அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 29

மாபெரும் வீழ்ச்சி – பாகம் 1

அ.அனிக்கின்

லோ எந்த ஒரு நாட்டுக்கும் விசுவாசமானவரல்ல; ஒரு கருத்துக்கே விசுவாசமாக இருந்தார். அவர் தம்முடைய கருத்தை முதலில் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, ஜினோவா குடியரசு ஆகிய நாடுகளிடமும் ஸவோய் கோமகனிடமும் கூறினார்; ஆனால் பலனில்லை. கடைசியில் பிரான்ஸ் அவருடைய கருத்தை ஏற்றுக்கொண்ட பொழுது அவர் தன்னை ஒரு பிரெஞ்சுக்காரராகவே மனப்பூர்வமாக நினைத்துக் கொண்டார். அவர் உடனே பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெற்றார். பிறகு தன்னுடைய திட்டம் வெற்றியடைவதற்கு அவசியமானதாகக் கருதியதால் கத்தோலிக்கராகவும் மதம் மாறினார்.

இந்தக் கருத்தின் மீது லோ உண்மையான நம்பிக்கை கொண்டிருந்தார்; பிரான்சில் அது வெற்றி பெற வேண்டுமென்பதற்காக தன்னிடமிருந்த எல்லாப் பணத்தையும் கொடுத்ததோடு இதயத்தையும் கொடுத்தார். இயன்றவரை சுருட்டிக் கொள்வது, பிறகு திருட்டுப் பணத்தோடு ஓடிப் போய்விடுகின்ற சாதாரணப் போக்கிரியோடு லோவை ஒப்பிட முடியாது.

பிற்காலத்தில் அவர் எழுதிய “சுயவிளக்க அறிக்கைகளில்”, என்னுடைய நோக்கம் அப்படி இருந்திருக்குமானால் என் சொத்து முழுவதையும் பிரான்சுக்குக் கொண்டு வந்திருக்க மாட்டேன், அதிகாரத்தில் இருந்து கொண்டிருந்த பொழுதே சில சொத்துக்களையாவது வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்திருப்பேன் என்று திரும்பத் திரும்ப எழுதியிருந்தார். “அவருடைய இயல்பில் பேராசையோ, போக்கிரித்தனமோ இல்லை” என்று சான்-சிமோன் கோமகன் எழுதியிருப்பதை நாம் நம்பலாம். அவருடைய திட்டத்தின் தவிர்க்க முடியாத, தர்க்க ரீதியான விளைவினால் அவர் போக்கிரியாக்கப்பட்டார்!

1715 டிசம்பர் மாதத்தில் பொறுப்பு அரசருக்கு எழுதிய கடிதத்தில் லோ மறுபடியும் தன் கருத்துக்களை விளக்குகிறார். அதில் காணப்படுகின்ற ஒரு மர்மமான பகுதி மோசடியைப் போலத் தோன்றுகிறது. “இந்த வங்கி என்னிடமிருக்கும் ஒரே ஒரு கருத்து அல்ல; அது என்னுடைய மிகப் பெரிய கருத்துமல்ல. என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது; அதைச் செயல்படுத்தும் பொழுது பிரான்சுக்குச் சாதகமான முறையில் ஏற்படப் போகின்ற மாற்றங்களைக் கண்டு ஐரோப்பாவே திகைத்து நிற்கும். இந்தியாவிற்குக் கடற்பாதையைக் கண்டு பிடித்ததைக் காட்டிலும், கடன் வசதியைப் பின்பற்றியதைக் காட்டிலும் மிக முக்கியமான மாற்றங்கள் அதனால் ஏற்படும். மாட்சிமை பொருந்திய அரசுப் பிரதிநிதி அவர்கள் இந்தப் பணியைச் செய்வதன் மூலம் இன்று இந்த ராஜ்யம் இருக்கின்ற வருந்தற்குரிய நிலையிலிருந்து அதை உயர்த்த முடியும்; இதுவரையில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமான பலமுள்ளதாக ஆக்க முடியும்; நிதித் துறையில் ஒழுங்கை ஏற்படுத்தி விவசாயம், தொழில்கள், வர்த்தகம் ஆகியவற்றுக்குப் புத்துயிரளித்து ஆதரவு கொடுத்து வளர்க்க முடியும்.” (1)

திட்டங்களைத் தயாரிப்பவர்கள் எப்பொழுதுமே ஆட்சியாளர்களிடம் தெருவெல்லாம் தங்கம் கொழிக்கச் செய்வோம் என்று வாக்குறுதிகள் கொடுப்பதுண்டு. ஆனால் இங்கே ஒரு பொருளாதார இரஸவாதி ஏதோ ஒரு வகையான “மந்திரக் கல்லை” ஏற்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இந்தத் தெளிவற்ற வாக்குறுதிகளுக்குப் பின்னர் இருந்த திட்டம் என்ன என்பது இரண்டு வருடங்களுக்குப் பிறகு தெளிவாகத் தெரிந்தது. 1717-ம் வருடத்தின் கடைசியில் லோ தனது இரண்டாவது பிரம்மாண்டமான நிறுவனத்தை, இந்தியத் தீவுகள் கம்பெனியை ஏற்படுத்தினார். அப்பொழுது பிரான்சுக்குச் சொந்தமாக இருந்த மிலிஸிப்பி பள்ளத்தாக்கில் மக்களைக் குடியேற்றுவதை நோக்கமாகக் கொண்டு முதலில் தொடங்கப்பட்டபடியால் அது மிஸிஸிப்பி கம்பெனி என்று வழக்கமாகச் சொல்லப் பட்டது .

இதில் குறிப்பிடத்தக்க புதிய அம்சம் ஏதும் இருப்பதாக வெளியே தெரியவில்லை. இங்கிலாந்தில் ஒரு நூற்றாண்டுக்கு மேல் கிழக்கிந்தியக் கம்பெனி வளங்கொழித்துக் கொண்டிருந்தது. ஹாலந்திலும் அதைப் போன்று ஒரு கம்பெனி இருந்தது. ஆனால் லோ தொடங்கிய கம்பெனி இவற்றி லிருந்து வேறுபட்டிருந்தது. கம்பெனியின் பங்குகளைத் தமக்குள்ளாகவே பிரித்துக் கொண்டுள்ள வர்த்தகர்களின் குறுகலான கோஷ்டியின் சங்கம் அல்ல அது.

மிஸிஸிப்பி கம்பெனியின் பங்குகளை முதலாளிகளில் சற்று அதிகமான பகுதியினருக்கு விற்பனை செய்யவும் பங்குச் சந்தையில் தீவிரமாக விற்பனை செய்யவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்தக் கம்பெனி அரசுடன் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்தது. இது அரசிடமிருந்து பல துறைகளில் அதிகமான சலுகைகளையும் ஏகபோக வர்த்தகம் செய்வதற்குரிய அதிகாரத்தையும் பெற்றிருந்தது என்பது மட்டும் இதன் அர்த்தமல்ல. அதன் தலைமையிடத்தில், அமைதியே உருவெடுத்த ஸ்காட்லாந்துக்காரருக்கு அருகில் பிரான்சின் பொறுப்பு அரசர், ஆர்லியானைச் சேர்ந்த ஃபிலீப் அமர்ந்திருந்தார்.

படிக்க:
♦ மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?
♦ தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !

1719-ம் வருடத்தில் ஜெனரல் வங்கியை அரசு எடுத்துக் கொண்டபடியால் அது ராயல் வங்கி என்று அழைக்கப்பட்டது. அந்த வங்கியோடு இந்தக் கம்பெனி இணைக்கப்பட்டது. மிஸிஸிப்பி கம்பெனியில் பங்குகள் வாங்குவதற்காக இந்த வங்கி முதலாளிகளுக்குக் கடன் கொடுத்தது. அந்தக் கம்பெனியின் நிதிப் பொறுப்பையும் வங்கி கவனித்துக் கொண்டது. இரண்டு ஸ்தாபனங்களின் நிர்வாகப் பொறுப்பையும் லோ தன்னிடமே வைத்துக் கொண்டார்.

ஆகவே, லோவின் இரண்டாவது “மாபெரும் கருத்து” என்பது மூலதன மத்தியப்படுத்துதல், மூலதனக் கூட்டமைப்புக் கருத்தாகும். இங்கும் லோ ஒரு தீர்க்கதரிசியாக, தன்னுடைய காலத்தைக் காட்டிலும் ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கு மேலும் முந்தியிருப்பவராகத் தோன்றுகிறார். மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் கூட்டுப் பங்குக் கம்பெனிகளின் வேகமான வளர்ச்சி தொடங்கவில்லை. இன்று வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரம் முழுவதிலுமே, குறிப்பாக பெரும் அளவில் உற்பத்தி நடைபெறும் துறையில், அவையே இருக்கின்றன.

பெருந்தொழில்களை ஒரு முதலாளி – சில முதலாளிகள் கூட – அவர் எவ்வளவு பணக்காரராக இருந்த போதிலும் தனியே ஆரம்பிக்க முடியாது. அத்தகைய தொழில்களில் பல முதலாளிகளின் மூலதனத்தையும் ஒன்று சேர்ப்பது அவசியமாக இருக்கிறது. சிறு பங்குதாரர்கள் பணத்தை மட்டுமே கொடுக்கிறார்கள், அங்கே நடைபெறும் காரியங்களில் அவர்களுக்கு ஒரு வகையான செல்வாக்கும் கிடையாது. மேலே உட்கார்ந்திருக்கும் சிலர் தொழிலை நடத்துகிறார்கள். மிஸிஸிப்பி கம்பெனியைப் பொறுத்த வரையிலும், லோவும் அவருடைய கூட்டாளிகளான சிலரும் அப்படிப்பட்ட நிலையில் இருந்தார்கள். இத்தகைய கூட்டுப் பங்குக் கம்பெனிகள் வகித்த முற்போக்கான பாத்திரத்தைப் பற்றி மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்: ”ஒரு ரயில்வே அமைப்பை நிர்மாணிப்பதற்குப் போதுமானதாக இருக்கும் அளவுக்குச் சில தனிப்பட்ட மூலதனங்கள் வருகின்ற வரை மூலதனத் திரட்சி காத்திருப்பதென்றால் உலகத்தில் இன்னும் ரயில்வேக்கள் ஏற்பட்டிருக்காது. இதற்கு மாறாக, மத்தியப் படுத்துதல் கண்ணைச் சிமிட்டும் நேரத்தில் கூட்டுப் பங்குக் கம்பெனிகள் மூலம் இதைச் செய்து முடித்தது”. (2)

கூட்டுப் பங்குக் கம்பெனிகளின் நடவடிக்கைகளில் பங்குகளை வாங்குவதிலும் விற்பனை செய்வதிலும் மோசடிகளும் ஊக வாணிகமும் தவறாமல் உண்டு. லோவின் திட்டம் இது வரையிலும் அறிந்திராத அளவுக்குப் பங்கு மோசடி நடைபெற உதவியது. கம்பெனி ஒரு வருட காலத்துக்குப் பிறகு உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டதும் லோ பங்குகளின் விலையை அதிகப்படுத்துவதற்கும் அவற்றின் விற்பனையைப் பெருக்குவதற்கும் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தார். அவர் ஒரு ஆரம்பம் என்ற வகையில் 500 லிவர் பங்குகளில் இரு நூறு பங்குகளை வாங்கினார். அப்போது இவை ஒவ்வொன்றுக்கும் 250 லிவர் தான் விலை. ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு பங்குக்கும் அன்றைக்கு அது என்ன விலைக்குப் போனாலும் கூட அதன் அறிவிக்கப்பட்ட மதிப்பான 500 லிவர் கொடுப்பதாக அவர் உறுதியளித்தார். இது பலருக்கும் பொருளற்ற காரியமாகத் தோன்றியது. ஆனால் இதற்குப் பின்னால் நுண்ணறிவு கொண்ட ஒரு திட்டம் இருந்தது. அது வெகுசீக்கிரத்தில் நிறைவேறியது , ஆறு மாதங்களில் ஒவ்வொரு பங்கின் மதிப்பும் அதன் அறிவிக்கப்பட்ட மதிப்பைப் போல பல மடங்கு அதிகமாயிற்று; லோ ஏராளமான லாபத்தை ஒதுக்கிக் கொண்டார்.

ஆனால் அது அவ்வளவு முக்கியமல்ல. இப்பொழுது அவருக்குச் சில நூறாயிரங்கள் அத்தனை முக்கியமல்ல. பங்குகளை விளம்பரப்படுத்த வேண்டும், வாங்குபவர்களைக் கவர வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். அதே சமயத்தில் அவர் கம்பெனியின் வர்த்தகத்தை மிகவும் பெரிய அளவுக்கு, மிக அதிகமான வேகத்தோடு விரிவாக்கிக் கொண்டிருந்தார். அவர் உண்மையான வர்த்தகத்தைத் திறமைமிக்க விளம்பரத்தோடு இணைத்தார். இந்த விஷயத்திலும் பிற்காலத்தில் நடக்கப் போவதை அவர் முன்கூட்டியே செய்து காட்டினார்.

misisipi company political economy
மிஸிஸிப்பி குறித்த கதைகள் லோ -வின் வார்த்தை ஜாலத்தால் செல்வம் கொழிக்கும் இடமாக புனையப்பட்டது.

லோ மிஸிஸிப்பி பள்ளத்தாக்கில் மக்கள் குடியேறுவதற்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார். அங்கே ஒரு நகரத்தை ஏற்படுத்தினார்; பொறுப்பு அரசரை கௌரவிக்கின்ற வகையில் அதற்கு நியூ ஆர்லியான் என்று பெயரிட்டார். அங்கே குடியேறுவதற்கு சொந்த விருப்பத்தின் பேரில் வந்தவர்களின் எண்ணிக்கை போதுமான அளவுக்கு இல்லாதபடியால் கம்பெனியின் வேண்டுகோளின் படி அரசாங்கம் திருடர்களையும் போக்கிரிகளையும் விபசாரிகளையும் கட்டாயப்படுத்தி அங்கே அனுப்பியது. அதே சமயத்தில் லோ பலவிதங்களிலும் கவர்ச்சிகரமான பிரசுரங்களை அச்சிட்டு வினியோகிக்க ஏற்பாடு செய்தார். இந்தப் பிரசுரங்களின் படி அது கற்பனையையும் மிஞ்சும் வகையில் வளங்கொழிக் கும் நாடு; அங்கே வசிப்பவர்கள் பிரெஞ்சுக்காரர்களைச் சந்திப்பதில் பேரானந்தம் அடைகின்றவர்கள்; நம்முடைய அற்பமான சிங்காரப் பொருள்களுக்குப் பரிவர்த்தனையாக அவர்கள் தங்கம், வைரம், இன்னும் பலவிதமான விலையுயர்ந்த பொருள்களைக் கொடுக்கிறார்கள். அங்கே இருக்கும் சிகப்பு இந்தியர்களைக் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றுவதற்காக ஏசு சபையைச் சேர்ந்த பாதிரியார்களைக்கூட அவர் அங்கே அனுப்பி வைத்தார்.

அப்பொழுது மோசமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சில பிரெஞ்சுக் காலனி கம்பெனிகளை லோவின் கம்பெனி விழுங்கி அது சக்தி மிக்க ஏகபோகக் கம்பெனியாக மாறியது. அந்தக் கம்பெனிக்குச் சொந்தமான சில டஜன் பழைய கப்பல்கள் லோவின் சொல் வன்மையாலும் அவருடைய உதவியாளர்களின் பேனா வன்மையாலும் வெள்ளியையும் பட்டுத் துணிகளையும் வாசனைத் திரவியங்களையும் புகையிலையையும் பிரான் சுக்குக் கொண்டு வருகின்ற மாபெரும் கப்பல் படையாக மாறின.

பிரான்சிலும் கூட அந்தக் கம்பெனி வரி வேட்டையை மேற்கொண்டது; நியாயமாகச் சொல்வதென்றால் தனக்கு முன்பு கொள்ளையடித்த பலரைக் காட்டிலும் அதிகமான அறிவோடும் திறமையோடும் இந்த வேலையைச் செய்தது. பொதுவாக, இவை அனைத்தும் சிறப்பான ஸ்தாபன ஏற்பாடுகளும் துணிச்சலான தொழிலூக்கமும் கட்டுக்கடங்காத வீரசாகஸமும் கேவலமான மோசடியும் சேர்ந்த விசித்திரமான கலவையாக இருந்தன.

இந்தக் கம்பெனி மிகவும் குறைவான லாப ஈவுத் தொகையையே கொடுத்து வந்த போதிலும், 1719-ம் வருட வசந்த காலத்தின் போது அதன் பங்குகளின் விலை பலூன்களைப் போல மேலே ஏறின. இதற்காகத்தான் லோ காத்துக் கொண்டிருந்தார். சந்தையைத் திறமையோடு பயன்படுத்திக் கொண்டு அவர் புதிய பங்குகளை வெளியிட்டார்; அவற்றை மேலும் மேலும் அதிகமான விலைகளில் விற்பனை செய்தார். வெளியிடப்படும் பங்குகளைக் காட்டிலும் தேவை அதிகரித்தது; புதிய பங்குகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டதும் கம்பெனியின் தலைமை நிலையத்துக்கு முன்பு ஆயிரக் கணக்கானவர்கள் இரவு பகலாகக் காத்துக் கொண்டு நின்றனர்.

படிக்க:
♦ பங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு நிறுவனம்
♦ பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல! இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? | படக் கட்டுரை

இத்தனைக்கும் 1719 செப்டெம்பர் மாதத்திலேயே கம்பெனி 500 லிவர் மதிப்புள்ள பங்குகளை 5,000 லிவர் தொகைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தது. செல்வாக்கு மிக்கவர்கள், பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தலைமை நிலையத்துக்கு முன்னால் காத்திருக்கவில்லை; அவர்கள் லோவையும் மற்ற இயக்குநர்களையும் சூழ்ந்து கொண்டு தாங்களும் பணம் கட்ட அனுமதிக்கப்பட வேண்டுமென்று கெஞ்சினார்கள். ஏனென்றால் வெளியிட்டதும் 8,000 லிவர் விலை சொல்லப்படுகிற ஒரு பங்கை மறு நாளே பங்குச் சந்தையில் 7,000 அல்லது 8,000 லிவர் தொகைக்கு விற்பனை செய்துவிடலாம்! இது பற்றிக் குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பலர் புகைபோக்கியின் வழியாக இறங்கி லோவின் அலுவலகத்துக்குள் நுழைவதற்கு முயன்றிருக்கின்றனர்; ஒரு சீமாட்டி லோவின் வீட்டுக்கு முன்னால் தன்னுடைய கோச் வண்டியைக் கவிழ்க்குமாறு தன்னுடைய வண்டிக்காரனுக்கு உத்தரவிட்டாள்; வண்டி கவிழ்ந்து கிடப்பதைப் பார்த்துக் கருணை மிக்க லோ உதவி செய்ய வருவார்; அப்பொழுது அவரிடம் தன்னுடைய கோரிக்கையைச் சொல்லலாம் என்று நினைத்தாள்.

லோவைச் சந்திப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள் கொடுத்த லஞ்சப் பணத்தின் மூலம் அவருடைய செயலாளர் பெரும் பணக்காரரானார். பொறுப்பு அரசருடைய தாயார் குத்தலாகப் பேசக் கூடிய, வயோதிகப் பெண்மணி. அவர் ஜெர்மனியிலிருந்த தன்னுடைய உறவினர்களுக்கு எழுதிய கடிதங்களில் இந்த நம்ப முடியாத விசித்திரமான காலத்தைப் பற்றிய பதிவுக் குறிப்பைத் தந்திருக்கிறார். ”அவர்கள் எப்பொழுதும் லோவுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இரவிலும் பகலிலும் அவருக்கு ஓய்வே கிடையாது. ஒரு கோமகள் பகிரங்கமாக அவர் கையில் முத்தமிட்டிருக்கிறாள். ஒரு கோமகள் அவர் கையை முத்தமிடுகிறாளென்றால் மற்ற பெண்கள் அவருடைய உடலின் எந்த பாகங்களையெல்லாம் கெளரவிக்கத் தயாராயிருக்கிறார்களோ?” என்று எழுதினாள்.

1719 நவம்பர் 9-ம் தேதி எழுதிய கடிதத்தில் அவள் பின்வரும் நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறாள்: “சமீபத்தில் சில பெண்கள் அவரைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்த பொழுது அவர் அறையிலிருந்து வெளியே போக விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். அவர்கள் அவரைப் போக விடவில்லை. அவர் வேறு வழியில்லாததால் என்ன காரணத்துக்காகப் போக வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறார். ‘பூ! இது ஒரு கஷ்டமா? நீங்கள் இங்கேயே செய்யுங்கள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பெண்கள் அவரோடு தொடர்ந்து இருந்திருக்கிறார்கள்” (3)

misisipi bubble political economy
பங்குசந்தை அமந்துள்ள தெருவை சுட்டும் ஓவியம்.

பங்குச் சந்தை இருந்த கென்காம்புவா வீதியில் இன்னும் விசித்திரமான காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. அதிகாலையிலிருந்து அந்தி நேரம் வரையிலும் அங்கே பெருந் திரளான மக்கள் நின்று கொண்டு பங்குகளை வாங்குவதும் விற்பனை செய்வதும் விலைகளைப் பேசிக் கொண்டும் கணக்குப் போட்டுக் கொண்டும் நின்றனர். ஐந்நூறு லிவர் மதிப்புள்ள பங்குகள் பத்தாயிரத்துக்கு உயர்ந்தன; பிறகு பதினையாயிரத் துக்கு மேலே போய் இருபதாயிரத்தில் நின்றன. திடீரென்று பணத்தைக் குவிக்க வேண்டும் என்ற வெறி எல்லா வகுப்பினரையும் ஒன்றுபடுத்தியது. இதற்கு முன்பு மாதாகோவில் வழிபாட்டில் கூட அவர்கள் ஒன்று சேர்ந்ததில்லை. சீமாட்டி வண்டியோட்டியோடு நெருக்கி நின்றாள்; கோமகன் காவற்காரனோடு வாய்ச்சண்டை போட்டார். மதகுரு பெட்டிக் கடைக்காரனோடு கூட்டுச் சேர்ந்து கணக்குப் போட்டார். காசே கடவுளடா!

பங்குகளின் விலைக்காகக் கொடுக்கப்பட்ட தங்கம், வெள்ளியை வாங்குவதற்கு மக்கள் தயங்கினார்கள். இந்த திடீர் உயர்வின் போது பத்து பங்குகள் 1.4 அல்லது 1.5 டன் வெள்ளியின் விலைக்குச் சமமாக இருந்தன! அநேகமாக எல்லா வழங்கீடுகளுமே காகிதப் பணத்தில் தான் செய்யப்பட்டன. இந்தக் காகிதச் செல்வம் – பங்குகளும் வங்கி நோட்டுகளும் – நிதி மாயாவி லோவின் படைப்பாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)  J. Law, Oeuvres complètes, Vol. 2, Paris, 1934, p. 266.

(2) K. Marx, Capital, Vol. 1, Moscow’, 1972, p. 588.

(3) C. Kunstler, La vie quotidienne sous la Régence, Paris, 1960, p, 121.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க