காவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் அங்கு வேலை பார்ப்பவர்களின் மனநிலை தான் காரணமா ?

அருண் கார்த்திக்
முதாயத்தில் மிக வேகமாக மாற்றங்கள் நடைபெற்று வருவதால் முக்கியமான அடிப்படை விஷயங்களைப் பற்றி பேச, மூச்சு விடக்கூட நேரமோ சந்தர்ப்பமோ கிடைப்பதில்லை. ஒரு அடிப்படையான விஷயத்தை ஒரு அடிப்படை இல்லாத விஷயத்துடன் ஒப்பிட்டு பேசலாம் என்று நினைத்தால் அதற்குள் இன்னொரு அடிப்படையில்லாத விஷயத்துக்கு தாவி விடுகிறார்கள்.

ஜம்மு-காஷ்மீரில் நடப்பதை ஒரு விஷயத்துடன் ஒப்பிட்டு பேசலாம் என்று நினைத்தால் அதற்குள் அயோத்தி தீர்ப்பு வருகிறது. சரி அயோத்தியையாவது ஒப்பிட்டு பேசலாம் என்று நினைத்தால் அதற்குள் குடியுரிமை சட்டம் வருகிறது. இப்படி, இவ்வாறான விஷயங்களை ஒவ்வொன்றாக நடத்திக் கொண்டே இருப்பதன் மூலம் அடிப்படை விஷயங்களைப் பற்றி நாம் பேசாமல் பார்த்துக் கொள்ள இவர்களால் முடிகிறதோ என்றுகூட தோன்றுகிறது.

இவ்வாறு பேச நினைத்த ஒரு விஷயம் காவல்துறை பற்றியது. காவல்துறை எளிய மக்கள் மீதும் போராடும் மக்கள் மீதும் அடக்குமுறையை ஏவ ஆளும்வர்க்கத்தால் உபயோகப்படுத்துப்படும் ஒரு ஆயுதம். காவல்துறை ஒடுக்குமுறை பற்றி நமக்கு தெரியும். JNU மாணவர்கள் மீதும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் காவல்துறையின் அடக்குமுறையை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்த கட்டுரை காவல்துறை நடத்தும் அடக்குமுறை பற்றியது அல்ல, காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருக்கும் பிரச்சினைகள் பற்றியது.

நவம்பர் 2019-ல், டெல்லியில் நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்கறிஞர்களுக்கும் காவலர்களுக்கும் வாகனம் நிறுத்துவத்தில் நடந்த ஒரு வாக்குவாதம் வன்முறையாக மாறி காவலர்களை வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கினார்கள். காவல்துறையில் இருந்த பெண் IPS அதிகாரி ஒருவரையும் தாக்கி அவரது துப்பாக்கி அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அதன் பிறகு காவலர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை ஒட்டி NDTV Hindi சேனலில் முக்கிய நேர செய்தியை வழங்கும் ரவிஷ் குமார், நவம்பர் 7-ம் தேதி அன்று, இந்தியாவில் காவலர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் பற்றி பேசினார். பின்வரும் தகவல்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டவை.

நீதி பரிபாலன துறை

முதலில் நீதிமன்றம் பற்றி பார்ப்போம். இந்திய துணை நீதிமன்றங்களில் ஒரு வழக்குக்கு தீர்ப்பு வர சராசரியாக 5 ஆண்டுகள் ‘மட்டுமே’ ஆகிறது என்று செய்திகள் வந்தது. ஒரு சாதாரண குடிமகன் இந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் நீதிக்காக 5 ஆண்டுகள் ’மட்டுமே’ காத்திருக்க வேண்டும். 26 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளில் 45% வழக்குகள் உபி, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்தவை. இது நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளை பற்றிய நிலவரம்தான்.

இது போக, வழக்குகளை நீதிமன்றம் வரை எடுத்து செல்லும் காவல்துறை இயந்திரத்திலும் நிறைய பிரச்சனைகள் உள்ளன – நிரப்பப்படாமல் காலியாக உள்ள பதவிகள், சில இடங்களில் பதவிகள் எண்ணிக்கை குறைப்பு என பல பிரச்சனைகள் உள்ளன.

படிக்க :
சாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா ?
♦ சாவதில் வருத்தமில்லை : ஆப்பிரிக்க அகதிகளின் மரணப்போராட்டம்

இந்தியா நீதி அறிக்கை

இந்நிலையில், இந்திய நீதிமன்றங்கள் பற்றி India Justice Report என்ற ஆய்வு அறிக்கையை vidhi centre for legal research என்ற அமைப்பு நவம்பர் 7-ஆம் தேதி வெளியிட்டது. நீதி துறையின் அமைப்பு என்பது நான்கு தூண்களை கொண்டது, முறையே, சிறைச்சாலைகள், காவல்துறை, சட்ட உதவி மற்றும் நீதிமன்றங்கள். இவற்றின் 5 ஆண்டு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இந்த அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் நிதி (பட்ஜெட்), இருக்கும் பணியிடங்கள், அவற்றில் காலியாக இருப்பவை, இருக்க வேண்டிய பணியிடங்கள் என பல தகவல்களை திரட்டி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை

அறிக்கையின்படி, இந்திய அரசு நாட்டின் மொத்த உற்பத்தியில் (GDP) 0.08% மட்டுமே நீதித்துறைக்கு செலவு செய்கிறது. மத்திய அமைச்சர் P.B. சவுத்ரி மக்களவையில் அளித்த தகவலின்படி, 2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி, துணை, உயர் மற்றும் உச்சநீதிமன்றங்களில் 10 லட்சம் மக்களுக்கு 20 நீதிபதிகள் என்ற அளவிலேயே நீதிபதிகள் உள்ளனர்.

இந்த அறிக்கையின்படி, ஒரு கோடிக்கு அதிகமான மக்கள் தொகை உள்ள மாநிலங்களில் 18 மாநிலங்களில் 50 ஆயிரம் மக்களுக்கு ஒரு நீதிபதியே உள்ளார். 2016-17 நிலவரப்படி நாட்டில் உள்ள அனைத்து துணை மற்றும் உயர்நீதிமன்றங்களில் ஒரு நீதிமன்றம் கூட அனைத்து நீதிபதிகளும் நியமிக்கப்பட்ட நீதிமன்றமாக இல்லை, அனைத்திலும் நீதிபதி பதவிகள் காலியாக இருந்தன. 18 மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் 25% நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன. இந்தியாவில் மொத்தம் 23,754 நீதிபதி பதவிகள் உள்ளன, இவற்றில் 4300 பதவிகள் காலியாக உள்ளன. அனைத்து பதவிகளும் நிறப்பப்பட்டால், 4,071 புதிய நீதிமன்ற அறைகள் தேவைப்படும்.

இந்த சூழலில் துணை நீதிமன்ற நீதிபதிகள் மீது எவ்வளவு வேலை பளு இருக்க வேண்டும் என்று நாம் புரிந்துகொள்ளலாம். பீகார், குஜராத், ஜார்கண்ட் மற்றும் உபி மாநிலங்களில் உள்ள துணை நீதிமன்றங்களில் 30%க்கு அதிகமான பதவிகள் காலியாக உள்ளன. பீகார் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் சுமார் 40% வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆனவை.

18 மாநிலங்களில் நீதி துறை எவ்வாறு உள்ளது என்று இந்த ஆய்வறிக்கை தரவரிசைப்பட்டியலிட்டுள்ளது. அதில் உத்தர பிரதேசம் கடைசி இடத்திலும், பீகார் 17-வது இடத்திலும், ஜார்கண்ட் 16-வது இடத்திலும் உள்ளன. மஹாராஷ்டிரா முதல் இடத்திலும், கேரளா இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு 3ஆவது மற்றும் பஞ்சாப் 4ஆவது இடங்களிலும் உள்ளன.

படிக்க :
காவல்துறை : மக்கள் ‘நண்பனா’ ? மாஃபியா கூலியா?
♦ சைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் !

காவல்துறை மற்றும் சிறைத்துறை

22% காவலர் பதவிகள் காலியாக உள்ளன. சிறை துறையில் 33% பதவிகள் காலியாக உள்ளன. இவை அனைத்தும் 2016-17 ஆண்டுக்கான நிலவரம்.

குஜராத் மாநிலத்தில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல்துறை, நீதிமன்றம் மற்றும் சிறைத்துறையில் உள்ள பதவிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஜார்கண்டில் ஐந்து ஆண்டுகளில் காலியாக உள்ள இடங்கள் அதிகரித்துள்ளன. 68% கைதிகள் under-trail, அதாவது, அவர்களுடைய வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன. ஐந்து ஆண்டுகளில் 13 மாநிலங்களில் மட்டும் under-trail கைதிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. இந்த 18 மாநிலங்களிலும் ஒன்றில் கூட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கான இட ஒதுக்கீடு பதவிகள் முழுமையாக நிறப்பப்படவில்லை. கர்நாடகாவில் மட்டும் அனைத்து இட ஒதுக்கீட்டு இடங்களும் நிறப்பப்பட்டுள்ளன, அங்கும் பட்டியலின பிரிவுகளுக்கான இடங்களில் 4% நிறப்பப்படாமல் உள்ளன.

10 மாநிலங்களில் காவல்துறை பதவிகள் குறைக்கப்பட்டுள்ளன, மக்கள் தொகை அதிகரித்தும் இந்த குறைப்பு நடந்துள்ளது. 24 மாநிலங்களில் காவல்துறை அதிகாரிகள் பதவிகளில் 20% காலியாக உள்ளன.

1995-ல் இருந்து, 1.5கோடி மக்களுக்கு மட்டுமே சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 80% மக்கள்தொகை ஏழையாக இருப்பதால் சட்ட உதவியை நம்பி உள்ளனர்.

பட்ஜெட் ஒதுக்கீடு தான் காரணமா?

இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டபொழுது, முன்னாள் உச்சநீதி மன்ற நீதிமன்ற நீதிபதி மதன் லோகுர் உடனிருந்தார். அவரிடம் நாட்டின் மொத்த பொருள் உற்பத்தியில் (GDP) சுமார் 0.8% மட்டுமே நீதித்துறைக்கு ஒதுக்கப்படுகிறது, இது அதிகரித்தால் ஏதாவது மாற்றம் வருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. “அதிகமான தொகை ஒத்துக்கப்பட்டாலும் அதை எப்படி செலவிடுவது என்ற திட்டம் வேண்டும், 13ஆம் நிதிக்குழு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கியது, அதில் 1,010 கோடி மட்டுமே செலவிடப்பட்டது, சுமார் 4,000 கோடியை நீதித்துறையால் செலவிட முடியவில்லை” என்று லோகுர் தெரிவித்தார்.

இந்த தகவல்களை எல்லாம் வைத்து பார்த்தால் இந்தியாவில் உள்ள காவல்துறை பெரும்பாலும் ‘சம்மட்டி’ முறையை ஏன் கையாள்கிறது என்பதற்கான ஒரு காரணம் புரியும். சம்மட்டி முறை என்பது, எல்லா பிரச்சனைகளுக்கு வன்முறையை பயன்படுத்துவது. எடுத்துக்காட்டாக, மக்கள் ஒரு பிரச்சனைக்காக போராடுகிறார்கள் என்றால் அவர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிவதற்கு முன்னரே அவர்களை தடியடி நடத்தியும், புகை குண்டு வீசியும் விரட்டி அடிப்பது.

ஒரு வன்புணர்வு நடந்தால் குற்றம் சுமத்தப்பட்டவர்களை பிடித்து வழக்கு நடத்தி தண்டனை வாங்கி கொடுக்காமல் அவர்களை சுட்டுதள்ளுவது. பொதுவாகவே காவல்துறை மக்களோடு சுமூகமாக நடந்துகொள்வது இல்லை. இரண்டு காவலர்கள் செய்யும் வேலையை ஒருவர் செய்தால் அவரால் நன்றாக எப்படி செயல்பட முடியும்.
காவல்துறை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி பாரபட்சம் இல்லாமல் செயல்படுவது இல்லை. மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்த போராட்டத்தில் ஈடுபட்ட நாகை திருவள்ளுவனை அடிப்பார்கள் ஆனால் காவல்துறையை கேவலமாக திட்டிய H.ராஜாவிடம் கெஞ்சுவார்கள். இதற்கு மற்ற சமூக காரணங்கள் உள்ளன. ஆனால், பொதுவாகவே காவல்துறை ஒழுங்காக செயல்படாமல் இருக்க, புகார்களை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்க, அந்த அமைப்பில் இருக்கும் குறைகள் ஒரு முக்கிய காரணம்.

படிக்க :
ரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை
♦ நீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் !

நீதிமன்றங்களில் நீதி தாமதம் ஆவதற்கும், காவல் துறையால் மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதற்கும் அரசியல் தலையீடும், நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது என்கிற நிலையும் (accountability) முக்கிய காரணங்கள். அரசியல் தலையீடும், கேள்வி கேட்க முடியும் என்கிற நிலை வந்தாலும் கூட இந்த கட்டமைப்பில் இருக்கின்ற நிரப்பப்படாமல் இருக்கின்ற காலி இடங்களும்; அதிகரிக்கப்படாத பணியிடங்களும் சரியான முறையில் நீதி பரிபாலனம் நடப்பதை தடுத்துவிடும்.

நாலு காவலர்கள் இருக்கும் ஒரு காவல்நிலையத்தில் ஒரே நேரத்தில் நாலு வன்புணர்வு புகார்கள் வந்தால் அந்த காவலர்கள் எவ்வளவு தான் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருந்தாலும் அவர்களால் அந்த புகார்களை ஒழுங்காக விசாரிக்க முடியாது, விசாரித்து வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லவும் முடியாது. ஆக, நீதிமன்றங்களில் நீதி கிடைக்காமல் இருப்பதற்கும் நீதி கிடைக்க மிக நீண்ட கால தாமதம் ஆவதற்கும் அந்த அமைப்பில் உள்ள பிரச்சனைகளும் ஒரு முக்கிய காரணம்.

இந்த குறைகளை புரிந்துகொள்ளாமல், அவற்றை நிவர்த்தி செய்யாமல், காவல்துறையிலோ, நீதித்துறையிலோ மக்களுக்கு சாதகமான மாற்றங்கள் வரவைக்க முடியாது.

“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”

ஆனால் நமது ஆளும் வர்க்கம் என்ன சொல்கிறது, தண்டனைகளை அதிகப்படுத்துவதன் மூலம் குற்றங்களை குறைக்க முடியும் என்று சொல்கிறது. போராடுபவர்களை தேச விரோதிகள் என்று சொல்கிறது. அதற்கேற்றாற்போல் காவல்துறையில் செயல்படுகிறது. நமக்கும் அதை நம்ப எளிதாக இருக்கிறது.

நமது புரிதலிலும், அதன்மூலம் ஆளும் அமைப்பிலும் மாற்றங்கள் வரும் வரை நீதி பரிபாலன துறையும் மக்களுக்கு எதிரானதாகவே இருக்கும்.

அருண் கார்த்திக்