கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒட்டு மொத்த உலகின் உழைக்கும் வர்க்கமும் வாழ வழியின்றி செத்து மடிந்து கொண்டிருந்த வேளையில் உலக பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் – ஊரடங்கு சமயத்திலும் – அதிவேகமாக உயர்ந்துள்ளது. இதில் மருந்து நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டாட்டம் தான்.
ஃபைசர் (Pfizer) எனும் பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனத்தின் கடந்த 2021-ம் ஆண்டு வருமானம் அதற்கு முந்தைய 2020-ம் ஆண்டு வருமானமான 4,160 கோடி டாலரிலிருந்து 8,130 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது ஏறக்குறைய 200% உயர்வு ஆகும். இந்திய ஒன்றிய அரசின் 2022 நிதிநிலை அறிக்கையில் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 1,186.7 கோடி டாலர். இதை விட ஃபைசர்-ன் வருமானம் ஏழு மடங்கு அதிகம்!
Pfizer ஆண்டு வருமானம் (கோடி டாலர்களில்)
2016 – 3,870 கோடி
2017 – 3,880 கோடி
2018 – 4080 கோடி
2019 – 4120 கோடி
2020 – 4160 கோடி
2021 – 8130 கோடி
2022 – 10200 கோடி
படிக்க :
கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு
தடுப்பூசி வணிகம் : மக்களின் மரணத்தில் நடத்தப்படும் கொள்ளை !
கடந்த 2020-ம் ஆண்டில் 900 கோடி டாலராகயிருந்த அந்நிறுவனத்தின் நிகர வருமானம் 2021-ம் ஆண்டில் 2,200 கோடி டாலராக (140 விழுக்காடு) அதிகரித்துள்ளது. ஃபைசர் நிறுவன வருவாய் உயர்வில் கோவிட்-19 தடுப்பு மருந்தின் பங்கு மிக அதிகம். 2021-ம் ஆண்டு வருமானத்தில் (8,130 கோடி டாலர்) கோவிட் தடுப்பு மருந்து விற்பனையின் பங்கு மட்டும் 3,680 கோடி டாலர்.
நடப்பு 2022-ம் ஆண்டில் அந்நிறுவனத்தின் வருமானம் 9,800 கோடி டாலரிலிருந்து 10,200 கோடி டாலருக்குள் இருக்கும் எனவும் ; அதில் 3,200 கோடி டாலர் கோவிட்-19 தடுப்பு
மருந்தின் பங்காக இருக்குமெனவும் கணிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பு மருந்தில் 80 விழுக்காடு பணக்கார நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதற்கு மாறாக, சைனாவில் உற்பத்தியான சினோபார்ம் (Sinopharm) தடுப்பு மருந்தில் 60 விழுக்காடு குறைந்த வருமானமுள்ள நாடுகளில் பயன்பட்டது. ஃபைசர்-ன் கோவிட்-19 தடுப்பு மருந்தின் விலை பிற நிறுவனத் தடுப்பு மருந்துகளின் விலைகளைக் காட்டிலும் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் இருப்பதால் குறைவான வருமானமுள்ள நாடுகளால் அதை அதிகம் வாங்க இயலவில்லை.
தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்குக் கிடைத்த அரசு பண உதவியில் 17 விழுக்காடு (80 கோடி டாலர்) ஃபைசர்-க்குக் கிடைத்தது! அது மட்டுமின்றி, தடுப்பு மருந்துக்கு முன்கூட்டியே கிடைத்த விற்பனை ஆணைகளில் (Advanced Purchase Agreements) 1,774 கோடி டாலர் ஃபைசர்-க்குக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது!
அடாவடி காப்புரிமைகளின் மூலமாக மருந்து சந்தையைக் கட்டுப்படுத்தி மருந்துகளின் விலையை அதிகரிக்கச் செய்து, சரியாகச் சொல்லப்போனால், ஏழைகளுக்கு மருத்துவத்தை மறுப்பதன் மூலம்தான் தனது வருவாயை இப்படி மலையளவு பெருக்கியிருக்கிறது ஃபைசர் நிறுவனம். மருத்துவம் மறுக்கப்பட்ட ஏழைகளின் பிணங்களை அடுக்கி அதன் மீது ஏறி நின்று தனது விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது ஃபைசர் நிறுவனம்.
வினவு செய்திப் பிரிவு
 பரிதி
நன்றி : Newsclick

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க