ரேசன் அட்டைகள் இல்லாவிட்டாலும் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவேன் என்று கூறிய டெல்லி அரசு, அட்டைகள் இல்லாத மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கவில்லை என்றும் அது வெறும் வாய்ச்சவடால் என்று உணவு உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லியில் உள்ள மொத்தம் 282 பள்ளிக் கூடங்கள் ரேஷன் விநியோக மையங்களாக கடந்த ஜனவரி 11 முதல் 13-ம் தேதி வரை செயல்பட்டன. இதில் 62 மையங்களில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கான உணவுப் பொருட்கள் விநியோகம் குறித்து டெல்லி வாழ்வாதாரம் மற்றும் உணவுக்கான அதிகார திட்டம் (DRRAA) என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வு நடத்தபட்ட 62 மையங்களிலும் எந்த உணவு தானியங்களும் இல்லை என்றும் இவ்விடங்களில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப் படவில்லை என்று DRRAA கூறியுள்ளது. தன் அலட்சிய செயல்பாட்டால் குறிப்பிட்ட விநியோக மையங்கள் மூலம் ரேஷன் அட்டைகள் இல்லாத மக்களுக்கு உணவு பொருட்கள் வினியோகிக்க தவறியுள்ளது டெல்லி அரசு. இது, ரேஷன் அட்டை இல்லாத, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு உணவு தானியங்கள் வழங்குவது தொடர்பான உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறுவதாகும்.
இந்நிலையில், மாநில விவகாரங்கள் குறித்தும், அதில் தலையிடுமாறு வலியுறுத்தியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு DRRAA கடிதம் எழுதியுள்ளது.
படிக்க :
ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்
புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
உணவு உரிமை ஆர்வலர்களான அஞ்சலி பரத்வாஜ், அம்ரிதா ஜோஹ்ரி, அன்னி ராஜா மற்றும் தீபா சின்ஹா ஆகியோர் கையெழுத்திட்ட அந்தக் கடிதத்தில், “கோவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக தினசரி கூலி தொழிலாளர்கள், தரைக்கடை வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட முறைசாரா தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு போதுமான ஊதியம் கிடைப்பதில்லை, அவர்களது குடும்பங்கள் உணவின்றி தவிக்கின்றனர்.
62 ரேஷன் மையங்களில் உணவு தானியங்கள் இல்லாததால் ரேஷன் விநியோகம் நடைபெறவில்லை என்ற களஆய்வை குறிப்பிட்டு, ரேஷன் தேவைப்படும் மக்கள் மீண்டும் மீண்டும் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இந்த மக்களுக்கு ரேஷன் வழங்காமல் இருக்கும் செயல் மிகவும் கவலைக்குரியது என்று உணவு உரிமை ஆர்வலர்கள் வேதனையடைகின்றனர். மேலும், இச்செயல்பாடுகள் டெல்லியில் உள்ள இலட்சக்கணக்கான மக்களின் பசி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மைக்கு வழிவகுக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளனர்.
மக்கள் தொகையில் 37 சதவீதம் பேர் மட்டுமே பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ளதாகவும் அவர்களிடம் மட்டுமே ரேஷன் அட்டை இருப்பதாகவும் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
முந்தைய கொரோனா ஊரடங்குகளின் போது, ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கான பொது விநியோக அமைப்பு PDS (Public Distribution System) அல்லாத திட்டத்தின் கீழ் 70 லட்சம் பேர் உணவு தானியங்களைப் பெற்றுள்ளனர். ரேஷன் அட்டையைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களை வழங்க முடியாமையால் பல பாதிக்கப்பட்டக் கூடிய குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின் வரம்பிலிருந்து வெளியே இருக்கின்றன.
பாதிக்கப்படக் கூடிய பல குடும்பங்கள் ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தாலும் மாநிலத்திற்கான பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான ஒதுக்கீடு தீர்ந்துவிட்டதால், விண்ணப்பங்கள் பல மாதங்கள் – பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது என்று அந்தக் கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி அரசின் உணவு மற்றும் சிவில் சப்ளை துறையிடம் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் குடும்பங்களின் ரேஷன் அட்டை விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக கூறியுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு ரேஷன் வழங்குவதில் டெல்லி அரசாங்கத்தின் தோல்வியை சுட்டிகாட்டி DRRAA கடிதம் நீதிமன்றத்தின் முன் பலமுறை தாக்கல் செய்த பிறகு அரசாங்கம் தொடர்ச்சியாக ரேஷன் பொருட்களை வழங்குவதாகக் கூறியது. ஆனால் அப்படி நடக்கவில்லை என்பதையே களஆய்வு கூறுகிறது.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மார்ச் 2022 வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் டெல்லி அரசு PDS-இன் கீழ் ரேஷன் அடுத்த சில மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிவாரணங்கள் அனைத்தும் ரேஷன் அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. ரேஷன் அட்டைகள் இல்லாமல் இருக்கும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு எந்த உணவுப் பாதுகாப்புத் திட்டமும் செயல்படவில்லை.
எனவே, ரேஷன் விநியோக மையங்களுக்கு உணவு தானியங்கள் போதுமான அளவு வழங்கப்படுவதை உடனடியாக உறுதி செய்யவும், ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு மாதந்திர அடிப்படையில் ரேஷன் வழங்கவும் DRRAA உறுப்பினர்கள் டெல்லி அரசை வலியுறுத்தியுள்ளனர்.
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க மறுக்கும் டெல்லி அரசு ரேசன் அட்டைகளையும் இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வழங்கவில்லை. வாழ்வாதாரம் இழந்த பல கோடி உழைக்கும் மக்கள் அரசின் மானிய விலை பொருட்களினால் தான்  பயன்பெற்றுவருகிறார்கள். அதை தடுப்பது இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரும் பட்டினி சாவுகளுக்குதான் வழிவகுக்கும்.
சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க