தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற வெற்றுப் பூச்சாண்டியை  அம்பலப்படுத்துவோம் !
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் தூக்கியெறியப் போராடுவோம் !
நாகாலாந்தில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) திரும்ப பெற வேண்டும் என்று அம்மாநில மக்களும் அங்குள்ள அமைப்புகளும் பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், நாகாலாந்து மாநிலம் அச்சுறுத்தல் நிறைந்ததாக (disturbed area) உள்ளது என்று காரணம் காட்டி அச்சட்டத்தை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது ஒன்றிய அரசு.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) அமலில் இருக்கும் காஷ்மீர், நாகாலாந்து உள்ளிட்ட 9 மாநிலங்களில் இராணுவத்துக்கு எல்லையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இராணுவம் நினைத்தால் மக்கள் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் சோதனை என்ற பெயரில் அத்துமீறலாம். இராணுவம் செய்யும் கொலை, பாலியல் வெறியாட்டங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் நீதிமன்ற விசாரணையோ நடவடிக்கையோ கூடக் கிடையாது. இராணுவ நீதிமன்றங்களே இவற்றை விசாரிக்கும்.
சுருங்கக் கூறின் இம்மாநிலங்கள் அறிவிக்கப்படாத ஒரு இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் உள்ளன. இத்தகைய வானளாவிய அதிகாரங்களை கையில் வைத்துகொண்டு அப்பகுதி மக்களிடம் எல்லையற்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவதோடு, எந்தக் காரணமுமின்றி அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது இந்திய இராணுவம்.
சமீபத்தில் கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் சுரங்க தொழிலுக்குச் சென்று வீடு திரும்பிய 6 தொழிலாளர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது இராணுவம். அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த இச்சம்பவம் குறித்து மக்களவையில் பேசிய அமித்ஷா, இராணுவத்தினர், தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என தவறுதலாக அடையாளம் கண்டுகொண்டு சுட்டுவிட்டதாகவும், அச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும் தன் ஆழ்ந்த ‘இரங்கலை’ தெரிவித்தார். தினசரி அங்குள்ள மக்கள் வேலைக்குச் சென்று திரும்பும் மக்களின் நடைமுறைக்கும், பயங்கரவாதிகளின் நடைமுறைக்கும் ‘வித்தியாசம் தெரியாமல்’ இவர்கள் சுட்டுவிட்டார்களாம், அதற்காக வருந்துகிறார்களாம். மோடி-ஷா கும்பலால் கூறப்படும் இப்பச்சைப் பொய்யை எவ்விதக் கூச்சமுமின்றி இந்தியாவின் எல்லா ஊடகங்களும் ஒளிபரப்பின.
படிக்க :
♦ AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை
♦ எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : இராணுவ சர்வாதிகாரம்!
உண்மையில், 6 தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற பின் அவர்களை தூக்கி வண்டியில் போட்டு, அவர்களுக்கு கிளர்ச்சியாளர்களின் (பயங்கரவாதிகளின்) உடையை அணிவித்து அவர்களின் கைகளில் ஆயுதங்களைத் திணித்து அவர்களை பயங்கரவாதிகளாகவே சித்தரிக்க முயற்சித்திருக்கிறது, இராணுவம். ஆகவே, இராணுவத்தினர் தவறாகச் சுடவில்லை. ஒரு திட்டத்துடன் தான் வந்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் தெரிகிறது.
மக்கள் வருவதற்குள் கொல்லப்பட்ட 6 பேரையும் தாம் வந்த வண்டியில் தூக்கிப் போட்டு, அந்தப் பிணங்களின் மீது தார்ப்பாயும் போர்த்தப்பட்டு, அதன்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு வண்டி கிளம்பியது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த மக்கள் இராணுவ வாகனத்தை மறித்துப் பார்த்ததில் இவ்வுண்மை தெரியவந்துள்ளது. தங்கள் உறவினர்களைக் கொன்று அதன்மேல் அமர்ந்ததைப் பார்த்து ஆத்திரமுற்ற மக்கள் இராணுவத்தின் இப்பச்சைப் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதனைப் பொறுத்துகொள்ள முடியாத இராணுவமோ நியாயம் கேட்டுப் போரடிய மக்களின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மேலும் 8 பேர் கொல்லபட்டனர். கொடூரமான மோன் மாவட்ட படுகொலை சம்பவம் நிகழ்ந்த பின்னர், நாடே முப்படைத் தளபதி பிபின்ராவத் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் ‘தேசபக்தி’ வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.
2021 டிசம்பர் 21-ம் தேதியன்று தினமணி நாளிதழ், இச்சம்பவத்தை பற்றி விவரிக்கும்போது, தீவிரவாதிகள் என்று நினைத்தே உழைக்கும் மக்கள் மீது இராணுவத்தினர் ‘தவறுதலாக’ துப்பாக்கிச்சூடு நிகழ்த்திவிட்டதாகவும், அதில் உழைக்கும் மக்கள் 6 பேர் ‘உயிரிழந்தனர்’ என்றும் வன்முறையில் இராணுவ வீரர் ஒருவர் ‘கொல்லப்பட்டார்’ என்றும் எழுதியிருகின்றது. ஒரே சம்பவத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை ‘உயிரிழந்தனர்’ என்றும் மக்கள் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கியபோது பலியான இராணுவ வீரரை ‘கொல்லப்பட்டார்’ என்றும் எழுதிய தினமணியின் ஊடக ‘அறத்தை’ நாம் என்னவென்று சொல்வது? ‘நடுநிலை நாயகர்களாக’ தங்களைக் காட்டிக்கொள்ளும் பத்திரிகைகளின் இலட்சணம் இதுதான்.
நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உழைக்கும் மக்கள் இராணுவத்தால் கொல்லபடுவது இது முதன்முறையல்ல. 1947-க்குப் பின்பு வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவோடு அடக்கி ஒடுக்கி இணைக்கபட்டதில் இருந்து அம்மாநிலங்களில் துப்பாக்கிச்சூடு சத்தமும் ஓலக்குரல்களும் கேட்ட வண்ணமே உள்ளது. தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் அமலாக்கப்பட்டு, அப்பாவி உழைக்கும் மக்களைக் கொன்று குவிக்கும் இக்கொடிய சட்டத்தை (AFSPA) திரும்பப்பெற பல ஆண்டுகளாக அம்மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மோன் மாவட்ட படுகொலை சம்பவத்திற்கு பிறகு நாகாலாந்தில் இக்குரல் வலுத்து வந்தது. அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசே அவசர அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை இரத்து செய்ய ஒன்றிய அரசிடம் கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இவ்வாறு முன்பைக் காட்டிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ள சூழலில் அதை இன்னும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருப்பது நாகாலாந்து மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முடிவிற்கு  கிழக்கு நாகாலாந்து மக்கள் கூட்டமைப்பு, சர்வதேச நாகா கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாகா பழங்குடியினர் குழுக்களில் ஒன்றான ஹோஹோ வெளியிட்ட அறிக்கையில், “நாகா மக்களின் விருப்பத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அரசின் முடிவை நாகா மக்கள் ஏற்கமாட்டார்கள். மாநிலத்தில் அமைதியான சூழல் நிலவும்போது ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமென்ன? மாநிலத்தில் இராணுவத்தினரே சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர். அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாசிச பா.ஜ.க. அரசு ஒவ்வொரு மாநிலங்களிலும் ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ என்று காரணம் காட்டி அவற்றை இராணுவ சர்வாதிகாரத்தின் பிடியில் கொண்டுவரும் தந்திரத்தைக் கையாண்டு வருகிறது. பஞ்சாப்பிலும் அசாமிலும் தற்போது எல்லைப் பாதுகப்புப் படையின் (BSF) அதிகார வரம்பை 15 கி.மீட்டரில் இருந்து 50 கி.மீட்டராக நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது நாகாலாந்தில் சட்டத்தை நீட்டித்ததற்கும் ‘பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற அதே காரணத்தைத்தான் கூறியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாத சம்பவங்கள் வளர்ந்து வருவதைப் போலவும் அதன் மூலம் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதைப் போலவும் ஊடகங்கள் மூலம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்காகவே அவற்றை அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளாக (disturbed area) அறிவிப்பதாகவும், அங்கெல்லாம் ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீட்டிப்பதாகவும் ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் இவற்றில் கடுகளவும் உண்மையில்லை என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சகம் (MHA) வெளியிட்டுள்ள தகவல்களில் இருந்தே நாம் அம்பலப்படுத்த முடியும்.
படிக்க :
சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !
சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இச்சட்டத்தை நீட்டிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அவ்வாறு நீட்டிப்பதாயின் அதற்கான காரணங்களை வெளியிட வேண்டும் என்பது விதி. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்புவரை ‘கிளர்ச்சி சார்ந்த சம்பவங்களின்’ (Insurgency related incidents) எண்ணிக்கைகளையும் காரணங்களையும் குறிப்பிட்டு அதற்காக இச்சட்டத்தை நீட்டிப்பதாக ‘நியாயவாதம்’ (Justification) கூறிவந்த ஒன்றிய அரசோ, 2018 முதல் இப்போது வரை எவ்வித நியாயவாதமும் இல்லாமல் இந்த நீட்டிப்பைச் செய்து வருகிறது.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படியே, வடகிழக்கு மாநிலங்களில் 1999-இல் 1,743-ஆக இருந்த கிளர்ச்சி சார்ந்த சம்பவங்கள் ஆகஸ்டு 2021-இல் வெறும் 135-ஆகக் குறைந்துள்ளது. அசாமில் இச்சட்டத்தை நீட்டிப்பதற்காக செப்டம்பர் 10-ம் தேதி அசாம் அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் “அந்நிய நாட்டின் புலனாய்வு நிறுவனங்களால் தீய திட்டம் தீட்டப்பட்டுள்ளது” என்றும் பங்களாதேசும் மியான்மரும் சீனாவும் பூடானும் அதைச் சூழ்ந்திருப்பதாலும் “HMB, JMB, HM போன்ற இசுலாமிய பயங்கரவாதக் குழுக்களால் அசாமுக்கு ஆபத்து உள்ளது” என்றும் இச்சட்டம் நீட்டிக்கப்படுவதற்கான காரனங்கள் கூறப்பட்டுள்ளன.
ஆனால், அசாமில் 2000-இல் 536-ஆக இருந்த இச்சம்பவங்கள் 2020-இல் வெறும் 15-ஆகவும் 2021-இல் வெறும் 17-ஆகவும் குறைந்துள்ளது என்பதுதான் ஒன்றிய உள்துறை அமைச்சகமே வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரமாகும். இதேபோலத்தான் மணிப்பூரும் ‘அச்சுறுத்தல் நிறந்த பகுதியாக’ உள்ளது என்று கூறி இச்சட்டத்தை நீட்டிப்பதற்கான அறிவிப்பை டிசம்பர் 8-ம் தேதி வெளியிட்டுள்ளது மணிப்பூர் அரசு. ஆனால் 2008-இல் 740-ஆக இருந்து வந்த வன்முறைகள் 2021-இல் வெறும் 72-ஆகக் குறைந்துள்ளன. (ஆங்கில ஹிந்து நாளிதழ் 02.01.2022, பக்கம் 19)
பாசிஸ்டுகளின் புகலிடம் தேசபக்தி என்பார்கள். ‘தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்பது பாசிஸ்டுகள் காட்டும் பூச்சாண்டி என்பதை அவர்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. எனவே ‘தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற இப்பூச்சாண்டி காட்டி, அமுலாக்கப்படும் பாசிச சட்டங்களையும் இராணுவ சர்வாதிகாரத்தையும் அம்பலப்படுத்தி தோலுரித்துக் காட்டுவோம். இத்தகைய கொடிய சட்டங்களைத் தூக்கியெறிய வடகிழக்கு மாநில, காஷ்மீர் மக்களோடு கரம் கோர்த்துப் போராடுவோம்.

துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க