கிரிப்டோ கரன்சி மற்றும் அதன் பரிவர்த்தனை குறித்து கடந்த நிதிநிலை அறிக்கை குறித்த விவாதங்களில் அதிகமாகப் பேசப்பட்டது. இந்த கிரிப்டோ கரன்சிகளை தொட்டு உணரவோ, தங்கம், வெள்ளி போன்ற நாணயங்களாகவோ(காயின்களாக) நோட்டுக் கத்தைகளாகவோ பயன்படுத்த முடியாது. இது இணையதளத்தில் வலம் வரக்கூடிய நிழல் நாணயம். இந்த நிழல் நாணயத்தை தங்களிடமுள்ள பணத்தை வைத்து வாங்கி வங்கிகளின் லாக்கரில் தங்கம், வெள்ளி நகைகளை சேமித்து வைப்பது போல இணையதளத்தில் உள்ள பணப்பையில் (இதற்கு இணையதள வாலெட் என்பது பெயர்) சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் வங்கிகள் தருவது போல, அதற்கான அத்தாட்சி எதுவும் தரப்படாது.
பிட்காயின் என்பது இணையதளத்தில் உள்ள ஒரு டிஜிட்டல் ஃபைல் இதற்கான ஒரு கோட் நம்பர் (Code Number) இருக்கும். இதை கைபேசியிலும் வைத்துக் கொண்டு, பல் பொருள் அங்காடியில் PAYTM, GOOGLE PAY போன்ற முறைகள் மூலம் பொருட்கள் வாங்குவது என்பது அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் புழக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் இந்த நடைமுறையில்லை.
விரைவில் உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையை கொண்டுவர அமேசான் போன்ற நிறுவனங்களும் பிட்காயின் மூலம் பரிவர்த்தனையை மேற்கொள்ள முயற்சிகளை எடுத்து வருகின்றன. இத்ற்குக் காரணம், சாதாரண மக்களும் இதில் தங்கள் சேமிப்பில் பணத்தைக் கொண்டு பிட்காயின்களை வாங்கி குவித்து வருவதால், சாதாரண மக்களிடம், உழைக்காமல் பணக்காரனாகலாம் என்ற பேராசையைப் ஏற்படுத்தி, அவர்களின் சேமிப்பை உறிஞ்சி விட வேண்டும் என்ற இலாபவெறி. உதாரணத்திற்கு, 1000 ரூபாய் கொடுத்து ஒரு கிரிப்டோகரன்சி வாங்கினால் அதன் மதிப்பு சில வாரங்களிலோ, மாதங்களிலோ 10,000 ரூபாயாக உயர்வதை பார்க்கும்போது பேராசையானது இலட்ச கணக்கில் முதலீடு செய்ய வைக்கிறது.
படிக்க:
மோடி அரசின் கடைசி பட்ஜெட் – முதல்கட்ட பார்வை !
கொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு!
இந்த அளவிற்கு இதன் மதிப்பு உயர்வதற்கு காரணம் என்னவென்றால் கருப்புப் பண பேர்வழிகள் அரசுக்கு கட்ட வேண்டிய வரிப்பணத்தை ஏய்க்கவே பிட்காயின்கள் போன்ற கிரிப்டோகரன்சிகளில்  தங்களின் கருப்புப் பணத்தை முதலீடுகளாகக் கொண்டுவந்து குவிப்பதும் போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் பேர்வழிகள் இதன் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வதாலும், இதில் முதலீடு செய்வது அதிகரித்து உள்ளது.
இதன் விளைவு தான் துவக்கத்தில் 2010-ல் 0.09 டாலராக இருந்த பிட்காயின் மதிப்பு, இன்று கிட்டத்தட்ட 38,600 டாலராக உயர்ந்துள்ளது. ஒருவேளை அரசால் கிரிப்டோ கரன்சி தடைசெய்யப்பட்டால் அதிகம் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான். பணத்தை இழந்தவர்கள் தற்கொலை வரை செல்லலாம் அல்லது இதை ஈடு செய்ய சமூக விரோத செயல்களிலும் ஈடுபடலாம். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர்களின் நிலை தான் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்தவர்களின் நிலையும்.
தனியார் சிட் ஃபண்ட் நிறுவனம் ஏமாற்றினால் குறைந்தது வழக்காவது போடலாம். இதில் அதற்குக் கூட வழியில்லை. காரணம் இது ஒரு நிறுவனமல்ல. தனி நபர்களுக்கு மத்தியில் நடக்கும் சட்டத்துக்கு உட்படாத பணப் பரிவர்த்தனை. இது டார்க் வெப் தொழில்நுட்ப அறிவில் உருவாக்கப்பட்ட இணையவலை. எனவே முறைகேடுகள் நடந்தால் கண்டுபிடிக்கக் கூட முடியாது; அல்லது மிகவும் கடினமானது. ஏனெனில் இதில் இருவர் அல்லது இரு கணக்கு என்ற வகையில்தான் பரிவர்த்தனை இருக்கும். வாங்குவதும் விற்பதும் இந்த இருவருக்குள்தான் நடக்கும். அரசாலே இதைக் கண்டுபிடிக்க முடியாது. காரணம் இதை முறைப்படுத்துவதற்கான அமைப்பு இல்லை.
பரவலான வெளிப்படையான பரிவர்த்தனை மட்டுமே நடக்கும் என யாரும் உறுதி கூற முடியாது. நிழலுலக மறைமுகப் பரிவர்த்தனைகளில் பெரும்பங்கு இத்தகைய கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்தியே நடத்தப்படுகின்றன. இதைப் பயன்படுத்தி, போதைப் பொருட்கள், ஆயுதங்கள் வாங்கலாம். அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளை கட்டுக்குள் கொண்டுவர சி.ஐ.ஏ.-வால் உருவாக்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும் சதிகார – கலகக்கார கும்பலுக்கு தேவையான பணத்தை வாரி வழங்க இந்த கிரிப்டோ கரன்சி இரகசிய பரிவர்த்தனைக்குப் பயன்பட்டதாக கூறப்படுகிறது.
Share-Marketஇந்த நாசகர பரிவர்த்தனைகளில் அதிகமாக சாதாரண மக்கள் – நடுத்தர மக்கள் பங்கேற்கும் பட்சத்தில் இதில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கும். அதன் அரசியல் அதிகாரமே கேள்விக்குள்ளாக்கும். இதற்கு உற்பத்தி பொருட்களைப் போல உண்மையான பயன் மதிப்போ, பரிவர்த்தனை மதிப்போ கிடையாது. செயற்கையாக ஊதிப் பெருக்கப்படும் மதிப்பு முழுக்க முழுக்க இரகசியமாக இருவருக்குள் நடத்தப்படும் ஹவாலா பணப்பரிவர்த்தனை முறை.
இந்த ஹவாலா மூலம் தற்போது அந்நிய நாடுகளில் பணிபுரியும் நடுத்தர வர்க்கத்தினர் மேட்டுக்குடியினர் பெரும்பாலும், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை அரசுகளுக்கான வரியை, வங்கிகளுக்கான கமிசனை தராமல் ஏய்த்து தங்கள் வீடுகளுக்கு கடத்தும் முறை, இதைப் போன்றதுதான் இந்த கிரிப்டோ கரன்சி – பிட்காயின் பணப் பரிவர்த்தனை.
இது உற்பத்திக்கும், வர்த்தகத்திற்கும், பொதுப்பயன்பாட்டிற்கும் பயன்படுத்துவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதற்கு நடைமுறை தான் சாட்சி. ஆனால் இதை டிக்டாக் போல சீனாவைப் போல தடை செய்ய முடியாது. காரணம் CREBACO எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிவிப்புப்படி இதில் 10 ½ கோடி மக்கள் ரூ 42,000 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். இதில் 70%-த்தினருக்கும் அதிகமானோர், ரூ. 3000-க்கும் கீழான தொகையை முதலீடு செய்திருப்பவர்கள் என்று தெரிவதாக ஆர்.பி.ஐ. கவர்னர் கடந்த ஆண்டு கூறியிருந்தார். மேலும் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுக் காட்டப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
பங்கு சந்தை போல இதன் மதிப்பு பலூனைப் போல ஊதிப் பெருக்கினாலும், இதைக் கட்டுப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் செபி, ஆர்.பி,ஐ  போன்ற நிறுவனங்கள் உள்ளன. ஆனால் கிரிப்டோ கரன்சி நிறுவனங்களுக்கு இவை போல எதுவும் கிடையாது. இருந்தால் கூட இந்த இரகசிய உலகத்தை கட்டுப்படுத்துவது கடினம் என்கின்றனர். இதையும் ஊடுறுவும் ஹேக்கிங் சூதாட்ட பேர்வழிகளும் இல்லாமல் இல்லை.
சதோஷி நகமேட்டோ என்பவரது குழுவால் டேட்டா மைனிங் தொழில்நுட்ப விற்பன்னர்களுக்கு வெகுமதியாக வழங்குவதற்காக 2009-ம் ஆண்டு பிட்காயின் உருவாக்கப்பட்டது. அது 2010-ம் ஆண்டு முதல் பரிவர்த்தனைக்கு வந்தது. இது போன்ற இணையத்தில் செயல்படும் 25-க்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் உள்ளன. வெளிப்படையான பரிவர்த்தனை சாத்தியமாகும் வகையில் கிரிப்டோ கரன்சி விற்பனை மையங்களும் உலகம் முழுவதும் இருக்கின்றன.
படிக்க :
பங்குச் சந்தை என்றால் என்ன ? பாகம் 1
பங்கு சந்தை : காசேதான் கடவுளடா ! | பொருளாதாரம் கற்போம் – 29
தனியார் சுதந்திரத்தில், அதன் பொருளாதாரம், வர்த்தகம், பண்பாடு போன்ற எதுவாக இருந்தாலும் அதில் அரசுத் தலையிடக் கூடாது என்ற அராஜகவாத கொள்கை கொண்டவர்களால் உருவாக்கப்பட்டது. கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையில் அதிக அளவில் தனது முதலீடுகளை   ஒரு நாடு கொண்டிருக்கும் பட்சத்தில், இணையத்தில் வல்லமை கொண்ட ஒரு குழு ஒரு நாட்டு பொருளாதாரத்தை ஒட்டு மொத்தமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கூற்கின்றனர்.
அரசுக்கு இணையான தனிநபர்களின் பணபரிவர்த்தனை முறையை தடை செய்வதற்கும், ரிசர்வ் வங்கியே ஒரு டிஜிட்டல் (கரன்சியை) நாணயமுறையை கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது. அதாவது பெயர், பரிவர்த்தனை முறை ஆகியவற்றைப் பொருத்தவரையில் கிரிப்டோ கரன்சியை ஒத்ததாக இருக்கும். ஆனால் தன்மையில், அதற்கு நேரெதிராக, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகை பரிவர்த்தனையாகவே இருக்கும்.
கிரிப்டோகரன்சியை முறைப்படுத்தி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என மோடி அரசுக்கு விருப்பம் இருந்தாலும், தனது எஜமானர்களான தனியார் முதலாளிகள் மற்றும் சக அரசியல் ஊழல் பெருச்சாளிகளின் கருப்புப் பணம் பிட்காயினில் புதைந்துள்ளதால், உடனடியாக அதற்கு தடை விதிக்கமுடியாத நிலையிலேயே ஒன்றிய அரசு இருக்கிறது. எந்த முடுவெடுத்தாலும் அதானி அம்பானி கும்பலுக்கு பெரும் வருவாயை தடுவதாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் மோடி அரசு உறுதியாக இருக்கிறது.
கதிரவன்