28.01.2022
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
பத்திரிகை செய்தி
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே !
டந்த 28.01.2022 தேதியன்று எமது மக்கள் அதிகாரம் அமைப்பின் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது. எமது அமைப்பின் கடந்த காலத் தவறுகளை உணர்ந்து களைந்து கொண்டும், புதிய அரசியல் நிலைமைகளுக்கு ஏற்பவும் கொள்கை அறிக்கையை இந்த மாநாடு வகுத்துள்ளது.
அரசுக் கட்டமைப்பின் அனைத்துத் துறைகளும் அவற்றுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்ற முடியாமல் தீராத, மீள முடியாத, கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி, தோற்றுப்போய் மக்களுக்கு எதிர்நிலைச் சக்தியாக மாறிவிட்டது. அதை உடனடியாக அகற்றிவிட்டு, அதற்கு ஒரே மாற்று மக்கள் அதிகாரமே என்ற முழக்கத்தை முன்வைத்து கடந்த 2015 ஏப்ரல் மாதத்தில் எமது அமைப்பு தொடங்கப்பட்டது. எமது அமைப்பின் முதல் போராட்டக் கோரிக்கையாக “மூடு டாஸ்மாக்கை!’’ என்ற முழக்கத்தை முன்வைத்து, தமிழகம் முழுவதும் வீச்சாகப் பிரச்சாரம் செய்து வந்தோம். தியாகி சசிபெருமாள் டாஸ்மாக்கை மூடுவதற்கான போராட்டத்தில் உயிர் நீத்தார். அதன் தொடர்ச்சியாக, மக்கள் அதிகாரம் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் டாஸ்மாக் கடை உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை உடைப்பு போராட்டம் பற்றிப் பரவியது.
படிக்க :
மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
காவிரி நதிநீர் பிரச்சினை, ஊழல் ராணி ஜெயாவின் பெயரையும் படத்தையும் அரசு அலுவலகங்களிலிருந்து அகற்றக்கோரும் போராட்டம், விவசாயிகளின் தற்கொலைக்கு எதிரான போராட்டம், நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளைக் கண்டித்த போராட்டம், மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டம் – என தமிழகத்தின் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களில் ஈடுபட்டு வழக்கு, சிறை, சித்திரவதை – என பல்வேறு இன்னல்களையும் தாங்கி மக்கள் அதிகாரம் தோழர்கள் போராடி வந்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட எமது தோழர் ஜெயராமன் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படிப்பட்ட போர்க்குணமும் தியாகமும் அர்ப்பணிப்பும் கொண்ட அமைப்பாக, உழைக்கும் மக்களின் பேராதரவுடன் எமது அமைப்பு செல்வாக்குடன் வளர்ந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு எமது அமைப்பில் ஏற்பட்ட சீர்குலைவுவாதம், பிளவுவாதம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிய அணிகள், முதலாளித்துவக் கருத்துக்களால் புரையோடிப்போன தலைமைக் குழுவில் இருந்த மூவரை வெளியேற்றினர். இதனைப் பரிசீலித்ததில், எமது கொள்கையில் தவறுகள் இருப்பதை உணர்ந்தோம். தோற்றுப்போன கட்டமைப்பிற்கு மாற்றாக எந்த ஒரு தீர்வையும் முன்வைக்காமல் அதற்குள்ளேயே தீர்வை தேடுவதாக மக்கள் அதிகாரத்தின் கொள்கை இருக்கிறது என்பதை உணர்ந்தோம். மேலும், எமது அமைப்பின் செங்கொடியில் கம்யூனிச இயக்க வரலாற்றில் இல்லாத வகையில், போராட்டத்தையும் ஒற்றுமையையும் உணர்த்தும் கரமானது கறுப்பு நிறத்திலும், வலது திசையை நோக்கியும் இருந்தது. இது முதலாளித்துவ அடையாள அரசியலை மறைமுகமாக உணர்த்தும் வகையில் உள்ளதை உணர்ந்தோம்.
நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை என்று உரைத்தவர்களும், கம்யூனிச அமைப்பின் உயிர்நாடியான ஜனநாயக மத்தியத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்பவர்களும் தலைமைப் பொறுப்பிலே வீற்றிருந்தனர். மேலும், செயலூக்கமிக்க தோழர்களின் வர்க்க உணர்வை வற்றச் செய்யும் வகையில் எமது அமைப்பில் இருந்த இது போன்ற சில தவறுகள் அமைந்திருந்தன என்பதை மக்களின்முன் வெளிப்படையாக சுயவிமர்சனமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதனாலேயே தலைமைக் குழுவானது அணிகளிடமும் மக்களிடமும் தனிமைப்பட்டு அதிகாரத்துவம், தாராளவாதம், சந்தர்ப்பவாதம், தலைக்கனம் போன்றவற்றில் மூழ்கிப் போனது. மக்கள் அதிகாரம் அமைப்பைத் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிய பின்னரும்கூட, அமைப்பு விதிகள்கூட வகுக்காத அளவுக்கு தனிநபர் பிரபலவாதம் எனும் புதைசேற்றில் தலைமைக்குழு மூழ்கி சுகம் கண்டது. எளிமையான வாழ்வினை அடிப்படையாகக் கொண்டிருந்த நக்சல்பாரி கம்யூனிச இயக்கப் பாரம்பரியத்தில் உருவான எமது அமைப்பில் எவ்விதப் பரிசீலனைக்கும் உட்படாத தலைவர்கள் உருவாயினர். இத்தலைவர்களுக்கு ஏற்றபடியான சந்தர்ப்பவாதமான சலுகை, சந்தர்ப்பவாதமான பரிசீலனை ஆகியவற்றையும் மேற்கொண்டுள்ளோம் என்பதை சுயவிமர்சனமாக ஏற்கிறோம். பாட்டாளி வர்க்க அரசியலை மறுத்து வைக்கப்படும் தீர்வுகள் அனைத்தும் ஆளும் வர்க்கத் தீர்வுகளே என்பதை பெரும் இழப்புகளோடு வரலாறு எமக்கு மீண்டும் கற்றுக் கொடுத்துள்ளது.
படிக்க :
மக்கள் அதிகாரம் கோவை மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
மக்கள் அதிகாரம் – முதலாவது சென்னை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
மேற்கண்ட அனைத்து தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு மக்கள் அதிகாரத்தின் கொள்கை அறிக்கையும் அமைப்பு விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனையால் வழிகாட்டப்படும் ஓர் அமைப்பாக மக்கள் அதிகாரம் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்கிறது. மக்கள் அதிகாரம் அமைப்பானது, கம்யூனிச இலட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் என்பதை மக்கள் அதிகாரத்தின் முதலாவது மாநாடு பெருத்த வரவேற்புடன் ஏற்றுக் கொண்டது.
அண்மைக் காலமாக, மோடி கும்பலால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்துவெறி (பார்ப்பன) பாசிசம் ஒருபுறமும், கார்ப்பரேட்டு முதலாளிகளின் பாசிசம் மறுபுறமும் நாடெங்கும் வேகமாக அரங்கேறி வருகின்றன. அச்சுறுத்திவரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தி உழைக்கும் மக்களின் ஜனநாயகக் குடியரசை நிறுவ வேண்டிய தேவையானது இன்று உழைக்கும் மக்களின் அவசர, அவசியக் கடமையாகியுள்ளது.
இதனடிப்படையில், “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!’’ – ஆகிய முழக்கங்களை முன்வைத்து செயல்படும் அமைப்பாக எமது மக்கள் அதிகாரம் செயல்படும். அதற்கேற்ற வகையில் கொள்கை அறிக்கை, அமைப்பு விதிகள் முன்வைக்கப்பட்டு அவை ஒரு மனதாக இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் உள்ள கிளைகள், வட்டங்கள், மண்டலங்கள் – என அனைத்து நிலைகளுக்கும் உட்கட்சி தேர்தல் ஜனநாயகப் பூர்வமாக நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு இந்த முதலாவது மாநில மாநாடு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இம்மாநாட்டில், இடது திசையை நோக்கிய வலது கரத்தை உடைய அமைப்பின் செங்கொடி பெண் தோழர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, அது ஏகமனதாக ஏற்கப்பட்டது.
மேலும், இம்மாநில மாநாட்டில், மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாநிலச் செயலாளராக தோழர் வெற்றிவேல் செழியனும் மாநில இணைச் செயலாளராக தோழர் குருசாமியும் மாநிலப் பொருளாளராக தோழர் அமிர்தாவும் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சிவா, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தெரிவு செய்யப்பட்ட மாநிலச் செயலாளர் ஏற்புரை வழங்கினார். மாநாட்டு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, அவற்றை மாநாடு ஒருமனதாக நிறைவேற்றியது. நன்றியுரைக்குப் பின்னர் மாநாடு நிறைவு பெற்றது.
படிக்க :
மக்கள் அதிகாரம் – முதலாவது கடலூர் மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
மக்கள் அதிகாரம் – முதலாவது மதுரை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
மாநாட்டுப் பிரதிநிதிகள், “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!’’ – என உறுதியேற்றனர்.
தோழமையுடன்,


தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

1 மறுமொழி

  1. அய்யோ புரியவில்லை
    மக்கள் அதிகாரம் எத்தனை பிரிவாக செயல்படுகிறது? இத்தனை பிரிவாக செயல்பட காரணம் என்ன? மக்கள் அதிகாரம் மீது வைக்கும் கேள்விகளுக்கு உண்மையில் பதில் அளிபீர்களா?
    காத்திருக்கிறேன்
    இவன் சி.பழனி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க