கடந்த காலங்களில் புதுச்சேரி முதல்வர் நாரயாணசாமியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆளுநர் மாளிகை வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டது நமக்கு நினைவிருக்கும். அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அதிகாரம் ஆளுநர்களால் கேலிக் கூத்தாக்கப்பட்டது.
இந்த அதிகார குறுக்கீடுகள் யூனியன் பிரதேசங்களோடு நின்றுவிடல்லை, மாநிலங்களிலும் நடைபெறவே செய்கின்றன. தனது இந்துராஷ்டிரக் கனவிற்கான பாதையை செப்பனிடுவதற்காக, எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் தனது உளவாளிகளை “ஆளுநர்கள்” என்ற போர்வையில் அனுப்பிவைத்து கட்டுப்படுத்திவருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.
இதனால் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சி முதல்வர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் கங்காணிகளான ஆளுநர்களுக்கும் இடையில் வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது.
000
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களிலேயே, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் ஐந்தாண்டு பதவிக்காலம் முடியாமலேயே வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டு, நாகலாந்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
படிக்க :
♦ பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி !
♦ ‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !
உளவுத்துறை பின்புலம் கொண்ட இவர் அனைவரும் எதிர்பார்த்தபடியே தனது அதிகார வரம்புகளை மீறி மாநில ஆட்சியில் குறுக்கிட்டார். பதவியில் அமர்ந்தவுடன் வழக்கத்துக்கு மாறாக சட்ட ஒழுங்கு மற்றும் உளவுத்துறை டிஜிபிக்களை நேரில் அழைத்து பேசி முதல் பரபரப்பை ஏற்படுத்தினார். தலைமைச் செயலரை தனக்கு நேரடியாக அறிக்கையளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
வி.சி.க, தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள்கூட அப்பொழுதே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டன. தொடக்கத்தில் அமைதி காத்த தி.மு.க.வும் ஆளுநரின் தொடர்ச்சியான அதிகாரத்துவப் போக்கால், பின்னர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் நான்கு மாதங்களுக்கு மேலாக நிலுவையில் வைத்திருந்தார் ஆர்.என்.ரவி. இது தொடர்பாக அமித்ஷாவை சந்திக்க சென்று பத்துநாட்களுக்கு மேல் காத்திருந்தும் சந்திக்க மறுத்ததால் எரிச்சலுற்ற டி.ஆர்.பாலு, “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்” என்று கொதித்தார். அப்பொழுது தொடங்கி வெளியே தெரியாமல் நடந்துவந்த மோதல் வெளிப்படையாகிவிட்டது. இதுவரை 19 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். குறிப்பிடுகிறார்.

மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது மட்டுமின்றி, ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரனுக்கே உரிய வகையில் தனது சித்தாந்தத்தை பிரச்சாரமும் செய்துவருகிறார் ஆளுநர் ரவி. குடியரசு தினத்தன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் “தெய்வீகம் கமழுகிற புனித திருக்குறள்”, “திருக்குறளில் இம்மைக்கும் மறுமைக்குமான ஞானம் காணப்படுகிறது”, “ஒவ்வொரு பாரதிய குடிமகனின் உளத்திலும் ஸ்ரீ ராமன் குடியிருக்கிறார்” என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில் தலைமை வகித்து பேசியபோது, ‘பாரதத்தின்’ ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை வாழ்ந்த மக்களின் பலதரப்பட்ட கலாச்சார, ஆன்மீகங்களால் இந்தியா உருவானதாகவும் இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறுவதற்குமுன் அதை ‘பாரதம்’ என்றே விளிப்பதாகவும் பேசினார்.
000
அண்டை மாநிலமான கேரளாவில், ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம். அரசுக்கும் இடையிலான முரண்பாடு இரண்டாண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது.
கேரள சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “இவற்றையெல்லாம் நான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கமாட்டேன்; இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று சீறினார் ஆளுநர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனது கூடுதல் தனிப்பட்ட உதவியாளராக முன்னாள் பா.ஜ.க. மாநில நிர்வாகியை நியமித்ததற்கு பினராயி தலைமையிலான அரசு எதிர்ப்பு தெரிவித்தது. “ஆளுநர் மாளிகை விவகாரத்தில் தலையிடுவதற்கு கேரள அரசுக்கு அதிகாரமில்லை” என்றார் ஆரிஃப். அரசின் கொள்கை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க மறுத்தார். கடைசியில், அரசின் சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதிய முதன்மைச் செயலர் கே.ஆர்.ஜோதிலால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகே அவ்வறிக்கையை சட்டமன்றத்தில் வாசித்தார்.
தமிழக ஆளுநர் ரவியைப் போலவே ஆர்ஃப் முகமதுகானும் தன்னை வெளிப்படையான சங்க பரிவாரமாகவே காட்டிவருகிறார். கர்நாடகத்தில் இசுலாமிய மாணவிகள் கல்விநிலையத்தில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடைவிதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றுப் பேசினார். சமீபத்தில் காவி கும்பல் தனது முசுலீம் எதிர்ப்பு பயங்கரவாத நோக்கத்திற்காக கொண்டுவந்த, பொய்யை அடிப்படையாக கொண்ட “காஷ்மீர் ஃபைல்ஸ்” என்ற திரைப்படத்தையும் வரவேற்றார். ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட மத நிறுவனங்களின் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்று பேசிவருகிறார்.
000

மாநிலத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் “சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது” என்ற மந்திரத்தை மறவாமல் ஓதுபவர் மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கர். அரசின் அன்றாட நடவடிக்கைகளில் குறுக்கிடுவதும் சிறுதுரும்பு காரணம் கிடைத்தாலும் அதைவைத்துக் கொண்டு மம்தா அரசுக்கு நெருக்கடி கொடுப்பதையும் அவர் திறம்பட செய்துவருகிறார்.
கடந்த 2021 மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா வெற்றியடைந்ததை அடுத்து, பல இடங்களில் பா.ஜ.க.வினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. இருதரப்புக்கும் இடையிலான மோதல் என்றபோதும் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசைக் குறிவைத்து அப்போதே “சட்டம்-ஒழுங்கு” போதனையை தொடங்கிவிட்டார் ஜெகதீப் தன்கர்.
அரசு அனுப்பும் எந்த கோப்புகளிலும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் கையெழுத்திடாமல் நிலுவையில் வைத்துள்ளதாக முதல்வர் மம்தா குற்றம்சாட்டிவருகிறார். இந்த மோதல் போக்கின் காரணமாக, ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி மம்தா பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி மம்தா அரசு ஆலோசித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி தனக்குள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி சட்டப் பேரவையை முடக்குவதாக ஆளுநர் அறிவித்தார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பின்பு ஆளும்கட்சி கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே சட்டப்பேரவையை ஒத்திவைத்துள்ளதாக விளக்கமளித்தார்.
சமீபத்தில், பிர்பூம் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில், வீடுகள் கொளுத்தப்பட்டதால் எட்டு பேர் பலியானர்கள். இச்சம்பவத்திற்கு பிறகு மேற்கு வங்கம் உச்சபட்ச கொதிநிலையில் உள்ளது. கடந்த 28-ஆம் தேதி சட்டப்பேரவையில் இதுதொடர்பாக எழுந்த பிரச்சினையில் பா.ஜ.க.வும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்களும் சரமாரியாக ஒருவரை தாக்கிக் கொண்டு காயமடைந்தனர். ஆளுநருக்கு ஆட்சிக் கவிழ்ப்பு வேளைகளில் ஈடுபடுவதற்கு இதுவொரு பொன்னான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
மம்தாவின் ஆட்சேபனையை நிராகரித்துவிட்டு பிர்பூம் கலவரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, அதற்கான முக்கியாமான நகர்வாக இருக்கப் போகிறது. இக்கலவரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் பேசிய பா.ஜ.க. எம்.பி. ரூபா கங்குலி, மே.வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
மகாராஷ்டிரத்தில் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். மே.வங்க, கேரள ஆளுநர்கள் செய்வதைப் போலவே அரசின் அன்றாட விசயங்கள் ஒவ்வொன்றிலும் தலையிட்டு எதிர்க்கருத்து சொல்லி வருகிறார்.
