முறைசாரா தொழிலாளர்களுக்கான ஒரு ஓய்வூதிய திட்டத்தை தன்னுடைய இடைக்கால நிதி நிலை அறிக்கையில் ஆரவாரமாக மோடி அரசு அறிவித்துள்ளது. 10 கோடி பயனாளிகளுடன் உலகின் மிகப்பெரிய ஓய்வூதிய திட்டமாக ஏற்கனவே இது வியந்தோதப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் ஆண்டிலேயே மோடி அரசால் ஆரவாரமாக தொடங்கப்பட்ட இதேபோன்ற திட்டங்களின் தலைவிதியைப் புரிந்து கொள்வது நல்லது. இதே போன்ற ஆரவாரத்துடன் இதே வகை தொழிலாளர்களுக்காக ”ஸ்ரீமேவ் ஜெயதே” என்ற திட்டம் அன்றும் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் முறைசாரா தொழிலாளர்களுக்கு அடையாள எண் அட்டைகள் (Unorganised Workers Identification Number cards) வழங்கப்படுவதாக இருந்தன. “சுகாதார காப்பீடு மற்றும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்களை வழங்குவதற்காக சமூக பாதுகாப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படும்” என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2015 பிப்ரவரியில் மின்ட் வணிக செய்தித்தாள் குறிப்பிட்டிருந்தது. பாஜக அமைச்சர்களும் மாநாடுகள் பல நடத்தி ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை குப்பைகளாக்கினர்.

படிக்க:
♦ புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!
♦ நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் !

புதிய திட்டத்திற்கும் இதே தலைவிதிதான் நேரும். இதே துறையை மையப்படுத்தி கடந்த 2015, மே 9 அன்று “அடல் ஓய்வூதிய திட்டம்” (Atal Pension Yojna) இதே போன்ற ஆரவாரத்துடனும் அம்சங்களுடனும் தொடங்கப்பட்டது. ஆனால் திட்டம் தொடக்கம் முதலே ஆட்டம் கண்டது. 2015 முடிவிற்குள் தோராயமாக 2.2 கோடி மக்களை சென்று அடைவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆயினும் குறித்த நாளுக்குள் 6.5 % இலக்கு மட்டுமே எட்டப்பட்டது.

தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் அதில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 1.1 கோடியாக இருக்கிறது. இது ஒரு கணிசமான எண்ணிக்கை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் 41.6 கோடி முறைசாரா தொழிலார்களின் எண்ணிக்கையை (2011-12-ம் ஆண்டிற்கான தேசிய மாதிரி சர்வே அறிக்கையின் படி) ஒப்பிடும் போது இது அற்பசொற்பமான எண்ணிக்கையே. வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் ரீதியிலான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவதற்கு புதிய மொந்தையில் பழைய கள்ளு என்ற கணக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் தோற்றுப்போன முந்தைய திட்டத்தின் அதே அம்சங்களை ஏறக்குறைய கொண்டுள்ளது.

நம்ப முடியாத இலக்குகள்:

இரண்டு இன்றியமையாத நடைமுறை அம்சங்களில் சமீப வரவு மோடியின் புதிய இந்தியாவில் விமர்சிக்கப்படுகிறது. முதலாவது, ஓய்வூதியத்திற்கான பங்களிப்பு என்பது தொழிலாளர்களின் வேலைவாய்ப்புடன் தொடர்புடையதாக இல்லை. மாறாக தன்னார்வ பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு காரணங்களால் தொழிலாளர்கள் இத்திட்டத்தை வரவேற்கவில்லை. 60 வயது கடந்த பிறகே பூத்து குலுங்க போவதாய் சொல்லிக்கொள்ளப்படும் இந்த ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை நுகர்வதற்கு பெரும்பான்மையான தொழிலாளர்கள் உயிருடன் இருக்கமாட்டார்கள்.

நாடுய் முழுவதும் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்நிலைமை மோசமான நிலையிலேயே உள்ளது

இந்தியா உட்பட உலகெங்கிலும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் வேலை வாய்ப்புடன் தொடர்புடயதாகவே இருக்கின்றன. சமூக பாதுகாப்பிற்காக தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் அதே நேரத்தில் முதலாளிகளிடமிருந்தும் பிடித்தம் செய்யப்படுகிறது. எனினும் புதிய திட்டத்தின்படி தொழிலாளர்கள் மட்டுமே பங்களிப்பை செலுத்த வேண்டும். தொடர்ந்து 20-30 ஆண்டுகள் பங்களிப்பு செலுத்த சொல்வது முறைசாரா தொழிலாளர்களால் இயலாத காரியம்.

20-30 ஆண்டுகளில் கிடைப்பதாய் சொல்லப்படும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர்கள் தங்கள் பாடுபட்டு சேர்த்த சொற்ப காசியிலிருந்து பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எதார்த்தமற்றது. சான்றாக, இன்றும் கூட தற்காலிக தொழிலாளர்களிடமிருந்து அவர்களுக்கு தெரியாமலேயே வருங்கால வைப்பு நிதிக்காக ஒரு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது என்பதை வைத்து இதை புரிந்து கொள்ளலாம். உரிமை கோருபவர்கள் இல்லை என்பதால் தொழிலாளர்களின் சேமிப்பை சுரண்டி தொழிலாளர் வைப்பு நிதி மேலாண்மை நிறுவனங்கள் கொழுக்கின்றன.

இதற்கு மற்றுமொரு சான்றையும் பார்க்கலாம். ஒவ்வொரு மாநிலங்களும் முறைசாரா தொழிலாளர்களுக்கு இதே போல பங்களிப்பு சார்ந்த ஓய்வூதிய திட்டத்தை தொடங்கியிருக்கின்றன. ஆனால் அவை செயலிழந்து விட்டதால் தொழிலாளர்களின் பங்களிப்பை திரும்ப கேட்பது என்பது ஒருபோதும் நடவாத காரியம்.

60 வயதுக்கு பிறகு ஓய்வூதிய திட்டம் பூத்து பலன்களை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் 20-30 ஆண்டுகளாக பங்களிப்பை செலுத்தும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் அறுவடைக்கு முன்பே மரணித்து விடுகின்றனர். தூசியும் தும்மலுமான உண்மையான இந்தியாவும் லூடென்ஸ் டெல்லியும் (இந்திய பிரதமரின் அரண்மனை வீற்றிருக்கும் இடம்) எப்படி பிரிந்து கிடக்கின்றன என்பதற்கு இது ஒன்றே சாட்சி.

படிக்க:
♦ சென்னை ஐ.ஐ.டி APSC நிறுவனர்களில் ஒருவரான ரமேஷை குறி வைக்கும் மோடி அரசு !
♦ எழுத்தாளர் அருந்ததி ராய் பங்கேற்கும் “எதிர்த்து நில் !” – மக்கள் அதிகாரம் | திருச்சி மாநாடு | பிப் 23

ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கு நடுத்தர வர்க்கத்திற்கு வேண்டுமென்றால் 60 வயதென்பது உவப்பாக இருக்கலாம் ஆனால் கடும் உடலுழைப்பை செலுத்தும் முறைசாரா தொழிலாளர்களுக்கு முற்றிலும் இது எதார்த்தமற்றது. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் தற்போது 68.8 ஆண்டுகள் அதுவே கிராமப்புறங்களில் 65 ஆண்டுகள். எப்படி ஆயினும் இந்த சராசரி ஆயுட்கால புள்ளி விவரங்கள் சமூக பொருளாதார அடிப்படையில் மாறுபடுகின்றன. இந்திய முறைசாரா தொழிற்துறைக்கு அதிகப்படியான பங்களிப்பு செலுத்தும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் என்பது நடுத்தர ஆதிக்கசாதி இந்தியர்களின் சராசரி ஆயுட்காலத்தை விட மிகவும் குறைவு.

மக்கள்தொகை ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தை சேர்ந்த S.K மொஹந்தி மற்றும் F.ராம் இருவரும் சேர்ந்து “இந்தியாவின் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரிவினரின் சராசரி ஆயுட்காலம் (Life Expectancy at Birth Among Social And Economic Groups in India)” என்ற தலைப்பில் மக்களைத்தொகை ஆய்வொன்றை வெளியிட்டனர். அதன்படி 2006 ஆண்டில், பங்குடியினரின் சராசரி ஆயுட்காலம் 60.3 ஆண்டுகளாகவும் அதுவே அவர்களில் ஏழைகளின் ஆயுட்காலம் மிகக்குறைவாக 56.9 ஆண்டுகளாகவும் இருந்தன. முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களே இந்தியாவின் ஏழைகள் என்று கருத முடியும். தலித்துக்களின் சராசரி ஆயுட்காலம் 63 ஆண்டுகள் என்று அது கூறுகிறது.

சராசரி ஆயுட்காலம் கடந்த பத்தாண்டுகளில் சற்று அதிகரித்திருப்பினும் இவ்விரண்டு பிரிவிலும் உள்ள ஆண்களின் ஆயுட்காலம் தேசிய சராசரியை விட குறைவாகவே இருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களை பல்வேறு வகைகளில் மாற்றலாம். ஒன்று மட்டும் தெளிவு. முறைசாரா துறையின் பெரும்பாலான தொழிலாளர்கள் பலன்களை பெறுவதற்கு 60 வயது வரை உயிரோடு இருக்க மாட்டார்கள்.

உண்மையில், கட்டுமானம், செங்கல் சூளைகள், குவாரிகள் உள்ளிட்ட உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடும் முறைசாரா தொழிலாளர்களின் ஆயுட்காலம் என்பது அதனினும் குறைவு. இது போன்ற கடுமையான உடலுழைப்பில் ஈடுபடுவதற்கு அதிகபட்சம் வயது 40 என்பதை சற்று மேம்போக்காக பார்த்தாலே தெரியும். 40 வயதை கடந்த பிறகு அந்த வேலைகள் கிடைக்காது. முறைசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் என்பது 55 வயது அல்லது அதற்கு முன்னதாக தொடங்க வேண்டும்.

ஆனால் முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்க வேறு எந்த வழியும் இல்லையா? சில நல்ல திட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மகாராஷ்டிராவின் மாதாடி மற்றும் ஏனைய உடலுழைப்பு தொழிலாளர்கள் சட்டம், 1969 (The Maharashtra Mathadi and Other Manual Workers Act 1969) அத்தகைய ஒன்று. இன்று தொழிலாளர்கள் மாதாடி வாரியங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டாலும், மாநிலம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட மாதாடி வாரியங்கள் இலட்சக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை அளிக்கின்றன.

இச்சட்டமானது, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை முறைப்படுத்துவதற்கும், தொழிலாளர்-முதலாளி உறவை ஏற்படுத்துவதன் மூலம் சமூக பாதுகாப்பிற்கும் உறுதியளிக்கிறது. வேலைவாய்ப்பை முறைப்படுத்துவது, முதலாளி – தொழிலாளி உறவை ஏற்படுத்துவது மற்றும் அதனுடன் சமூக பாதுகாப்பை இணைப்பது – இம்மூன்றும் எந்த ஒரு சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும் அடிப்படையானது. இல்லையெனில் வெறும் ஜூம்லாக்கள் மட்டுமே மிஞ்சும்.

சுகுமார்

நன்றி : தி வயர்
கட்டுரையாளர் : சுதிர் கட்டியார்
தமிழாக்கம் : சுகுமார்

1 மறுமொழி

  1. இது சக்கரை தடவிய விஷம்.
    இதுநாள்வரை கடும் உடலுழைப்பு செலுத்திய முறைசாராத் தொழிலாளிகள் 55-60 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம்.
    சாராயம், போதைப் பொருட்கள், குத்கா எனத் திட்டமிட்டு சீர்கேடு அடையச் செய்திருக்கும் ஆரோக்கியமற்ற இன்றைய சூழலில் அவர்களது ஆயுட்காலம் 50 – 55 ஆண்டுகளாகக் குறையப்போவது உறுதி.
    அவர்கள் அரசுக்கு மாதா மாதம் 100 ரூபாய் மொய் வேறு எழுதவேண்டுமா? ஏன் அகர்வால், அம்பானி, அதானி சொத்து பின்பக்கம் கொழுத்துத் தொங்குவது பத்தலியா?

    இந்த லட்சணத்தில் முதியோர், ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டத்துக்கான தொகையில் ரூ.750 கோடி குறைத்து இந்த திட்டத்துக்கு ரூ.600 கோடி ஒதுக்கியிருப்பாதாக சொல்லப்படுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க