மிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையானது விவாதப் பொருளாகி உள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவானது தனது தேர்தல் அறிக்கையின் 84-வது பக்கத்தில் 309-வது வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஏப்ரல் 1, 2022 முதல் தனது மாநிலத்தில் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்ததிலிருந்து, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற விவாதம் சூடுபிடித்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் மே 7 அன்று நடந்த நிதித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதிக செலவாகும் என்பதால் அதை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று கூறினார். மேற்கூறியவாறு தமிழக நிதி அமைச்சர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

படிக்க :

♦ மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் !

♦ மோடியின் தேர்தல் ஜூம்லா 2019 : முறைசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் !

குறிப்பாக அமைச்சர் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த முடியாததற்கு இரண்டு காரணங்களை கூறியுள்ளார்.

  1. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பெறப்பட்ட நிதி முழுமையாக அரசின் கணக்கில் இருந்தது. அதை அரசு எடுக்கலாம், வைக்கலாம், அனைத்து உரிமையும் அரசிடம் இருந்தது. தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒவ்வொரு தனி நபரின் பணம் மற்றும் அரசின் பங்களிப்பு தனிநபரின் பெயரில் தனியாக கணக்கு வைக்கப்படுகிறது. அதை திரும்ப எடுத்து அரசு நிதியாக்க சட்டம் அனுமதிக்காது.
  2. இந்த ஆண்டு ஓய்வூதியத் திட்டத்திற்காக 39,500 கோடி செலவிடப்படுகிறது. நிதிச்சுமை காரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடியாது என தெரிவித்தார்.

மேற்கண்ட அவர் கூறிய இரண்டு காரணங்களை நாம் பரிசீலிப்பதற்கு முன்னால் பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன என்பதை நாம் பார்ப்போம்.

பழைய ஓய்வூதியத் திட்டம் :

2003-க்குள் முன்னால் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. பணி நிறைவு பெற்ற பிறகு கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில், 50 சதவீத ஓய்வூதியம் அரசால் உத்தரவாதமாக வழங்கப்பட்டது.

அரசானது ஓய்வூதியத் திட்டத்திற்காக ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் ஏதும் செய்யவில்லை. ஓய்வூதியம் முழுவதும் அரசால் வழங்கப்பட்டது. பணிக்கொடை, மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியத் திரண்ட தொகை ஆகிய பலன்கள் உண்டு. இப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான பொருப்புகள் அனைத்தும் அரசிடமே இருந்தது.

புதிய ஓய்வூதியத் திட்டம் :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அதிகப்படியான நிதி செலவாகிறது மற்றும் அரசிடம் நிதி பற்றாக்குறை என்ற காரணத்தை காட்டி, வாஜ்பாய் தலைமையிலான அரசு 2004-ம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது.

இத்திட்டத்தின் படி, ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அரசு தனது பங்காக 14 சதவீதம் செலுத்தும். மொத்த 24 சதவீத தொகை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதைப்போல, அரசின் கணக்கில் அல்லாமல் தனிநபர் கணக்கில் சேரும்.

இப்பணமானது காப்பீடு நிறுவனங்களின் மூலம் பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு பெருக்கப்படும். ஓய்வு வயதை எட்டியவுடன் வட்டியுடன் சேர்ந்திருக்கும் பணத்தில் 60 சதவீதம் ஊழியர்களிடம் கொடுக்கப்படும், மீதி 40 சதவீதம் மீண்டும் கட்டாயம் மறுமுதலீடு செய்யப்பட்டு, அதன்மூலம் வரும் வட்டி பணத்தில் ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என புதிய ஓய்வூதியத் திட்ட விதி கூறுகிறது.

இத்திட்டத்தில் ஓய்வூதியத்திற்கு அரசு பொறுப்பு என்ற விதி தளர்த்தப்பட்டு, தனியார் காப்பீடு நிறுவனங்கள் பொறுப்பாக்கப்படுகிறது. இச்செயலானது தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்களின் சேமிப்பை பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் சூதாடி கொள்ளையடிக்கவே வழிவகை செய்கிறது.

மேலும் இவ்வோய்வூதிய திட்டத்தில், நிரந்தர ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் கிடையாது. ஓய்வூதியம் கிடைப்பதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தனியார் காப்பீடு நிறுவனங்களை தான் தொடர்பு கொள்ள வேண்டும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அரசு ஊழியர்களுக்கு பணி முடிந்தவுடன் ஓய்வூதியம் மூலம் சமூகப் பாதுகாப்பை கொடுக்கும் பொறுப்பில் இருந்து அரசானது விலகுகிறது மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்களின் ஓய்வூதியத்தை கொள்ளையடிக்க திறந்துவிடுகிறது என்பதுதான்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இவ்வளவு அபாயங்கள் இருப்பதால்தான், அரசு ஊழியர்கள் 19 ஆண்டுகளாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என போராடி வருகின்றனர். ஆனால் அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கையானது செவிடன் காதில் ஊதிய சங்கைப்போலதான் உள்ளது.

***

மேற்கூறியவாறு புதிய ஓய்வூதியத் திட்ட விளக்கத்தின் படி, அமைச்சர் சொன்ன முதல் காரணத்தை புரிந்து கொள்ள முடியும். அதாவது ஓய்வூதியத் திட்டமானது அரசு பொறுப்பில் இருந்து, தனியார் காப்பீடு நிறுவனங்கள் பொறுப்பிற்கு சென்றுவிட்டது. எனவே அந்த நிதியை மீண்டும் அரசு நிதியாக்க சட்டம் அனுமதிக்காது என்பதுதான்.

அமைச்சர் கூறிய இரண்டாவது காரணம் மக்களுக்கான நலத்திட்டங்களை வெட்டி சுருக்க, எல்லா அரசுகளும் கூறும் வழமையான காரணம்தான், “நிதிப்பற்றாக்குறை”. இவர்களுக்கு மக்களுக்கு சேவை செய்யும்போது மட்டும் நிதிப்பற்றாக்குறை வந்துவிடும், ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும்போது நிதிப்பற்றாக்குறை வராது.

புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வந்த பிறகு, ஓய்வூதிய திட்ட வரம்பிற்குள் நாடு முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டன.

ஒட்டுமொத்த நாடு தழுவிய அளவில் அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையோ, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுதான்.

ஏன் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இப்புதிய ஓய்வூதிய திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டார்கள் என்றால்? அவர்களுடைய ஓய்வூதிய பணத்தையும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்கதான்.

அதாவது கார்ப்பரேட்டுகள் தங்களுடைய கொள்ளை அடிக்கும் எல்லையை விரிவுபடுத்துகிறார்கள். அதற்கு அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஏற்ற மாதிரி சட்டங்களை மாற்றி கொடுக்கிறது.

ஆனால், மத்திய அரசானது தன்னுடைய அடியாள் படையான இராணுவம், நீதித்துறையை புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டுவரவில்லை. அரசின் ஏவல் நாய்களை மக்கள் பணத்தில் குளிப்பாட்ட வேண்டும் அல்லவா?

நிதிப்பற்றாக்குறை என்றால், நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் நலன்களுக்காக, தனியார் கார்ப்பரேட்டுகள் மீது போடும் வரியை அதிகரித்து ஈடுகட்டலாமே? ஏன் செய்ய மாட்டிக்கிறார்கள்? மக்கள் மீதான சொத்து வரியை அதிகரிக்கும் திமுக அரசுக்கு, கார்ப்பரேட்டுகள் மீதான தொழிற்வரியை அதிகரிக்க துப்பு இருக்கா?

ஏனென்றால் மத்திய, மாநில ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் எல்லாம் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய தாராளவாதக் கொள்கைகள் பெற்றெடுத்த அரசியல் வாரிசுகள். உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்குதான் சேவை செய்வார்கள்! மக்களுக்கு அல்ல! திமுக மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

படிக்க :

♦ புதிய தொழிலாளர் நல சட்டம் – 2022 யாருக்கானது?

♦ பொது சிவில் சட்டம் : பாசிஸ்டுகளின் அடுத்தக்கட்ட அரசியல் ஆயுதம் !

ஆகவே, இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அதை நிறைவேற்றுவோம், இதை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு கார்ப்பரேட் சேவர்களாக தங்களை காட்டிக் கொள்கிறார்கள்.

அரசு ஊழியர்கள் மத்தியிலும் தங்களுக்கு நல்ல வருமானம் உள்ளது. அதனால் நாட்டின் பிற பிரச்சனைகளால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற எண்ணம் உள்ளது. அது தவறானது.

அரசின் எல்லா துறைகளிலும் புதிய தாராளவாதக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்படும் போது, அது அரசு ஊழியர்களை மட்டும் விட்டுவிடுமா என்ன?

8 மணி நேர வேலை என்பது 12 மணி நேரமாக உயர்வு, எங்கும் காண்ட்ராக்ட்மயம் என தொழிலாளர்கள் உரிமைகள் அனைத்தும் நசூக்கப்படும் சூழலில் அரசு ஊழியர்கள் தன்னை தொழிலாளர் வர்க்கத்தின் அங்கமாக கருதி, ஒடுக்கப்படும் எல்லா தொழிலாளர் பிரிவுகளுடன் ஒன்றினைந்து தொழிலாளி வர்க்கமாக போராடும் போது தான், மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை பணிய வைக்க முடியும். நம்முடைய உரிமைகளை நிலைநாட்ட முடியும்.

அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க