து பெரியார் மண். தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காலூன்ற முடியாது” என்று தமிழக அறிவுத்துறையினரும் முற்போக்கு – ஜனநாயக சக்திகளும் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். தன் வரலாறு நெடுகிலும் பார்ப்பனிய சித்தாந்தத்தை எதிர்த்து போராடிவந்த தமிழ்நாட்டைப் பற்றி, நாம் இவ்வாறு கருதிக் கொள்ள நியாயம் உண்டுதான்.
ஆனால், இவ்வாறு பேசுவது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளைப் பற்றி குறைமதிப்பிடவும் நமது செயலின்மையை மறைத்துக் கொள்ளவுமே பயன்பட்டு வருகிறது என்பது அபாயமான போக்கு. நமது அசட்டைத்தனத்தின் மீதுதான் பாசிசம் மெல்ல வளர்ந்து வருகிறது. இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் தமிழகத்தில், அண்மைக் காலமாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, சற்று பரிசீலனை உணர்ச்சியோடு மீள்பார்வை பார்ப்பது அவசியம்.
000
தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்ட தருணம் பார்த்து கழுகு போல் காத்திருந்த பா.ஜ.க-விற்கு கிடைத்த அரிய வாய்ப்புதான் அரியலூர் மாணவி லாவண்யாவின் தற்கொலை. கடந்த ஜனவரி 19-ம் தேதியன்று, தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி என்ற கிறித்துவ பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டார்.
படிக்க :
‘ஹலால் ஜிகாத்’ : முஸ்லீம்களின் மீதான காவிகளின் அடுத்தக்கட்ட தாக்குதல் !
தேர்வை புறக்கணித்த கர்நாடக மாணவர்கள் : நடுநிலை என்பது காவிக்கு துணைபுரியவே உதவும் !
லாவண்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், கட்டாய மதமாற்றத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என தனது கேடான மதவெறி நோக்கத்திற்கு மாணவியின் மரணத்தை துருப்புச் சீட்டாக்கிக் கொண்டது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.
தனது தற்கொலைக்கு மதமாற்றம்தான் காரணம் என லாவண்யா பேசுவதைப் போன்ற ஒரு காணொளியை, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் பகிர்ந்ததும் விசயம் பற்றிக் கொள்கிறது. பா.ஜ.க உள்ளிட்டு விஷ்வ இந்து பரிஷித் (வி.எச்.பி), இந்து முன்னணி, அகில பாரதிய வித்யா பரிஷித் (ஏ.பி.வி.பி) போன்ற சங்க பரிவார அமைப்புகள் அனைத்தும் இணைந்துகொண்டு “கிறித்துவப் பள்ளியை மூடவேண்டும்; தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும்” என்று மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை, கோவை, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஜெப வீடு மற்றும் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மாணவி லாவண்யாவின் பெற்றோரை தங்களது நோக்கத்திற்கேற்றபடி வளைத்துக் கொண்டது காவி கும்பலுக்கு சாதகமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு அம்மாணவியின் பிணத்தைக் கூட மருத்துவமனையிலிருந்து வாங்காமல் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
மேலும் லாவண்யாவின் அப்பா முருகானந்தம் தன் மகள் மதமாற்றத்தால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசு நிலையத்தில் புகாரளித்ததோடு, சிபிசிஐடி விசாரணைக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால், இதற்கு முன்பு ஜனவரி 15-ம் தேதியன்று போலீசு நிலையத்தில் அளித்த புகாரில் “மதமாற்றம்” என்று குறிப்பிடப்படவில்லை என்பதிலிருந்து காவி கும்பலின் காய் நகர்த்தல்களை புரிந்துகொள்ள முடியும். அச்சாதாரண குடும்பத்தை உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுக்க வைக்க, காசை வாரியிறைத்துள்ளது பா.ஜ.க.
உண்மையில், தனது சித்திக் கொடுமையாலும் விடுதிக் காப்பாளர் கொடுத்த அதிகப்படியான வேலைச் சுமையாலுமே அம்மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று பின்பு தெரியவந்தது. முன்னர் அண்ணாமலை பரப்பிய காணொளியில், “உன்னை மதமாறச் சொல்லி கட்டாயப்படுத்தினார்களா” என மாணவியை கேள்வி கேட்பவர் வி.எச்.பி-யைச் சேர்ந்த முத்துவேல் என்றும் அக்காணொளியை தங்கள் நோக்கத்திற்கேற்ப வெட்டி பரப்பியுள்ளார்கள் என்றும் அம்பலமாகியது. மேலும் மாவட்ட நீதிபதிக்கு மாணவி லாவண்யா கொடுத்த வாக்கு மூலத்திலும் மதமாற்றம் காரணமில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆதாரங்களெல்லாம் கிடைத்த பின்னர் ஜனநாயக சக்திகள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் உண்மை முகத்தை கிழித்து தொங்கவிட்டுவிட்டனர்.
கோவையில், “காந்தி நினைவு நாளில் இந்துமதவெறியை முறியடிக்க சூளுரைப்போம்” என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி.
ஆனால், இம்முயற்சியில் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் முழு தோல்வியடைந்துவிட்டதாக கருத முடியாது. தமிழகத்தில் தங்கள் காவி பாசிச நிகழ்ச்சி நிரலை செயலாக்குவதற்கு வாய்த்த மிகச்சிறந்த கருவியாக மாணவி லாவண்யாவின் தற்கொலையை மாற்றப் பார்த்தது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அதற்காக அவர்களின் தேசிய தலைமைகளே நேரடியாக கவனம் கொடுத்தன.
மாணவி தற்கொலையை விசாரிக்க தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாவே தலையிட்டு விசாரணைக் குழு அமைத்தார். “லாவண்யாவிற்கு நீதி வேண்டும் (Justice For Lavanya)” என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நாடு முழுவதும் இச்சம்பவத்தை பேசு பொருளாக்கியது காவி கும்பல். டெல்லியில் பழைய தமிழ்நாடு இல்லம் ஏ.பி.வி.பியினரால் முற்றுகையிடப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லமும் முற்றுகைக்குள்ளானது. மேலும் சிம்லா, ஜம்மு, கோரக்பூர், போபால் என நாட்டின் பல இடங்களிலும் இதை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது ஏ.பி.வி.பி.
இச்சம்பவத்தை தேசிய அளவில் கொண்டு சென்று தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுக்கப் பார்த்தனர். இதில் கவனிக்க வேண்டிய விசயம், மதுரை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை பாசிஸ்டுகள் விரும்பிய திசைக்கு இந்த வழக்கை கொண்டுசெல்ல உதவி செய்தன என்பதைத்தான். விளைவு, தங்களின் கைப்பாவையான சி.பி.ஐ விசாரணைக்கு இவ்வழக்கை மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
மாரிதாஸுக்கு தேச பக்தர் விருது கொடுத்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இவ்வழக்கு விசாரணையின்போது அவர் என்னவெல்லாம் பேசினார் என்பது முக்கியமானது.
கட்டாய மதமாற்றம் என்ற பொய்ப் பிரச்சாரங்களோடு ஆர்ப்பாட்டம், தேவாலயங்கள் மீது தாக்குதல் என லாவண்யா மரணத்தை வைத்து தமிழகத்தை கலவரக்காடாக்க ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. முயற்சி செய்ததைப் பற்றி கண்டிக்காத நீதிபதி, மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம்தான் காரணம் என்பதற்கான நிரூபணங்கள் இல்லை என்று பொதுவெளியில் பேட்டியளித்த தஞ்சாவூர் எஸ்.பி. ரவளிப் பிரியாவைக் கண்டித்தார். மாணவியின் மரணத்திற்கு அவரது சித்திக் கொடுமை காரணமாக இருக்கக் கூடும் என்ற கோணத்தில், முன்னர் லாவண்யா சித்தியின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் குழந்தை பாதுகாப்பு மையத்தை தொடர்புகொண்டார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. இதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, “இது விசாரணையை சீர்குலைக்கும் நடவடிக்கை” என கண்டித்தார்.
ஆனால், வழக்கு விசாரணையில் மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றம்தான் காரணம் என்பதுபோல – ஒரு சங்கபரிவார உறுப்பினரே பேசுவது போல – பேசினார். “சீரியஸ் மென்” என்ற இந்தி திரைப்படம், “கல்யாண அகதிகள்” என்ற தமிழ்த் திரைப்படம் ஆகியவற்றில் நடக்கும் கிறித்துவ மதமாற்றத்தைச் சுட்டிக்காட்டி, “இதுபோன்ற படங்கள், குறிப்பாக தமிழ் படங்கள் சற்று மிகைப்படுத்தலானவை என்றாலும் உண்மையில் சமூகத்தில் அவ்வாறு நிகழ்கின்றன” என்கிறார். மேலும் “மைக்கல்பட்டி” என்ற பெயர் அந்த ஊருக்கு எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும் யாராவது ஆய்வு செய்யலாம் என்றும் பேசியிருக்கிறார்.
ஆபத்தை முன்னுணர்ந்த தி.மு.க அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது. “மாணவியின் மரணத்தை அரசியலாக்க பார்க்கிறார்கள். தமிழக போலிசுத் துறைக்கு போதிய வாய்ப்புத் தராமல் சி.பி.ஐ-க்கு மாற்றுவது சரியில்லை என தமிழக போலீசுத்துறை தன் வாதத்தை முன்வைத்தது. “இதை கவுரவப் பிரச்சினையாக பார்க்காதீர்கள்” என்று வாயை அடைத்தது உச்சநீதிமன்றம்.
“வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியதானது பா.ஜ.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” என்று அறிவித்திருக்கிறார் அண்ணாமலை. வெளிப்படையாகவே மதமாற்றம் என்ற பொய் – நச்சுப் பிரச்சாரத்தை வைத்து தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்துக் கொண்டிருந்தாலும் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க.வினரை கைதுசெய்து சிறையிலடைக்க தி.மு.க அரசு துணியவில்லை. நீதித்துறை காவிகளின் கைப்பாவையாக செயல்படுவதைப் பற்றி தவறியும் அறிவுத்துறையினரிடையே பெரிய அளவில் விவாதங்கள் நடைபெறவில்லை.
000
நீதித்துறை மட்டுமல்ல, போலீசுத்துறையிலும் காவிகள் ஊடுருவியிருப்பதற்கு சமீபத்தில் கோவையில் நடைபெற்ற சம்பவம் சிறந்த சான்று. காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதியன்று கோவை சிவானந்தா காலனி பகுதியில், “கோவை மக்கள் ஒற்றுமை மேடை” என்ற அமைப்பின் சார்பில் சி.பி.எம், த.பெ.தி.க, வி.சி.க உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்போடு “இந்து மதவெறிக்கு எதிராக மக்களை திரட்ட உறுதியேற்போம்” என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புகுந்த கோவை போலீசார், “இந்து மதவெறியர்களால் காந்தி கொல்லப்பட்டார்” என்ற வாசகம் பொறித்த பிளக்ஸ் பேனரை அகற்ற முயன்றுள்ளனர். இவ்விசயத்தில் கூட்டத்தினருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட, பின்னர் அவ்வாசகத்தில் ‘இந்து’ என்ற சொல்லை மட்டும் மறைத்துவிட்டு கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சி.பி.எம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் “கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட மகாத்மா காந்தி நினைவு நாளில்” என்று உறுதிமொழியை வாசிக்கத் தொடங்கியபோது ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, “கோட்சே” என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று கலாட்டா செய்துள்ளார். நாடறிந்த உண்மை, காவிகளின் மனதை கலங்கடிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக போலீசால் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.
ஆனால், இதே காலத்தில்தான் “கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட ட்விட் குறித்து சிலிர்ப்போடு விவாதம் நடந்து கொண்டிருந்தது.
000
தாங்கள் அடித்தளம் கொண்டுள்ள இடங்களில் பாசிச ரவுடித்தனங்களில் ஈடுபடுவது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் வழமையான முறை. இப்பாசிச ரவுடித்தனத்தின் தீவர வடிவம்தான் வடமாநிலங்களில் நடைபெறும் கும்பல் படுகொலைகள். தமிழகத்தில் தற்போது கும்பல் படுகொலைகள் அளவுக்கு போகவில்லை என்றாலும் பாசிஸ்டு ரவுடித்தனம் புதிய இயல்பாக மாறி வருகிறதோ என்ற கேள்வி எழுகிறது.
மோடி பஞ்சாப் சென்றபோது, ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ ஏற்பட்டுவிட்டதாக நாடெங்கும் பா.ஜ.க போராடியது. தமிழகத்தின் பல்லடம் பகுதியில் பா.ஜ.க சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றபோது, மோடியை விமர்சித்ததாக கூறி தள்ளுவண்டி பழ வியாபாரியான முத்துசாமியை போலீசு கண்முன்னேயே மயங்கி சரியும்வரை பா.ஜ.க.வினர் கொடூரமாக தாக்கினர். இந்நிகழ்வை பாசிஸ்டு ரவுடித்தனத்தின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது. லாவண்வா பிரச்சினையில் ராமநாதபுரம், கோவை போன்ற பகுதிகளில் தேவாலாயங்களை சேதப்படுத்தியதும் அதையொத்ததுதான்.
லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றமே காரணம் என்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்த ஏ.பி.வி.பி. அமைப்பினர். தமிழக அரசுக்கு எதிராக உருவ பொம்மையை கொளுத்தும் காட்சி.
உ.பி லக்கிம்பூர் – கேரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக மோடி உருவ பொம்மையை எரித்து விவசாய சங்கத்தினர் போராடியபோது மயிலாடுதுறையில், “மோடி உருவ பொம்மையை எரித்தால், பதிலுக்கு நாங்கள் லெனின் உருவ பொம்மையை கொளுத்துவோம்” என்று பா.ஜ.க.வினர் தகராறு செய்ததை நாம் மறந்திருக்க முடியாது. தற்போதைய உள்ளாட்சித் தேர்தலின்போது மதுரை மேலூர் பகுதியில் பர்தா அணிந்து வாக்கு செலுத்த வந்த முஸ்லீம் பெண்ணை, பர்தாவை கழட்டச் சொல்லி மிரட்டியிருக்கிறான் பா.ஜ.க பூத் ஏஜெண்ட் ஒருவன். இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மட்டுமே.
000
காவி பாசிஸ்டுகள் தமிழகத்தில் காலூன்றுவதற்கான முயற்சிகளை முன்பைக் காட்டிலும் தீவிரமாக செய்து வருகிறார்கள்; மெல்ல மெல்ல வளர்ந்தும் வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கான ஒரு சக்தி என்ற வகையில் ஜனநாயக சக்திகள் ஆதரித்த தி.மு.க, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் செயல்பாடுகளை தடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை; வாய்ப்பேச்சைத் தவிர.
தடுக்கவில்லை என்பதைத் தாண்டி, பாசிசத்தின் வளர்ச்சிக்கு துணை செய்துகொண்டிருக்கிறது தி.மு.க. இந்து அறநிலையத்துறையின் நடவடிக்கைகளே அதற்கு சிறந்த சான்று. ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான ராமசுப்ரமணியத்தை அறநிலையத்துறை உயர்நிலைக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினராக நியமித்துள்ளது தி.மு.க அரசு.
பொதுவெளியில் பா.ஜ.க என்ற கட்சியை அவர் கடுமையாக விமர்சித்து வந்தாலும் தன்னை எப்போதும் “ஆர்.எஸ்.எஸ்.காரன்” என்று பெருமையொடு சொல்லிக் கொள்பவர். ஊடக நேர்காணல் ஒன்றில், “இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த தன்னார்வலர்கள்தான் தேவை” என்று பேசியவர். அறநிலையத்துறை பொறுப்பை வைத்துக் கொண்டிருக்கும் இவர் என்னவெல்லாம் செய்வார் என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். மேலும், தில்லைக் கோயில் பிரச்சினையில், “தில்லைக் கோயில் தீட்சிதர்களின் சொத்துதான், அப்பெண்ணை சிற்றம்பலத்திலிருந்து வெளியெற்றியது சரிதான்” என்றும் பேசி வருபவர். இவருக்குத்தான் திராவிடத்தை கொள்கையாக அறிவித்துக் கொண்ட தி.மு.க பொறுப்பு கொடுத்திருக்கிறது.
000
ஜக்கி வாசுதேவுக்கு போட்டியாக இந்த முறை இந்துசமய அறநிலையத்துறை சார்பில் விடிய விடிய கச்சேரி ஏற்பாடு செய்த சேகர் பாபுவின் நடவடிக்கை அடுத்த சமீபத்திய சான்று. காபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தது முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின். கலந்துகொண்ட பக்தர்களுக்கு ருத்ராட்சமும் தீர்த்தமும் இலவசமாம்.
படிக்க :
மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! | வீடியோ
டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !
சேகர் பாபுவின் அறிவிப்பை கூட்டணியிலிருக்கும் வி.சி.க, சி.பி.எம். கட்சியினரே எதிர்த்தனர். “ஆன்மிகப் பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானது” என்று வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு கண்டித்தார். தி.க தலைவர் வீரமணி, சி.பி.எம் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
000
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, “தமிழகத்தில் இனி எதிர்கட்சி நாங்கள்தான். எதற்கெடுத்தாலும் தி.மு.க பா.ஜ.க.வை விமர்சித்து வருகிறது. நாங்களும் திராவிடத்தை விமர்சித்து வருகிறோம். இது சித்தாந்த ரீதியான போராட்டம்” என்றார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.
உண்மைதான். சித்தாந்த ரீதியாக பாசிஸ்டுகள் ஏறித்தாக்கி வருகிறார்கள். தி.மு.க அதற்கு பலியாகிறதே தவிர, ஈடுகொடுக்கவில்லை. சித்தாந்த ரீதியிலும் நடைமுறையிலும் காவி பாசிச அபாயம் வேர்விட்டு வளருவதை தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டுமானால் தமிழக புரட்சிகர – ஜனநாயக சக்திகளே தீவிரமாக செயல்பட வேண்டும். மாறாக, ‘பொற்கால ஆட்சி’ மயக்கத்தில் மிதந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை நக்கலடிப்பது அபாயமான போக்காகும்.

அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க