புதிய தொழிலாளர் நல சட்டம் – 2022 யாருக்கானது?

50 சதவீத வைப்பு நிதி என்பது முதலீட்டை பெருக்கி மேலும் முதலாளியை தான் வாழ வைக்கும். எந்த நிலையிலும் தொழிலாளிகளின் வாழ்க்கை என்பதில் மாற்றம் வரப்போவதில்லை.

0
ரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையக் குழுவின் பரிந்துரைப்படி ஒன்றிய அரசு தற்போது நடைமுறையிலுள்ள 29 மத்திய தொழிலாளர் நல சட்டங்களை உள்வாங்கி கீழ்கண்ட 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை தயாரித்து அவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஊதிய சட்ட தொகுப்பு – 2019
தொழில் உறவு சட்ட தொகுப்பு – 2020
சமூகப் பாதுகாப்பு சட்ட தொகுப்பு – 2020
பணியிட பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்ட தொகுப்பு – 2020
ஜூலை 01-ல் புதிய தொழிலாளர் நல சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முக்கியமாக இதில் கூறப்படும் தகவல் என்னவென்றால் தொழிலாளிகளுக்கு பணிநேரம் அதிகரிக்கப்பட்டு, கூடுதல் வாரவிடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் நாட்டில் முதலீடுகளையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என ஒன்றிய அரசு கூறுகிறது. குறிப்பாக இந்த புதிய சட்டத்தின் படி நிறுவனங்கள் ஊழியர்களின் 8 மணி நேர வேலை என்பது 12 மணி நேர வேலை என மாற்றியமைக்க வழிவகை செய்யும். அதை ஈடு செய்ய வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதேபோல் ஊழியர்களின் சம்பளம், வருங்கால வைப்புநிதி போன்றவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இவற்றில் ஊழியர்கள் வாங்கும் அடிப்படை சம்பளம் என்பதில் 50 சதவீதம்தான் கையில் தரப்படும் மீதம் வருங்காள வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படும். அப்படியானால் தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம் என்பது அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறது அரசு.
படிக்க :
பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… – பாகம் 1 | சித்திரகுப்தன்
பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… பாகம் – 2 | சித்திரகுப்தன்
இவை ஒவ்வொன்றிலுமே நாம் கவனமாக ஆராய வேண்டியுள்ளது. ஏனென்றால் வெளியிலிருந்து கேட்கும்போது மிக இனிப்பாக இருக்கும். ஆனால் உண்மை என்ன? ஒட்டுமொத்த தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்பது மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தொழிலாளிகளையும் முழு அடிமைகளாக மாற்றி, குறைவான ஊதியத்தை கையில் கொடுத்து, பல மணி நேரம் உழைப்பை சுரண்டுவது என்பதுதான் முதலாளியின் நோக்கம். அதை சட்டத்தின் படி நிறைவேற்றுவதுதான் இந்த அரசின் பணி.
எப்படி இது முதலாளிக்கு இலாபம் என்று உங்களுக்கு இந்த சந்தேகம் வரலாம்? ஏனென்றால் ஏற்கனவே வேலை செய்த அதே நேரம் தானே செய்யப்போகிறோம். 12 மணி நேர வேலை கொடுத்தாலும் வாரத்தில் 4 நாள் தான் வேலை மீதி 3 நாள் விடுமுறை தானே கொடுக்கிறார்கள். இதில் தொழிலாளுக்கு தானே இலாபமாக உள்ளது என்று நீங்கள் யோகிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கொஞ்சம் உள்ளே போய் யோசித்து பாருங்கள்.
4 நாள் வேலையும் ஒன்றாக செய்யப்போவதில்லை. முதல் நாள் வேலை 12 மணி நேரம் அதற்கான உங்களின் தயாரிப்புக்கான நேரம், போக்குவரத்து நேரம் நீங்கள் தூங்கும் நேரம் இவற்றை கணக்கிட்டு பாருங்கள் எவ்வளவு நேரம் தொழிலாளிகள் தங்கள் பணிக்காக செலவிடுகிறார்கள் என்பது புரியும். 3 நாள் விடுமுறை என்பதை நீங்கள் (தொழிலாளிகள்) அனுபவிக்க முடியுமா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஆனாலும் சம்பளம் உயர்கிறதா? அதுவும் இல்லை. வைப்பு நிதிக்கான பிடித்தத்தை அதிகப்படுத்தி உள்ளார்கள். ஏற்கனவே உள்ள வைப்பு நிதி (PF) எப்படி கிடைக்கிறது என்று நமக்கு தெரியும். அப்படியானால் இந்த 50 சதவீத வைப்பு நிதி என்பது முதலீட்டை பெருக்கி மேலும் முதலாளியை தான் வாழ வைக்கும். எந்த நிலையிலும் தொழிலாளிகளின் வாழ்க்கை என்பதில் மாற்றம் வரப்போவதில்லை.
அரசு நிறுவனங்களிலே இதுதான் நிலை எனும்போது தனியார் நிறுவன ஊழியர்களின் நிலையை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். கையில் வாங்கும் அடிப்படை சம்பளம் பெரிய அளவில் குறையும். வேலைக்கும் உத்திரவாதம் கிடையாது. அவர்களின் குடும்பம் என்னவாகும். தொழிலாளிகளை நேரடியாக தற்கொலைக்கு தூண்டுவதையே இந்த ஒன்றிய அரசு செய்கிறது.
குறிப்பாக 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பது சர்வ சாதாரணாக நமக்கு கிடைத்த உரிமை கிடையாது பல இலட்ச கணக்கில் தொழிலாளிகள் இந்த உரிமையை பெற இரத்தம் சிந்தி உள்ளனர். பலர் உயிர் தியாகம் செய்யப்பட்டுள்ளது. அப்படி தொழிலாளர்களின் குருதியால் கிடைத்த உரிமையை ஒரு பாசிச அரசு சட்ட திருத்தம் என்ற பெயரில் ஒரே அடியாக 29 சட்டங்களை 4 தொகுப்பாக மாற்றி அனைத்து உரிமைகளையும் பறிக்கிறது என்றால் இந்த அரசின் நோக்கம் என்பது முதலாளிகளை வாழ வைப்பது மட்டும்தான். ஏனென்றால் இது முழுமையாக கார்ப்பரேட் நல அரசாக உள்ளது. ஆனால் இந்த சட்ட திருத்தத்திற்கு பெயரோ தொழிலாளர் நல சட்டம்.
கடந்த மே 1, அன்று தொழிலாளர் தினம் பல நாடுகளில் விழாவாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் நாமும் தொழிலாளர் தினத்தை போராட்ட நாளாக கடைபிடிக்கும் வகையில் நமது பறிக்கப்பட்ட உரிமைகளை கோரிக்கையாக முன் வைத்து போராடினோம். ஆனால் அரசு ஏதேனும் செவி சாய்த்ததா, இல்லை. ஏனென்றால் ஒன்றாக இணைந்து போராட வேண்டிய நாம் அப்படி செய்யாமல் சிதறி கிடக்கிறோம். உழைப்பை மட்டுமே பலமாக கொண்டிருக்கும் உழைப்பாளிகளான நம்மிடத்தில் ஒற்றுமை இல்லை. இந்த ஒற்றுமையின்மைதான் அரசின் பலமாக உள்ளது.
அரசு முழுக்க முழுக்க கார்ப்பரேட் நலன் சார்ந்த அரசாக உள்ளது எனும்போது, தொழிலாளிகளின் நலன் காக்க நாம் ஒரு அரசை நமக்கான அரசை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படியானால் அது சாதரணமாக சாத்தியமாகுமா? இல்லை. பாட்டாளி வர்க்கம் என்ற வர்க்க அடிப்படையிலான ஒற்றுமையே அதை சாத்தியமாக்கும்.
வர்க்கமாக ஒன்றிணைவோம். காவி – கார்ப்பரேட் பாசிசத்தை ஒழித்துகட்டுவோம்.

ஓவியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க