ஊடகச் செய்தி

08-02-2022

தமிழ்நாடு அரசே! மதக் கலவரத்தைத் தூண்ட முனைந்துவரும் பாசக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்து கைது செய்!
தமிழ்நாட்டில் மத வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றிடு!!

ஆர்ப்பாட்டம்

ணக்கம். அரியலூர் மாணவியின் தற்கொலையைத் தொடர்ந்து மத வன்முறையைத் தூண்ட முனைந்து வரும் பாசக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாசக நிர்வாகிகள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யவும் தமிழ்நாட்டில் மத வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றவும் வலியுறுத்தி பிப்ரவரி 8 செவ்வாய்க் கிழமை அன்று மதியம் 4:00 மணி அளவில் வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தை தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், பாப்புலர் ஃப்ரண்ட ஆப் இந்தியா, தமிழக மக்கள் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்தன.
இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக்குழு உறுப்பினர் சதிஸ்குமார், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலப் பொதுச்செயலாளர் மொய்தீன் அப்துல் காதர், மக்கள் அதிகாரத்தின் மாநிலத் தலைவர் வெற்றிவேல் செழியன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் அமைப்புச் செயலாளர் மகிழன், தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் பொழிலன் ஆகியோர் உரையாற்றினர்.

இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட விசயத்தில் பாசக, வி.எச்.பி, இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டில் மத வன்முறையைத் தூண்டி வருகின்றன.

படிக்க :

தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!

அண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் !

குறிப்பாக, அந்த மாணவியிடம் இருந்து பெறப்பட்டதாக சொல்லப்பட்ட 45 விநாடி காணொளி ஒன்றை சனவரி 20 அன்று மதியம் 3:47 மணிக்கு பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டார். பாசக தலைவர் அண்ணாமலை முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தபோதும் இது போன்ற ஒரு முக்கிய காணொளியைக் காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல் அரசியல் பரப்புரைக்கான பொருளாக சமூக ஊடகங்களில் வெளியிட்டது உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

”மதமாற்றம் தமிழகத்திலே வேகமாகப் பரவுகின்ற விசச் செடி” என்று பாசக தலைவர் அண்ணாமலை செய்தியறிக்கை வெளியிட்டார். கிறித்தவ மிசனரிகளுக்கு எதிராக மாணவியின் தற்கொலையைத் திருப்பிவிடும் முயற்சியில் பாசக தலைவர் தொடங்கி அதன் முக்கியத் தலைவர்களான எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், மனோஜ், குஷ்பூ உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, சனவரி 23 ஆம் நாள் கோவை மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரத்தில் உள்ள டிரினிட்டி தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சேலத்திலும் ஒரு கிறித்தவ பள்ளி மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்றுள்ளனர்.

மதுரை தெற்கு வாசல் பகுதியில் கிறித்தவ வழிபாடு நடந்து கொண்டிருக்கும் போது காவிக் கும்பல் அங்கு சென்று வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாம் ஊடகங்களில் தெரிய வந்த நிகழ்வுகள். இன்னும் வெளியே அதிகம் அறியப்படாமல் கிறித்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல், மிரட்டல், தாக்குதல் ஆகியவை நடந்து வருகின்றது.

இந்நிலையில் சனவரி 27 அன்று மாணவியிடம் இருந்து பெறப்பட்ட முழுமையான காணொளியை தமிழக காவல்துறை வெளியிட்டது. அதில் அவர் தன்னை யாரும் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தவில்லை என்று தெளிவாகச் சொல்வது அனைத்துச் செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.

மொத்தத்தில், அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதைப் பயன்படுத்தி மதச்சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக கிறித்தவர்களுக்கு எதிரான வெறுப்புப் பரப்புரையைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான வாய்ப்பாக பாசகவினர் இதைப் பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது.

மாணவியின் அடையாளம், முகவரி, பெயர், அகவை வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் பெயர் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி செய்தி வெளியிடுவது சிறார் நீதிச்சட்டம், 2015 இன் பிரிவு 74(1) இன் கீழும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழும் கடுமையான குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருப்பவர் அந்தக் காணொளியின் உண்மைத் தன்மையை அறியாமலும் அறிய முற்படாமலும் அதைப் பொறுப்புடன் காவல் துறையிடம் ஒப்படைக்காமலும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு கலவர அரசியலுக்கு முனைந்தது பொறுப்பற்ற, உள்நோக்கம் நிறைந்த செயலாகும். பாசக தலைவர் அண்ணாமலை மீது பிரிவு 153, 505 (1) (b), பிரிவு (505) ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் சமூக நீதி, பல்வேறு சமயத்தவரிடம் இருக்கும் நல்லிணக்கம் ஆகியவற்றைப் பேணிக் காக்கும் நோக்கில் பொய்ச் செய்தியைப் பரப்பி கலவரத்தை தூண்ட முயலும் பாசக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாசக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்துள்ள அமைப்புகள் இணைந்து மாநில காவல் தலைமை இயக்குநரிடம் கடந்த 29-1-2022 அன்று புகார் மனுவைக் கொடுத்தனர். மேலும் திருச்சி, தஞ்சை என பல்வேறு மாவட்டங்களிலும் காவல் கண்காணிப்பாளரிடம் இதை ஒத்து புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்தே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

காவிப் பாசிஸ்டுகள் இந்தியாவின் தலைநகரில் இருந்தபடி இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவழிப்புக்கு அறைகூவல் விடுகின்றனர். மும்பை மாதிரி, குசராத் மாதிரி, முசாபர் நகர் மாதிரி, தில்லி மாதிரி என வகைவகையாக மதச்சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை சங் பரிவார அமைப்புகள் நிகழ்த்தி வந்துள்ளன. இப்போது கர்நாடகாவில் பரிசோதித்து பார்த்த , கிறித்தவர்களுக்கு எதிரான மங்களூர் மாதிரி என்ற ஒன்றை தமிழ்நாட்டில் செய்து பார்க்க துடிக்கின்றனர். அதன் பகுதியாக எல்லா முனையில் இருந்தும் மத மாற்றத் தடைச் சட்டம் என்ற பெயரில் வெறுப்பு பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

படிக்க :

மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !

மருத்துவ பணியாளர்கள் பணி நீக்கம் : நன்றி மறந்த திமுக அரசு | மக்கள் அதிகாரம்

வெறுப்பு பேச்சுகள் சிறுபான்மையினருக்கு எதிரான மிகப் பெரிய வன்முறைக்கு களத்தை தயார்ப்படுத்துகின்றன. மக்களின் மனங்களில் வன்முறை வெறியாட்டத்திற்கான ஏற்பை ஏற்படுத்துகின்றன. ஆனால, அவை பெரும்பாலும் கண்காணிப்புக்கும் கட்டுபடுத்தலுக்கும் உள்ளாவதில்லை. மேலும், அரசு இயந்திரம் குறிப்பாக நீதித்துறை, காவல் துறையிலும் பெரும்பான்மை வாதம், சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலை ஆழ வேரூன்றி உள்ளது. இந்த மெய்நிலையும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்காமல் செய்து விடுகிறது.

காவிப் பாசிஸ்டுகளின் கையில் ஒன்றிய அரசின் அதிகாரம் இருக்கும் நிலையில், கடந்த ஏழரை ஆண்டுகளாக சிறுபான்மையினருக்கு சிறிதும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைக் தடுக்கவும் பாதிக்கப்படு்வோருக்கு நீதி மற்றும் இழப்பீட்டை உறுதி செய்யவும் வழிவகுக்கும் சட்ட முன்வடிவு ஒன்று (( Prevention of Communal and Targetted Violence (Access to Justice and Reparations) Bil 2011 ) கடந்த 2011 இல் கொண்டு வரப்பட்டது. ஆனால், அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படவே இல்லை.

இன்றைய அவசர, அபாயகரமான நிலையைக் கருத்தில் கொண்டு அத்தகைய சட்டம் ஒன்றை மாநில அளவில் இயற்ற வேண்டிய தேவை உள்ளது. அந்த அடிப்படையில், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் மத வன்முறை தடுப்புச் சட்டம் இயற்ற முன்வர வேண்டும் என்று இவ்வார்ப்பாட்டத்தின் வாயிலாக கோருகிறோம்.

இப்படிக்கு,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் முன்னணி.

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க