ட்டீஸ்கர் மாவட்டத்தின் வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளுடன் ஏற்பட்ட மோதலில் அரசு படைகளைச் சேர்ந்த 22 பேர் மரணமடைந்தனர். அவர்களது இறுதி ஊர்வலத்தையும், அவர்களது குடும்பத்தினரின் வருத்தங்களையும் சோக கீதத்துடன் ஒளிபரப்பி தேசபக்தியை வியாபாரப்படுத்திக் கொண்டிருக்கின்றன இந்திய ஊடகங்கள்.

கடந்த ஏப்ரல் 3-ம் தேதியன்று சட்டீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் சுக்மா மாவட்ட எல்லைப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் மற்றும் அவர்களின் படைத்தளபதி ஹித்மாவின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சுமார் 1000 படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

படிக்க :
♦ பழங்குடிகளின் நிலம் , மொழி , பண்பாட்டைக் காக்கும் நக்சல்கள் !

♦ மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து !

வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை மாலை வரை திட்டமிடப்பட்ட இந்த மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையின் படி உரிய இலக்கை அடைந்த துணை இராணுவப் படையினர், குறிப்பிடப்பட்ட இடத்தில் யாரும் இல்லாததை ஒட்டி திரும்புகையில் மாவோயிஸ்ட்டுகளால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

இருதரப்பிலும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் துணை இராணுவப் படையினர் 22 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒருவர் மாவோயிஸ்டுகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். மாவோயிஸ்ட்டுகள் தரப்பில் ஒருவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. சற்றும் எதிர்பாராத தாக்குதலில் தாங்கள் நிலைகுலைந்துப் போனதாக அங்கிருந்து தப்பிய துணை இராணுவப் படையினர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

ஒரு மிகப்பெரிய மாவோயிஸ்ட் அழித்தொழிப்பு வேட்டையாக அரசுப் படைகளால் கருதப்பட்ட இந்த தாக்குதல் திட்டம், அவர்களுக்கு எதிரானதாக முடிந்திருக்கிறது.

சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா, சுக்மா, பிஜப்பூர் பகுதிகளில் பரந்து விரிந்து கிடக்கும் பல இலட்சம் கோடி மதிப்புள்ள கனிம வளங்களை, டாட்டா, ஜிண்டால், அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்தது முந்தைய மன்மோகன்சிங் அரசு.

கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குவதற்கு வசதியாக, அந்தக் காடுகளிலும் மலைகளிலும் காலங்காலமாக வாழ்ந்து வரும் அந்த பழங்குடி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலையை துணை இராணுவத்தைக் கொண்டும், சல்வா ஜூடும் எனும் கருங்காலி சட்ட விரோத அமைப்பைக் கொண்டும் செய்துவந்தன, அன்றைய மத்திய காங்கிரஸ் அரசும் சட்டீஸ்கர் மாநில பாஜக அரசும்.

இந்நிலையில் அந்தப் பகுதி மக்களுக்கு எதிரான துணை இராணுவம் மற்றும் சல்வாஜூடும் தாக்குதல்களுக்கு எதிராக அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதப் போராட்டத்தை நடத்தினர். இதனை வாய்ப்பாக வைத்துக் கொண்டு மாவோயிஸ்ட்டுகளை ஒழிப்பதற்கான நடவடிக்கை எனும் பெயரில் “பசுமை வேட்டை” (Operation Green Hunt) எனும் தாக்குதலை அங்கிருந்த பழங்குடியின மக்கள் மீது நடத்தி அவர்களை வெளியேற்ற முயற்சித்தது இந்திய அரசு.

 

கார்ப்பரேட்டுகள் இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் கொள்ளையிடுவதற்காக, சட்டீஸ்கரின் தாண்டேவாடா வனப்பகுதியில் அரசே நடத்தும் இந்தப் போரைக் கண்டித்தும், அங்கு துணை இராணுவப் பிரிவினரால் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள், குடிசை எரிப்பு ஆகிய சம்பவங்களுக்கு எதிராக பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்களும் போராடி வந்தனர். குறிப்பாக அப்பகுதியில் இருந்த சாமியாரான அக்னிவேஷ் என்பவரும், காந்தியவாதியான ஹிமான்சுகுமார் என்பவரும் தொடர்ந்து அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தினர்.

ஆனால் அவர்களது ஆசிரமங்களையும் விட்டு வைக்காமல் தாக்குதல் தொடுத்தது சால்வா ஜுடும் எனும் அரசு தரப்பால் உருவாக்கப்பட்ட சட்ட விரோதக் கும்பல். பல்வேறு புரட்சிகர அமைப்புகள், நந்தினி சுந்தர் உள்ளிட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள், ஜனநாயக வாதிகள் என பலரும் சட்டரீதியாகவும், வீதியில் இறங்கி மக்களோடும் இணைந்து போராடி சல்வா ஜூடும் எனும் சட்டவிரோத அமைப்பைக் கலைக்கச் செய்தனர்.

ஆயினும் அரசுப் படைகளின் அட்டூழியங்கள் தொடர்ந்தன. சட்டீஸ்கரில் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும் மக்களுக்கு எதிரான கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பதவிக்கும் பதக்கங்களுக்கும் ஆசைப்பட்டு மாவோயிஸ்ட்டுகளைக் கொன்றதாகக் கூறி அப்பாவி சட்டீஸ்கர் மக்களை துணை இராணுவப் படையினர் கொன்று குவித்ததை பலரும் அம்பலப்படுத்தியும் அங்கிருந்து துணை இராணுவப் படையினரை திரும்பப் பெறவில்லை. பெருங்குற்றங்களை இழைத்த துணை இராணுவப் படை அதிகாரிகளுக்கும் எந்தத் தண்டனையும் வழங்கப்படவில்லை.

காரணம், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எப்படியாயினும் அங்கிருக்கும் கனிம வளங்களை அள்ளிக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான். அப்படிக் கொடுப்பதற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் கொன்று குவிக்கலாம் என்பதே ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாடு. கார்ப்பரேடுகளின் இக்கட்டளையை நிறைவேற்றுவதில் காங்கிரசும் பாஜகவும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

கார்ப்பரேட்டுகளுக்காக அந்த வனப்பகுதியை முழுமையாகக் கையகப்படுத்த, பெரும் தடையாக இருக்கின்ற பழங்குடியின மக்களையும் அவர்களுக்கு ஆதரவாக அந்தப் பகுதியில் இருக்கின்ற மாவோயிஸ்ட்டுகளையும் ஒழித்துக் கட்ட நடைபெற்ற தேடுதல் வேட்டையில்தான் இந்த 22 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கார்ப்பரேட்டுகளின் இலாபத்திற்காக சொந்த நாட்டிற்குள்ளாகவே சொந்த மக்களின் மீது போர் தொடுக்க துணை இராணுவப் படைகளை ஏவி விட்டிருக்கிறது இந்திய அரசு. சட்டீஸ்கரின் தாண்டேவாடா பகுதியின் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித்தரவும், பழங்குடியின மக்களையும் ஒழித்துக்கட்டவும் துணை இராணுவப் படைகளின் உயிரை பகடைக்காயாக பயன்படுத்துகிறது இந்திய அரசு.

படிக்க :
♦ சட்டீஸ்கர்: 20 அப்பாவி மக்களை கொலை செய்த இந்திய இராணுவம்!

♦ சட்டீஸ்கர் : சரணடைந்தவரெல்லாம் நக்சலைட்டு அல்ல

உயிரிழந்த துணை இராணுவப் படையினரின் குடும்பத்தினரின் சோகத்தைக் காட்டி கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு அங்கீகாரம் கேட்கின்றன இந்திய ஊடகங்களும், அதற்கு எச்செலும்பு வீசும் இந்திய அரசும்.

கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக துணை இராணுவப் படையினரை பலியாக்கும் இந்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளைக் கண்டிப்போம். கார்ப்பரேட் கனிம வளக் கொள்ளைக்கான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்யக் கோரி போராடுவோம். சாதாரண குடும்பத்திலிருந்து இராணுவத்தில் பணிபுரியும் இளைஞர்களின் உயிரை கார்ப்பரேட்டுகளின் கொள்ளை இலாபத்திற்காகப் பலியிடாதே எனப் பெருங்குரல் எழுப்புவோம் !


கர்ணன்
நன்றி :
தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க