நசியா எரம் எழுதிய MOTHERING A MUSLIM – நூல் குறித்து தோழர் இ.பா. சிந்தன் சமூக வலைத்தளத்தில் ஆற்றிய உரையை மையப்படுத்தி :

ந்த ஒரு இனப்படுகொலையும் ஒரு சில வெறியர்களால் மட்டுமே சாத்தியமாகி விடுவதில்லை. பெரும்பான்மை மக்களின் மனதில் வெறியைப் புகுத்தி, அவர்களை வைத்தே நடத்த முடிந்தால்தான் எந்தவொரு இனப்படுகொலையும் சாத்தியப்படும். ஹிட்லர் காலத்தில் துவங்கி இன்றுவரையில் அதுதான் உலகெங்கிலும் நடந்து வந்திருக்கிறது.

இன்னமும் நம்முடைய குழந்தைகளுக்கு அரசியல் வேண்டாம் என்றும், ஒழுங்காகப் படித்து மதிப்பெண் வாங்கினாலே போதும் என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தால், இன்னொரு பக்கத்தில் அவர்களை இனப்படுகொலைக்குத் தயாராக்கிக் கொண்டிருக்கிறது இன்னொரு கும்பல்.

படிக்க :

ஹிஜாப் : பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் மதக் கலவரத் திட்டம் || மக்கள் அதிகாரம்

கர்நாடகா : கல்லூரியில் ஹிஜாப் அணியவும், உருது மொழி பேசவும் தடை !

இந்தியாவில் ஒரு இசுலாமியக் குழந்தையை வளர்ப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஒரு தாயாக நசியா எரம் எழுதிய “Mothering A Muslim” நூல் குறித்து முகநூலில் தோழர் இ.பா. சிந்தனின் நூல் திறனாய்வு உரையாற்றியுள்ளார்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்த முக்கியமான நூலைப் பற்றி இ.பா. சிந்தன் உணர்வுப்பூர்வமான ஒரு உரையைத் தந்துள்ளார்.

18 வயதுக்குட்பட்ட 40 கோடி குழந்தைகளின் உலகத்தைப் பற்றி நாம் பெரிதும் யோசிப்பதில்லை. ஆனால் அந்த உலகத்தில் பாசிச மதவெறி நஞ்சு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலும், குடும்பங்களிலும் எப்படி அணுஅணுவாக வளர்த்தெடுக்கப்படுகிறது என்பதை இந்த நூலைப் பற்றிய திறனாய்வில் குறிப்பிடுகிறார்.

முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அந்த பிஞ்சுக் குழந்தைகள் மதவெறி நஞ்சூட்டப்பட்ட மற்ற குழந்தைகளால் அவமானப்படுத்தப்படுகின்றனர். புறக்கணிக்கப்படுகின்றனர். தாக்கப்படுகின்றனர்.

85% முஸ்லீம் குழந்தைகள் தன் மதம் சார்ந்த காரணத்திற்காகவே ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஏ பாக்கிஸ்தானி, ஏ டெரரிஸ்ட், பாக்கிஸ்தானுக்குப் போ இந்த வார்த்தைகளெல்லாம் சர்வசாதாரணமாக பள்ளிகளில் புழங்குகிறது என்கிறார் நூலாசிரியர். சீக்கியர்களை அவமானப்படுத்த எப்படி சர்தார்ஜி ஜோக்ஸ் பயன்படுத்தப்பட்டதோ, தற்போது முஸ்லீம் ஜோக்ஸ் என்பது பள்ளிகளில் பிரபலம்.

ரைக்கா, ஒமர், சையது, ரஃபத், சமைரா, சாய்ரா இந்த குழந்தைகளின் அனுபவங்கள் எல்லாம் நம்மை அச்சம் கொள்ள வைக்கின்றன. இவற்றை நாம் இயல்பாக கடந்து சென்று விட முடியாது.

உங்கப்பா தலிபானில் இருக்கிறாரா?
உங்க அப்பா அம்மாவுக்கு வெடிகுண்டு செய்யத் தெரியுமா?
அவங்க கிட்ட பிரச்சினை வச்சுக்காத, உங்க மீது பாம் போட்டிருவான்.

இவையெல்லாம் ஜோக் என்ற பெயரில் பள்ளிகளில் (குறிப்பாக டெல்லி) ஆசிரியர்களும் மாணவர்களும் முஸ்லீம் குழந்தைகள் மீது இயல்பாக ஏவும் வன்முறைகள்.

நூலாசிரியர் குறிப்பாக குறிப்பிடுவது என்னவென்றால், பி.ஜே.பி 2014-ல் ஆட்சியைப் பிடித்ததில் இருந்துதான் இந்த அளவுக்கு மதவெறி குழந்தைகள் மத்தியிலும் சமூகமயமாக்கப்பட்டுள்ளது என்பதுதான்.

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் பாசிசம் எப்படிப் பற்றிப் படர்ந்திருக்கிறது என்பதையும், சமூகம் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதை நாம் உணராமல் இருப்பதையும் இந்த நூல் உணர்த்துகிறது. நம் நெஞ்சை உலுக்கும் இந்த உரையை அவசியம் கேளுங்கள்! வாய்ப்புள்ளவர்கள் இந்த ஆங்கில நூலை வாங்கிப் படியுங்கள் !

இனியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க