காந்தி கொலையில் சாவர்க்கருக்கு தத்துவார்த்தரீதியான பங்கிருந்ததே தவிர, நேரடியாக அந்த சதியில் பங்கேற்கவில்லை என்பதுதான் தற்போதுவரை சாவர்க்கர் ஆதரவாளர்களின் வாதம். இந்த நூல் அதை உடைக்கிறது !
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் மரணம் குறித்தே ஏகப்பட்ட புத்தகங்கள் வந்துவிட்டன. மனோகர் மல்கோங்கரின் The Men Who killed Gandhi, தூஷார் காந்தியின் Let’s Kill Gandhi ஆகியவை இதில் மிக முக்கியமானவை. அதிலும் Let’s Kill Gandhi புத்தகம் மிகவும் விரிவானது. இந்த இரண்டையும் படித்துவிட்டாலே, காந்தி கொலைக்கான பின்னணி, சூழல், சம்பந்தப்பட்ட சதிகாரர்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
இந்த நிலையில், காந்தியின் கொலை குறித்து புதிதாகச் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா? அப்பு எஸ்தோஸ் சுரேஷ், பிரியங்கா கோதம்ராஜு எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் The Murderer The Monarch and The Fakir புத்தகம் தேசப்பிதாவின் கொலை குறித்து புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.
காந்தி கொலையில் நாதுராம் கோட்ஸே, வி.டி, சாவர்க்கர், ஆப்தே உட்பட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, அதில் சாவர்க்கர் மட்டும் தப்பித்துவிட மீதமுள்ளவர்கள் தண்டனை பெற்றார்கள்.
ஆனால், இந்தக் கொலையில் வேறு சிலரின் தொடர்பும் இருந்திருக்கிறது. அதில் ஒருவர் ஆல்வாரின் மகாராஜாவான தேஜ் சிங் பிரபாகரும் ஒருவர். காந்தியைக் கொலை செய்யப் பயன்பட்ட ப்ரெட்டா பிஸ்டல், மகாராஜாவின் ஆயுத சேகரிப்பிலிருந்து வந்தது என அப்புவிடம் குறிப்பிடுகிறார் ஒரு மூத்த அதிகாரி.
இதிலிருந்து தன் தேடலை துவங்குகிறார் அப்பு. காந்தி கொலை குறித்த பல்வேறு தகவல்கள், ஆவணங்கள் ஆகியவற்றை மறுபடியும் புரட்டுகிறார். பிறகு இந்தத் தேடலில் பிரியங்காவும் இணைந்து கொள்கிறார்.
இந்தத் தேடல் முடியும் புள்ளி, வி.டி. சாவர்க்கர். காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு ஆதாரங்கள் இல்லாமல் விடுவிக்கப்பட்டவர் சாவர்க்கர். காந்தி கொலையில் சாவர்க்கருக்கு தத்துவார்த்தரீதியான பங்கிருந்ததே தவிர, நேரடியாக அந்த சதியில் பங்கேற்கவில்லை என்பதுதான் தற்போதுவரை சாவர்க்கர் ஆதரவாளர்களின் வாதம்.
ஆனால், உண்மையில் அந்த சதித்திட்டத்தின் எல்லாக் கட்டங்களிலும் பங்கேற்று, முழுமைப்படுத்தியவர் சாவர்க்கர் என்ற முடிவுக்கு இந்தப் புத்தகம் வருகிறது.
தேசத்தந்தை கொல்லப்படுகிறார். அவர் கொல்லப்படுவதற்கான சித்தாந்தத்தை சாவர்க்கர் தருகிறார். அதற்காக நபர்களை ஒருங்கிணைக்கிறார். திட்டம் நிறைவேறிய பிறகு விலகிக்கொள்கிறார்.
சமீபத்தில் வெளிவந்த வரலாற்று நூல்களில் விறுவிறுப்பான, அட்டகாசமான புத்தகம் இது. கண்டிப்பாக படியுங்கள்.
நூலின் உட்தலைப்புகள் :
Book I : The Murderer
1. The August Conspiracy 2. The Accidental Breakthrough 3. The Recruit 4. The Beretta Gun that killed Gandhi
Book II : The Monarch
1. The Open Secret 2. Alwar and the Princely Affair 3. The Militarization of the Hindus
Book III : The Fakir
1. Imagined Enemies 2. The Idea of Hindutuva 3. Hindu Khatre Mein Hai 4. The Cult of Godse