கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்காக விவசாயிகளை கொலை செய்யும் கெயில் நிறுவனம் !
எனக்கு 30 சென்ட் மட்டுமே நிலம் உள்ளது. என் நிலத்தை இழந்தால் எனக்கு வாழ்வு இல்லை. நிலம், கிணறு, வீடு அனைத்தும் பறிபோகிறது எங்களை வாழவிடுங்கள் எனது நிலத்தின் வழியாக குழாய் பதிக்க வேண்டாம் என்று போராடி வந்துள்ளார் கணேசன்.
தர்மபுரி மாவட்டம், பள்ளிப்பட்டி ஊராட்சி செக்காரப்பட்டி அருகே உள்ளது கருப்பனம்பட்டி என்கிற குக்கிராமம். இந்த கிராமத்தில் 30 சென்ட் நிலத்தை மட்டுமே வைத்திருக்கின்ற சிறிய விவசாயி கணேசன். ஏப்ரல் 13-ம் தேதியன்று தனது விவசாய நிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது இந்த நிலத்தில் சின்ன வெங்காயம் பயிரிட்டு விவசாயம் செய்துள்ளார். தனக்கு இருக்கும் குறைந்த பட்ச நிலத்தை வைத்துக் கொண்டுதான் வாழ்க்கையை தள்ளிக் கொண்டு வந்தார். கணேசனுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது இந்த 30 சென்ட் நிலத்தின்மீது கெயில் நிறுவனம் மூலம் எரிவாயுவை கொண்டு செல்ல குழாய் பதிக்க முயற்சித்து வருகிறது.
கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து தமிழகத்தின் 7 மாவட்டத்தின் வழியாக குழாய் பதிக்கும் பணியை செய்து வருகிறது கெயில் நிறுவனம். இதனை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து விவசாய நிலத்தின் வழியாக கெயில் குழாயை பதிக்கக்கூடாது என்று போராடி வந்தனர்.
இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக கடந்த 3 நாட்களாக போலீசை குவித்து விவசாயிகளை தாக்க முயற்சிப்பது, மிரட்டுவது, வழக்குப் போடுவேன் என எச்சரிப்பது என்ற வகையில் கடந்த 3 நாட்களாக மிரட்டி வந்தது மாவட்ட நிர்வாகம்.
எனக்கு 30 சென்ட் மட்டுமே நிலம் உள்ளது என் நிலத்தை இழந்தால் எனக்கு வாழ்வு இல்லை என்று இந்த போராட்டத்தில் மூன்று நாட்களும் கலந்து கொண்டார் கணேசன். நிலம், கிணறு, வீடு அனைத்தும் பறிபோகிறது எங்களை வாழவிடுங்கள் எனது நிலத்தின் வழியாக குழாய் பதிக்க வேண்டாம் என்று போராடி வந்துள்ளார்.
இன்றும் (ஏப்ரல் 13) போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக இன்று (ஏப்ரல் 13) காலை முதலே போலீசாரை குவித்து பயர் சர்வீஸ் வாகனம், விவசாயிகள் கைது செய்ய போலீஸ் வாகனம் பேருந்துகள் ஏற்பாடு செய்தது போலீசுத்துறை. இனி நம் நிலத்தை மீட்க முடியாது நம் குடும்பம் நடுத்தெருவில்தான் நிற்கும் என்று கண்ணீரோடு சென்ற விவசாயி கணேசன் நேரடியாக விவசாய நிலத்திற்கு மனவேதனையோடு சென்று, போலீசு விவசாயிகளை கைது செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தபோதே தனது நிலத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்டார் என்பதைவிட போலீசும், மாவட்ட நிர்வாகமும் கெயில் நிறுவனமும் சேர்ந்து விவசாயி கணேசனை கொலை செய்தது என்பதே உண்மை. இதனையெடுத்து ஆத்திரப்பட்ட விவசாயிகள் பெரும் திரளாக ஒன்று திரண்டு தருமபுரி பென்னாகரம் சாலையில் மறியல் போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் வெறும் பேச்சுவார்த்தை என்கிற கண் துடைப்பு நாடகத்தையே செய்து வருகிறது.
கணேசன் மட்டுமல்ல பல ஆயிரம் விவசாயிகள் என்னுடைய வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இந்த கையில் நிறுவனத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளுடைய கோரிக்கையான கெயில் குழாய் பதிப்பு என்பதை நெடுஞ்சாலைகள் வழியாக, விவசாய நிலத்திற்கு பாதிப்பில்லாமல் கொண்டு செல்ல வேண்டும் அதுதான் விவசாயி கணேசனுக்கு அரசு வழங்கும் உண்மையான தீர்வாகும்.
மேலும் கணேசனுடைய இறப்பிற்கு உடனடியாக உரிய இழப்பீட்டை மாநில அரசு தலையிட்டு கொடுக்க வேண்டும். தற்கொலைக்கு தூண்டி கொலை செய்த, மாவட்ட நிர்வாகிகள் மீதும், போலீசுத்துறை மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகவல் : மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்,
9790138614.