இந்துராஷ்டிரம் அமைக்க அடுத்த கட்ட நகர்வாகவும் தனியார்மய கொள்கையின் தீவிர வடிவமாகவும் இருக்கும் இந்த அக்னிபாத் திட்டத்தை அக்னி கொண்டு எரிக்காமல் வேறு எப்படி தடுக்க முடியும்.
“அக்னிபாத்” கடந்த 4 நாட்களாக இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு வார்த்தைதான் இது. இதுகுறித்து செய்தி ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தங்களில் மூலம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மேலும், ஒன்றிய அரசு இந்த திட்டத்தை அறிவித்தது முதல் பீகார் மாநிலத்தில் பல ஆயிரம் இளைஞர்கள் போராடி வருகிறனர். மேலும் பல்வேறு இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.
பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம் அரியான, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், டெல்லி, தெலுங்கான போன்ற மாநிலங்களுங்களும் பரவின. தற்போது நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் மற்றும் ஓட்டு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வழக்கம்போல ஒன்றிய அரசின் இந்த திட்டத்திற்கு ஆதரவாக சங் பரிவார கும்பல் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. தமிழகத்தில் தினமல‘ம்’ர் நாளிதழ், நடுநிலை சங்கி சமஸ் ஆகியோர் தனது அடிமை சேவகத்தை செய்து வருகின்றனர்.
நிரந்தர வேலை பறிபோகிறது, ஓய்வூதியம் கிடையாது, படித்த இளைஞர்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தை இது உருவாக்கும் என்பதை தாண்டி இந்த ஆளும் வர்க்க ஊடகம் இந்த திட்டத்தின் உள்நோக்கத்தை கூற மறுக்கிறது. அக்னிபாத் என்ற திட்டம் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது என்பதையும் தாண்டி ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் தனது கொள்கையை நிலைநாட்டும் விதமாக அறிவித்துள்ளது.
கொரோனா காலகட்டங்களில் சுமார் இரண்டரை ஆண்டுகள் பாதுகாப்புத் துறைக்கு ஒன்றிய அரசு ஆள்சேர்ப்பு செய்யவில்லை. இந்த வேலையை நம்பி இருந்த சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் 23 வயதை கடந்து ராணுவத்தில் சேருவதற்கான தகுதியை இழந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து ராணுவத்தின் ஆட்சேர்ப்புக்கான வயது உச்ச வரம்பை 23-ஆக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், நிரந்தரமாக ராணுவ வீரராக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த இளைஞர்களுக்கு பேரிடியாக வந்து இறங்கி இருக்கிறது அக்னிபாத்.
ராணுவ வேலையை நம்பி இருந்த இளைஞர்களின் வாழ்க்கையில் இந்த ஒன்றிய அரசு மணல் அள்ளிபோட்டுவிட்டது என்பதால் தற்போது இளைஞர்கள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தை தனியார்மயம்படுத்துவது, செலவினங்களை குறைப்பது மட்டும் இந்த திட்டத்தின் நோக்கம் அல்ல. மாறாக இந்தியாவில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை நிலைநிறுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டமாக இந்த அக்னிபாத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு. இந்த திட்டத்தின் மூலம் காவிகளின் செல்வாக்கை ராணுவத்தில் அதிகப்படுத்துவது மற்றும் முழுக்க முழுக்க ராணுவத்துறையை கார்ப்பரேட்களின் நலனுக்காக திறந்து விடுவது ஆகியவைதான் இதன் நோக்கம்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை அடுத்தடுத்து தனியார்மயமாக்கி, மிக வேகமாக கார்ப்பரேட் சேவையை செய்துவரும் இந்த பாஜக அரசு ராணுவத்தையும் தனியார்மயமாக்கும் வேலையில் தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளது.
பாதுகாப்பு துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு, ராணுவ தளவாட உற்பத்தியில் 74 சதவீத அந்நிய முதலீடு போன்றவற்றின் மூலம் ராணுவத்தை தனியார்மயமாக்கும் வேலைகளை கடந்த 2014-ம் ஆண்டு முதல் பா.ஜ.க கும்பல் செய்து கொண்டுதான் வருகிறது. அதனுடைய அடுத்தகட்ட நகர்வாகதான் இந்த அக்னிபாத் என்ற திட்டத்தை தற்போது அறிவித்து செயல்படுத்த தொடங்கியுள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் படி, 4 ஆண்டுகளில் 6 மாதம் பயிற்சியுடன் கூடிய வேலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் மாதத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்றும் 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் 40 ஆயிரமாக மாத ஊதியம் அதிகரித்து இருக்கும் என்று ராணுவத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பளத்தில் கிட்டத்தட்ட 25% வரை மாதம் தோறும் பிடித்தம் செய்து விட்டு 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் எந்தவிதமான வரியும் வசூலிக்காமல் 11 லட்சம் முதல் 13 லட்சம் ரூபாய் வரை மொத்தமாக கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறிவருகிறது ஆளும் பா.ஜ.க அரசு.
இந்த பணத்தை வைத்து சுய தொழில் செய்து கொள்ளலாம் என்றும் வாழ்க்கைக்கு பயன்படுமாறு வேறு விதமாகவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் கூறுகிறது. இந்த திட்டத்தின் மூலம் குறைவான அளவில் மட்டுமே ஆள் சேர்க்கும் ஒன்றிய அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளில் நிரந்தரமாக ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்திவிட்டு முப்படைகளிலும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் மட்டுமே ஆட்களை தேர்வு செய்வார்கள் என்பது அவர்களுடைய கடந்த கால செயல்களின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.
அரசின் மூலம் குத்தகைக்கு, ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் இந்த ஒன்றிய அரசு இனிவரும் காலங்களில் முப்படைகளுக்கும் ஒப்பந்த முறையில் ஆட்களை தேர்வு செய்வதை தனியாருக்கு கொடுக்கும். ரயில்வே, வங்கி, அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தற்போது தனியார் கட்டுப்பாட்டின்கீழ் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் பணீயாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் அரசின் மூலம் ஒப்பந்த ஊழியர்களாக இருந்தனர். அதன்பிறகுதான் இன்று தனியார் துறை மூலம் அவர்கள் ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்பட்டு வேலை செய்து வருகிறார்கள். அதுபோலதான் இன்று அரசின் மூலம் குத்தகைக்கு எடுக்கப்படும் இந்த அக்னிவீரர்கள் நாளை உள்நாட்டு தரகு முதலாளிகளின் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்களகவோ அல்லது வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பபெனிகளின் ஒப்பந்த ஊழியர்களாகவோ இருப்பார்கள் என்பது நிதர்சன உண்மை.
ராணுவ தளவாட தயாரிப்பு, பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உணவு ஆகியற்றை வழங்கும் உரிமையை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததன் மூலம் கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகின்றன அந்த தனியார் நிறுவனங்கள். தற்போது ராணுவ வீரர்களையும் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தத்திற்கு எடுத்தால் மேலும் தனது இலாபத்தை செலுமைபடுத்தும் என்பது உறுதியாகிறது. இந்தியாவில் தேசபக்தியை குத்தகைக்கு எடுத்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல், ராணுவத்தை காரணம் காட்டியே ஆட்சிக்கு வந்தது. தற்போது அந்த ராணுவத்தையே தனியார்மயமாக்குவதன் மூலம் அவர்களின் தேச பக்தி நாடகம் மேலும் அம்பலப்பட்டு நிற்கிறது.
அக்னிபாத் – ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் அடியாட்படையாக மாற்றும் திட்டம்
ஆர்.எஸ்.எஸ் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பல்வேறு கிளை அமைப்புகளாக பிரிந்து கொண்டு தன்னை சமூக நல அமைப்புகள் காட்டிக்கொண்டு உழைக்கும் மக்களை சாதி மற்றும் மதத்தின் பெயரால் பல்வேறு சூழ்ச்சிகளை செய்துகொண்டு பிரித்து வருகிறது. மேலும் சாகா என்ற பெயரில் தொண்டர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் சட்டவிரோதமாக ஆயுதப் பயிற்சிகளை இன்று வரையும் வழங்கி வருகிறது.
இதேபோல் இந்துத்துவ சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களும் அவர்களின் அடியாட்களும் நீதித்துறை, உளவுத்துறை, மருத்துவத் துறை, கல்வித் துறை, விளையாட்டுத்துறை மற்றும் அரசின் பல நிர்வாக அமைப்புகளில் இன்று நுழைந்துள்ளனர். மேலும் ஊடகத்துறையில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தும் சக்தியாக அவர்கள் மாறிவிட்டனர். மறைந்த ராணுவ தளபதி பிபின் ராவத் போன்றவர்கள் ராணுவத்தின் உயர் பொறுப்புகளில் நுழைந்து தனது இந்துத்துவ சித்தாந்தத்திற்கு ஏற்ற வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
அடிமட்ட அளவில் வேலை செய்யும் ராணுவ வீரர்கள் பெரும்பாலும் தற்போது வரை இல்லை என்பதால் அதை நிறைவு செய்யும் விதமாகவும் ராணுவத்தை தனது கட்டுப்பாட்டுல் முழுமையாக கொண்டுவரும் நோக்கத்தில்தான் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்மூலம் 4 ஆண்டுகளுக்கு சாக தொண்டர்களை ராணுவத்தில் களம் இறக்கிவிட்டால் அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படும். மேலும் இந்துத்து சித்தாந்தம் கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துகொள்ள முடியும்.
இனிவரும் காலங்களில் இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்காக இந்துத்துவவாதிகள் மிக மூர்க்கமான வேலைகளில் ஈடுபடுவார்கள். அதற்கு எதிராக உழைக்கும் மக்கள் களத்தில் இறங்கி போராட வேண்டிய சூழல் வரும். அரசுக்கு எதிராக போராடும் அம்மக்களை ஒடுக்கவும் அவர்களை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரவும் இந்த அக்னிபாத் வீரர்களை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மிக சரியாக பயன்படுத்திக் கொள்ளும்.
இந்துராஷ்டிரம் அமைக்க அடுத்த கட்ட நகர்வாகவும் தனியார்மய கொள்கையின் தீவிர வடிவமாகவும் இருக்கும் இந்த அக்னிபாத் திட்டத்தை அக்னி கொண்டு எரிக்காமல் வேறு எப்படி தடுக்க முடியும்.