2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அரசுக் கட்டமைப்பை பாசிசமயமாக்குவதை நுட்பமாக செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல். 2025-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்-இன் நூற்றாண்டாகும். அதற்குள் இந்தியாவை இந்துராஷ்டிரமாக அறிவித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் காய்களை நகர்த்தி வருகிறார்கள் காவி பாசிஸ்டுகள்.
மோடி ஆட்சியின்கீழ் போலீசு, சி.பி.ஐ, அமலாக்கத்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் – பேராசிரியர்கள் என அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் இதுவரை காணாத அளவிற்கு நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இராணுவமும் அதற்கு விதிவிலக்கல்ல.
கடந்த 2018-ல் பீகாரில் நடந்த கூட்டமொன்றில், “இக்கட்டான சூழலில் போருக்கு வீரர்களைத் தயார்படுத்த இராணுவத்திற்கு 6 அல்லது 7 மாதங்கள் ஆகும். நம்முடைய நாட்டிற்கு தேவையென்றால், அரசியலமைப்பு சட்டம் அனுமதித்தால், நம்மை கேட்டுக் கொண்டால் மூன்றே நாட்களில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை இராணுவமாகத் தயார்படுத்திவிடுவோம் அதுதான் நம்முடைய திறமை” என்று பேசினார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத். இராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயப்படுத்த வேண்டும் என்ற தனது நோக்கத்தையே அவர் அவ்வாறு வெளிப்படுத்தியிருந்தார்.
படிக்க :
♦ எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : இராணுவ சர்வாதிகாரம் !
♦ AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை
ஆங்கிலேயரின் காலனியாதிக்க ஆட்சிக் காலத்திலிருந்தே இராணுவத்திற்குள் ஊடுருவி அதைக் கைப்பற்ற வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டமாக இருந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களுள் ஒருவரான மூஞ்சே, 1935-ம் ஆண்டிலேயே இராணுவத்தை இந்தியமயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் பெயரில், மத்திய இந்து இராணுவக் கல்விக் கழகத்தை நாசிக்கில் நிறுவினார். 1937-ம் ஆண்டு பொன்சாலா இராணுவப் பள்ளியை நிறுவினார்.
போலி சுதந்திர காலத்திற்கு பின்பு, பல தருணங்களில், ஆர்.எஸ்.எஸ் இந்திய இராணுவத்தின் ஒரு துணைப்பிரிவாகவே கருதி நடத்தப்பட்டுள்ளது. 1948-ம் ஆண்டு நடைபெற்ற காஷ்மீர் போரில் பெரும்பாலான ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கு இராணுவம் பயிற்சியளித்திருக்கிறது. 1962-ல் நடைபெற்ற இந்திய – சீனப் போர் மற்றும் 1965-ல் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போர் ஆகியவற்றின் போது ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் சிவில், இராணுவ வேலைகளில் பங்குபெற்றிருக்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் பேரிடர் கால பணிகளின்போது இராணுவத்துடன் இணைந்து வேலை செய்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
மூஞ்சே தொடங்கிய இராணுவப் பள்ளியைப் போல, கடந்த 2020-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்திலும் ஆர்.எஸ்.எஸ் புதிதாக தனது இராணுவப் பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறது. கீழ்நிலை வீரர்களிலிருந்து இராணுவத் தளபதிகள் வரை ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் ஊடுருவியிருக்கிறார்கள். தற்போது அடுத்த நிலைக்குச் சென்று, அலையலையாக இராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயப்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது மோடி அரசு.
நாடு முழுவதும் புதிதாக 100 இராணுவப்பள்ளிகள் தொடங்கப்படும் என்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதன் முதல்கட்டமாக, இந்தியா முழுவதும் புதிதாக 21 இராணுவப் பள்ளிகளைத் தொடங்க ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 27-ம் தேதி அன்று அனுமதியளித்துள்ளது.
