பங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு நிறுவனம்

மிசிசிப்பி கம்பெனியை ஆரம்பித்த ஜான் லோ என்ற ஸ்காட்லாந்துக்காரர் இங்கிலாந்தில் பல மோசடிகள் செய்து விட்டு ஐரோப்பாவிற்கு தப்பி ஓடுகிறார். உலகின் முதல் (மோசடி) பங்கு கம்பெனி வரலாறு.

பந்தய மூலதனம் – 4

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும், நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, வாரன் பஃபெட், இதற்கு முன் ஹர்ஷத் மேத்தா இவர்கள் எல்லாம் பணத்தை குட்டி போட்டு பெருகச் செய்யும் மந்திரவாதிகள் என்று வணிக பத்திரிகைகளால் கொண்டாடப்படுபவர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருப்பவர்கள். 1980-களின் இறுதியில் ஹர்ஷத் மேத்தாவை “பங்குச் சந்தையின் அமிதாப் பச்சன்” என்று அவரது பக்தர்கள் கொண்டாடுவதாக இந்தியா டுடே பத்திரிகை குறிப்பிட்டது. இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக, முதல் பங்குச் சந்தை வித்தகராக சாகசம் செய்த ஒருவரின் கதையை பார்ப்போம்.

இன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிசிசிப்பி கம்பெனிதான் உலகின் முதல் பொது பங்கு நிறுவனம். அப்போது பிரான்சுக்கு சொந்தமான மிசிசிப்பி பள்ளத்தாக்கில் மக்களை குடியேற்றுவதை தனது தொழிலாகக் கொண்டு தொடங்கப்பட்டது அந்தக் கம்பெனி.

ஜான் லோ

ஜான் லோ

இந்நிறுவனம் அதே காலகட்டத்தில் செயல்பட்ட இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி போலவோ, ஹாலந்தின் கிழக்கிந்திய கம்பெனி போலவோ கம்பெனியின் பங்குகளை தமக்குள்ளாகவே பிரித்துக் கொண்டுள்ள வணிகர்களின் சிறு குழுவின் சங்கம் அல்ல. மிசிசிப்பி கம்பெனியின் பங்குகள் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு விற்கப்பட்டது. அந்த பங்குகளை வாங்கி விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மிசிசிப்பி கம்பெனி ஆரம்பிப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் முதல் வங்கியான ராயல் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. ராயல் வங்கியையும், மிசிசிப்பி கம்பெனியையும் ஆரம்பித்தவர் ஜான் லோ என்ற ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பார்ப்பது போல “கூல்” ஆக சூதாடுவதில் திறமை படைத்தவர். ஸ்காட்லாந்திலும், இங்கிலாந்திலும் பல திருவிளையாடல்களை செய்து விட்டு ஐரோப்பிய கண்டத்துக்கு தப்பி ஓடுகிறார்.

நமது காலத்தின் நீரவ் மோடி அல்லது விஜய் மல்லையா அல்லது தாவூத் இப்ராகிம் போன்றவர்களை இவரோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம். இவர்கள் எங்கு சென்றாலும் அந்தப் பகுதி பணக்கார வட்டங்களில் இடம் பிடித்து விடுகின்றனர். தமது துணிச்சலான, அடாவடியான திட்டங்கள் மூலம் பணத்தை குவித்து விடுகின்றனர்.

அரசால் ஆதரிக்கப்பட்டு, நம்பகமானது என்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு வங்கி தன் வசம் இருக்கும் வைப்புத் தொகைகளை விட பல மடங்கு அதிகம் கடன் கொடுப்பது சாத்தியம் என்பதை ஜான் லோ பயன்படுத்திக் கொண்டார். வங்கிகளின் இந்த செயல்பாடு முதலாளித்துவ சமூகத்தின் கடன் கட்டமைப்புக்கும், கூட்டு பங்கு நிறுவனங்களை உருவாக்கி பெரிய பெரிய புராஜக்ட்களை தொடங்கவும் அடிப்படையாக உள்ளது. அதன் அடிப்படை வடிவம் fractional banking என்று அழைக்கப்படுகிறது.

பிரான்சில் அதிகாரத்தில் இருந்த ஆர்லியன்ஸ் கோமகனின் ஆதரவுடன், அரசின் ஆதரவை பின்புலமாகக் கொண்டு ராயல் வங்கியையும், மிசிசிப்பி கம்பெனியையும் ஒன்றை ஒன்று தாங்கிப் பிடிக்கும்படி ஆரம்பித்தார், ஜான் லோ.
மிசிசிப்பி கம்பெனியில் பங்குகளை வாங்குவதற்கு ராயல் வங்கி முதலாளிகளுக்குக் கடன் கொடுத்தது. அந்தக் கம்பெனியின் நிதி விவகாரங்களயும் இந்த வங்கி கவனித்துக் கொண்டது. இந்த இரண்டு நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பை லோ கவனித்துக் கொண்டார்.

அதாவது கம்பெனியின் பங்குகளை ஆயிரக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் வாங்கினாலும் அவர்களால் நிர்வாகத்தை நேரடியாக கட்டுப்படுத்துவதற்கான சாத்தியம் இல்லாமல் இருந்தது. லோ மற்றும் அவரது கூட்டாளிகளான சிலரும் நிறுவனத்தின் மேலே உட்கார்ந்து கொண்டு தொழிலை நடத்தினார்கள்.

கம்பெனி பங்குகளை வெளியிட்டு ஒரு வருடத்துக்குப் பிறகு அவை சந்தையில் 250 விலைக்கு வாங்கி விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. இந்தக் கட்டத்தில் லோ 6 மாதங்களுக்குப் பிறகு 200 பங்குகளை 500-க்கு வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். 6 மாதங்களுக்குப் பிறகு 500-க்கு விற்கலாம் என்று ஆசைப்பட்டு பலர் போட்டி போட்டு பங்குகளை வாங்க அவற்றின் விலை தாறுமாறாக ஏறியது.

ஏகாம்பரம், சுப்பிரமணி குரங்கு வியாபாரம் நினைவுக்கு வருகிறதா? சமகாலத்தில் இதை share buyback என்று அழைக்கின்றனர். நமது காலத்தில் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் டி.சி.எஸ், விப்ரோ, எச்.சி.எல், எல்&டி இன்ஃபோடெக் போன்றவை தம் வசம் குவிந்திருக்கும் லாபத்தை ஈவுத் தொகையாக கொடுக்கவில்லை. மாறாக, அந்தப் பணத்தை பயன்படுத்தி சந்தையில் தம் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலம் அவற்றின் விலையை உயர்த்துகின்றன.

மிசிசிப்பி பள்ளத்தாக்கில் நியூ ஆர்லியான் என்ற நகரத்தை இந்தக் கம்பெனி உருவாக்கியது. அங்கு குடியேற்றுவதற்காக பிரான்ஸ் அரசு தண்டிக்கப்பட்ட போக்கிரிகளையும், திருடர்களையும், விபச்சாரிகளையும் கட்டாயமாக அங்கு அனுப்பி வைத்தது. கம்பெனியின் திட்டத்துக்கு அரசு முட்டுக் கொடுக்கிறது.

நொடித்துப் போகும் நிலையில் இருந்த இன்னும் சில பிரெஞ்சு காலனிய கம்பெனிகளை லோ வாங்கினார். செலவழிப்பதற்குத்தான் பிரச்சனையே இல்லையே. நோட்டு அடிக்கும் வங்கியே இவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இவ்வாறாக, மிசிசிப்பி கம்பெனி காலனிய வர்த்தகத்தில் ஏகபோக கம்பெனியாக மாறியது.

அந்தக் கால பிரான்சில் அரசு வரி வசூலிக்கும் உரிமையை முதலாளிகளுக்கு ஏலம் போட்டு வழங்கியது. அதை பயன்படுத்தி மிசிசிப்பி கம்பெனி வரி வசூலிக்கும் குத்தகையை எடுத்து மக்களை கசக்கிப் பிழிந்து பணத்தை குவித்தது.

நியூ ஆர்லியான் நகரம் பற்றிய கவர்ச்சிகரமான பிரசுரங்களை லோ அச்சிட்டு வெளியிட்டார். “மிசிசிப்பி பள்ளத்தாக்கு கற்பனைக்கெட்டாத வளம் கொழிக்கும் நாடு. அங்கே வசிப்பவர்கள் பிரெஞ்சுக்காரர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்; நாம் கொடுக்கும் சில சொற்ப விலையிலான பொருட்களுக்கு பதிலாக தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை கொடுக்கிறார்கள்.”

“மிசிசிப்பி கம்பெனியின் கப்பல்கள் வெள்ளியையும், பட்டுத் துணிகளையும், வாசனைத் திரவியங்களையும், புகையிலையையும் பிரான்சுக்குக் கொண்டு வந்து குவிக்கின்றன” என்றெல்லாம் அந்த பிரசுரங்கள் மிசிசிப்பி பள்ளத்தாக்கின் பெருமைகளையும், அதில் மிசிசிப்பி கம்பெனியின் ஈட்டும் லாபத்தையும் வானுயரத்துக்கு ஏற்றி புகழ்ந்தன.

அரசு ஆதரவு, பரபரப்பான விளம்பரங்கள், சந்தையில் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் இவற்றின் மூலமாக கம்பெனி குறைவான ஈவுத் தொகையை கொடுத்து வந்தாலும், 4 ஆண்டுகளிலேயே அதன் பங்கு விலை பலூன் போல மேலே ஏறியது. சந்தை நிலைமையை திறமையாக கணித்து மேலும் புதிய பங்குகளை லோ வெளியிட்டார். மேலும் மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்தார். புதிய பங்குகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் கம்பெனியின் அலுவலகத்துக்கு முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் இரவு பகலாக காத்துக் கொண்டு நின்றனர். இவ்வளவுக்கும் 500 மதிப்பிலான பங்கு 5000-க்கு விற்கப்பட்டது.

செல்வாக்கு மிக்கவர்கள், பிரபு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகளை 5000-க்கு வாங்கி அடுத்த நாளே பங்குச் சந்தையில் 6,000 7,000-க்கு விற்று விட போட்டி போட்டனர். 500 மதிப்பிலான பங்கின் விலை 10,000-க்கும், 15,000-க்கும் அதற்கும் மேலே போய் 20,000-க்கும் உயர்ந்தது.

புதிய பங்குகளை வெளியிட்டு ஈட்டிய பணத்தில் ஒரு சிறுபகுதி மட்டுமே மிசிசிப்பி கம்பெனி கப்பல்கள் வாங்கவும், சரக்குகளை வாங்கவும் செலவிடப்பட்டது. ஆனால், பெரும்பகுதி பிரான்ஸ் அரசின் செலவுகளுக்கு கடனாக கொடுக்கப்பட்டது. பிரான்ஸ் அரசின் கடன் பத்திரங்களை வாங்கியவர்களிடமிருந்த அவற்றை வாங்கியதன் மூலம் கம்பெனியே ஒட்டு மொத்தக் கடனையும் சமாளித்தது. அரசுக்கு புதிய கடனையும் வாரி வழங்கியது. மிசிசிப்பி கம்பெனியும், ராயல் வங்கியும், அரசும் இணைந்து யாருடைய தலையிலோ மிளகாய் அரைக்கின்றனர்? யாராயிருக்கும்?

இந்நிலை நீண்ட நாள் நீடிக்க முடியவில்லை. லோ போன்ற பிற பந்தய வணிக ‘திறமைசாலிகள்’ இந்த குழப்பத்துக்குள் புகுந்து சம்பாதிக்க ஆரம்பித்தனர். தம் வசம் இருந்த பங்குகளை அதிக விலைக்கு தள்ளி விட்டனர். பணத்தை பிற சொத்துகளில் முதலீடு செய்து ஒதுக்கினர். பங்கு விலை விழுந்து விடாமல் இருக்க லோவின் ராயல் வங்கி நோட்டுகளை அச்சடித்து குவித்தது.

ஒரு ஆண்டுக்குள் வங்கி நோட்டுகளின் மதிப்பு குறைந்து பண வீக்கம் தலை விரித்து ஆடியது. எல்லா பொருட்களின் விலைகளும் வேகமாக மேலே ஏறின. பாரிசில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த காகித நோட்டுக்கள் பெருமளவில் பொதுமக்கள் மத்தியில் வினியோகமாகியிருந்தன. கைவினைஞர்கள், சிறு வணிகர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், ஏன் விவசாயிகளும் கூட சிறு தொகைகளாக கணிசமான காகிதப் பணத்தை சேர்த்து வைத்திருந்தனர். அவர்களது சேமிப்புகளும், வருவாயும் செல்லாக் காசாகி விட்டன. மறுபக்கம் ஒரு சில திடீர்ப் பணக்காரர்கள் இந்த சூதாட்ட வெறியில் பெருமளவு சொத்துக்களை குவித்து விட்டனர்.
அந்த ஆண்டு இறுதியில் வங்கி நோட்டுகளை யாரும் மதிக்காத நிலைமை ஏற்பட்டது. லோவின் வங்கியும், கூட்டுப் பங்கு நிறுவனமும் இழுத்து மூடப்படுவது ஆரம்பமானது.

இந்த சிறு வரலாற்றின் அனைத்து பாத்திரங்களையும் கவனமாக குறித்துக் கொள்ளுங்கள். அரசு ஆதரவு, வங்கிக்கும் கூட்டுப் பங்கு கம்பெனிக்கும் தொடர்பு, பங்கு விலைகளை ஏற்றுவதற்கு கம்பெனி எடுக்கும் நடவடிக்கைகள், கம்பெனி பற்றிய மிகையான விளம்பரங்கள், பங்கு விலையை வாங்குவதற்கு போட்டி, ஒரு சில திடீர் பணக்காரர்கள் தோற்றம், பெருமளவு ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுதல், பண வீக்கம், விலை வாசி உயர்வு, பெரும்பகுதி சிறு முதலீட்டாளர்கள் சேமிப்புகளை இழத்தல் – இது கூட்டுப் பங்கு கம்பெனிகள், பங்குச் சந்தை நடைமுறைகளில் தவிர்க்க இயலாமல் மீண்டும் மீண்டும் நடந்து வரும் விஷயங்கள்.

பங்கு நிறுவனங்கள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாத்திரத்தையும் வகிக்கின்றன. மேலே சொன்ன வரலாற்றில் நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்தை உருவாக்கி வளர்ப்பதற்கு இந்த கூட்டுப் பங்கு முறை பயன்பட்டது. அது போல, ரயில்வே, பெரிய கட்டுமான திட்டங்கள், ஆலைகள் போன்ற பெரிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒற்றை முதலாளியின் மூலதனம் போதாத நிலையில் பலரிடமிருந்து பணத்தைத் திரட்டுவதற்கு இது ஒரு நல்ல உத்தியாக பயன்பட்டது, பயன்படுகிறது.

ஜான் லோவின் வங்கியும், பங்கு நிறுவனமும் காலத்திற்கு முந்தியவை. 18-ம் நூற்றாண்டு பிரான்சில் அவை 4-6 ஆண்டுகள் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம். 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டிலும் கூட்டுப் பங்கு நிறுவனங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. இன்றைக்கு உலகின் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்துவது வங்கிகளும், முதலீட்டு நிறுவனங்களும், கூட்டுப் பங்கு நிறுவனங்களும், பங்குச் சந்தை வர்த்தகமும் என்று ஆகி விட்டிருக்கிறது.
எப்படி என்று பார்க்கலாம்.

இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள ஜான் லோ பற்றிய முழுமையான விபரங்களுக்கு அ.அனிக்கின் எழுதிய “அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம்” (முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ 1983) என்ற புத்தகத்தை பார்க்கவும்.

ஜான் லோ குறித்து சில நாட்களுக்கு முன் வெளியான ஒரு ஆங்கிலக் கட்டுரை  – John Law: the Scottish gambler who rescued France from bankruptcy

(தொடரும்)
நன்றி : new-democrats

தொடரின் முந்தைய பாகங்கள்:
பங்குச் சந்தை என்றால் என்ன ? – பாகம் 1
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?

3 மறுமொழிகள்

  1. நம் மக்களில் பலர் ஏமாந்தாலும் மீண்டும்,மீண்டும் நிதி நிறுவணங்களில் அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க