பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… – பாகம் 1
பாகம் : 2
பொது :
பெரும்பாலான அடிப்படை தொழிலாளர் சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் இயற்றப்பட்டவை. நிச்சயமாகக் காலனித்துவ ஆட்சியாளர்களைத் துணிச்சலாக எதிர்த்துப் போராடிய லட்சக்கணக்கான தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தைப் பாதுகாப்பதற்காக, அவர்களின் நலனை தமக்கும் தமது சந்ததியினருக்கும் உறுதி செய்வதற்காகப் போராடிய தொழிலாளர்களின் சமாதிகளிலிருந்து உருவான சட்டங்கள் அவை. அந்த சட்டங்கள் மூலமாகத்தான் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வர்க்கத்தை தங்கள் பணி நிலையில் பாதுகாப்பதில் காலத்தின் சோதனையாகவும், தாவா, ஒப்பந்தங்களின் போது பேச்சுவார்த்தை என்கிற வகையில் முதலாளியுடன் எதிரெதிரே மேசையில் சமமாக அமர்ந்துதமது தரப்பை முறையிடுவதற்கான சமமான வாய்ப்பாகத் தொழிற்சங்கங்களுக்கு ஏற்கனவே உள்ள சட்டங்கள் இருந்து வருகின்றன.
ஆக்கிரமிப்பாளர்கள் கூட இந்த சட்டங்களை மதித்து தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை உறுதிசெய்ததோடு, தொழிலாளர் நலனை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவைப்படும்போது அந்தச் சட்டங்களில் திருத்தங்களைச் செய்ய ஒப்புக் கொண்டனர்.
சுதந்திரத்திற்கு பிந்தைய ஆட்சியாளர்கள் விடுவிக்கப்பட்ட இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் நலனுக்காகச் சட்டங்களின் வீரியத்தைத் தொடர்ந்து வைத்திருந்தனர், அத்தகைய நிலை என்பது தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே சாத்தியமானது.
படிக்க :
♦ பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும்  யார்?
♦ ‘கிக்’ தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் அர்பன் நிறுவனம் !
ஆனால், இப்போது, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பழமையான சட்டங்களை ரத்து செய்வேதன்பது, தொழிலாளர்கள் தங்கள் சதை மற்றும் இரத்தத்தால் வென்ற தொழிலாளர்களின் உரிமைகளை ரத்து செய்வதற்கான வெளிப்படையான முயற்சியாகக் கருதி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து எஞ்சியிருக்கும் உரிமைகளான நமது தாய் நிலத்தை மீட்டெடுக்கும் இறையாண்மை கடமையாகப் பார்க்க வேண்டியுள்ளது.
மத்திய அரசு இயற்றிய சட்டத் தொகுப்புகளில்
தொழிற்சாலைகளில், தொழில் நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் கட்டமைக்கப்பட்டால் 30 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளவர்கள் மட்டுமே பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும் (விதி 4 (சட்டப் பிாிவு 14(2)
தொழிற்தாவாக்கள் தொழிலாளர் ஆணையர் அலுவலக சமரச அலுவலர்கள் முன்பாக எடுத்துச் செல்லப் படுவதற்கு பதிலாக நிர்வாகம் பார்த்து நிர்ணயிக்கும் இசைவுத் தீர்ப்பாளர் (Arbitrator) முன் கட்டப் பஞ்சாயத்து செய்தபின்தான், நீதிமன்றம் செல்ல முடியும்
20 அல்லது அதற்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்குப் பொருந்தும் ஒப்பந்த தொழிலாளர் (ஒழிப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1970 (CLA) இனிமேல் 50 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என இதில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பெரும் பகுதி தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பு இல்லாமல் விடப்படுவதோடு அதீத சுரண்டலுக்கும் அவர்கள் ஆளாக நேரிடும்.
புலம் பெயர் தொழிலாளர்களின் நலன்கள் புறம் தள்ளப்பட்டுள்ளது
பணி நிரந்தரம் என்பது எட்டாக் கனியாகியுள்ளது
பொதுவாக வேலை நிறுத்த உரிமை என்பது டி.கே.ரெங்கராஜன் மற்றும் சிலர் -எதிர்- தமிழ்நாடு அரசு (2003 (6) SCC 581) என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஒருபுறம் கேள்விக்குறியதாக இருப்பினும்- தொழிற்தாவாச் சட்டத்திற்குட்பட்டு வரும் தொழிலாளர்கள் அந்த சட்டத்திற்கிணங்க 14 நாட்கள் முன்னறிவிப்பு கொடுத்து வேலை நிறுத்தம் மேற்கொள்ளலாம்.
தவிர பணிச்சூழலில் பெரும் அசம்பாவிதம் நடந்து அது தொடா்பாக தொழிலாளர்கள் முறையிடுகிறபோது நிர்வாகம் அலட்சியம் காட்டினால் திடீர் வேலை நிறுத்தம் மூலம்தான் நிர்வாகத்தைப் பணிய வைக்க முடியும்.  பின்னர் பேச்சுவார்த்தையில் சமரச அலுவலர் முன்பாக அத்தகைய தவிர்க்க இயலாத வேலை நிறுத்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நிபந்தனை முடிவும் பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளது.  ஆனால் இனிமேல் இத்தகைய திடீர் வேலை நிறுத்தங்கள் (flash strike) எதையும் தொழிலாளர்கள் மேற்கொள்ள முடியாது. மேற்சொன்ன புதிய சட்டத் தொகுப்பின்படி இனிமேல் 60 நாட்கள் முன்பாக வேலை நிறுத்த முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். தவிர தாவா நடுவர் முன்பாக நிலுவையிலிருக்கும் போது நடைபெறும் வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.   வேலை நிறுத்தம் செய்வதற்கு 60 நாள் முன்னறிவிப்புத் தேவை என்பதே வேலை நிறுத்தப் போராட்டமே செய்யக் கூடாது என்பதற்கான ஏற்பாடுதான். (பிரிவு: 62-64, தொழிலுறவு சட்டத் தொகுப்பு).
ஆலை மூடல், ஆட்குறைப்பிற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளது
தொழிற்சாலை என்பதன் வரையறைகள் மாற்றப்பட்டுள்ளது
குறிப்பிட்ட கால பணி நியமனம் (fixed term employment) என்பது நிலையாணை விதிகளில் உட்புகுத்தப்பட்டுள்ளது
தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை சரிபார்ப்பு என்பது முதலாளி நிர்ணயிக்கும் அலுவலரால் மேற்கொள்ளப்படும் என நிர்வாகத்தின் அதிகார வரம்பிற்குள் சென்றுள்ளது (விதிகள் பிரிவு 6 (பிரதான சட்டம் பிாிவு 14 (3), (4)
பொதுவாக தொழிற்சாலை சட்ட வரம்பிற்குள் வருகிற எந்த ஒரு தொழிற்சாலையையும் மூடுவதோ, கதவடைப்பு செய்வதோ மேற்கொள்வதற்கு முன்பாக தொழிலாளர் துறை மூலமாக அரசின் அனுமதி பெற வேண்டும்.  ஆனால் தற்போது மேற்சொன்ன புதிய சட்டத் தொகுப்பிற்கிணங்க (தொழிற்சாலைச் சட்டம் 1948ன் பிரிவு 2(எம்)ல் தொழிற்சாலை என வரையறுக்கப்பட்டுள்ள) எந்த ஒரு தொழிற்சாலையும் 300 தொழிலாளர்களுக்கு குறைவாக பணிபுரிவார்கள் எனில், அல்லது ஒரு ஆண்டில் சராசரியாக பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் என அரசு நிர்ணயிக்கும் எண்ணிக்கைக்கு குறைவாக இருப்பின் அந்த தொழிற்சாலையை மேற்படி முன் அனுமதி பெறாமல் முதலாளிமூடிக்கொள்ளலாம் (பிரிவு 77 தொழிலுறவு சட்டத் தொகுப்பு)
தொழிற்சங்கங்களுக்கிடையே தாவா என்ற நிலை வரும் போது தனியொரு நபர் புகாரளித்து அதைத் தாவாவாக விசாரிக்கலாம்.(விதிகள் பிாிவு 10)
பல வருடங்களுக்கு முன்பு வரை தொழிற்தாவாச் சட்டம் 1947ன் பிரிவு 2A (பணிநீக்கத்தை எதிர்க்கும் தாவா), மற்றும் பிரிவு 2K (பணி நிலைகள், பாரபட்சம், தண்டனைகள் போன்றவற்றை எதிர்க்கும் தாவா) ஆகிய இரண்டின் கீழான தாவாக்களும் முதலில் தொழிலாளர் அலுவலர் முன்பாக நடத்தி சமரச முறிவு பெற்று பின்னர் அரசின் பரிந்துரையின் பேரில்தான் தொழிலாளர் நீதிமன்றம் போன்றவற்றிற்கு செல்ல இயலும் என்றிருந்தது.  உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டு சட்டப்பிரிவு 2A ன் கீழ் பணி நீக்கம் போன்றவற்றை எதிர்த்து தொடரப்படும் வழக்குகள் தொழிலாளியின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடையது என்பதால் தாமதங்களை தவிர்க்க வேண்டுகை விடப்பட்டதைத் தொடர்ந்து அத்தைகய தாவாக்கள் நேரடியாக தனியொரு தொழிலாளியாகவே தொழிலாளர் நீதிமன்றம முன்பாக வழக்காக தொடுக்கலாம் என்கிற நிலை ஏற்பட்டது (மருத்துவமனைத் தொழிலாளர் சங்கம் -எ- இந்திய அரசு 2003 I LLJ 1127 (S.C.).
ஆனால் தற்போது, சமரச அதிகாரியிடம் முறையிடுவதற்கு முன்பாக நடுவர்களை (arbitrator) ஏற்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாட்டை புதிதாகப் புகுத்தி உள்ளனர். தொழிற்தகராறு ஒன்றில் ஒரு முடிவைப் பெறுவதற்குப் பழைய நடைமுறையிலேயே தொழிலாளர்கள் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டும். தற்போது தொழிற்தகராறை மேலும் இழுத்தப்படிப்பதற்கான ஏற்பாடாக இந்த நடுவர் முறை நுழைக்கப்பட்டுள்ளது. இது முதலாளிகளுக்குத்தான் சாதகம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.(பிரிவு 42: தொழிலுறவு சட்டத் தொகுப்பு)
சட்டத்தை  மீறிச் செயல்படும் ஒரு நிர்வாகத்தின் மீது பழைய சட்டங்களின்படி நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்க முடியும். ஆனால் புதிய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றங்களில்கூட இனி  நீதிமன்றங்கள் தலையிட முடியாது. மாறாக சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது மத்திய மாநில அரசு அதிகாரிகளே, அதுவும் அரசு சார்பு செயலாளர் அளவிலான ஒருவர் தான் விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவார்களாம்.
அரசு அலுவலர்கள் என்பவர்கள், அதுவும் ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போது குறிப்பிட்ட துறைகளில் அமைகின்ற அரசிற்கு சாதகமான நபர்கள் என பணியிடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறவர்கள்.  அத்தகைய அரசுத் துறை அதிகாரிகளின் ஆசியோடுதான எல்லா முதலாளிகளும் சட்டத்தை மீறுகின்றனர். அத்தகைய அதிகாரியே நீதிபதியாக நியமிக்கப்பட்டால் யாருக்கு நியாயம் கிடைக்கும்? பலவீனப் பிரிவினரான தொழிலாளர்களைப் பொறுத்தவரை தற்போதைய புதிய நான்கு சட்டத் தொகுப்புகளிலும் நீதி தேவதையின் கண்களோடு காதுகளும் சேர்த்து மூடப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம்.(பிரிவு 85-89 தொழிலுறவு சட்டத் தொகுப்பு)
மேலோட்டமாக பார்க்கையில் இத்தகைய பாதகமான பிரிவுகள் மாநில அரசு உருவாக்கியுள்ள விதிகளில் இல்லை போல் தோன்றினாலும், அனைத்திலும் பிரதான மத்திய அரசின் சட்டத்தை சார்ந்து என்பது சொல்லப்பட்டுள்ளது.
படிக்க :
♦ பறிபோகும் கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் | லஜபதிராய் | வீடியோ
♦ தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !
மேலும் நீதிமன்றங்களைப் பொறுத்தவரை அரசின் எந்த விதமான நடவடிக்கைகளிலும் தலையிடுவது என்பது நிறுத்தப்பட்டு அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட வேண்டியதில்லை என்கிற பொது குணாம்சம் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே இந்த விதிகளை எதிர்த்து தொழிலாளி தரப்பில், தொழிற்சங்கத்தின் தரப்பில் நீதிமன்றம் சென்றால் சுவற்றில் அடித்த பந்தாக மறுநாளே தள்ளுபடி செய்யப்படும்.  அதே சமயம் பெருநிறுவன முதலாளிகள் சாா்பில் பிரதான சட்டத் தொகுப்புகளுக்கு முரணாக மாநில அரசின் விதிகள் உள்ளது என வழக்கு தொடரப்படுமானால், உடனே நீதிமன்றம் தலையிட்டு, முதன்மை சட்டத்தின் முக்கிய  அம்சங்களிலிருந்து விலகுவதாக மாநில விதிகள் அமையக் கூடாது என உத்திரவிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
தொழிலாளர் நலச் சட்டங்களின் இந்த விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு என்பது பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போலிருப்பதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.  முக்கியமான தொழிற்சங்கங்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் மாநில அரசுடன் தேர்தல் கூட்டணி என்கிற இணக்கத்தில் உள்ளது.  இந்த சூழலில் இத்தகைய தொழிற்சங்கங்கள் தற்போது அறிவிக்கை செய்யப்பட்ட விதிகளுக்கு எந்த அளவில் ஆட்சேபணைகள் சமா்ப்பிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் குறைந்த பட்சம் இடது சாரி அமைப்புகளாவது முறையான விரிவான ஆட்சேபணைகள் சமா்ப்பிக்காவிட்டால் வரலாறு அவர்களை மன்னிக்காது.

(முற்றும்).

சித்திர குப்தன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க