ஒடிசா : ஜிண்டாலுக்கு எதிராகத் திரண்டெழும் கிராம மக்கள் !
அடக்கி ஒடுக்கத் துடிக்கும் ஒடிசா அரசு !
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்திலுள்ள திங்கியா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் மீண்டுமொரு போராட்டக்களமாக மாறியுள்ளது. திங்கியா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் குழந்தைகள் முதல் தள்ளாடும் வயதானவர்கள் வரை அனைவரும் இப்போராட்டத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.
ஜிண்டால் நிறுவனமும் மக்கள் போரட்டமும்
கனிமவளக் கொள்ளை நிறுவனமான ஜிண்டால் உத்கல் ஸ்டீல் (JUSL –JSW UTKAL STEEL LTD), கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 65,000 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த எஃகு தொழிற்சாலையை நிறுவ அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஏற்கெனவே போஸ்கோ நிறுவனத்திற்காகக் கைப்பற்றப்பட்டு (மக்களின் கடும் போராட்டத்தால் போஸ்கோ விரட்டியடிக்கப்பட்டது) மக்களிடம் ஒப்படைக்காமல் வைத்திருந்த சுமார் 1000 ஏக்கர் நிலத்தை அப்படியே ஆலை அமைப்பதற்கு ஜிண்டாலுக்குக் கொடுத்தது அரசு. மேலும் தற்போது கூடுதலாக விவசாய நிலங்களையும் கையகப்படுத்தி வருகிறது அரசு. தங்களுடைய எதிரி முன்பைவிட சாதுரியமான முறையில் மேலும் பலமுடன் வருவதை சரியாகக் கணித்த மக்கள் கிளர்ந்தெழுந்து போரடிவருகிறார்கள்.
திங்கியாவை சுற்றியுள்ள கிராமங்களைத் தங்களது இலாப வேட்டைக்காகப் பயன்படுத்த ஜிண்டால் நிறுவனம் மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது. ஒரு வருடத்திற்கு சுமார் 13.2 மில்லியன் டன் மதிப்புள்ள எஃகை பிரித்தெடுக்க 900 மெகா வாட் மின்கலம் (power plant) அமைக்கவும், மேலும் ஒரு வருடத்திற்கு 10 டன் அளவு சிமெண்ட் தாயரிப்பதற்கான அரைத்தல் மற்றும் கலக்கும் தொழிற்சாலைகளை (mixing and grinding) உருவாக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இதன்படி ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் இரும்பு தாது எடுக்கப்படும். அந்த இரும்பு தாதானது நீர் மற்றும் பல கனிமங்களுடன் கலந்து கிடைக்கும் என்பதனால் அதைப் பிரித்தெடுப்பதற்காக டீ ஸ்மைலிங் ஆலையை (de-sliming plant) கியோஞ்சர் மாவட்டத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஒரு வருடத்திற்கு 52 டன் மதிப்புள்ள பொருள்களைக் கையாளுவதற்கு ஜெட்டீஸ் (jetties) எனப்படும் தரை ஜடாதாரி ஆற்றில் அமையவிருக்கிறது.
12000 ஏக்கருக்கும் அதிகமான விவாசய நிலங்களும், நீர்வள ஆதாரங்களான ஆறுகளையும், வனப்பகுதியையும் அரசின் உதவியுடன் ஆக்கிரமித்து வருகிறது நாசகர ஜிண்டால். இவற்றுக்கெல்லாம் எதிராகப் போரடுவதனால் அக்கிராம மக்கள் அரசின் பலவிதமான துன்புறுத்தல்களைச் சந்தித்து வருகிறார்கள்.
ஜிண்டால் பிரதிரோத் சங்கராம் சமிதி
இதற்கு முன்னர் இப்பகுதி மக்கள், போஸ்கோவிற்கு எதிராகப் போரடியபோது போஸ்கோ பிரதிரோத் சங்கராம் சமிதி என்ற கூட்டமைப்பை உருவாக்கிப் போராடினர். அதனைத் தற்போது ஜிண்டால் பிரதிரோத் சங்கராம் சமிதி என பெயர் மாற்றம் செய்து ஜிண்டாலுக்கு எதிராகப் போராடிவருகிறார்கள் அக்கிராம மக்கள். இந்த அமைப்பிற்குத் தலைவராக தேபேந்திர ஸ்வைன் (debendra swain) இருந்து வருகிறார். கூட்டமைப்பின் தலைவரான ஸ்வைனை கைது செய்ய வருகிறபோது போரட்டம் தீவிரமடைந்தது. திசம்பர் 4, நள்ளிரவு நேரத்தில் போலீஸ்படை அராஜகமாக ஸ்வைனுடைய வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றது. அப்பொழுது ஸ்வைன் அங்கு இல்லாததனால் வீட்டிலிருந்த ஸ்வைனின் மாமா மற்றும் அவரது மகள் லில்லியைக் கைது செய்துள்ளனர்.
#WATCH | Jagatsinghpur, Odisha | Police baton-charged people in the Dhinkia village who were allegedly protesting over the proposed steel plant site in the district, today pic.twitter.com/fPQGBRMgDm
— ANI (@ANI) January 14, 2022