ந்திய நகரங்களில் எழும்பி நிற்கும் வானுயர்ந்த கட்டிடங்கள் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையை காண்பிக்கின்றன என்று மோடி அரசு மார்தட்டிக் கொள்கிறது. முன்னோர்கள் கூறியதுபோல் “ஒரு வீட்டின் அழகை அவன் வீட்டின் முன்புறம் பாக்காதே! கொள்ளைப்புறம் பார்” என்பது போல இந்தியாவின் வளர்ச்சியை முன்பக்கம் வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களைக் கொண்டு பார்க்க முடியாது. பின்பக்கமுள்ள சேரிகளின் உண்மை நிலையை வைத்துத் தான் பார்க்கவேண்டும். அதன் பரிமாணம் வேறொன்றாக உள்ளது.
பெரும்பணக்காரர்கள் வானுயர்ந்த கட்டிடங்களில் கொண்டாட்ட நிலையில் இருக்கும்போது, ஏழை மக்களோ ‘ஒருவேளை சோத்துக்கும், குந்தி இருக்க ஒரு குடிசைக்க்கும்கூட வழி இல்லாத நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
அப்துல் கலாம் 2020-ல் இந்தியா வல்லரசாக இளைஞர்களை கனவு காணச் சொன்னார். இன்றைக்கோ கனவுகள் அனைத்தும் பொய்த்துப்போய் ஓட்டைவிழுந்த குடிசையில் சோறு கிடைக்காமல், கல்வி, வேலைவாய்ப்பு இல்லாமல் பல கோடி இளைஞர்களை நிர்க்கதியாக்கபட்டதே நடைமுறை எதார்த்த உண்மை. நம்மால் கனவு மட்டுமே காணமுடியும். முதலாளிகள் ஏற்கெனவே கூறுவதுபோல ‘ஏழை மக்கள் பூமிக்கு தேவை இல்லாதவர்கள்’ என்பதை உண்மையாக்க 2019-ல் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை கொண்டுவந்து ஏழை மக்களின் குடியிருப்புகளை – சேரிகளை நகரத்தில் இருந்து அப்புறபடுத்திக்கொண்டிருக்கிறது, அரசு.
படிக்க :
PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்
பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !
ஏதோ மக்கள் நலனுக்காக அரசால் கொண்டுவரப்படும் திட்டங்கள் போலத் தோன்றும் பல திட்டங்கள் ஆளும்வர்க்க நலனுக்கான திட்டங்களாவே உள்ளன. அத்தகையதொரு கவர்ச்சிகரமான மாய சிலந்திவலைத் திட்டம்தான் ஏழைகளுக்கான வீடு கட்டிதரும், “பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம்” (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா).
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் :
காங்கிரஸ் ஆட்சி ஏழை மக்களுக்கு வீடுகட்டி தரப்போவதாக 1985-1986-ல் “இந்திரா ஆவாஷ் யோஜனா” என்ற திட்டதை கொண்டு வந்தது. 2015-ல் பாசிச பாஜக ஆட்சியில் இத்திட்டதில் சிறிது மாற்றத்தை கொண்டுவந்தது. அரசால் மானியமாக கொடுக்கப்பட்ட தொகை 1,20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் 2019 வரை 83.63 லட்சம் வீடுகளுக்கு  ஒப்புதல் வழங்கபட்டு, 26.08 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கபட்டுள்ளன என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான மொத்த தொகையான ரூ.4,95,838 கோடியில், தற்போது வரை 5144.5 கோடி மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2022க்குள் 2 கோடி வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. இத்திட்டதுக்கான தொகையில் மத்திய, மாநில அரசுகள் பங்கீடு செய்கின்றன அவை.
2019-2020 வரை ரூ.1,20,000-ஐ மானியமாக வழங்கிய அரசு, 2021-2022 ஆண்டு 1,70,000 ரூபாயாக உயர்த்தியது. அரசு கொடுக்கும் இந்த தொகை நான்கு கட்டங்களாக வங்கிகணக்கில் போடப்படுகிறது. இதற்கான வீட்டின் அளவு 269 சதுர அடிக்கு மேல் இருக்கலாமென கூறியுள்ளது. கழிவறைக்கான தொகையாக 12,000 ரூபாயும் கொடுக்கப்படுகிறது. ஒரு சதுர அடிக்கு ரூ.1500 செலவாகும் என்று வைத்து கொண்டாலும் ஒரு வீட்டை கட்டி முடிக்க (269×1500= 4,03500) 4,035,000 ரூபாய் செலவாகும். இதிலிருந்து ஒரு கேள்வி எழலாம், இப்போழுது உள்ள சிமெண்ட், கம்பி, மணல், இதர பொருட்கள் விலை ஏற்றம் இருந்தாலும் ஏழை மக்கள் ஏன் இத்திட்டத்தின் ‘பயனாளி’ ஆகிறார்கள் என்று?
மக்கள் இத்திட்டத்தை விரும்ப காரணம்?
இத் திட்டம் முதலில் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள, வாழ்நாள் லட்சியங்களில் ஒன்றான, “சொந்த வீடு வேண்டும்” என்ற ஆசையை இலக்காக்கி தமது வலையில் ஆளும் வர்க்கம் விழ வைக்கிறது. இதை புரியாமல் அரசு கொடுக்கும் அற்ப தொகையை வைத்து வீடு கட்டிவிடலாம் என்று நினைத்து, “நாமும் இறப்பதற்குள் நல்ல வீட்டில் வாழ்ந்து விடலாம்” என்ற கனவில் வீட்டை கட்ட ஆரம்பிக்கும் போதுதான் உண்மை நிலை தெரிய வருகிறது. இத்திட்டம் நமக்கு ‘மயிரை கட்டி மலையை இழுப்பது போன்றது’ என்பதை புரிந்துக்கொள்கிறார்கள்.
அரசின் இச்செயல் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தில் “ஒருவரை ஏமாற்றுவதற்கு அவனிடம் கருணையை எதிர்பார்க்க கூடாது, அவரது ஆசையை தூண்ட வேண்டும்” வரும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வீடு கட்ட ஆரம்பித்த பிறகு ஏற்படும் பிரச்சினைகள் மக்களை கல்லை கட்டி கிணற்றில் தள்ளுவது போன்றதாகவே உள்ளது.
வழிபறி கொள்ளையர்கள்:
வீடு கட்டத் தொடங்கிய பிறகு அரசு அதிகாரியான கட்டிட பொறியாளர் அல்லது மேற்பார்வையாளர் (overseer) வந்து பார்வை இடுவார். அவருக்கு கப்பம் கட்டினால்தான் நமது வங்கிகணக்கில் தொகை போடப்படும். அப்படி ஒவ்வொருமுறை வங்கிக் கணக்கில் பணம் போடும்போதும் ‘மேற்படி’ செய்ய வேண்டியதை முறைப்படி செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் லோக்கல் அரசியல்வாதிகள், கணினி இயக்குபவர் என லஞ்சம் வாங்குபவர்களின் கணக்கு நீண்டுகொண்டே போகும். பஞ்சாயத்து தலைவர் போன்றோர் தன்னுடைய போலி கணக்கில் வீடு வாங்கி, தன்னுடைய வீட்டை விரிவுபடுத்துவதும் இன்னொரு பக்கம் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.
கடனில் சிக்கவைக்கப்படும் மக்கள்:
வீடுகட்ட தொடங்கும் மக்கள் இதற்காக குடும்ப உறுப்பினர்கள் உட்பட முழு உழைப்பையும் கொட்டினாலும், தப்பித்தவறி வீட்டில் மீதமிருக்கும் நகைகளை விற்றாலும் வீட்டைக் கட்டி முடிக்க இயலவில்லை. அதற்காக கடன் வாங்குகின்றனர், வங்கிக் கடன், நுண் கடன், கந்து வட்டிக் கடன் என எல்லா கடன்களையும் வாங்கிவிட்டு, வீட்டையும் கட்டி முடிக்க முடியாமல், வாங்கிய கடனையும் கட்ட முடியாமல் மன உளைச்சலில் சிலபேர் தற்கொலை செய்கின்றனர். எத்தனை கொடூரம் இது? தற்போதுள்ள நிலையில்லாத வேலையும், குறைந்த அற்ப கூலியும், அவர்களின் அன்றாடம் தேவைகளுக்கே போதவில்லை. கடனை அடைக்க மீண்டும், மீண்டும் கடன் வாங்குவது என்று புதைச்சேற்றில் சிக்கவைக்கப்படுகிறார்கள். இதனால் குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள், மன உளைச்சல்கள் வேறு.
வீட்டை கட்டி முடித்தாலும் நிம்மதி இழந்த வாழ்க்கை :
தொடர்ந்து வீட்டுக்காக கடன் வாங்குவாதல் ஏழை மாணவர்கள் முதலில் விடுமுறை நாட்களிலும் பிறகு பள்ளி, கல்லூரிக்கு விடுப்பு எடுத்து, வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டால், அதுவும் கடுமையான நோய் ஏற்பட்டால், குடும்பமே ஸ்தம்பித்து விடுகிறது. பாதி கட்டி முடிக்கப்படாமல் காட்சியளிக்கும் வீடோ, நான்கு சுவர்களோ, ஒவ்வொரு கணமும் வேதனையில் ஆழ்த்துகிறது. வீடு கட்டி முடிக்க 3-லிருந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. இவற்றையும் மீறி கட்டி முடிக்கபட்டாலும் கடன் சுமைலிருந்து மீளமுடியாமல் நிம்மதியை இழக்க வைக்கிறது.
இத்திட்டம் கிராமங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு விட்டதா?
இத்திட்டதின் மூலம் கூரை வீடுகள் ஒழிக்கப்படும் என்று காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசு கூறுகிறது. உண்மைதான் உண்மையாகவே கூரைகள் அழிந்து வருகின்றன. ஆனால் கான்கிரீட் வீட்டுக்கு பதிலாக தார்பாய் வீடுகளாக மாறிவருகின்றன. விவசாயம் அழிவு, வேலையின்மை காரணமாக அன்றாடம் கூலியைக்கூட ஈட்ட முடியாமல், வாங்கும் சக்தி குறைந்து அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தவே முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.
வீட்டின் கூரை மாற்ற ரூ.10,000 வரை செலவு ஆகும் என்பதால் அவ்வளவு தொகை செலவிடமுடியாமல், அதற்கு மாற்றாக தார்பாயை தேர்ந்தெடுத்து உள்ளனர். இதன் விலையோ ரூ.2,000 ஆகும். இரண்டுமே குறைந்தது ஒரிரு ஆண்டுகள் உழைக்கும் என்பதால் தார்பாயி மூலம் கூரையை மறைக்க வேண்டியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
கிராமங்களின் நிலை இது என்றால் நகரங்களில் ஏழை மக்களின் நிலை வெறும் தகரக் கொட்டகையாக மாறிவருகிறது. தார்பாய், தகரம் இரண்டிலேயும் வெயில் காலங்களில் வீட்டிற்குள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு  வெப்பம் அதிகமாக இருக்கும். தார்பாய் வீடுகளில் மழைக்காலங்களில் தரையில் ஓதம் (ஈரம்) ஏறும் என்று கூறுகின்றனர். இவ்வாறு நகர, கிராம ஏழை மக்கள் வாழவே முடியாத நிலையில் நிற்கின்றனர்.
இத்திட்டத்தின் பின்புலம்:
1970-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தம் காரணமாக ஒவ்வொரு நாட்டிலும், வல்லரசு நாடுகளின் வலியுறுத்தலுக்கு இணங்க, அந்நாடுகளின் அரசால் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் ஒன்று தான் 1985-1986-ல் கொண்டுவரப்பட்ட இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டம்.
மீண்டும் 2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் மீள முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்டது. இதனால் பல்வேறு துறைகள் திவால் நிலைக்கு சென்றன. இதில் கட்டுமான துறைகள் மட்டும் தப்புமா என்ன?  இந்நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் முதலாளித்துவம் அழுகி நாறிக்கொண்டு இருக்கிறது. இதன் விளைவாக 2010-ல் இருந்து கட்டுமானத் துறையை மீட்டெடுக்க பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவந்தது. இதில் ஏழைகளுக்கான வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் நிதியை அதிகப்படுத்துதல் மூலம் அதிக வீடு கட்ட அனுமதி வழங்கியது.
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் குறைவான எண்ணிக்கையில் அனுமதி கொடுக்கப்பட்டது, பிஜேபி மோடி அரசு 2016-ல் திட்டதின் பெயரை மாற்றி “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” என்று வீடுகளின் எண்ணிக்கையையும்  நிதியையும் அதிகரித்து செயல்படுத்தி வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகமான உற்பத்தியாலும், மக்களின் உழைப்பை அதிகமாக சுரண்டியதாலும் மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது. இதனால் கட்டுமான பொருட்களை தயாரிக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் ஏற்பட்டது. இதனை மீட்டெடுக்க கொண்டுவரப்பட்டதே இத்திட்டம்.
மக்களின் வரி பணத்தில் அம்பானி, ஆதானி, டால்மியா, டாடா தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கொட்டிக் கொடுக்கிறது மோடி அரசு. அன்றாடம் உழைக்கும் மக்களின் உழைப்பையும், பணத்தையும் அவர்கள் சேமித்து வைத்து இருக்கும் அற்ப பணத்தையும், நகைகளையும் பிடுங்கி பெருமுதலாளிகளுக்குக் கொடுக்கின்றது.
பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களையும் அவற்றின் நலனுக்காக செயல்படும் காவிக் கும்பலையும் வீழ்த்த மக்கள் அமைப்பாய் திரள்வதே இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
படிக்க :
ஜன் தன் யோஜனா – திருட வாரான் வீட்டு கஜானா!
ஜார்கண்ட் : தொடரும் இந்திய அரசின் பட்டினிப் படுகொலைகள் !
மோடியின் வழியில் ஸ்டாலின் :
தமிழக அரசு 2031க்குள் தமிழகத்தை “குடிசையில்லாத மாநிலமாக” மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏழை மக்களுக்கு 9.53 லட்சம் வீடுகள் கட்டித்தரப்போவதாக அறிவித்துள்ளது. வேளாண்மைக்குப் பிறகு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதும் மற்றும் அதிக வருவாய் ஈட்டிக்கொடுப்பதுமான கட்டுமானத்துறையை மேம்படுத்தப்போவதாகவும், முதல்கட்டமாக 6.2 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்போவதாக கூறியுள்ளது.
மோடியும் ஸ்டாலினும் கார்ப்பரேட் நலனுக்கான கொள்கையையே நடைமுறைப்படுத்தி வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே. எனினும் பாஜக கும்பல் ஆளும் வர்க்கத்தின் “ஆகப் பிற்போக்கான” பிரிவை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. திமுக போன்ற கட்சிகள் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவை பிரதிநிதித்துவ படுத்துகின்றனவா, ஒருவேளை அவ்வாறு பிரதிநிதித்துவபடுத்தி வளர்ந்து வரும்போது ஆளும் வர்க்கத்தினரிடம் எந்தளவுக்கு முரண்பாடு வெடிக்கும், இவை பாசிசத்தை எதிர்ப்பதற்கான ஐக்கிய முன்னணியில் இணையும் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவாக இருக்குமா என்பதற்கு வரும்காலம்தான் பதிலளிக்கும்.
எது எப்படி இருந்தாலும், பாசிசத்தின் அடிநாதமாக இருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றிய மோடி அரசும், தமிழ்நாட்டின் ஸ்டாலின் அரசும் செய்துவரும் கார்ப்பரேட் சேவையை அம்பலப்படுத்துவதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
வினவு செய்திப் பிரிவு
கந்தசாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க