ந்திய சமூகத்தில் பெண்களின் நிலை என்ன என்பது பற்றி ஒரு அலசல் செய்ததில் நமக்கு பல தகவல்கள் அரசின் புள்ளிவிவரங்களில் இருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக நம் நாட்டில் ஓடும் ஆறுகளின் பெயர்கள் கூட பெண்களின் பெயர்களிலே இருக்கும். நாம் பேசும் மொழியை கூட தாய்மொழி என்று தான் கூறுவோம். நமது நாட்டை தாய்நாடு என்றுதான் அழைப்போம். அப்படி பார்க்கும்போது இந்திய நாட்டில் பெண்களுக்கான மதிப்பு என்பது பெரிய அளவில் இருப்பதாக தான் நாம் எல்லோரும் நம்புகிறோம். ஏன் சமூக வலைதளங்களில் பெருமிதமாக சொல்லிக்கொண்டும் உள்ளோம்.
ஆனால், சற்று நிதானித்து உண்மைகளை பரிசீலிக்க தவறுகிறோம். அதனால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்மந்தமான செய்திகளை பார்த்தால் கூட கடந்து செல்கிறோம் அல்லது ஒரு கருத்தை (கமெண்ட்) மட்டும் பதிவு செய்து எதிர்ப்பை காட்டுவதோடு கடமையை முடித்து விடுகிறோம். அதிலும் பலர் பெண்கள் தான் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டும்; ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லக்கூடாது, உடையை சரியாக போட வேண்டும் என்று கருத்து பதிவிடுகின்றனர். ஏதோ பெண்களுக்கு வெளியில் உள்ளவர்களால் மட்டுமே ஆபத்து இருப்பதுபோல கருத்து நிலவுகிறது. இது மிக ஆபத்தானது.
பாலியல் ரீதியிலான வன்முறை:
திருமணமான பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது உறவினர்களால் தான் 82 சதவீதம் நடக்கிறது. திருமணமாகாத பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது உறவினர்களால் தான் 39.3 சதவீதம் நடக்கிறது. உறவுகளுக்கு அடுத்தபடியாக ஆண் நண்பர்களால் 16.1 சதவீதமும், குடும்ப நண்பர்கள் மூலம் 11.7 சதவீதமும் நடக்கிறது என தேசிய குடும்பநல ஆய்வின் 2021-ம் ஆண்டின் அறிக்கையின் புள்ளிவிவரம் சொல்கிறது. அப்படியானால் பெண்கள் யாரிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும் என்பதை நாம் இயல்பாகவே புரிந்து கொள்ள முடியும்.
படிக்க :
ராபியா சைஃபி பாலியல் வன்கொலை : பார்ப்பனிய ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் !
பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !
தேசிய குற்றவியல் புலனாய்வு பிரிவின் புள்ளி விவரங்களின் படி, 1971 மற்றும் 1991-ம் ஆண்டுகளுக்கிடையில் 1,15,414 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆண்டிற்கு 6074 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன் பிறகு 1992 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் 1,54,664 ஆக பதிவாகி உள்ளது. அதாவது ஆண்டிற்கு 15,466.4 பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. அதன் பிறகு 2012-ல் 24,923 பாலியல் வல்லுறவுகளும், 2013-ல் 33,707 பாலியல் வல்லுறவுகள் என அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதில் 94 சதவீதம் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே இந்த வன்கொடுமை அறங்கேறி உள்ளது. இதே போல் தமிழகத்தில் மட்டும் 2012-ல் 737 ஆக இருந்த எண்ணிக்கை 2013-ல் 923 வழக்காக அதாவது ஓராண்டில் 19 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இந்தியாவில் 2020-ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,71,503 பதிவாகியுள்ளது.
குடும்ப வன்முறை:
இந்தியாவில் மூன்று பெண்களில் ஒருவர் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர் கொள்கின்றனர். அதில் பெரும்பாலானவை உடன் இருக்கும் வாழ்க்கைத் துணையால் ஏற்படுகின்றன. தேசிய குடும்ப உடல்நல ஆய்வின் (NFHSS) சமீபத்திய புள்ளி விவரங்கள் சொல்வது தான் நம்மை திடுக்கிட செய்கிறது. அதாவது குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளில் மாமியாரை ஒரு மனைவி அவமதிப்பது, சாப்பாடு சரியாக செய்யாமல் இருப்பது, குழந்தைகள்

பராமரிப்பு முறையாக இல்லை, உடலுறவுக்கு கணவனிடம் மறுப்பு தெரிவிப்பது போன்ற செயல்பாடுகளுக்காக மனைவியை கணவன் அடிப்பது தவறில்லை என 40 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களும், 38 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களும் அரசு கணக்கெடுப்பாளர்களிடம் கருத்து தெரிவித்து உள்ளனர். நான்கு மாநிலங்களில் 77 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களே மனைவியை கணவன் அடிப்பதை நியாயப்படுத்தி உள்ளனர்.

அதாவது உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் மனைவியை கொன்றதாக 46 வயது ஆடவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். இதுபோல் பல சம்பவங்கள் அறங்கேறி கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இதில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் இந்தியாவில் மனைவியை கணவன்மார்கள் அடித்தல் என்பது மிகவும் குறைவாகவே பதிவாகிறது. இதற்கு காரணம் சொல்லும் பலர் வீட்டில் நடக்கும் பிரச்சினை வீட்டு உள்ளேதான் இருக்க வேண்டும் என்கின்றனர். அப்படியானால் பெண் என்பவள் தன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருக்கும் ஒரு அடிமை என்பதுதான் அவர்கள் சிந்தனையில் உள்ளது. அப்படியே பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறினாலும் அவர்களுக்கான பாதுகாப்பு என்பது இந்த சமூகத்தில் இல்லை.
பொருளாதார ரீதியான வன்முறை:
இந்தியாவில் உள்ள இந்த பொருளாதார நெருக்கடி சூழலில் ஒரு குடும்பத்தில் ஆண், பெண் என அனைவரும் வேலைக்கு சென்றதால் வாழ முடியும் என்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் பெண்கள் தங்களின் குடும்ப நலனுக்காகவும், தன்னை பார்த்துக் கொள்ளவும் பொருளாதாரத்தை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஆனால், இந்த கொரோனா காலக்கட்டத்தில் 2017 மற்றும் 2022-ம் ஆண்டுக்கு இடையில் சுமார் 2.1 கோடி பெண்கள் நிரந்தரமாக தங்கள் வேலையை விட்டுள்ளனர். (வேலை தேடாமலே இருக்கின்றனர். நாட்டில் ஒட்டு மொத்த தொழிலாளர் பங்கேற்பில் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதில் இதன் பங்கும் உள்ளது.
சி.எம்.ஐ.இ. (CMIE) அறிக்கை, 2017-ம் ஆண்டில் 46 சதவீதத்தில் இருந்து 2022-ம் ஆண்டில் 40 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் 6 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை குறிக்கிறது. காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின் படி, (PLFS) 2018 – 2019-ம் ஆண்டில் இளம் நகர்புற பெண்களிடையே வேலையின்மை விகிதம் 25.7 சதவீதமாக இருந்தது. ஆண்களுக்கு வேலையின்மை விகிதம் 18.7 சதவீதமாக இருந்தது. ஜனவரி – ஏப்ரல் 2016-ல் 2.8 கோடி பெண்கள் வேலையில்லை ஆனால் வேலை செய்ய தயாராய் இருந்தனர். ஆனால் டிசம்பர் 2021-ல் வேலை செய்ய தயாராய் உள்ளவர்களின் எண்ணிக்கை 80 லட்சமாக குறைந்தது.
2011 மற்றும் 2017-ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட மாநிலங்கள் அளவிலான குற்றத் தரவுகளில் செய்த பகுப்பாய்வு, பீகார், டெல்லி போன்ற பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது. அதே வேலையில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளதையும் காட்டுகிறது.
இதற்கான முக்கிய காரணம் என்பது குடும்ப வேலைகளில் பெண்கள் அதிகம் செய்ய வேண்டி நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்தியாவிலுள்ள பெண்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 4 மணி நேரம் குடும்ப உறுப்பினர்களுக்காக ஊதியமில்லாமல் உழைக்க வேண்டி உள்ளது. புள்ளியல் அமைச்சகத்தின் ஆய்வுப்படி ஆண்கள் வெறும் 25 நிமிடங்களே ஊதியம் செலுத்தப்படாத வேலையை செய்கின்றனர். இந்த நெருக்கடி சூழல்தான், குடும்ப வேலைச்சுமை தான் பெண்களை வெளியில் சென்று நிதியீட்டும் வேலையில் பங்கேற்பை குறைக்கிறது.
படிக்க :
பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் !
பெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் !
இதனால் சமூக பணிகளிலும், தான் விருப்பப்பட்ட துறைகளில் சிறந்தோங்குவது என்பதை கூட இந்த வீட்டு வேலை சுமைதான் தடுக்கிறது. இது பெண்கள் அவர்களே ஏற்படுத்திக் கொள்வது இல்லை. அவர்களின் சுற்றத்தார்களினாலும், கணவனாலும் ஏற்படுகிறது. வீட்டு வேலை என்பது பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலையாக எல்லோரின் சிந்தனையிலும் ஊறிபோய் உள்ளது. குறிப்பாக இந்த ஆணாதிக்க சிந்தனைக்கு அதிகமாக ஆளாகி இருப்பது பெண்கள்தான். இது சரிதான் என்று ஏற்றுக் கொண்டும் உள்ளனர். இந்த நிலைமாற வேண்டும் என்றால் பெண்கள் சமூகமாற்ற பங்களிப்பில் ஈடுபட வேண்டும். அதற்கு பெண்கள் மட்டுமே முயற்சி செய்ய முடியாது குடும்பத்தின் வன்கொடுமையின் பிடியில் பெண்கள் வெளியே வர சமூகம் உதவி கரம் நீட்ட வேண்டும்.
ஆணாதிக்க சிந்தனைக்கு பெண்கள் அதிகமாக அடிமையாவதற்கு காரணம் இந்த சமூகம்தான். அதனால்தான் ஆண், பெண்ணை தன்னுடைய போகப்பொருளாக பார்க்கிறான். அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறான். ஏன் முற்போக்கு பேசும் பலரே பெண்களை தவறான கண்ணோட்டத்தில் அணுகுவது என்பதும் நடக்கிறது. அதற்கான முக்கிய காரணம் அவரவர்களிடத்தில் ஊறிபோய் உள்ள  சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க சிந்தனைதான். பெண்கள் மீதான இதுபோன்ற எந்த வன்கொடுமையாக இருந்தாலும் சட்டத்தின் மூலமே தீர்த்துக் கொள்ளலாம் என்ற மாயையிலிருந்து விடுபட்டு பிற்போக்கான ஆணாதிக்க சமூக அமைப்பை தகர்த்தெறியும் களப்போராட்டமே இன்றைய தேவை. சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையை சாதிப்போம்!

ஓவியா