சமத்துவ சமூக அமைப்பை இந்த மண்ணில் மலர்விக்க, எண்ணற்ற புரட்சிப் போராளிகள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அரச பயங்கரவாதத்தின் கொடும் கரங்களால் என்கவுண்டர் என்ற பெயரில் துப்பாக்கி ரவைகளை நெஞ்சில் ஏந்தி, சிறைக் கொட்டடியில் சித்திரவதைக்கு ஆளாகி வீர மரணத்தை தழுவியுள்ளனர்.
ஈடு இணையற்ற அந்த மாவீரர்களின் கடந்தகால தியாக வரலாற்றை நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. சொந்த வாழ்க்கையின் சுக போகங்களை உதறித் தள்ளிவிட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உரிமை முழக்கமிட்டு, குரலற்ற மக்களின் குரலாய் களமாடிய மாவீரன், ஆதிக்க சக்திகளை குலைநடுங்க வைத்த போராளி, அடிமை விலங்கு ஒடிக்க ஆர்த்தெழுந்து போராடிய அடலேறு, தமது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த உண்மையான பொதுவுடமை புரட்சியாளர் தோழர் வர்கீஸ்.
போலீசுத்துறை உயர் அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தால், உத்தரவால் புரட்சியாளர் வர்கீஸ் அவர்களை சுட்டுக் கொன்ற போலீஸ் ராமச்சந்திரன் நாயர் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் “நான் நிகழ்த்திய மோதல் கொலை” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
படிக்க :
♦ நூல் அறிமுகம் : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் | மு.சங்கையா | எஸ்.காமராஜ்
♦ நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்
மக்களுக்காக போராடிய ஒரு மாவீரனை சுட்டுக்கொல்ல நேர்ந்தது குறித்து ராமச்சந்திரன் நாயரின் மனசாட்சி அவரை உலுக்குகிறது. வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தால், சொந்த வாழ்க்கையின் மீதுள்ள நாட்டத்தால் இத்தனை ஆண்டுகாலம் மூடிமறைத்த உண்மைகளை ராமச்சந்திரன் நாயரால் வெகு காலம் மறைத்து வைக்க முடியவில்லை.
1970 பிப்ரவரி 18-ம் தேதி மாலையில் நடந்த இந்த அக்கிரம கொடுங்கோன்மை பற்றிய ஒப்புதல் வாக்குமூலம் ராமச்சந்திரன் நாயர் அளித்த பிறகுதான் 30 ஆண்டுகளுக்கு முன்பு வயநாட்டில் நிகழ்ந்த உண்மைகளை உலகம் அறிந்து கொண்டது. என்னை கொலை செய்ய வைத்தார்கள். நான் அதை செய்ய நேர்ந்தது. இந்த பாரத்தை 30 ஆண்டுகளாக நான் சுமந்து திரிந்தேன். இந்த உண்மையை வெளி உலகிற்கு சொல்லியாக வேண்டும் என்று ராமச்சந்திரன் நாயரின் ஆற்றாமையும் குற்ற உணர்வும் இந்த வாக்குமூலத்தை அளிக்க வைத்துள்ளது.
வசந்தத்தின் இடிமுழக்கம் நக்சல்பாரி எழுச்சியின் விளைவாக மேற்கு வங்கத்தில் உருக்கொண்ட புரட்சிப்புயல் இந்திய துணைக் கண்டம் முழுவதும் சூறாவளி போல் சுழன்று அடித்தது. கேரளத்தில் புரட்சிகர இயக்கம் உருப்பெற்று வளர்ந்த வரலாற்றை இந்த நூலின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.
