ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன்,
போலீசால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார். போலீசார் நிறுத்தச் சொல்லியும், இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதற்காக மணிகண்டனை அடித்திருக்கிறார்கள் என்று பத்திரிகைச் செய்தி சொல்கிறது. மேலும், போலீஸ் ஸ்டேசனுக்கு இழுத்துச் சென்று இக்கொலைவெறித் தாக்குதலையும் நடத்தி முடித்திருக்கிறார்கள்.
ஒருக்கால் மணிகண்டன் தவறே செய்திருந்தாலும், ஒரு மனிதனைக் கொல்லும் அதிகாரத்தை போலீசுக்கு யார் கொடுத்தது?
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையைக் கண்டித்து போலீசுக்கு எதிராக தமிழகமே கொதித்தெழுந்த நிலையிலும், மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட போலீசின் கொட்டடிக் கொலைகள் நீண்டுகொண்டுதானே இருக்கின்றன.
படிக்க :
விஷ்ணுப்பிரியா, ஜெகதீஸ் – நேர்மையான காக்கிச்சட்டை உயிர்பிழைக்க முடியுமா?
ரோந்து போலீசு கையில் துப்பாக்கி வழங்கலாமா ? கருத்துக் கணிப்பு
நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சமூகவிரோத செயல்கள் அனைத்திற்கும் மக்கள் மீதே குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. உண்மையில் மக்கள் விரோதிகள் யார்? இந்தச் சமூகத்தின் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் ஆளும்வர்க்கமன்றி வேறு யாராக இருக்க முடியும்? “அது எப்படி, நம்மைக் காப்பதற்காக இருப்பவர்களே மக்கள் விரோதிகளாக இருக்க முடியும்?” என்று கேட்கலாம். சில உதாரணங்களை மட்டும் பார்ப்போம்.
குட்கா பதுக்கலில் முக்கிய குற்றவாளிகளாக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபிக்களான டி.கே.ராஜேந்திரன், எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட காவல் துறையின் 23 அதிகாரிகள் மற்றும் கலால் வரி, மத்திய உணவு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் இருந்துள்ளனர். சமூகமே போதைக்கு அடிமைப்படுத்தப்பட்டால், சமூகவிரோத செயல்கள் நடக்காமல் நல்லனவா நடக்கும்?
இவ்வளவு ஏன்? சிறைக்கூடங்களே குற்றவாளிகளின் உற்பத்திக் கூடங்களாகத்தானே எப்போதும் இருந்து வருகின்றன! கடைநிலை போலீஸ் முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை பாலியல் குற்றங்களில் அன்றாடம் ஈடுபட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். பெண் போலீசு அதிகாரிகளே, போலீசின் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் என்பதுதானே சிறப்பு டி.ஜி.பி.யாக அடிமை எடப்பாடி ஆட்சியில் நியமிக்கப்பட்ட இராஜேஷ் தாஸ் விவகாரத்தில் அம்பலமான உண்மை.
சாதிச் சான்றிதழ் பெறுவதில் தொடங்கி, ‘நாட்டைப் பாதுகாக்கும்’ இராணுவத் தளவாடங்களை வாங்குவது வரை அனைத்திலும் இலஞ்சமும் குற்றங்களும் மலிந்து கிடப்பதைப் பார்க்கிறோம். இதில் எந்தக் கட்சிகள் விதிவிலக்காக இருக்கிறது? இவையெல்லாம், ஒரு அண்டா சோற்றுக்கு ஒருசில பருக்கைகள்.
இந்த பார்ப்பனிய சமூக கட்டமைப்பு – முதலாளித்துவ சுரண்டல் – இவற்றைக் கட்டிப் பாதுகாக்கும் அரசு – இவையே பெருகிவரும் குற்றங்களின் முதன்மைக் குற்றவாளிகளாக இருக்கின்றன. மக்கள் விரோதிகளான இந்த முதன்மைக் குற்றவாளிகள், என்றென்றும் தைரியமாக உலா வந்துகொண்டிருக்கிறார்கள்.  இதிலிருந்து மடைமாற்றவே ‘நல்லெண்ணம்’ படைத்த அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும், சட்டத்தின் மூலம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து குற்றங்களைத் தடுக்க முடியும் என மக்களுக்கு போதனை அளிக்கிறார்கள்; மீடியாக்களும் ‘நல்லவர்களாக’ அதை அப்படியே வாந்தியெடுக்கின்றன.
படிக்க :
என்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் !
ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !
நம்மைச் சுரண்டும் முதலாளித்துவக் கட்டமைப்பையும், பார்ப்பனியக் கொடுங்கோன்மையையும் கட்டிக் காக்கும் – குற்றங்களின் ஊற்றுக்கண்களான – போலீசு உள்ளிட்ட அதிகாரவர்க்கக் கும்பலையும், அரசியல்வாதிகளையும், தகர்த்தெறியாமல், இந்தக் குற்றங்கள் நடப்பதை தடுத்து நிறுத்துவதற்கு வேறு வழியே இல்லை என்பதைத்தான் ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
ஒரு திருடனால் போலீஸ் கொல்லப்பட்டபோது, “சுட்டுத்தள்ளத் தயங்காதீர்கள்” என்று போலீசுக்கு கட்டளையிட்ட டிஜிபி சைலேந்திர பாபு, இப்போது மணிகண்டன் கொல்லப்பட்ட சம்பவத்தில் என்ன சொல்லப் போகிறார்? மக்களை ஆயுதம் ஏந்தச் சொல்லப்போகிறாரா? நிச்சயம் மாட்டார். போலீசுக்குப் போனால் அது உயிர். மக்களுக்குப் போனால் அது ‘மயிர்’ என்பதுதான் அதிகாரவர்க்கச் சிந்தனையின் அடிநாதம். அதுதான் தூத்துக்குடி படுகொலையிலிருந்து ஜெயராஜ் பென்னிக்ஸ் படுகொலை, தற்போது மணிகண்டன் படுகொலை வரை அப்பட்டமாகத் தெரிகிறது.
குடிமக்களுக்கு எதிராக ஆயுதத்தை நீட்ட வேண்டுமானால்
அற்ப காரணங்களே அரசுக்குப் போதுமானது. ஏனெனில், அதுவே அச்சத்தை நிரந்தரமாக்கி ஆளச்செய்யும் கருவி. மக்களிடம் உருவாக்கப்பட்டிருக்கும் அச்சத்தை உடைக்கத் தேவையானது, கொஞ்சம் கந்தகத் தூள்தான். “மக்களை அமைப்பாக்குதல்” எனும் கந்தகத் தூள்.
வேலன்