விருத்தாச்சலத்தில் நாஞ்சில் சம்பத்தின் காரை மறித்து தாக்கிய பாஜக !

தங்கள் உரிமைக்காக போராடும் தமிழக மக்களை ஒடுக்கும் போலீசு, பாஜகவினரிடம் மட்டும் ஏன் சன் டிவி சீரியல் போலீசு போல் சாத்விகமாக நடந்துக் கொள்கிறது. இது காவி பாசிஸ்டுகளுக்கு ஆதரவான நடவடிக்கையே அன்றி வேறென்ன…

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரை ஒருமையில் (ஆபாசமாக) பேசியதாக நாஞ்சில் சம்பத்தை எதிர்த்து போராட்ட(நாடக)த்தை ஏப்ரல் 22 அன்று விருதாச்சலத்தில் நடத்தியுள்ளது பாஜக.
தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டிக்கொடுக்க சென்ற நாஞ்சில் சம்பத்தின் காரை வழிமறித்த பாஜக, ஒருமையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூச்சலிட்டுக் கொண்டே, காரை முழுமையாக சுற்றி வளைத்து காரின்மீது தட்டிக் கொண்டே செல்லவிடாமல் தடுத்து தாக்குதல் தொடுக்க முற்பட்டது. இந்த போராட்டத்தில் பந்தோபஸ்து கொடுத்துக் கொண்டிருந்த போலீசு பாஜகவிற்கு ஆதாரவாக நின்றுகொண்டிருந்தது.
சம்பத்தின் கார் அந்த இடத்தைவிட்டு நகர்ந்ததும், போலீசுக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போலீசுப் பாதுகாப்பாக நாஞ்சில் சம்பத்தை அனுப்பிவிட்டது என்றுகூறி போலீசை கண்டித்தும், காரை நிறுத்தாமல் குறுக்கே வந்த பாஜகவினர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றார் என்றும் கூப்பாடு போட்டுக்கொண்டு, தான் எதிர்க்க வந்த நபர் சென்றுவிட்ட போதிலும் சாலை மறியலை நடத்திக் கொண்டிருந்தது பாஜக. அரைமணிநேரம் சாலை மறியல் செய்தபிறகு, போலீசு கெஞ்சுக்கேட்டதின் காரணமாக போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
படிக்க :
♦ பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம்சாட்டிய பாஜக உறுப்பினர் சந்தோஷ் தற்கொலை !
♦ அயோத்தியா மண்டபம் விவகாரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பன கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்திடுக !
தங்கள் உரிமைக்காக போராடும் தமிழக மக்களை ஒடுக்கும் போலீசு, பாஜகவினரிடம் மட்டும் ஏன் சன் டிவி சீரியல் போலீசு போல் சாத்விகமாக நடந்துக் கொள்கிறது. இது காவி பாசிஸ்டுகளுக்கு ஆதரவான நடவடிக்கையே அன்றி வேறென்ன…
தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியாக போராடிய மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றது போலீசு. டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் போராடிய பெண்ணை வெறிகொண்டு தாக்கியது போலீசு. ஒரு தவறும் செய்யாத சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் “தந்தை, மகன்” இருவரையும் லாக்கப்பில் வைத்து அடித்து சித்திரவதை செய்து கொன்றது போலீசு. வானகச் சோதனையின்போது கர்ப்பிணிப் பெண் உஷாவை காலால் எட்டி உதைத்து கொலைசெய்தது போலீசு. இப்படி உழைக்கும் மக்கள்மீதும், போராடும் மக்கள் மீதும் என்னென்ற தாக்குதல்கள், கொலைகளை செய்யும் தமிழக போலீசு ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
முற்போக்கு அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் போராடினால் ஊபா உள்ளிட்ட என்னெற்ற வழக்குபோட்டு வதைப்பது, போராட்டம் என்று அறிவித்தால், தோழர்களின் வீடுகளுக்கு சென்று முன்னெச்சரிக்கை கைது செய்வது, வீட்டைவிட்டு வெளியே வரவிடாமல் தடுத்து வீட்டுக்காவலில் வைப்பது, ஆர்ப்பாட்டம் – பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக் கேட்டால் மறுப்பது என்று தனது அதிகார வெறியை காட்டிவரும் போலீசு பாஜகவின் போராட்டத்திற்கு அரணாக செயல்படுகிறது.
இப்பிரச்சினையில் தகாத, ஆபாச வார்த்தைகளை கண்டு பாஜக கொதிப்பதும், போராடுவதும்தான் வேடிக்கையாக உள்ளது. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக சங் பரிவார கும்பல் அரசை, போலீசை, நீதிமன்றத்தை, முற்போக்கு, ஜனநாயக கட்சிகளின் அமைப்புகளின் தோழர்களை, தலைவர்களை மிகவும் தரம் குறைவாக பேசி கொண்டு திரிவது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. எனினும் நாஞ்சில் சம்பத், தமிழிசை மற்றும் எல்.முருகனை தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியிருந்தால், அவர்மீது வழக்கு போட்டிருக்கலாம் அல்லது பல்வேறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், சம்பத் செல்லும் வழியை மறித்து தாக்குதல் தொடுக்கிறது பாஜக.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவி பாசிஸ்டுகள் காலூன்ரும் பாதை செப்பனிடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு பாஜகவின் இந்த கார் மறித்தல் போராட்டம் ஓர் சான்று. மாநிலத்தில் பரவி வரும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளை உழைக்கும் மக்களாய் ஒன்றிணைந்து களத்தில் இறங்கி முறியடிக்க வேண்டிய தருணமிது.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க