பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரான விசத்தை கக்குவதற்கு அடிப்படையாக இருந்த கலாச்சார மோதல் குறித்த கோல்வால்கரின் கருத்து

1939 -ல் This is We or Our Nationhood Defined (1939) என்ற நூலில், வரலாற்றின் முடிவுறாத மோதல் குறித்து கோல்வால்கர் எழுதுகிறார்:

விதி வசத்தால் போரின் அலையானது இப்போது இந்த பக்கமாக மாறுகிறது. ஆனாலும் இன்னும் போர் தொடர்கிறது. முடிவு எட்டப்படவில்லை

இந்த போரின் தலைவிதி எப்போதுவரை முடிவு செய்யப்படாமல் இருக்கும்? வெற்றியடையும் வரை தான். இறுதியாக முடிவு செய்யப்பட்டு தீர்க்கப்படும் போது தான் போரின் வெற்றி கிடைக்கிறது.

கோல்வால்கரிடம் அத்தகைய போரின் போக்கு தெளிவாகிறது:

இனத்தின் ஆன்மா விழித்தெழுந்து கொண்டிருக்கிறது. சிங்கம் சாகவில்லை, தூங்கிக்கொண்டிருந்தது. மீண்டும் தன்னைத்தானே அது கிளர்ச்சியடைய செய்கிறது. மீளுருவாக்கம் செய்யப்பட்ட இந்து தேசம் தன்னுடைய வலிமையால் எதிரியின் படையை வீழ்த்துவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது.”

இராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்) 1940 முதல் 1973 வரை வழிநடத்திய கோல்வால்கர், முடிவில்லாத ஒரு இனப்போரைக் கனவு காண்கிறார். அவர் இன உணர்வை வரையறுப்பதற்காக ஒரு விலங்கியல் உருவகத்தை தன்னுடைய இந்து தேச கருத்தாக்கத்துடன் இணைக்கிறார். எதிரியை ஒழிப்பதற்கு இனத்தின் ஆன்மா தூக்கம் கலைய வேண்டும். தற்செயலாக, கடந்த ஆண்டு சிகாகோவில் மோகன் பகவத்தின் சர்ச்சைக்குரிய உரையில் அதே சிங்க உருவகம் மீண்டும் எழுந்தது.

இத்தகைய இனப்போரை நடத்துவதற்கு தேவையான அடுத்தகட்ட நடவடிக்கையை கோல்வால்கர் கையிலெடுக்கிறார். மக்களாட்சியின் கருத்தாக்கத்தை அவர் தாக்குகிறார்: “மக்களாட்சியின் தவறான கருத்துக்கள் எங்களுக்கு தவறான பார்வையை கொடுத்தன. முன்னால் படையெடுப்பாளர்களுடனும் எதிரிகளுடனும் சேர்ந்து அயல்நாட்டார் சூட்டிய இந்தியன் என்ற பெயரில் எங்களை ஒரு வர்க்கமாக அடையாளப்படுத்தி கைகோர்த்துக் கொண்டு அவர்களை வெல்ல முயற்சித்தோம். இந்த விஷத்தின் விளைவினால் எதிரிகளை கூட நண்பர்களாக நம்புகின்ற நிலைக்கு நாங்களாகவே தள்ளப்பட்டோம். எங்கள் சொந்த கைகளாளேயே உண்மையான தேசியத்தை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம்”.

இந்தியராக இருப்பது – இந்த சொல் கிரேக்க சொற்பிறப்பியல் அடிப்படையிலானது, வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் அன்னியராக இருப்பது தான். அதாவது ஒருவரின் இன அடையாளத்தை இழப்பது என்பதே இதன் பொருள். கோல்வால்கரைப் பொறுத்தவரை, நட்பு அரசியலை ஊக்குவிக்கும் வரை மக்களாட்சி என்பது தவறான கருத்தாகும். இந்த நட்பு ‘நச்சு’ போன்றது. ஏனெனில் இது போர் செய்வதற்கான வெறித்தனத்தை பலவீனப்படுத்துகிறது. போரை நம்புபவர்களுக்கு நண்பர்கள் கிடையாது.

படிக்க:
♦ பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !
♦ நீலச்சட்டை பேரணி – சாதி ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்கள் !

மக்களாட்சி குறித்த ஐயங்களை எழுப்பிய கோல்வால்கர் சிறுபான்மையினர் என்ற கருத்தை நோக்கி திரும்புகிறார். லீக் ஆஃப் நேஷனில் (League of Nations) இருந்து மேற்கோள் காட்டுகிறார்:

“சிறுபான்மையினர் – ‘ஒரு தேசத்தின் உடலில் இணைக்கப்பட்ட வர்க்கம்‘.  ‘இனம், மதம் மற்றும் மொழி அடிப்படையில் பெரும்பான்மையான மக்களிடமிருந்து வேறுபடும் குடிமக்கள் தாம் சிறுபான்மையினர் என்றழைக்கப்படுகிறார்கள்என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு தேசத்திற்கும் அதன் சொந்த தேசிய இனம், மதம் மற்றும் மொழி கட்டாயம் இருக்க வேண்டும் (கலாச்சாரம் தனியாக குறிப்பிட தேவையில்லை. இனம், மதம் மற்றும் மொழி ஆகியவற்றைக் குறிப்பிடும் போது அது மறைமுகமாக உள்ளது.) ”

“குடிமகன்” என்ற சொல்லை நிராகரித்து, சிறுபான்மையினர் – வெளிநாட்டினர், அல்லது வெளியிலிருந்து வந்தவர்கள், தேசிய அரசியலில் அவர்கள் பங்கேற்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள, “இணைக்கப்பட்ட” என்ற சொல்லில் கோல்வால்கர் கவனம் செலுத்துகிறார். அவரைப் பொறுத்தவரை, தேசத்தின் மகத்தான, தனித்துவமான கருத்தாக்கத்தை சிறுபான்மையினர் பிளவுபடுத்துகிறார்கள்.

“ஜெர்மனியர்கள் பரம்பரையாக வைத்திருந்த, அரசியல் மோதல்களால் பிரிக்கப்பட்ட தேசத்தின் பகுதிகளை ஒரு குடையின் கீழ் மீண்டும் கொண்டுவர நவீன ஜெர்மனி முயன்றது.” என்று நாஜி ஜெர்மனியை கோல்வால்கர் புகழ்ந்துரைக்கிறார்.

தேசிய நிலப்பகுதி என்பது இன பாரம்பரியம் குறித்த ஒரு விடயமாகும். பேரரசுக்கான ஒரு நவீனகால கருத்தாக்கத்தால் அதன் வரலாறு தீர்மானிக்கப்படுகிறது. உண்மையில், வரலாறு பற்றிய கருத்தாக்கமே ஒரு போலி வரலாறு. இங்கு வரலாறு என்பது இன வரலாற்றின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது. நவீன தேசிய அரசு என்கின்ற கருத்தாக்கத்திற்கு முன்னர் ஜெர்மனியாகவோ இந்தியாவாகவோ இருந்தவை தான் கோல்வால்கரின் கூற்றுப்படி உண்மையான தேசிய நிலப்பகுதி. “ஒரு தேசமாக இருக்கவோ வாழவோ மக்களுக்கு ஒரு பாரம்பரிய நிலப்பகுதி இருப்பது இன்றியமையாதது” என்று கோல்வால்கர் வலியுறுத்துகிறார்,

இன கருத்தாக்கத்தை சுற்றி பாரம்பரிய கருத்தாக்கம் எப்படி பிணைக்கப்பட்டுள்ளது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. அவர் கூறும்போது இது மேலும் தெளிவாகிறது: “வேர்மட்ட அளவில் வேறுபாடுகள் கொண்ட இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் முழுமையாய் ஒன்றிணைக்கப்படுவது சாத்தியமற்றது என்ற ஜெர்மனியின் அனுபவம் இந்துஸ்தானில் நாம் கற்றுக்கொண்டு ஆதாயமடைய ஒரு நல்ல பாடம். இனவெறி அடிப்படையில் கலாச்சாரம் புரிந்து கொள்ளப்படுகிறது. இனவெறி எல்லைகளுக்கு வெளியே கலாச்சார ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை. கோல்வால்கரின் கலாச்சாரம் பற்றிய கருத்து கண்டிப்பாக பிரிவினைவாத அடிப்படையிலானது.

நேரு மற்றும் தாகூரின் அணுகுமுறை:

இதற்கு மாறாக, டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் ஜவஹர்லால் நேரு எழுதுகிறார்:

“பவுத்தரோ அல்லது சமணரோ இந்திய சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் நூறு விழுக்காட்டு படைப்பாகும். இருப்பினும் நம்பிக்கை அடிப்படையில் அவர்கள் இந்து கிடையாது. எனவே, இந்திய கலாச்சாரத்தை இந்து கலாச்சாரம் என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. பிற்காலத்தில் இந்த கலாச்சாரத்தின் மீது இஸ்லாம் பெரிதாக செல்வாக்கு செலுத்திய அதே சமயத்தில் இந்தியாவின் ஒரு தனித்துவமாக அடையாளமாகவும் அது இருந்தது ”.

படிக்க:
♦ கொல்கத்தா : ஒரு மாதமாக பெண்கள் தலைமையில் தொடரும் போராட்டம் !
♦ சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !

இங்கே நேரு கலாச்சாரத்தையும் தேசத்தையும் தொடர்புபடுத்த முயற்சிக்கிறார். ஆனால் இது கோல்வால்கருக்கு முற்றிலும் எதிரானது. தேசிய கலாச்சாரத்தை வரையறுக்க இனம் அல்லது மதத்தை உருவாக்குவதற்கு பதிலாக, இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையாக பல்வேறு மதங்களின் வரலாறு மற்றும் இருப்பை நேரு பொருத்துகிறார். நேரு எளிமையான ஒரு வரலாற்று உண்மையை வரையறுக்கிறார்: இந்து என்பவர் ஒரு இந்தியர், ஆனால் இந்தியர் என்பவர் இந்து மட்டுமல்ல. பவுத்தமும், சமணமும், இஸ்லாத்தைப் போலவே இந்தியாவில் தனித்துவமாக உள்ளன.

இந்தியாவில் இஸ்லாத்தின் தனித்துவம் என்பது மற்ற மதங்களுடனான மோதல் காரணமாக உருவானதாகும். இந்த சந்திப்பு போர்களை உருவாக்கியது மட்டுமல்லாமல் கலாச்சாரத்தையும் உருவாக்கியது. கோல்வால்கர் போரில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு கலாச்சாரத்தை மறுக்கிறார்.

கோல்வால்கரிடமிருந்து வேறுபடும் இரவீந்திரநாத் தாகூரரையும் இங்கே எடுத்துக் கொள்வோம். ‘இந்திய கலாச்சாரத்தின் மையம் (The Centre of Indian Culture)’என்கின்ற தனது கட்டுரையில் அவர் எழுதுகிறார்:

நவீன ஐரோப்பிய கலாச்சாரத்தின் உண்மையும் வலிமையும் அதன் நீரோட்டமான இயக்கத்தில் உள்ளது. அது [தேசியம் குறித்த] அனைத்து சிக்கல்களும் கடுமையாக சரி செய்யப்பட்டு நம்மிடம் வருகிறது. அவற்றின் தெய்வீக தோற்றம் காரணமாக கிட்டத்தட்ட நம்முடைய சொந்த சாத்திரங்களைப் போலவே நம் மனம் எதிர்பில்லாத முறையில் விமர்சனமின்றி இருக்க வேண்டும்.”

பாரம்பரிய அறிவின் கெட்டித்தன்மைக்கு மாறாக, கலாச்சாரத்தின் இந்த இலகிய தன்மையை தாகூர் வரவேற்கிறார். அதே கட்டுரையில், அவர் கலாச்சாரத்தை “மனதின் வாழ்க்கை” என்று வரையறுக்கிறார்.

மனதுக்கும் இனத்துக்கும் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. இனம் என்பது ஒரு உயிரியல் கருத்தாக்கம். இது நிறம் பற்றிய கருத்தாக்கமாகும். இது ஓரளவு மற்ற (இனரீதியாக வேறுபட்ட) மக்களின் நிற ரீதியிலான பாரபட்சமான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. மனம் என்பது ஒருவரின் இன அடையாளத்துடன் முற்றிலும் அடையாளம் காண முடியாத – அல்லது தாழ்ந்து போகாத சிந்தனை மற்றும் அனுபவத்தின் கலவையாகும். உடல் அனுபவிப்பதை மனம் செயலாக்குகிறது, மேலும் அதைப் எதிரொளிக்கிறது. மனதின் வாழ்க்கை, பல வழிகளில், கலாச்சாரத்தின் வாழ்க்கையை குறிக்கிறது. மனமும் உடலும், எதிரொளிப்பு மற்றும் அனுபவமாக நமது கலாச்சார நினைவகத்தின் ஒரு பகுதியாகும். இதிலிருந்து தான் இனக் கோட்பாடுகள், வரலாற்று மற்றும் கலாச்சார மோதல்களிலிருந்து எடுக்கப்பட்ட மிகைப்படுத்தல்களின் அடிப்படையில் வேற்றுமையை உருவாக்கி, (மற்றவரின்) அறிவையே போராக மாற்றுகின்றன.

“நவீன கலாச்சாரம் குறித்த நம்முடைய கருத்து என்பது இலக்கண மற்றும் ஆய்வக எல்லைக் கோடுகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்ற புலனுணர்வு அல்லது பகுத்தறிவு அவதானிப்பை கட்டுரையில் தாகூர் உருவாக்குகிறார். இதற்கு நவீன இனவெறி மொழியைச் சுற்றியுள்ள இரண்டு முதன்மையான சொற்களை அவர் பயன்படுத்துகிறார்: இலக்கணம் மற்றும் ஆய்வகம். இலக்கணம் ஒரு மொழியின் விதிகளை வரையறுக்கிறது. ஆனால் மொழி குறித்தான ஒரு விஞ்ஞான கருத்தாக்கத்தை தூய்மை அடிப்படையில் உருவாக்க அதன் இலக்கணம் பயன்படுத்தப்படும்போது, ​​மொழியின் திறந்த மற்றும் உயிர்ப்புத்தன்மை ஒரு குடுவையில் அடைபடுகிறது. ஒரு ஆய்வகத்தில், மொழியின் விஞ்ஞான விதிகள் ஒரு கோட்பாட்டை உருவாக்க பயன்படுத்தப்படும் போது தர்க்கம், இனமாக தாழ்த்தப்படுகிறது.

படிக்க:
♦ ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு !
♦ கேள்வி பதில் : முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன ?

இவை அனைத்தும் கலாச்சாரம் என்ற கருத்தை எவ்வாறு பாதிக்கின்றன?

நேரு மற்றும் தாகூரைப் பொறுத்தவரை, கலாச்சாரம் என்பது பாரம்பரியம் மற்றும் வரலாறு ஆகிய இரண்டின் எல்லைகளை தாண்டுகிறது. கோல்வால்கரைப் பொறுத்தவரை, பாரம்பரியம் என்பது மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றை சேர்ந்தார் போல் குறிக்கும் ஒரு சொல். இது இன வேறுபாட்டை வரையறுக்கிறது. தாகூர் மற்றும் நேருவின் பார்வையில், கலாச்சாரம் என்பது போரை கடந்த ஒன்று. அதாவது, இரு தரப்பினரும் வன்முறையில் ஒருவரையொருவர் எதிர்கொண்ட பிறகு, கலாச்சாரம் எஞ்சியிருக்கிறது. கலாச்சாரம் என்பது வன்முறை வரலாற்றில் எஞ்சியதாகும்.

வரலாற்றில் மிச்ச மீதி இருந்த வன்முறை பற்றிய கருத்தை தக்கவைத்துக்கொள்வதே கலாச்சாரத்தின் பணி என்று கோல்வால்கர் நம்புகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காலாச்சாரத்தை எது அழித்ததோ அதற்கே மீண்டும் கொண்டு செல்ல விரும்புகிறார். கோல்வால்கரின் பணி முரண்பாடானது, ஆபத்தானது மற்றும் துன்பமானது. அவர் போர் குறித்தான கருத்தால் கலாச்சாரத்தை வரையறுத்து பாதுகாக்கிறார்.

சிறுபான்மையினர்களுக்கு எதிரான நிரந்தர கலாச்சார போர்:

1975 மற்றும் 1976 க்கு இடையில், “கட்டாயமாக சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும் (Society Must Be Defended)” என்ற தன்னுடைய கவர்ச்சிகரமான தொடர் சொற்பொழிவுகளின் மூலம் 17 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே போர் என்ற கருத்தானது அனைத்து அதிகார நிறுவனங்களையும் வரையறுப்பதாக பிரெஞ்சு சிந்தனையாளரான மைக்கேல் ஃபோக்கால்ட்(Michel Foucault) குறிப்பிடுகிறார். போரை உருவாக்கும் மனநிலையைப் பற்றிய ஃபோக்கோவின் விளக்கம் கோல்வால்கருக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதைக் காட்ட சில முதன்மையான பத்திகளை அவரது உரையிலிருந்து பார்க்கலாம்.

மைக்கேல் ஃபோக்கால்ட்

(ஒரு சமூகத்தின்) சட்டத்திற்கு எதிராக மத்தியக்காலத்தில் போருக்கு முன்னுரிமை அளித்த அதிகாரத்தின் இரு கட்டமைப்பு தோற்றம் பற்றி பேசுகையில், ஃபோக்கோ தன்னுடைய மனநிலையைத் திறக்கிறார்:

“வேறுவிதமாகக் கூறினால், எங்களை எதிர்கொள்ளும் எதிரிகள் இன்னும் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். மேலும் நல்லிணக்கமோ அல்லது சமாதானமோ எதுவும் போரை முடிவுக்கு கொண்டு வராது. நாங்கள் உண்மையில் வெற்றியாளர்களானால் மட்டுமே இது முடிவடையும். ”

இதேபோன்ற, 17 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய மனநிலையை கோல்வால்கரும் எதிரொலிக்கிறார். கலாச்சாரத்தின் இனரீதியான கருத்தை மத சிறுபான்மையினருக்கு எதிரான நிரந்தரப் போரில் ஈடுபடுவதாக மாற்றியுள்ளார். நீங்கள் போரை நம்பினால், அமைதி என்பது உண்மையற்றது மட்டுமல்ல, விரும்பத்தகாததும் கூட என்கிறார்.

போர் ஒரு கொள்கை என்பதால் அது அரசின் சித்தாந்தத்திலிருந்துதான் வர வேண்டும். போரை நம்பும் பாசிச அரசு, எதிரிகளாக கற்பனை செய்யும் அனைவருடனும் போரில் ஈடுபடும் ஒரு அரசாகும். சிறுபான்மையினர் அரசியல் உரிமைகளை கோரும் தகுதியுடையவர்களாக இருப்பதால் “சிறுபான்மையினர்” என்ற சொல்லை அத்தகைய ஒரு அரசு விரும்பவில்லை.

கோல்வால்கர் விளக்கியபடி, “நாங்கள் தேசிய மீளுருவாக்கம் செய்ய நிற்கிறோம், ஆனால் அரசியல் உரிமைகள் எனும் இடையூறுகளாலான அரசுக்கு அல்ல”. மறைமுகமான வாதம் என்னவென்றால், பெரும்பான்மை சமூகத்தின் மறுசீரமைக்கப்பட்ட பாரம்பரிய பெருமைகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய மீளுருவாக்கமானது சிறுபான்மையினர் உரிமைகள் பற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால் இதன் பொருள் இன்னும் அதிகமாக இருக்கும் .

படிக்க:
♦ பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் ?
♦ மகஇக அதிரடி – சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை ! கோல்வால்கருக்கு செருப்படி !

“சமூகம் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும்” சொற்பொழிவில் போர் சித்தாந்தவாதிகளை ஃபோக்கோ விளக்குகிறார் : தேசம் இனி காட்டுமிராண்டித்தனமான மற்றும் போர்க்குணமிக்க உறவுகளில் பங்காளியாக இருக்காது. தேசம் என்பது அரசின் செயல் வடிவமிக்க உறுதியான மையமாகும். தேசம் என்பதே அரசு, அல்லது குறைந்தபட்சம் அரசுக்கான வடிவமாக இருக்கும்”.

இந்து ராஷ்டிரம் என்பது அரசின் இடத்தில் தேசத்தை வைக்கும் இந்த கருத்துக்கு ஒப்பானது. ஒரு அரசாக அது மாற முற்படுகிறது. உறுதியான சொற்களில் சொல்வதானால், அரசை போன்ற செயல்பாடுகளை கொண்ட விழிப்புணர்வு படைத்த சமூகம் இது. இந்த இடத்தில் தான் சமூகம் என்ற கருத்திற்கு ஆபத்து வருகிறது. சமூகம் ஒரு நிறுவனமாக கருதப்பட்டால், அதன் முக்கிய வரலாற்று நோக்கம் அதனுள்ளேயே போர் நடத்துவதுதானென்றால் சமூகம் என்ற கருத்தே இங்கே அழிக்கப்படுகிறது.

மக்களாட்சி என்ற கருத்தின் மூலம் இந்து தேசத்திற்கான தேவையை நீர்த்துப்போகச் செய்ததற்காக இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவனர்களை கோல்வால்கர் கடிந்துகொள்கிறார்: “… இந்த நாட்டில் ஒரு “உண்மையான” மக்களாட்சியை உருவாக்குவதற்கான நம்முடைய காட்டு வாத்து துரத்தலில், [நாங்கள்] நமது உண்மையான இந்து தேசத்தின் பார்வையை முற்றிலுமாக இழந்துவிட்டோம்”.

கோல்வால்கரைப் பொறுத்தவரை மக்களாட்சி என்பது பிடிபடாமல் உள்ள அதே நேரத்தில் ஒரு இந்து தேசம் அவரை பொருத்த வரையில் சாத்தியமானது மற்றும் விரும்பத்தக்கதாக உள்ளது. ஒரு மக்களாட்சியை விட ஒரு மதவாத அரசு (இந்து ராஷ்டிரா) என்ற கருத்தை அவர் விரும்புகிறார். ஒரு மக்களாட்சியின் விருப்பம் ஏன் ஒரு காட்டு வாத்து துரத்தல் என்பதற்கான காரணங்களை அவர் முன்வைக்கவில்லை. ஆனால் இந்து ராஷ்டிரத்தை அடைவதில் இருந்து ஒரு மக்களாட்சி விலகுகிறது என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார். சமுதாயத்தின் (மக்களாட்சி) நிர்வாகத்தை விட அல்லது நமது சமூக மற்றும் மத வேறுபாடுகளை விட ஒரு நாடு போரை நிர்வகிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்கிறார்.

கோல்வால்கரைப் பொறுத்தவரை, எதிரியை பெயரிட்டு அழைக்க ஜனநாயக அரசுக்கு ஆண்மை இல்லை. “எங்களது இன ஆன்மாவை தூங்க விட்டதாக” இந்திய தேசிய காங்கிரஸை அவர் குற்றம் சாட்டினார். அவரைப் பொறுத்தவரை, இது “நம்முடைய தற்போதைய மகிழ்ச்சியற்ற நிலைக்கு மூலக்காரணியாக இருந்து வருகிறது…. நம்முடைய அக்கறையற்ற எதிரிகளை கட்டிப்பிடிப்பதன் மூலம், நம்முடைய இருப்புக்கு ஆபத்தை விளைவிப்பதற்கும் காரணம் இதுவே”. எதிரிகளை நாட்டை விட்டு வெளியேற்ற மக்களாட்சியை கண்டிப்பாக ஒழிக்க வேண்டும் என்பதே நம்முடைய அரசியல் தர்க்கமாக இருக்க வேண்டும்.

தேசத்தை தேடி: இந்தியாவின் மற்றொரு சிந்தனையை நோக்கி (Looking for the Nation: Towards Another Idea of India) என்ற நூலின் ஆசிரியர் எம் அ நாஷ் ஃபிராக் பட்டாச்சார்ஜி (M​a​​nash Firaq Bhattacharjee). இது Speaking Tiger Books வெளியீட்டாளர்களால் 2018, ஆகஸ்டில் வெளியிடப்பட்டது.


கட்டுரையாளர் : Manash Firaq Bhattacharjee
தமிழாக்கம் : 
சுகுமார்
நன்றி :  தி வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க