ராணுவ ஆட்சியின்கீழ் இருக்கும் மியான்மரின், கிராமப்புறங்களில் இராணுவ எதிர்ப்பு போராளிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே பல்வேறு மோதல்கள் நடந்து வருகின்றன. கடந்தவாரம் தொடங்கிய வன்முறையால் சுற்றியிருக்கும் கிராமங்களில் வசிக்கும் 4,200-க்கும் மேற்பட்ட மக்கள் அண்டை நாடான தாய்லாந்திற்குள் நுழைந்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 10,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக உள்ளூர் சமூக குழுக்கள் தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து தாக்குதல்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கயா மாநிலத்தில் கடந்த டிசம்பர் 24-ம் தேதியன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் மியான்மர் இராணுவத்தால் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதாக உள்ளூர் மக்கள், ஊடகங்களின் அறிக்கைகள், உள்ளூர் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
படிக்க :
மியான்மரில் தொடரும் இராணுவ எதிர்ப்பு போராட்டங்கள் || படக் கட்டுரை
மியான்மர் அரசால் குதறப்படும் ரோஹிங்கியா முசுலீம்கள் – படக்கட்டுரை
கடந்த டிசம்பர் 25 அன்று மியான்மரை ஆளும் இராணுவத்தால் கொல்லப்பட்ட முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எரிந்த உடல்களை ஹ்ப்ருசோ நகரத்தின் மோ சோ கிராமத்திற்கு அருகில் கண்டதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. “மனித உரிமைகளை மீறும் மனிதாபிமானமற்ற கொடூரமான கொலையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று அக்குழு முகநூல் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளது.
மியான்மர் இராணுவம், அக்கிராமத்தில் “ஆயுதங்களுடன் கூடிய பயங்கரவாதிகளை” குறிப்பிடவியலாத எண்ணிக்கையில் சுட்டுக்கொன்றதாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன. உள்ளூர் ஊடகங்களில் வெளிவந்த புகைப்படங்களில் எரிந்த வாகனங்களும், உடல்களும் இருந்தன.
மியான்மர் இராணுவ ஆட்சியை எதிர்க்கும் பல போராளிக்குழுக்களில் ஒன்றான கரேன்னி தேசிய பாதுகாப்புப் படை, இறந்தவர்கள் தங்கள் உறுப்பினர்கள் அல்ல என்றும் அவர்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயற்சித்த பொதுமக்கள் என்றும் கூறியுள்ளது. “இறந்த உடல்கள் அனைத்தும் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் உட்பட வெவ்வேறு வயதினர் இருப்பதை பார்த்து நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம்” என்று அப்படையைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
கிராமவாசி ஒருவர், “டிசம்பர் 25 காலை தீ எரிந்த இடத்திற்கு சென்றபோது, எரிந்துபோன நிலையில் இறந்த உடல்களை நான் பார்த்தேன். குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆடைகள் அந்த இடத்தை சுற்றி கீழே விழுந்திருந்ததுன” என்று கூறினார்.
இந்த தாக்குதல் தொடர்பாக லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் “சேவ் தி சில்டரன்” என்ற தன்னார்வ நிறுவனம் தங்கள் இரண்டு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடந்தப்பட்ட இராணுவத்தின் தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தங்களின் இரண்டு ஊழியர்கள், ஆண்டு இறுதி விடுமுறைக்காக சொந்த கிராமங்களுக்கு சென்றபோது, கிழக்கு மாநிலத்தில் நடந்த இராணுவத் தாக்குதலில் சிக்கிக் கொண்டதாகவும், அவர்கள் சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதையும், அங்கு குறைந்தது 38 பேர் மியான்மர் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
படிக்க :
AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை
ரோஹிங்கியா : பச்சிளங் குழந்தைகளைப் பலி வாங்கும் மியான்மர் அரசு
பிப்ரவரி 1-ம் தேதியன்று மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு, அன்று முதல் அந்நாட்டில் இராணுவ ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மியான்மர் மிகவும் பதற்றமான சூழ்நிலையில் உள்ளது. இராணுவ அரசை எதிர்க்கும் பல்வேறு எதிர்ப்பு குழுக்கள் அங்கு உருவாகியுள்ளன. அரசியல் கைதிகளின் உதவிக்கான சங்கத்தின் கணக்கின்படி, ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் குறைந்தது 1,375 பேர் கொல்லப்பட்டதாகவும், 8000-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உலக மேல்நிலை வல்லரசாக தன்னை தக்கவைத்துக் கொள்ள அமெரிக்காவும்,  அமெரிக்காவுடனான ஆதிக்கப் போட்டியில் சீனாவும் நடத்தும் சர்வதேச காய்நகர்வுகளின் ஒரு அங்கம் தான் மியான்மார் ஆட்சிக் கவிழ்ப்பும் இராணுவ சர்வாதிகார ஆட்சியும். பிராந்திய ஆதிக்கப் போட்டியும், சர்வதேச முதலாளித்துவ இலாபவெறியும் இது போன்ற இன்னல்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு தொடர்ந்து அளித்து வருகின்றன.
சந்துரு
செய்தி ஆதாரம் : Reuters

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க