டந்த ஜூன் 30-ம் தேதி புதன்கிழமை அன்று ஓலா ஊபர் ஓட்டுனர்கள் தன்னெழுச்சியான ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். ஓலா ஊபர் மாதிரியான நிறுவனங்கள் வெறும் ஆப்பை மட்டும் வைத்துக் கொண்டு தங்களிடம் 30% கமிஷனை வாங்குகின்றனர் என்றும் டீசல் விலை ரூ.50 இருந்தபோது எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்தார்களோ அதே தொகையை இன்று டீசல் விலை ரூ.94 கடந்து விட்ட பின்பும் நிர்ணயம் செய்கின்றனர் என்றும் தொழிலாளர்கள் குமுறினர்.

கிட்டத்தட்ட ரூ.100-ல் ஒரு ட்ரிப் எடுத்தால் அதில் ரூ.30 ஓலா-ஊபர் மாதிரியான நிறுவனங்களுக்கும் பெட்ரோலுக்கு ஒரு ரூ.40-50 என்று போக கைக்கு ரூ.10-20 தான் நிற்கின்றது என்று கூறுகின்றனர் ஓட்டுநர்கள். இந்த பணத்தை வைத்துக் கொண்டு EMI  கட்டுவதா வீட்டை பார்ப்பதா இதனை வைத்து கொண்டு நாங்கள் என்ன செய்வது என்று புலம்புகின்றனர்.

படிக்க :
♦ ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி !
♦ ஓலா – ஊபர் டாக்சி ஓட்டுனர் போராட்டத்தை ஆதரிப்போம் !

ஆகவே, ஓலா ஊபர் மாதிரியான நிறுவனங்களின் 30 சதவீத கமிஷனை 10 சதவீதமாக குறைக்கவும் நிலவுகின்ற டீசல் விலைக்கு ஏற்ப கட்டணங்களை அரசே தொடர்ச்சியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டி கடந்த புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் மிகப் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.

இந்த தொழிலாளர்கள் அனைவரும் சங்க மற்ற தொழிலாளர்கள் அதாவது வாட்ஸ்அப், டெலிகிராம் மாதிரியான குரூப் மூலமாக இணைந்தவர்கள். தற்போதுள்ள சங்கத்தின் மீது அவநம்பிக்கை உள்ளவர்களும் கூட. அந்த வகையில் தன்னெழுச்சியாக இந்தப் போராட்டம் புதன்கிழமை அன்று தொடங்கியது.

இந்த போராட்டம் தெரியாமலோ அல்லது தெரிந்தும் பணத்திற்காக சில ஓட்டுநர்கள் ஓலா ஊபரில் வாகனம் ஓட்டவே செய்தனர். கடந்த புதன், வியாழன் கிழமைகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்களே அவர்களை மடக்கி வேலை நிறுத்தத்தை பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களையும் தங்களுடன் போராட்டத்தத்தில் இணைத்துக் கொண்டனர். அந்த வகையில் கடந்த இரு நாளும் போராட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.

சங்கம் இல்லாமல் இணைந்த இந்த தொழிலாளர்கள் மற்ற அனைத்து ஓட்டுநர் சங்கங்களின் ஆதரவையும் கோரினர். ஆனால், ஓட்டுனர் சங்கங்கள் தனித்தனியாக இந்த மாதிரியான வேலை நிறுத்தத்தினால் எந்த பலனும் கிடைக்காது; ஆகவே ஒற்றுமையாக ஒரு ஓட்டுநர் கூட்டமைப்பின் சார்பாக ஒரு மாபெரும் போராட்டத்தை சென்னை சேப்பாக்கத்தின் ஆணையர் அலுவலகத்திற்கு முன்பாக நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கினர். அதனை ஏற்று இன்று கிட்டத்தட்ட 2000-த்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் அந்தப் போராட்டக் களத்தில் இணைந்தனர்.

ஆரம்பத்தில் ஓட்டுநர் கூட்டமைப்பின் சங்க நிர்வாகிகள் போக்குவரத்து கமிஷனரை சந்தித்து இந்தப் போராட்டத்தைப் பற்றிய மனுவைக் கொடுத்து, இந்த போராட்டம் சம்பந்தமாக பேசினர். ஆனால், அதில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. மனுவை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்; பிறகு ஆலோசித்து பதில் சொல்கிறோம் என்று கூறிவிட்டனர். ஆனால், அதனை ஓட்டுநர்கள் யாரும் ஏற்கவில்லை.

அதன் விளைவாக மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ஓட்டுநர்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் பேசிய பின்னர் ஜூலை 9-ஆம் தேதி இதனைப் பற்றி முடிவெடுப்பதாக அரசு தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனையும் ஓட்டுநர்கள் யாரும் ஏற்கவில்லை.

This slideshow requires JavaScript.

இது இந்த போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்றே ஓட்டுநர்கள் கருதினர். அதனால் அதன் பிறகும் ஓட்டுனர்கள் கலையாமல் அதே இடத்தில் உட்கார்ந்து போராடியபடி இருந்தனர். இவ்வாறு இருக்க காலையில் ஒவ்வொரு சங்க பிரதிநிதிகளும் வந்து தொழிலாளர்களிடம் பேசுகையில் இத்தனை லட்சம் ஓட்டுனர்கள் இருக்கிறார்கள் நாம் மிகக் குறைவே அவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று பேசியதை கேட்ட  தொழிலாளர்களே சங்க நிர்வாகிகளை கோபமாகப் பேசி அங்கிருந்து வெளியேற்றினர்.

இயல்பாகவே தொழிலாளர்களிடம் ஊறிப்போன சங்கம் வேண்டாம், சங்கம் வந்தால் போராட்டத்தை கெடுத்துவிடும் என்ற சிந்தனையும், சங்கங்களும் அதனை சரிவர கையாலாததால் சங்க நிர்வாகிகளை அங்கிருந்து தொழிலாளர்களே திட்டித் தீர்த்தனர். அதன் விளைவாக ஒவ்வொரு சங்கங்களும் சங்க நிர்வாகிகளும் படிப்படியாக அங்கிருந்து விலகிச் சென்றனர்.

முன்பெல்லாம் ஒரு போராட்டம் தொடங்கப்பட வேண்டும் எனில் சங்கமாக இணைய வேண்டிய தேவை தொழிலாளர்களுக்கு இருந்தது. அவர்கள் போராட்டத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்றும் எப்போது தொடங்க வேண்டும், அதன் கோரிக்கைகள் என்ன, அந்த போராட்டத்தின் காலம் எவ்வளவு, எப்போது முடிக்க வேண்டும் என்ற அனைத்து திட்டமிடல்களும் நடக்கும். ஆனால் இப்போது பல சங்கங்கள் அவ்வாறு இல்லாமல் இருப்பதால் தொழிலாளர்கள் பலர் இந்த சங்கங்களின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.

சங்கங்கள் வந்தால் போராட்டம் கலைந்துவிடும் என்ற அளவுக்கு இறுதியாக இந்த போராட்டம் கலைந்து தொழிலாளர்கள் செல்லும்போது கூடவும் சங்கத்தினால் தான் போராட்டம் கலைந்தது என்று அவர்கள் கூறியபடியே சென்றனர்.

ஆகவே சங்கத்தினால் தொடங்கப்பட்ட போராட்டம் போய் சங்கமே போராட்டத்தை கலைக்கும் எண்ணம் தொழிலாளர்கள் மத்தியில் வெகுவாக ஊறிப் போயிருக்கிறது.

முக்கியமாக அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த எண்ணம் வளர்ந்து வருகிறது. அது அமைப்பு மறுப்பியல் என்ற சிந்தனையில் தொழிலாளர்கள் ஊறி போய் உள்ளனர். ஆனால் எந்த ஒரு போராட்டமும் சரியான அமைப்பு வழிகாட்டுதல் இல்லை எனில் வெற்றியடைய முடியாது என்பதே நிதர்சனம்.

அமைப்பில் இருக்கும் சிக்கல்களை பற்றி விவாதிக்கலாம். ஆனால் அமைப்பே கூடாது என்பது சரியல்ல. அதே வகையில் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களிடம் முறையாக பேசி அவர்களின் கோரிக்கைகள் என்ன அவற்றை எவ்வகையில் வழி நடத்தினால் கொண்டு செல்ல முடியும் என்றும் சரியாக விளக்காமல் ஒரு தொழிலாளர்களிடம் இருந்து  அந்நியப்பட்ட மனநிலையையே தொழிற்சங்கங்கள் வகித்து வருகின்றன.

சொல்லப்போனால் சங்கங்கள் நடத்தும் பெரும்பாலான போராட்டங்கள் அடையாளப் போராட்டங்களாக இருப்பதும் தொழிலாளர்களின் விரக்திக்கு ஒரு முக்கியமான காரணம். ஆனால் இந்த போராட்டம் அடையாளப் போராட்டமாக இல்லாமல்; பலர் பெரும் கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் இருந்த விரக்தியின் விளைவாய் தொடங்கப்பட்ட போராட்டம்.

போராட்டமே கூடாது என்று சொல்லும் நடுத்தர வர்க்க மக்கள் தான் தங்களுடைய சுயவாழ்க்கையின் வெளிப்பாடாய் விரக்தியில் போராட்டமே தீர்வு என்ற முறையில் வீதிக்கு வந்து இருக்கின்றனர். அவர்களை சரியாக வழிநடத்த வேண்டிய சங்கமும் வழி நடத்தவில்லை. அவர்களுடைய அமைப்பு மறுப்பியல் சிந்தனையும் சங்கமாக அவர்களை இணைய அனுமதிப்பதில்லை.

இந்நிலையில் இரண்டாவது பேச்சுவார்த்தைக்கு சென்று வந்த தொழிலாளர்களிடம் அமைச்சர் பேசினார். 9-ஆம் தேதி இதைப் பற்றி விவாதிப்பதை கூறியிருக்கிறார். நமது கோரிக்கைகளை கேட்டு இருக்கிறார் என்று சொன்னார்கள். மற்ற தொழிலாளர்கள் அமைச்சர் இங்கே வந்து எங்களிடம் அதை நேரடியாகச் சொன்னால்தான் என்ன? அமைச்சரை வர சொல்லுங்கள் என்று கூச்சலிட்டனர். ஆனால், அமைச்சரோ உணவருந்த சென்றுவிட்டார் என்று பேச்சுவார்த்தைக்கு போன தொழிலாளர்கள் கூறினார்கள்.

அதனைக் கேட்ட ஓட்டுனர்கள் காலையிலிருந்து மதியம் தாண்டியும் சாப்பிடாமல் இங்கே நாங்கள் அமர்ந்திருக்கிறோம் போராட்டக்களத்தில் அமைச்சர் மட்டும் அழகாய் உணவு சாப்பிட சென்றுவிடுவாரா என்று கூறினர்.

இறுதியாக காவல்துறையும் ஓட்டுநர்களை மிரட்டுவதற்கு முன்பே கைது செய்வதற்குரிய வாகனங்களைக் கொண்டு வந்து இறக்கி விட்டு இருந்தனர். இடையிடையே உள்ளே பேசி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இறுதியாக ஒன்று கலைந்து செல் அல்லது கைதாகு என்பதையே காவல்துறை கோரிக்கையாக முன்வைத்தது. இறுதியில் கைது செய்யுங்கள் என்று தொழிலாளர்கள் முன்வந்தனர். அதன் வகையில் இரண்டு அரசு பேருந்துகளில் தொழிலாளர்களை ஏற்றினர். பிறகு மனம் மாறிய தொழிலாளர்கள் அதில் இருந்து கீழே இறங்கி நாங்கள் கிளம்புகிறோம் என்று முடிவெடுத்தனர்.

ஆனாலும்கூட கூட்டத்தில் நிறைய சிறு சிறு குழுக்கள் எண்ணற்ற மாற்றுச் சிந்தனைகளோடவே இருந்தனர். சிலர் விரக்தியின் உச்சத்தில் இருந்தனர். சிலர் நான் தீ குளிக்க போகிறேன் என்ற ஒரு வெறுப்பிலும் பேசிக் கொண்டே இருந்தனர். அந்த அளவுக்கு அவர்களின் வாழ்க்கை மிக மோசமான நிலையில் இருந்தது.

மக்களுக்கான அரசு என்று சொல்லிக் கொள்ளும் தி.மு.க அரசும் கடைசி வரையும் அங்கு வந்து பார்க்கவேவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் ஓட்டுநர்களும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.-வான உதயநிதி ஸ்டாலினும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் வந்து எங்களுக்கு வாக்குறுதி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.

போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய சில தி.மு.க. உறுப்பினர்கள் என்று சந்தேகப்படும் சில ஓட்டுநர்களும் இப்போது அமைந்திருப்பது மக்களுக்கான அரசு என்று கூறி போராட்டத்தை கலைப்பதில் உறுதியாக ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். அதனை தெளிவாக நம்மால் அங்கு பார்க்க முடிந்தது.

தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களை சரியாக வழி நடத்தி அவர்களின் கோரிக்கையை வெற்றி பெற செய்வதற்கான செயல் உத்திகளை வகுத்து செயல்பட வேண்டும். ஆனால், அப்படியான தொழிற்சங்க இயக்கம் குறைவாகவே உள்ளது. அதே சமயம் தொழிலாளர்களும் ஒரு சங்கமாய் அமைப்பாய் இணைந்து தங்களுடைய கோரிக்கைகளை சரியாக அணுகி அதனை எப்படி வெற்றி அடைய வைப்பது என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.

ஆனால், இங்கு இரண்டு மாபெரும் குறையாகவே உள்ளது. அடையாளப் போராட்டங்களை நடத்தும் தொழிற்சங்க இயக்கம் ஒருபுறமும் இயக்க அமைப்பு மறுப்பு சிந்தனையில் இருக்கும் தொழிலாளர்கள் மறுபுறமும் இருக்க மோடி அரசு தன்னுடைய தொழிலாளர் விரோத சட்டங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

படிக்க :
♦ கொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் !
♦ கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் !

போராட்டக் களத்தில் வந்த ஒரு ஓட்டுனர் உணர்வு ரீதியாக ஒரு கருத்தை வெளியிட்டார். கிருஷ்ணகிரியில் ரூ.2,000 கோடியில் ஓலா நிறுவனம் இருசக்கர வாகன தொழிற்சாலையில் கட்டப்போகிறதாம். அதற்கு முதலமைச்சர் ஆதரவு தருவாராம். ஆனால், அவர்களோ எங்களை சுரண்டிக் கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு எந்தவிதமான நன்மையும் செய்துதராத இது யாருக்கான அரசு, ஓலா நிறுவனத்திற்கான அரசா? ஓட்டுநர்களுக்கான அரசா? என்று முழக்கமிட்டார். ஆனால், எவ்வகையிலும் ஒரு முதலாளித்துவ அரசு என்பது மக்களுக்கான அரசாக எவ்வாறு இருக்க முடியும்.

இறுதியாக உண்மையிலேயே இது ஒரு தன்னெழுச்சியான மாபெரும் போராட்டமாக தொடங்கியிருக்கிறது தொழிலாளர்களே இரண்டு நாட்கள் சிறப்பாக போராடி இருந்தனர். அவர்களை தொழிற்சங்கங்கள் ஒரு இடத்தில் ஒன்றிணைத்து இதை பெரிய போராட்டமாக மாற்றுவதாக உறுதி அளித்தது. ஆனால், அதன் செயல்பாடு அப்போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதாகவே இருக்கிறது. இந்த போராட்டம் நாளை எவ்வாறு தொடரும் அடுத்த கட்டங்கள் எவ்வாறு நகரும் என்பதை பொருத்தே இன்றைய இந்த மாபெரும் போராட்டத்தை நம்மால் மதிப்பிட முடியும். ஆனால், தொழிலாளர்கள் சிறு குழுக்களாக இல்லாமல் ஒற்றுமையாக தங்களுக்குள்ளே அமைப்பாக திரண்டால் மட்டுமே தீர்வை நோக்கி பயணிக்க முடியும்.

குறிப்பு : (ஜூலை, 2) அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்திற்கு அருகில் கால் டாக்ஸி ஓட்டுனர்களின் மாபெரும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் ஆரம்பம் முதல் முழுவதுமாக உடன் நின்ற வகையில் எனது அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


நிதி குமார்

முகநூலில் : Nithi Kumar
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க