நாகாலாந்தில் 15 தொழிலாளர்கள் படுகொலை :
இராணுவ ஒடுக்குமுறையில் நிலைநாட்டப்படும் ‘இந்திய ஒற்றுமை’ !
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தின் ஒடிங் கிராமத்தில், வாரத்தின் ஆறுநாட்கள் கடுமையான சுரங்க வேலையை முடித்துவிட்டு விடுமுறை நாளான சனிக்கிழமை (டிசம்பர் 4) வழக்கம்போல தங்கள் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதற்காக சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு பேரைக் கொன்றதோடு, இந்த படுகொலையை அறிந்து இராணுவ வாகனத்தை தடுத்து விசாரித்த பொதுமக்கள் மீதும் மீண்டும் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு என மொத்தம் 15 பேரை அநியாயமாக படுகொலை செய்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
சொந்த நாட்டு இராணுவமே தம் மக்களை கொடூரமாக கொலை செய்வது குறித்து விவாதங்களும் பல்வேறு தரப்பிலிருந்து கண்டணங்களும் வந்து கொண்டிருந்தன. இச்சூழலில்தான் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் இராவத் டிசம்பர் 8-ம் தேதி குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அனைத்து செய்தி ஊடகங்களும் தொலைக்காட்சி விவாதங்களும் மீண்டும் மீண்டும் அதையே ஒளிபரப்பி மக்களை ‘தேசபக்தி’ வெள்ளத்தில் மூழ்கடித்தன.
இந்த ‘தேசபக்த’ கோஷ்டி கானத்தில், நாகாலாந்து அப்பாவித் தொழிலாளர்கள் படுகொலைகளும் அவர்களுக்கு நீதிகேட்டு இன்றுவரை நாகாலாந்து மக்கள் போராடி வருவதும் மைய ஊடகங்களில் திட்டமிட்டு மறைக்கப்பட்டன; மறைக்கப்பட்டு வருகிறது.
நெஞ்சை உலுக்கும் படுகொலையின் பின்னணி
மாலை 4:30 மணி அளவில் பயங்கரமான துப்பாக்கிச்சூடு சத்தத்தைக் கேட்ட கிராம மக்கள், முதலில் அது பாதுகாப்பு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் நடக்கும் சண்டை என நினைத்துக் கொண்டனர். வாகனத்தில் (டிரக்) சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள்தான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை முதலில் அவர்கள் அறியவில்லை. மாலை 3:30 மணிக்கு சுரங்கத்தைவிட்டு கிளம்பிய தொழிலாளர்கள் இரவு 8:00 மணி வரை வீடு திரும்பாததால் பொறுமை இழந்த கிராம மக்கள் அவர்களை தேடச் சென்றபோது, தொழிலாளர்கள் கிளம்பிய வாகனம் மட்டும் காலியாக ஒரு இடத்தில் நின்றுகொண்டிருந்தது.
படிக்க :
♦ நாகாலாந்து : ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் தூக்கியெறியப் போராடுவோம்!
♦ AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை
அந்த வாகனம் இரத்தக் கரைகள் படிந்தும் துப்பாக்கி குண்டுகள் துளைத்தவாறும் இருந்தது. இதனால் பீதியடைந்த மக்கள் அந்த வழியாக சென்று கொண்டிருந்த மூன்று இராணுவ டிரக்குகளை வழிமறித்து விசாரித்துள்ளனர். டிரக்கிற்குள்ளே தார்பாயை விரித்து அதன் மேல் அமர்ந்துகொண்டிருந்த இராணுவப் படையினர் முதலில் ‘தொழிலாளர்களைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது’ என கூறியுள்ளனர். ஆனால் தார்பாயை விலக்கி சோதித்தபோது அடியில் அரை உடையணிந்த ஆறு இளைஞர்களின் இறந்த உடல்கள் இருப்பதை கிராம மக்கள் பார்த்து அதிர்ந்துள்ளனர். அதன் மேல்தான் அப்படையினர் அமர்ந்திருந்தனர்.
அவர்களை கிளர்ச்சியாளர்களாக சித்தரிக்கும் நோக்கில் அவர்களுக்கு மாற்று உடை அணிவித்து அவர்கள் அருகில் ஆயுதங்களை செட்டப் செய்து வைத்திருந்துள்ளனர். இதைப்பார்த்து கொதித்துப்போன கிராம மக்கள் இராணுவப் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சீற்றமடைந்த கொலைகார இராணுவப் படை கூடியிருந்த கிராம மக்களை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளத் தொடங்கியது. இதில் மேலும் 7 பேர் கொல்லப்பட்டனர். அடுத்த நாள் இந்த படுகொலையை கண்டித்து இராணுப் படையின் தலைமையகம் முன்பு நடந்த போராட்டத்தில் மேலும் இருவர் கொல்லப்பட்டனர். எந்த காரணமும் இன்றி 15 பேரின் உயிரை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது இந்திய இராணுவப்படை.
இந்த படுகொலையைப் பற்றி மக்களவையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமித்ஷா “இந்த சம்பவத்திற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். தொழிலார்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை நிறுத்தமாறு சைகை காட்டப்பட்டது, ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றதால்தான் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது” என்றும் “அடுத்து நடந்த மற்ற இரண்டு துப்பாக்கிச் சூடுகளும் மக்கள் இராணுவத்தினரை தாக்கியதால் தற்காப்புக்காக மற்றும் கூட்டத்தை கலைக்க நடத்தப்பட்டது” என்றும் கூறியுள்ளார்.
ஆனால், அந்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பித்த ஒருவர் “இராணுவம் வண்டியை நிறுத்த சைகை செய்யவில்லை. எங்களைப் பார்த்ததும் சுடத் தொடங்கிவிட்டார்கள்” என்று உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் சம்பவ இடத்திற்குச் சென்ற பா.ஜ.க. உறுப்பினர் ஒருவர் “இராணுவத்தினரின் வண்டியில் நாங்கள் தொழிலாளர்களைப் பார்த்ததால்தான் எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது” என்று கூறியுள்ளார். அமித்ஷாவின் நியாயவாதங்கள் எவ்வளவு நெஞ்சழுத்தத்தோடு சொல்லப்பட்ட பொய்கள் என இவை எடுத்துக் காட்டுகின்றன.
000
இராணுவம் இதுபோன்று காரணமே இல்லாமல் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொல்வது ஒன்றும் புதிதல்ல. இதேபோல ஒரு படுகொலை மார்ச் 5, 1995-இல் நாகாலாந்தில் நடைபெற்றுள்ளது. ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் இராணுவப் படை நாகாலாந்தின் கோஹிமா பகுதியை கடக்கும்போது, இராணுவத்தினர் சென்ற டிரக்கின் டயர் ஒன்று வெடித்துள்ளது. இதை வெடிகுண்டு சத்தம் என்று நினைத்துக் கொண்டு அங்கு இருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது இராணுவம். இந்தத் தாக்குதலில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்; 36 பேர் காயமடைந்தனர்.
இதுபோன்ற சம்பவங்களை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லையல்லவா! இதுதான் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களின் நிலை. அம்மாநிலங்கள் அனைத்தும் துப்பாக்கி முனை இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ்தான் நெடுங்காலமாக ஆளப்பட்டு வருகின்றன.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) : இராணுவ ஒடுக்குமுறையால் ஆளப்படும் தேசிய இனங்கள்
வடகிழக்கு இந்தியா எட்டு மாநிலங்களை உள்ளடக்கியது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம். இந்தியா ‘சுதந்திரம்’ அடைந்ததாக சொல்லப்பட்டதற்கு முன் சிக்கிம் தவிர மற்ற ஏழு மாநிலங்களும் ஒரே பகுதியாக (அசாமாக)தான் அடையாளம் காணப்பட்டது. அதனால்தான் இந்த மாநிலங்களை “ஏழு சகோதரிகள்” என்று அழைக்கிறார்கள். இந்த ஏழு மாநிலங்களிலும் பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம், தனிக் கொடி, தனி ஆட்சி முறை என தனித்த தேசமாக செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களை தனது இராணுவப்படை மிரட்டலின் மூலமாக இந்தியாவுடன் இணைத்தனர் நேருவும் ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலும்.
இப்படி அடக்குமுறை மூலமாக இந்தியாவுடன் இணைந்ததை வடகிழக்கு மாநில மக்கள் ஒருபோதும் ஏற்கவில்லை. போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. இந்திய இராணுவத்திற்கு எதிராக அவர்களும் ஆயுதங்களை ஏந்த ஆரம்பித்தார்கள். 1977-ல் அசாம் விடுதலையை முன்னிறுத்தி அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front Of Asom – ULFA) என்ற அமைப்பின் தலைமையில் ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டது. 1980-களில் போடோ பழங்குடியினக் குழுக்கள் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். நாகாலாந்து பிரதிநிதிகள் அடங்கிய நாகா தேசிய கவுன்சிலும் (NNC – Naga National Council) போராட்டத்தை முன்னெடுத்தது. “சுதந்திர திரிபுராவைப் படைப்போம்” என்று முழங்கி திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (National Liberation Front Of Tripura – NLFT), அனைத்து திரிபுரா புலிகள் படை (All Tripura Tiger Force – ATTF) ஆகிய அமைப்புகளும் 1961-ம் ஆண்டு மிசோ தேசிய முன்னணி (Mizo National Front – MNF) உருவாகி சுதந்திர மிசோராமிற்காக ஆயுதம் தாங்கிப் போராடியது.
இந்த ஆயுதப் போராட்டங்கள் அனைத்தும் ஒடுக்குமுறையின் மூலம் உருவாக்கப்பட்ட ‘இந்திய தேசிய ஒற்றுமைக்கு’ வெடிவைத்து தகர்த்தது. இந்தியாவோடு பலவந்தமாக தாங்கள் இணைக்கப்பட்டதற்கு எதிராக தன்னுரிமைக்காக போராடிய மக்களை, அமைப்புகளை ஒடுக்குவதற்காகத்தான் 1958-இல் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை AFSPA (Armed Forces Special Powers Act) கொண்டு வந்தது இந்திய அரசு. அதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தோன்றின. இந்தக் கொடூரச் சட்டம் முதன்முதலில் நாகாலாந்தில்தான் கொண்டுவரப்பட்டது.
000
இரண்டாம் உலகப் போரின்போது, இந்திய விடுதலை இயக்கத்தை இராணுவ ரீதியாக ஒடுக்குவதற்காக ஆகஸ்ட் 15, 1942 அன்று ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் அளித்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். 1958-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வெள்ளையர்களின் ஒடுக்குமுறைச் சாதனமான ஆயுதப் படைகளின் இந்த சிறப்பு அதிகாரத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கி, அந்த கருப்புச் சட்டத்தை தொடர்ந்தது ‘சுதந்திர இந்தியா’. இவை முதலில் அஸ்ஸாம் மற்றும் மணிப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின் 1972-ம் ஆண்டு மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. 1983-இல் பஞ்சாபிலும் 1990 முதல் ஜம்மு – காஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டது.
-
AFSPA சட்டத்தின் 3-வது பிரிவின் படி, ஒரு பகுதி ‘தொந்தரவு பகுதி’ என பெயரிடப்பட்டால் அந்த பகுதியில் சிவில் அதிகாரத்துக்கு உதவியாக ஆயுதப்படைகள் பயன்படுத்தபட வேண்டும்.
-
AFSPA சட்டத்தின் 4-வது பிரிவு ஆயுதப் படைகளுக்கு வானளாவிய அதிகாரங்களை அளிக்கிறது. பாதுகாப்பு அதிகாரிகள் எதற்காக வேண்டுமானாலும் துப்பாக்கிச் சூடு நடத்தலாம், எந்த பிடியாணையும் இல்லாமல் மக்களைக் கைது செய்யலாம், எந்த இடத்திற்குள்ளும் நுழைந்து சோதனையிடலாம், அந்த இடத்தை சேதப்படுத்தலாம். இந்த செயல்களுக்கு எதிராக சட்டப்படி யாரும் வழங்குத் தொடர முடியாது.
-
AFSPA சட்டத்தின் 6-வது பிரிவின் படி, மத்திய அரசின் முன் அனுமதி இல்லாமல் ஆயுதப்படை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரவோ அல்லது பிற சட்ட நடவடிக்கைகளோ மேற்கொள்ள முடியாது.
இந்தச் சட்டத்தின் மூலமாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தேசிய இனங்களை இராணுவ ஒடுக்குமுறையின் மூலமாக ஆண்டுகொண்டிருக்கிறது இந்திய அரசு.
