆர்வமுள்ள விடயங்களில் கவனம் செலுத்த ஏதோ எங்களால் ஆனதை செய்யலாம் என்று நினைக்கிறேன். மற்றப்படி இந்த நெடுந்தொடர் அக்கப்போர்  தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களிடமும், Hollywood இலிருந்து இங்குள்ள சமுதாயத்தைச் சேர்ந்த ஒருசாராரிடமும் தன் வேலையை காட்டிக்கொண்டுதானிருக்கிறது. 

     

    • ரதி,

      //அன்றாட வாழ்க்கைப்பிரச்சனைகளை அதற்குரிய பரிமாணங்களோடு சொல்லி, நீட்டி முழக்காமல் அவற்றை தீர்ப்பதற்கு நடைமுறைச்சாத்தியங்களோடு கூடிய தீர்வை சொல்ல நெடுந்தொடர் காதிசிரியர்கள் கொஞ்சம் பொறுப்போடு முயற்சி செய்யவேண்டும்//
      நெடுந்தொடர்கள் மக்களிடம் மலிவான உணர்சிகளை தூண்டி அதன் வாயிலாக லாபம் பார்க்கத்தான் தயாரிக்கப்படுகின்றன. அதனால் அங்கு நாம் பொறுப்புணர்வை  எதிர்பார்க்க முடியாது.
      (டாஸ்மாக்கில் சுக்குகாபி விற்கவேண்டும் என நாம் கோரிக்கை வைக்கமுடியாது இல்லையா?. ஒன்று சாராயக்கடையை மூடவேண்டும் அல்லது கடைக்கு செல்பவனை தடுக்கவேண்டும். அதுதான் சரியான வழியாக இருக்கமுடியும்)
      //அல்லது, நாங்கள் தொலைக்காட்சியை மூடிவைத்துவிட்டு ஏதாவது நல்ல விடயங்களை சொல்லும் நல்ல புத்தகங்களை வாசிக்க கற்றுக்கொள்ளவேண்டும் என்பது என் கருத்து.அவர்களுக்கு ஆர்வமுள்ள விடயங்களில் கவனம் செலுத்த ஏதோ எங்களால் ஆனதை செய்யலாம் என்று நினைக்கிறேன்.// 
      நிச்சயமாக, இப்போதைக்கு இதுதான் நம்மிடம் உள்ள ஒரே வாய்ப்பு.

      • பலர் இங்க சீரியல்களை மட்டுமே பற்றி பேசுகிறார்கள். அதைவிடவும் சீரியசாய் விஷயம் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. அது என்ன? இங்கேயும் நுழையுங்கள்….. http://maaruthal.blogspot.com/2009/11/blog-post_04.html

  12. ரசிய புரட்சி நாள் விழாவுக்கு, அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்

    http://vrinternationalists.wordpress.com/2009/11/05/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/

  13. தலைப்பையும் கார்ட்டூனையும் கண்டு உள்ளே நுழைந்தால், பல பாராக்கள் படித்தும் குழம்பித்தான் போனேனே ஒழிய ஒன்றும் புரியவில்லை. கடைசி இரண்டு பத்தியில் தான் வில்லன் விஷயத்தை வைத்துள்ளார். நம் வீட்டில் விஷயமே வேற. குழந்தைகள் இருக்கும் நேரம் எப்போதும் கார்ட்டூன்தான் ஓடுகிறது. பெரிய பிள்ளைகள் மற்ற சில சமயங்களில் கிரிக்கட் பார்ப்பார்கள். அதனால்தான் எனக்கு இந்த பதிவில் ஆரம்பத்தில் ஒன்னும் புரியவில்லை. எனினும், என் பிள்ளைகள் போன்று கார்ட்டூன் மட்டுமே பார்த்து வளருபவர்கள், மற்ற சீரியல் பார்த்துவிட்டு வரும் பிள்ளைகளால் என்ன பாடு பட போகிறார்களோ?

    //// டாஸ்மாக்கில் சுக்குகாபி விற்கவேண்டும் என நாம் கோரிக்கை வைக்கமுடியாது இல்லையா?. ஒன்று சாராயக்கடையை மூடவேண்டும் அல்லது கடைக்கு செல்பவனை தடுக்கவேண்டும். அதுதான் சரியான வழியாக இருக்கமுடியும் ////

    —–சரியாக சொன்னீர்கள்.

  14. ”தொடரின் கதைகளுக்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதாவது தொடரில் வரும் ஒரு குடும்பம் கூட மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது.”

    ஆம் அது போல் புஜ/புக இதழ்களுக்கும் சில விதிமுறைகள் உண்டு.அதாவது இந்தியாவில் நடக்கும் நல்லது அல்லது சாதனை பற்றி எழுதக் கூடாது/ எப்போதும் யாரையாவது திட்டித்தான் எழுத வேண்டும். விமர்சனம் நாகரிகமாக எழுதப்படக்கூடாது, வசவு வார்த்தைகளை நிறைய தெளிக்க வேண்டும்.புஜ 25 ஆண்டுகளாக அச்சில் வரும் சீரியல்.அதில் நிரந்தர வில்லன்கள் உண்டு. இப்படி சீரியல்களையும் புஜவையும் ஒப்பிட்டு நிறைய எழுதலாம்.

    • வாழ்வதும் மூச்சுவிடுவதும், தின்பதும், மலம் கழிப்பதும் கூட சீரியல்தான். நிரந்தர வில்லன் யார் என்பது எனக்குப் புரியவில்லை. தங்களை மக்களுக்கு வில்லனாகவே வைத்திருப்பவர்களை வருடித் தர வேண்டும் என்பது உங்களது கொள்கையானால் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.

      ஒன்று புரியவில்லை. என்ன நல்லது நடந்த்து இப்போது என சில உதாரணம் தர முடியுமா.. அந்த உதாரணம் நாங்கள் திட்டுவதை விட முக்கியமானது என்பதையும் சேர்த்து சொல்வது நாகரீகமானது என நினைக்கிறேன்.

      நாகரிகமான விமர்சனம் என்றால் என்ன, வசவுகள் மட்டுமே இருந்த்தா அல்லது வசவு பத்தாது என்ற சூழல் இருந்த்தா.

      ஒரு பண்பாட்டு விசயத்தை பேசும் போது பலவற்றிற்கும் போகலாம். மாறாக அரசியல் பத்திரிக்கையையும் இந்த இடத்தில் விவாதிக்க வேண்டும் என விரும்பும் உங்களது விமர்சனமானது எப்படி நாகரீகமானது எனச் சொல்ல முடியுமா

    • அன்பரே நீங்கள் சொல்வது சரிதான். தனக்கு ஏதும் நன்மை இல்லாத பட்சத்தில் எவரின் தீமையும் விமர்சிக்கப்படுகிறது. அதேநேரம் தனக்கு சிறு ஆதாயம் என்றாலும், சப்பைக்கட்டுகட்டியும், மெருகூட்ட பல ஐடியா கொடுத்தும், பாராட்டி தனி இடுகை இடும் சந்தர்ப்பவாதமும் இருக்கிறது. உதாரணம், இங்கே: https://www.vinavu.com/2009/11/03/tamil-manam-awards/

      • நன்மை யாருக்கு இல்லாத பட்சத்தில் மக்களுக்கா அல்லது முதலாளிகளுக்கா..

        தமிழ்மணம் விருதுகளுக்கு ஆலோசனை சொன்னது ஆதாயத்திற்கா… அப்படி என்ன வரிகள் உள்ளன என ஆதாரம் அளியுங்கள்.

  15. ‘ஒன்று புரியவில்லை. என்ன நல்லது நடந்த்து இப்போது என சில உதாரணம் தர முடியுமா’

    Chandryan project was executed by ISRO and the whole world appreciated it. Did PJ ever acknowledge such things. Venky Ramakrishnan won a Nobel. You did not even write an article congradulating him and explaining the significance of his work.There are many innovative projects and success stories like Arvind Eye Hospital Madurai which time and again prove Indians can innovate for social good.If you think there is nothing positive in India that is worth writing it shows your attitude.There are many NGOs working in Gujarat to heal the wounds and restore communal harmony. Have you ever written anything about that or about instances where Hindus and Muslims have worked together or celebrated together. Have you ever written a single sentence about the work done by Ramakrishna Mission and other organizations including Gandhian organizations. Krishnammal and Jegannathan – the couple from Tamil Nadu were awarded the Right Livelihood Prize aka Alternative Nobel Prize. They fought in the Supreme Court against destruction of agricultural lands for prawn cultivation.In the 25 years of Puthia Jananayagam have you ever acknowledged their contribution to this issue, at least once.

    • ரவி சீனிவாசு..போக்கிறின்னு ஒரு ‘நல்ல’ படம் வந்ததே பாக்கலையா, பாடி சோடா கேரக்டரு கொண்டையை மறைக்க மறந்த கதையாவே இருக்கே உம்ம கதை… you are so predictable….

  16. நான் மணி

    அறிவியலுக்கு நான் எதிரி அல்ல• ஆனால் அதன் மனித சமூகத்திற்கான பயன்பாடு என்ன என்பதில் இருந்துதான் அளவிட வேண்டும் என நினைக்கிறேன். தன் நாட்டு மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய பருவமழை தப்பிப் போன காலத்தில் நிலாவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து இருக்கிறது சந்திராயன். அடிப்படை அறிவியலுக்கான ஆராய்ச்சிக்கு பல்கலைக்கழகங்களில் இடம் குறைவு. மாறாக கம்பெனிகளுடானான ஒப்பந்தங்களின் மூலம் எல்லா பல்கலைக் கழங்க்களும் முதலாளிகளின் ஜோப்பிக்குள் இருக்கிறது. மீறி வரும் அறிவியலால் சாதிக்கப்பட்டவற்றைக் காட்டிலும் இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் நாடுகளுக்கு இடையில் இதுபோன்ற ஆய்வுகளை நடத்தி அறிவியலைப் புதிராகவே கடைசி வரையிலும் கொண்டு செலுத்தி அதனையும் சந்தையாக்கலாம் என நினைக்கிறான் முதலாளி. பட்ஜெட் உதைக்கும்போது தானே விண்வெளிக்கு 100 கோடி ரூபாய் கொடுத்து இன்பச்சுற்றுலாவும் சென்று வருகிறான்.

    வெங்கியின் ஆராய்ச்சி பாராட்டப்பட வேண்டியதுதான். அதற்கு இந்தியா பெருமைப்பட முடியாது. இந்தியாவில் இயற்பியல் படித்து அதில் டாக்டர் பட்டம் பெற வெளிநாடு சென்று பின்னர் வேதியியலில் ஆயுவு மேற்கொண்டு தற்போது மருத்துவத்திற்கு உதவக்கூடிய கண்டுபிடிப்பை சாதித்து இருக்கிறார். இப்படி பாடங்களை மாற்றி ஆய்வு செய்ய இந்திய பல்கலைக்கழகங்களில் இன்னமும் வாய்ப்பு இல்லை. மேலும், அவரது ஆய்வின் தொடர் விளைவாக இதுவரை கண்டறியப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்துகள் மனித உடலில் புதிதாக தோற்றுவித்த நோய்களைப் பற்றியும் ஆய்வு செய்து புதிய மருந்துகளைக் கண்டறிய வேண்டும். இதற்கு முதலாளிகளை நீங்கள் வலியுறுத்த முடியுமா.. அவ்வாறு தோன்றிய புதிய நோய்களுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்…

    அரவிந்த கண்மருத்துவமனை என்ன செய்கிறது. குறைந்த விலையில் அல்லது இலவசமாக மருத்துவம் செய்கறது. அரசு மருத்துவமனையில் இவை இலவசமாகத்தான் செய்யப்பட்டு வந்த்து. இவர்கள் மக்களுக்கு சேவை செய்வது என்ற பெயரில் ஏன் இறங்கினார்கள். அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்க நேர்ந்த்தால்.. அநு ஏன் நேர்ந்த்து. எந்ந நொன்ன அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு இலவச மருத்துவ முகாம நடத்த உதவுறானோ அவனே மறுபக்கம் இலவசத்தையும் செய்கிறான். மக்களது உரிமையை பிச்சையாக்கி இதாவது செய்கிறானே என்ற இணக்கத்தையும், அரசு மீதான மக்களின் கோபம் ஒன்றிணைவதைத் தடுப்பதும்தான் இவர்களது வேலை. பல மருத்துவ முகாம்களின் இந்தியாவில் பல மருந்து கம்பெனிகள் கிளிக்கல் டெஸ்ட் நடத்துவதற்கு உள்ளூர் இளைஞர்களை திரட்டி பிறகு ஜூவியிலோ ஆவியிலோ இந்த ஊரில் எல்லோருஃகும் கிட்னி பெயிலிய‌ர் னு ப‌டிக்க‌ணும்.. போங்க் யாராவ‌து அப்துல் க‌லாம் மாதிரி டுபாக்கூர்ட‌ போய் சொல்லுங்க‌

    குஜராத் மக்களது இணைவு சந்தோசம்தான்… இயற்கை சீற்றம் வரும்போது ஒன்றிணைந்த மக்கள் எப்படி ஒரு ஆர் எஸ் எஸ் காரன் சொன்னதக் கேட்டு இரண்டாயிரத்துஃகும் மேற்பட்ட முசுலீம்கள கொன்னாங்க அல்லது அப்போது மவுனமாக இருந்தார்கள்.. இத புரியாம அதாவது உள்ள ஜாண்டிஸ் இருக்கது தெரியாம காய்ச்சல் அடிக்கல் இல்ல அப்புற்ம் நல்லாத்தான இருக்காருன்னு சொல்ற மாதிரி இருஃக்கு…

    ராமகிருஷ்ண மிஷன் என்ன செய்த்தை பாராட்டணும்னு சொல்லவே இல்ல•..காந்தி அறக்கட்டளைகளும்தான். பொதுவில் சொன்னால் இந்த மண்ணிலே அவதரித்த முதல் என்ஜிஓ காந்திதான். பிர்லா மாளிகையில் இருந்து கொண்டே மக்களுக்கான அரசியலைப் பேசத் தெரிந்த கொள்கைவாதி இல்லையா… தலித் மக்களின் உரிமையைப் பறித்து வர்ண தருமத்திற்கு சொத்து சேர்த்தவர் அல்லவா.. அவங்க என்ன செய்தார்கள்னு சொன்னா பேச உதவியா இருக்கும்

    லாப்டி என்ற உலகவங்கித் திட்டத்தின் இந்தியக் கங்காணிகளான காந்தியவாதி என அறிவித்துக் கொள்ளும் கிரு
    கிருஷ்ணாம்பாள் ஜெகநாதன் போன்றோர் இறால் பண்ணை அழிப்பு போராட்டத்தை நாங்கள் நடத்திய போது அது மக்கள் போராட்டமாக மாறாதிருக்க அரசுக்கு காட்டிக் கொடுத்தனர். பத்திரிகைகளுக்கு அள்ளித் தந்த கைகளுக்கு பரிசாக பத்திரிகைகள் அவர்களை இறால் பண்ணை எதிர்ப்பு போராட்டத்தின் போராளிகளாகப் பதிவு செய்தனர். மாற்று நோபல் அல்லது நோபல் போன்றவை தங்களது எடுபிடிகளுக்கு கிடைக்க வைப்பதில் முதலாளித்துவம் எப்போதும் வெற்றிதான் பெறும்.

    நிற்க என் ஜி ஓ க்களை சமூக மாற்றத்திற்கான கருவி என நீங்கள் கருதினால் மாற்றங்கள் படிப்படியாக மாத்திரமே வரும் எனக் கருதி மாற்றங்கள் என நீங்கள் நம்புவதை முன்னிருத்தினால் அதனை மாற்றமா என விவாதிப்போம். அது மையப் புள்ளியை நோக்கி வருவதற்கு உதவக் கூடும்.‌

  17. pillaikalai keduppathil pettrorrukku pangundu, pettrorkalai keduppathil tv muthalalikalukku pangundu,tv muthalalikalai valarpathil arasiyal vathikalukku pangundu,intha poli arasai thagarkka ulaikum makkal namakku niraiyave pangundu.( nov7 rusya purachi naal vallthukkal nandri. )

    • நல்ல கட்டுரை தோழர். சீரியல் பார்க்காமல் , கார்டூன் பார்த்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு வந்துவிடுமா..? அறிவியல் பூர்வமாக குழந்தையின் அறிவும், சிந்தனையும் வளர்வது கதை சொல்லுதல், கூடி விளையாடும் விளையாட்டு, இசை, விடுகதை போன்ற பன்முக செயல்களில். இதை விடுத்து தற்போதைய சூழ்நிலையில் வெறும் கார்டூன் மட்டும் பார்ப்பது என்பது, ஓரளவிற்கு வீடியோ கேம் விளையாடுவது போன்றதுதான்… 3 வயதில் tom&jerry பார்க்கும் குழந்தைகள், 6 வயதில் superman, sakthimaan என பார்க்க துவங்கி.. 10 வயதுக்கு மேல் சண்டை காட்சிகளில் லயித்து அதிக சண்டைகள் வரும் காடூன்களை பார்க்க ஆரம்பிக்கிறார்கள். சக்திமான் பார்த்த சில குழந்தைகள் அந்த தொடரில் வருவது போன்றே பறக்க நினைத்து மாடியில் இருந்து குதித்த சம்பவத்தை நாம் இந்த நேரத்தில் நினைவு கொள்ள வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க