2018-லிருந்து மத்திய அரசு பெருமுதலாளிகள் / நிர்வாகிகளுக்கு சாதகமாக இருக்கும் விதத்தில் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை ஒருங்கிணைத்து, 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றுவதற்கான நடவடிக்கை துவங்கியதிலிருந்தே தொடர்ந்து அகில இந்திய அளவிலான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அதை எதிர்த்து வந்திருப்பது அனைவரும் அறிந்ததே.
குறிப்பாக 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றுவதை கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வந்தன. மேற்சொன்ன மாநிலங்களிலுள்ள சிபிஎம், சிபிஐ, தொமுச, திரிணமுல் காங்கிரஸ் போன்றவை சார்ந்த தொழிற்சங்கங்கள் மேற்சொன்ன நடவடிக்கையை எதிர்த்து கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தங்களில் சக்தியாக பங்கேற்றதுடன், மேற்படி தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தாதே என்பதை பிரதான கோரிக்கையாக முன் வைத்திருந்தன.
சம்பிரதாயமாக நடத்தப்படும் இதுபோன்ற ஒரு நாள், இரு நாள் வேலை நிறுத்தங்களின் மூலம் மெஜாரிட்டி பலம் கொண்ட அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினை தடுத்து நிறுத்திவிட முடியுமா என்கிற சந்தேகம் தொழிலாளர்களுக்கு இருந்த போதிலும், தமிழகத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை, இடது சாரி சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி போன்ற சங்கங்களின் தலைவர்களின் வீராவேசப் பேச்சுக்களினால் ஈர்க்கப்படும் அப்பாவித் தொழிலாளர்கள் லட்சக் கணக்கில் இத்தகைய வேலை நிறுத்தங்களில் வருடந்தோறும் பங்கேற்பதும், அதன் தொடர்ச்சியாக ஊதிய இழப்பு, பதவி உயர்வில் பாதிப்பு போன்றவற்றை அனுபவித்து வந்தே உள்ளனர்.
படிக்க :
♦ கார்ப்பரேட் ஊடகங்களே ! உங்கள் தொழிலாளர் விரோதப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள் !
♦ தொழிலாளர்களின் உணவில் பாரபட்சம் காட்டும் அசோக் லேலண்ட் || புஜதொமு கண்டனம்
இந்த ஆண்டு பிப்ரவரி என முதலில் நிர்ணயிக்கப்பட்டு, பின்னா் பல மாநில தேர்தல்கள் மற்றும் தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல்கள் காரணமாக மார்ச் 28, 29 இரண்டு நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தம் என நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே அரங்கக் கூட்டங்கள், ஆலை வாயிற் கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்கள், இணைய வழி சுவரொட்டிகள் என வழக்கம் போல் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் பிரச்சாரங்கள் பொறி பறந்தது.
குறிப்பாக இது போன்ற வேலை நிறுத்த நடவடிக்கைகளில் பிரதானமாக பங்கேற்கும் (Organised sector) அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், ஆயுள் காப்பீடு, வங்கி போன்ற நிறுவனங்களின் தொழிலாளர்கள் முன்பாக ஏற்கனவே மத்திய அரசால் திருத்தப்பட்டு பல மாநிலங்களில் அமுலுக்கு வந்துவிட்ட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான புதிய மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் இவை அடியோடு ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்னிறுத்தப்பட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இது ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மத்திய அரசு மேற்படி 4 புதிய சட்டத் தொகுப்புக்களை நிறைவேற்றும் விதத்தில் மாநில அளவிலான விதிகளை ஏற்படுத்தாத மாநில அரசுகள் ஏப்ரல் மாதத்திற்குள் அவற்றை மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்தது. தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு சி.வி.கணேசன் அவர்கள் தலைமையில் தொழிலாளர் நல ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் மேற்படி சட்டத் தொகுப்புகளுக்கு இணையான விதிகளை உருவாக்குதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் 18 மாா்ச் 2022 மதியம் 3.30 மணிக்கு நடத்தப்பட்டது.
இதில் தொழிலாளர் துறைச் செயலாளர் திரு கிர்லோஸ்குமாா், இஆப., துறை ஆணையர் திரு அதுல் ஆனந்த், இஆப., மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள், தொமுச தேசிய பொதுச் செயலாளர் திரு மு.சண்முகம், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், எச்எம்எஸ் தேசியத் தலைவர் திரு சி.ஏ.ராஜா ஸ்ரீதர், ஏஐடியுசி திரு டி.எம்.மூர்த்தி, சிஐடியு திரு அ.செளந்திரராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, பிஎம்எஸ், அண்ணா தொழிற்சங்கப் பேரவை, எல்டியுசி, எம்எல்எப், எல்எல்எப், டபிள்யுடியுசி சங்க தலைவர்கள் பங்கேற்றனர். (பிஎம்எஸ், ஏடிபி தவிர மற்ற சங்கங்கள் அனைவரும் மேற்சொன்ன சட்டத் தொகுப்புகள் / தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தவர்கள்)
இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு புதிதாக உருவாக்கியுள்ள 4 சட்டத் தொகுப்புக்களை தமிழகத்திலும் அமுல் படுத்த வேண்டிய அவசியம் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது, தொழிற்சங்கத் தலைவர்களும் அவற்றில் பெரும்பாலானவை தொழிலாளர்களுக்கு விரோதமாக இருப்பதால் எங்களின் ஆட்சேபணைகள் / கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப திருத்தங்கள் மேற்கொண்டபின் அமுல் படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றனர்.  மிகச் சுருக்கமாக 2 மணி நேரத்தில் அந்தக் கூட்டம் முடிந்து விட்டது.
தற்போது தமிழ்நாடு மாநில அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 11/04/2022 தேதியிட்டு 3 அரசிதழ் அறிவிப்புகள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.  அவற்றின் விபரம்:
TN Govt Gazette (Extraordinary) No.214, Dt.11 April 2022:
மத்திய சம்பளச் சட்டத் தொகுப்பு 2019ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்க தமிழகத்தில் ஏற்கனவே அமுலில் இருந்து வரும் (1) தமிழ்நாடு சம்பளப் பட்டுவாடா விதிகள், 1937, (2) தமிழ்நாடு சம்பளப் பட்டுவாடா (உரிமை கோரா தொகைகள்) விதிகள், 1949, (3) குறைந்தபட்ச சம்பளம் (தமிழ்நாடு) விதிகள், 1953 ஆகியவற்றினை மேலோங்கும் விதத்தில் சம்பளச் சட்டத் தொகுப்பு (தமிழ்நாடு) விதிகள், 2022 அமுல்படுத்த இருப்பது தொடர்பான வரைவு விதிகள் பொதுமக்கள் அறியும் வண்ணம் பின்வருமாறு அறிவிக்கை செய்யப்படுகிறது.  இவற்றின் மீதான ஆட்சேபணைகள் / கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இந்த அறிவிக்கை மேற்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குள்ளாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்பவருக்கு தொழிலாளர் துறை ஆணையா், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006-ன் வழியாக சமா்ப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்படுகிறது.
TN Govt Gazette (Extraordinary) No.215, Dt.11 April 2022:
மத்திய தொழில் உறவுச் சட்டத் தொகுப்பு 2019ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்க தமிழகத்தில் ஏற்கனவே அமுலில் இருந்து வரும் (1) தமிழ்நாடு தொழிற்சங்க நெறிமுறைகள், 1927, (2) தமிழ்நாடு தொழிற்சாலை நிறுவனங்கள் (நிலையாணைகள்) விதிகள், 1947, மற்றும் (3) தமிழ்நாடு தொழிற் தகராறுகள் விதிகள், 1958 ஆகியவற்றினை மேலோங்கும் விதத்தில் தொழில் உறவுகள் (தமிழ்நாடு) விதிகள், 2022 அமுல்படுத்த இருப்பது தொடர்பான வரைவு விதிகள் பொதுமக்கள் அறியும் வண்ணம் பின்வருமாறு அறிவிக்கை செய்யப்படுகிறது.  இவற்றின் மீதான ஆட்சேபணைகள் / கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இந்த அறிவிக்கை மேற்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குள்ளாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்பவருக்கு தொழிலாளர் துறை ஆணையா், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006ன் வழியாக சமா்ப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்படுகிறது.
படிக்க :
♦ நீங்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்களா? : திப்பு, சித்திரகுப்தன்
♦ இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
TN Govt Gazette (Extraordinary) No.216, Dt.11 April 2022:
மத்திய தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டத் தொகுப்பு 2020ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்க தமிழகத்தில் ஏற்கனவே அமுலில் இருந்து வரும் (1) தமிழ்நாடு ஒப்பந்தத் தொழிலாளர்கள் (நெறிமுறைகள் மற்றும் ஒழித்தல்) விதிகள், 1975, (2) தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர் தொழிலாளர் (நியமனம் மற்றும் பணி நிபந்தனை நெறிமுறைகள்) விதிகள், 1983, (3) தமிழ்நாடு பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் (பணி நிபந்தனைகள்) விதிகள், 1968, (4) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் (நியமனம் மற்றும் பணி நிபந்தனை நெறிமுறைகள்) விதிகள், 2006, (5) தமிழ்நாடு தொழிற்சாலைகள் விதிகள், 1950, (6) தமிழ்நாடு பாதுகாப்பு அலுவலர்கள் (பணிகள், தகுதிகள் மற்றும் பணி நிபந்தனைகள்) விதிகள், 2005, (7) தமிழ்நாடு தொழிற்சாலைகள் (நல அலுவலர்கள்) விதிகள், 1953, (8) தமிழ்நாடு தொழிற்சாலை விபத்துக்கள் /பெரும் அபாயங்கள் விதிகள், 1994, (9) தமிழ்நாடு தேயிலைத் தொழிலாளர்கள் விதிகள், 1955, (10) தமிழ்நாடு மோட்டார் தொழிலாளர் விதிகள், 1965 ஆகியவற்றினை மேலோங்கும் விதத்தில் தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிபந்தனைகள் (தமிழ்நாடு) விதிகள், 2022 அமுல்படுத்த இருப்பது தொடர்பான வரைவு விதிகள் பொதுமக்கள் அறியும் வண்ணம் பின்வருமாறு அறிவிக்கை செய்யப்படுகிறது.  இவற்றின் மீதான ஆட்சேபணைகள் / கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இந்த அறிவிக்கை மேற்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குள்ளாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்பவருக்கு தொழிலாளர் துறை ஆணையா், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006ன் வழியாக சமா்ப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்படுகிறது.
(தொடரும்…)

பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… பாகம் – 2

சித்திர குப்தன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க