திருச்சியில் கடந்த நவம்பர் 21-ம் தேதியன்று இரவு ஆடு திருடும் கும்பலை விரட்டிப் பிடிக்கச் சென்ற போலீசு சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) பூமிநாதனை, ஆடு திருடும் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்தக் கும்பலில் சிறுவர்களும் அடங்கும் என்பதுதான் தமிழகத்தின் இன்றைய நிலைமையை எடுத்துக் காட்டும் கண்ணாடியாக இந்த நிகழ்வின் மூலம் தெரியவருகிறது.
இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேதிரபாபு திருச்சியில் உள்ள பூமிநாதனின் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திப் பேசினார். தனது உரையில் பூமிநாதனின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசிய அவர், இரவு நேரத்தில் ரோந்து செல்லும் போலீசுத் துறையினர் கையில் ஆறு புல்லட்டுடன் கூடிய கைத்துப்பக்கியை எடுத்துச் செல்லுமாறும் ஆபத்து ஏற்பட்டால் சுடுமாறும் அதற்கு சட்டத்தில் அனுமதி உள்ளது என்றும் “போலீசுக்கே” சட்டம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக தோழர்கள் போராட்டத்திலோ, ஆர்ப்பாட்டங்களிலோ கைதாகும் சமயத்தில், சட்டப்படி தமக்கு இருக்கும் உரிமைகள் குறித்து போலீசு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினால், “போலீசுக்கே சட்டம் சொல்லித் தர்றியா?” என்று பாய்வார்கள் அதிகாரிகள். அந்த அளவிற்கு சட்டம் தெரிந்த போலீசாருக்கு டிஜிபி சட்டம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
படிக்க :
♦ காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது?
♦ “யாரையும் சும்மா விடக் கூடாது ! “ – என்ன செய்யப் போகிறோம் ?
கொள்ளையர்களை துரத்திப் பிடிப்பது போன்ற துணிகரமான சம்பவத்தில் ஒரு போலீசு ஈடுபட்டு, சமூக விரோதிகளால் அந்த அதிகாரி கொல்லப்படும் சமயங்களில் இத்தகைய பேச்சுக்கள் சமூகத்தின் அங்கீகாரத்தை உடனே பெற்றுவிடுகின்றன. தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவும் இதனை அறியாதவர் அல்ல. அந்த வகையில் அரசின் ஒடுக்குமுறைக் கருவியான போலீசுக்கு, ஆயுதத்தை தாராளமாக பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை  சரியான நேரம் பார்த்து வழங்கியிருக்கிறார் டி.ஜி.பி.
எஸ்.ஐ. தரத்திற்கு மேல் இருக்கும் போலீசு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே கைத்துப்பாக்கியை கையாளும் உரிமை இருக்கும் நிலையில், மீண்டும் ஒருமுறை தமிழக டிஜிபி அழுத்திக் கூறுவதன் பொருள் என்ன ?
அந்நிகழ்வில் பேசிய டிஜிபி கூடுதலாக அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் போலீசாருக்கு கைத்துப்பாக்கி, ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், பிற போலீசாருக்கும் அந்த பயிற்சி விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசு நிலையத்தில் கொடூரமாகத் தாக்கி படுகொலையை நிகழ்த்தியது கொரோனா ஊரடங்கு ரோந்து போலீசுதான். மதுரையில் விவேகானந்தக் குமார் எனும் இளைஞரை அடித்துக் கொன்றதும் ரோந்துப் போலீசுதான்.  இவர்கள் கையில் துப்பாக்கி இல்லாத போதே இத்தனைப் படுகொலைகள் நடந்துள்ள நிலையில், இத்தகைய போலீசுகளிடம் கைத்துப்பாக்கியை ஏந்திச் செல்ல  அறிவுறுத்துகிறார்.
பென்னிக்ஸ், ஜெயராஜ் படுகொலையில் கூட போலீசு நிலையத்தில் போய் அடித்த காட்சியைக் கண்ட சக பெண் போலீசு ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தால் அந்தப் போலீசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இனி அந்தப் பிரச்சினையும் போலீசுக்கு இல்லை. பார்த்த இடத்திலேயே ‘சம்பவம்’ செய்துவிட்டு சர்வ சாதாரணமாக உயிருக்கு ஆபத்து நேர்ந்தது, அதனால் சுட்டேன் என்று கூறிவிட்டு மறுவேலையைப் பார்க்கச் செல்லலாம்.
எல்லாப் போலீசாரும் அப்படிப்பட்டவர்கள் இல்லையே என்றோ, உண்மையான கிரிமினல்களை பிடிக்கச் செல்லும் போலீசுக்கு என்ன பாதுகாப்பு என்றோ கேள்வி எழலாம். உண்மையான கிரிமினல்களைப் பிடிக்கச் செல்லும் நேர்மையான போலீசாரின் பாதுகாப்பிற்கு பல வழிகள் உள்ளன. கூடுதலாக போலீசை உடன் அழைத்துப் போகச் சொல்லலாம். பிற போலீசாருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செல்லலாம். சட்டையில் பொருத்தும் கேமராவோடு கூட ரோந்துக்குச் செல்லச் சொல்லலாம். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு கையில் ரிவால்வரை எடுத்துக் கொடுப்பது என்பது, போலீசின் அதிகாரத்தை வரம்பற்றதாக்குவதோடு ’நல்ல’ போலீசுகளின் எண்ணிக்கையை ’கெட்ட’ போலீசுகளின் எண்ணிக்கையோடு சேர்த்துவிடும்.
காவி – கார்ப்பரேட் பாசிசம் வளர்ந்து வரும் சூழலில் போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்திற்கு கொடுக்கப்படும் மேலதிக சலுகைகள் தான் பாசிஸ்ட்டுகள் அரியணையில் ஏறி அமர துணை புரிகிறது என்பதுதான் வரலாறு. இங்கு டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு அறிவித்துள்ள துப்பாக்கிச் ‘சலுகை’, முற்போக்காளர்களுக்கும், சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் எதிரானது என்பது அல்ல பிரச்சினை. போலீசால் கொல்லப்பட்ட மதுரை விவேகாணந்தனோ, ஜெயராஜ் – பென்னிக்சோ யாரும் செயற்பாட்டாளர்களோ போராளிகளோ அல்ல. சாதாரண நடுத்தர்வர்க்கத்தினர் தான் !!
தமிழக டிஜிபி ரோந்து செல்லும் போலீசார் கைய்டில் துப்பாக்கி ஏந்திச் சரியான அணுகுமுறையா ?
அவசியமான அணுகுமுறை
அபாயகரமான அணுகுமுறை
முடிவெடுக்க முடியவில்லை
வாக்களிப்பீர் !!
கருத்துக் கணிப்பில் பங்கேற்க :

 

யூடியூபில் வாக்களிக்க : இங்கே அழுத்தவும்

டிவிட்டரில் வாக்களிக்க:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க