“யாத் வஷேம்” – நினைவு இடம். நாஜிப்பிடியில் மரணமடைந்த ஆறு மில்லியன் யூதர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இடம்.
“யாத் வஷேம்” கர்நாடக சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்நூலை நேமிசந்த்ரா எழுதியுள்ளார். கே.நல்லதம்பி மொழிபெயர்த்துள்ளார். கன்னட இலக்கியத்தில் மிகவும் அரிதான புத்தகம்.
ஒரு வெளிநாட்டுக் கதையைத் தேர்ந்தெடுத்து இந்தியாவிற்கு ஏற்ற கதைக்களத்தை அமைத்துள்ளார் ஆசிரியர். நாவலுக்கு வலுசேர்க்கும் விதமாக இந்நூலை எழுதுவதற்குமுன் பல ஆய்வுகளையும் பயணங்களையும் மேற்கொண்டுள்ளார். பன்னிரண்டு ஆண்டுகளில் தான் பார்த்த யூதர்களின் உலகை நாவலில் திறந்துகாட்ட முயன்றுள்ளார்.
படிக்க :
நூல் அறிமுகம் : இப்போது உயிரோடிருக்கிறேன் || நமக்கு ஏன் இத்தனை எதிரிகள் ? || முரளிதரன்
நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM || இ.பா. சிந்தன்
இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவிலிருந்து தப்பி பிரிட்டிஷ் இந்தியாவில் தஞ்சமடைந்த யூதக் குடும்பத்தைப் பற்றியது இப்புத்தகம். ஹிட்லரின் மண்ணிலிருந்து காந்தியின் மண்ணிற்கு வந்த குட்டி யூதச் சிறுமியின் கதை. பிரிட்டிஷ் கால பெங்களூர், யூதப் படுகொலைகள், நாஜிகளின் கொடுமைகள், இஸ்ரேலின் எழுச்சி மற்றும் பாலஸ்தீனத்துடனான மோதல்கள் பற்றிய பல தகவல்கள் இதில் உள்ளன.
ஹ்யானா மோசஸ், கதாநாயகி உங்களை பல உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டர் மூலம் அழைத்துச் செல்கிறார். இது இந்தியாவில் அனிதாவாக மாறிய ஹ்யானா வாழ்க்கை மற்றும் தொலைந்துபோன குடும்பத்திற்கான தேடலைப் பற்றியது. உயிரின் சங்கடங்களுக்கு ஒரு விடை வேண்டும் என்று அனிதா தன் அறுபதுகளில் தனது வேரைத்தேடி ஐரோப்பா, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஜெரூசலம் போன்ற பல நாடுகளை அலைந்து திரிந்து கடைசியாக உயிருடன் இருக்கும் தன் 70 வயது அக்காவைத் தேடிக்கண்டுபிடிப்பதும், அக்கா இஸ்ரேலில் குடியேற அழைக்க அதை மறுத்து “நான் நானாகவும். அவர்கள் அவர்களாகவும் இருந்துகொண்டு, நாமாக வாழமுடியும்” என்று இந்தியாதான் தனது நாடு என்று இந்தியாவுக்குத் திரும்புவதுதான் கதை.
பல நூற்றாண்டுகளாக யுத்தம் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு அழித்தது என்பது பற்றிய செய்தியை ஆசிரியர் தெரிவிக்க முயற்சித்துள்ளார்.
வரலாற்றுக் கொடுமைகளைவிட நிகழ்காலத்து அழிவு என்னை வதைக்கிறது என்று பாலஸ்தீன் மீதான இஸ்ரேல் அடக்குமுறையை எதிர்த்துள்ளார். இது ஒரு ஹ்யானாவின் கதையாக மட்டும் இருக்கவில்லை. உலகின் உள்ள ஒவ்வொரு சிறுபான்மை மக்களின் கதை. மனிதர்களில்தான் மாற்றம். ஆனால் மாற்றமில்லாத அதே வலி, மரணம், பிரிவு, துன்பம்.
அன்று பற்றி எரிந்தது ஜெர்மனி, நின்று பார்த்தது உலகம். இன்று ஹிட்லர் எங்கே வேண்டுமென்றாலும் பிறக்கலாம். அமெரிக்காவில், ஜெர்மனியில், இஸ்ரேலில், ‘அகிம்சையே உயர்ந்த தர்மம்’ என்று முழங்கும் இந்தியாவில் கூட, ‘நம் நடுவில் எங்கு வேண்டுமென்றாலும் பிறக்கலாம்’, நமக்குள் பிறந்துவிடக் கூடிய ஹிட்லரைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையது’ என்ற நம்பிக்கையின் பின்னணியில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
நூல் ஆசிரியர் : நேமிசந்த்ரா
தமிழில் : கே.நல்லதம்பி
வெளியீடு : எதிர் வெளியீடு
விலை : ரூ.399
நூல் அறிமுகம் : தமிழ் இலக்கியா

சமூகசெயற்பாட்டாளர்.
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க