பெண்கள் உடை அணிவதும் போராட்டம் ! அதை உதறி தள்ளுவதும் போராட்டம் ! என்ன வினோதமான புதிர்!  இது புதிர் மட்டுமல்ல, சமூகத்தில் நீடிக்கும் நிதர்சனமான உண்மையும் கூட. ஆடை நாகரீகத்தின் குறியீடு எனும் அதே வேளையில் ஆடையில் கடைபிடிக்கப்படும் பாலின, வர்க்க, சாதிய, இன பாகுபாடுகள் நம்மை மேலும் மேலும் அச்சுறுத்துகின்றன.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் ஆடையை பற்றிய புரிதல் கட்டாயம் தேவை . நாம் நாடு, கலாச்சாரம், மரபுகளை பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்கும் போது லண்டனின் தாம்சன் ரியூடர்ஸ் அமைப்பின் (Thomsan Reuters Foundation) அறிக்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இடம்பெற்ற 193 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மூன்று காரணிகளின் (கலாச்சார மரபுகள், பாலியல் வன்முறை, ஆள் கடத்தல்) அடிப்படையிலான தரப்பட்டியலில் இந்தியா கீழிருந்து 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பெண்களைத் ‘தாயாகப்’ போற்றும் நாடு, பெண்களைப் பாதுகாக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன ? பெரிதாக ஒன்றுமில்லை. குற்றமிழைத்தவனை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட பெண்களைக் குற்றவாளியாக்கும் போக்கு இந்தியாவில் பெருமளவில் நீடிப்பதாலும், அதனை அங்கீகரிக்கும் பார்ப்பனிய ஆணாதிக்கச் சிந்தனை சமூகத்தில் நிரம்பி வடிவதாலும் தான்.

படிக்க :

பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?

ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு காரணம், பெண்ணின் ஆடைதான் என சொல்பவர்களின் வாய், ஆணின் பார்வையிலும் சிந்தனையிலும் இருக்கும் கோளாறைப் பற்றி ஏன் பேச மறுக்கிறது? இங்கே பாதிப்புக்குட்பட்டவர்கள் மீது தான் பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பெண் என்ன ஆடை உடுத்தியிருந்தாள்? எத்தனை மணிக்கு அங்கு சென்றாள்? அந்த நேரத்தில் அங்கு அவளுக்கு என்ன வேலை? என்பது போன்ற கேள்விகள் பெண்களிடம் கேட்கப்படுகிறது.

இந்த ஆணாதிக்கச் சமூகத்தால் வழங்கப்பட்டிருக்கும் “என்ன இருந்தாலும் ஆம்பள” என்ற தனிச் சலுகையை, துஷ்பிரயோகம் செய்பவர்களின் ஆதிக்க மனநிலையை கேள்வி கேட்காமல், அம்மனநிலையை அறிந்து அதனை மாற்றி அமைக்க முற்படாமல், ​​பலரும் பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே பொறுப்பை சுமத்துகிறார்கள். பெண்கள் அணியும் ஆடைகள், அவர்கள் வெளியே செல்லும் நேரம், செல்லும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. இது சரியான பார்வையாகுமா?

சிதைக்கப்பட்ட சிறுமி ஆசிபா

கடந்த 2017-ம் ஆண்டு அண்டை வீட்டில் வாழ்ந்த துஷ்யந்த் எனும் கிரிமினலால்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினி என்ன ஆபாசமான ஆடை அணிந்திருந்தாள் ? கடந்த 2018-ம் ஆண்டு, காஷ்மீரில் கோவிலில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட ஆசிபா எனும் 8 வயது சிறுமி என்ன ஆபாசமான ஆடை அணிந்திருத்தாள் ?

சென்னை அயனாவரம் குடியிருப்பு ஒன்றில் காது கேளாத 11 வயதுச் சிறுமியை, 15 பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது நினைவிருக்கலாம். அவள் என்ன உடை அணிந்திருந்தாள் ? இந்தச் சிறுமிகள் எல்லாம் பட்டப்பகலில் வெவ்வேறு இடங்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். எனவே நிகழும் பாலியல் வன்கொடுமைகள் எல்லாம், ஆடையாலோ, இடத்தாலோ, நேரத்தாலோ நிகழவில்லை என்பது தெளிவாக புலப்படுகிறது.

இந்திய மரபுகளை ‘ஆக்கிரமிக்கும்’ மேற்கத்திய ஆடைக் கலாச்சார தாக்கங்கள்தான் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் காரணமாகவும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. மேற்கத்திய ஆடைகளின் வாசமே படாத இந்தியாவின் கிராமப்புறங்களில் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எனில், பிரச்சினை எங்கிருக்கிறது ?

ஒரு சமூகமாக பெண்களை நாம் பார்க்கும் பார்வையில் தான் கோளாறு இருக்கிறது. அதாவது, பெண்ணின் உடல் பாலியல் பண்டமாகவே பார்க்கப்படுகிறது என்பதன் வெளிப்பாடுதான் நடைபெறும் பாலியல் வன்முறைகள் அனைத்துமே.

இயற்கை ஆண் ,பெண் இருவரையும் சமாகத்தான் படைத்தது. அதன் பின் உண்டான சமூக மாற்றங்கள், பாலினம், மதம், இனம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டை படைக்கின்றன. இவற்றில் முதன்மையாகத் தோன்றியது பாலின பாகுபாடு.

பெண்களுக்கென்றே சில விதிமுறைகளையும், புறக்கணிப்பையும் ஒடுக்குமுறைகளையும் காலம்காலமாக வெவ்வேறு வடிவங்களில் சமூகம் வகுத்து வைத்திருக்கிறது. பெண் என்ற காரணத்தினாலேயே மனித இனத்தின் கிட்டத்தட்ட சரிபாதி பேர் ஒடுக்கப்படுகின்றன. அதனால் தான் பெண்கள் பாதுகாப்பு என தனியாகப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்களின் பாதுகாப்புப் பற்றி பேசுவதில்லையே என அங்கலாய்ப்பவர்களுக்கு, இப்போது காரணம் புரிந்திருக்கும் எனக் கருதுகிறேன்.

படிக்க :

ராபியா சைஃபி பாலியல் வன்கொலை : பார்ப்பனிய ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் !

பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !

ஆடை குறித்த வரலாற்றை இதற்கு முன்னர் பல பதிவுகளில் பார்த்தோம். அதில் இரு விதமான போராட்டங்கள் சமூகத்தில் நடந்து வருவதைப் பற்றி பார்த்திருக்கிறோம்.  ஆடை உடுத்துவதற்கான போராட்டமும், ஆடை சுதந்திரத்தைக் கோருவதற்கான போராட்டமும் தான் அவை.

உதாரணமாக, பிரா அணிவதும் அணியாததும் எங்களது உரிமை என்று பெண்கள் முன்னெடுத்த போராட்டம், தமக்கு வசதியான ஆடையை தாமே முடிவெடுத்து உடுத்தும் சுதந்திரத்துக்கான போராட்டம். அதே சமயத்தில், ஐரோப்பிய நாடுகள் முஸ்லீம் பெண்களை அவர்களது மத நம்பிக்கையான பர்தா அணிவதைத் தடை செய்வதற்கு எதிரான போராட்டம், ஆடை உடுத்தும் உரிமைக்கான போராட்டம்.

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தனியாக நிர்பந்திக்கப்படவில்லை. மாறாக குறிப்பான சமூகத்தைப் பீடித்திருக்கும் சாதி, மத, இனம் சார்ந்த சட்டங்களும், சமூக விதிமுறைகளும் இயல்பாகவே பெண்களை அடிமைப்படுத்துகின்றன என்பதே எதார்த்தம்.

000

இந்தியாவில் மதம் , இனம் , வர்க்கம் , சாதி ஆகியவை வகுக்கும் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளும், கற்பிதங்களும் குறித்துப் பார்த்தோம். இது ஒருவகையான ஒடுக்குமுறை என்றால், பழைமையிலிருந்து பெண்களை விடுவிக்க வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் நவீன முதலாளித்துவமோ, வேறுவகையில் பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருத்தி வைத்திருக்கிறது.

“என்ன முதலாளித்துவமா?” என்றால் “ஆம், அதே முதலாளித்துவம் தான்” என்பதே பதில். பெண்ணை ஒரு போகப் பொருளாகவும், அழகுடன் இருந்தால் மட்டுமே வாழத் தகுதி உடையவள் என்பதாகவும் வரையறுத்திருப்பதோடு அதனை பொதுப்புத்தியிலும் தொடர்ந்து பதிய வைக்கிறது. அதை விட இன்னும் ஒருபடி மேலே போய், எது அழகு என்பதையும், எப்படி அழகு என்பதையும், அதை யாருக்காக செய்கிறோம், என எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் ஜாம்பவனாக முதலாளித்துவம் இருக்கிறது.

பெண் எப்படி இருந்தால் அழகு என்பதற்கு முதலாளித்துவம் சிலபல வரையறைகளை உருவாக்கி வைத்திருக்கிறது. “ஸிரோ சைஸ் ஹிப், அளவான மார்பு, ஹை – ஹீல்ஸ், ஸ்ட்ரெயிட்டனிங் ஹேர்”, இவை எல்லாவற்றுக்கும் பொதுவான ஒன்றாக “வெள்ளை நிறம்” என அழகுக்கான வரையறைகளை வகுத்துள்ளது.

இயல்பாக இருந்த உலகம் இப்போது எதை அழகு என்று சொல்லுகிறது ?. மேலாதிக்கம் செலுத்தும் நாட்டின் நிறம், உருவ அமைப்பு, மேட்டுக்குடி வர்க்க பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே “அழகு” வரையறுக்கப்பட்டு, அது உலகம் முழுவதும் பரப்பபடுகிறது.

உதாரணமாக மேற்கத்திய பெண்களின் நிறத்தையும், உடல் அமைப்பையும் வைத்துக் கொண்டு ஆப்பிரிக்கா பெண்களின் “அழகை” வரையறைப்பது எவ்விதத்தில் சரியானதாக இருக்க முடியும் ?

இயற்கையாகவே மேற்கத்திய சமூகத்திய பெண்கள் வெள்ளை நிறத்தவர்களாக இருக்கின்றனர். நீண்ட நாட்களாக அங்கு நீடிக்கும் முதலாளித்துவ சமூகம் அழகு எனக் கற்பிதப்ப்படுத்தியிருக்கும் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்

ஆனால், ஆப்பிரிக்க பெண்கள் இயற்கையாகவே கருப்பு நிறத்தைக் கொண்டவர்கள். பின் தங்கிய உற்பத்திமுறை இயற்கையாகவே கோரும் அதிக உடலுழைப்பின் காரணமாக அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும் அகன்ற தோள்பட்டை, தடிமனான உடல்வாகு ஆகியவை கொண்டிருக்கின்றனர்.

படிக்க :

அழகு – சில குறிப்புக்கள் !

“போ.. போய் உன் பர்காவை போடு” – ஆப்கான் அவலம் !

இந்தியா போன்ற நாடுகளிலும் கிட்டத்தட்ட இதனை ஒத்த நிலைமைதான். எனில் மேற்கத்திய இயல்பை ‘அழகு’ என இந்தியாவில் சித்தரித்து அந்த ”அழகின்” அளவிற்கு இல்லாதவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படத் தக்கவர்களாக சித்தரிக்கிறது முதலாளித்துவம். இது நாகரீக சமூகம் நம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் மிகப்பெரும் தீண்டாமை உணர்வு ஆகும். சாதி, மத பேதம் பார்க்காத ‘முற்போக்கு’ ஆண்களிலும் கூட பலர் இந்தத் தீண்டாமையைக் கடைபிடிக்கத்தான் செய்கிறார்கள்.

இங்கு நாடு, எல்லைகள் கடந்து இயங்கும் ஒரு முதலாளித்துவ சந்தைதான் அழகைத் தீர்மானிக்கிறது. அது பெண் உடலை ஒரு பாலியல் பண்டமாகவே மாற்றிக்கொண்டும் இருக்கிறது. பெண்களைப் போகப் பொருளாக்கி, அந்தப் போகப் பொருளாக்கும் செலவையும் பெண்களையே செய்ய வைத்து, அவர்களை பாலினரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுரண்டுகிறது.

பொருளாதாரத் தளத்தில் முதலாளித்துவம் ஏற்படுத்தும் பாலியல் சுரண்டலை, அதன் பக்கபலமாக நின்று, கலாச்சார ரீதியாக சமூகத்தின் பொதுக்கருத்தாக்கும் பணியை திரைப்படங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை, பெண்களை வெறும் பாலியல் பண்டமாகவும், அழகுப் பதுமைகளாவும் காட்டுவதுதான் அன்றிலிருந்து இன்றுவரை சினிமாவின் பொதுமொழியாக இருந்திருக்கிறது. சமீபத்தில் ஒருசில மாற்றுச் சிந்தனையாளர்களின் படங்கள் அந்தக் கட்டமைப்பை உடைக்கின்றன என்ற போதிலும், பெரும்பான்மையான சினிமாக்கள் பெண்களை பாலியல் பண்டமாகத்தான் காட்டுகின்றன.

பாலிவுட்டில், மதர் இந்தியா (Mother India), சூப்பர் 30 (Super 30) என பல்வேறு படங்களில் இனவெறி மற்றும் வகுப்புவாத – சாதிய பாகுபாடுகள் இன்றும் தொடர்கின்றன. இங்கு தமிழ் சீனிமாவும் விதிவிலக்கு அல்ல.

பெண்களின் உடலை வெறும் பாலியல் சார்ந்த பண்டமாகவும், பெண்களைப் பலவீனமானவர்களாகவும், பெண் என்ற அடையாளத்தை அவமானப்படுத்தலின் சின்னமாகவும் காட்டுவதில் உலகம் முழுவதிலும் உள்ள சினிமாக்கள் ஒரே தாழ்ந்த தரத்தில்தான் இருக்கின்றன.

ஒரு பெண்ணின் உடையை ஆண்களுக்கு அணிவதை ஒரு கேலிக்கூத்தாக, இழிவானதாகச் சித்தரிப்பதுவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் வந்த டாக்டர் திரைப்படத்தில் கூட ஒரு விளையாட்டில், ஆண் தோல்வியுற்றால் நைட்டி அணிந்து கோமதி என்ற பெயருடன் பூ வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வதன் மூலம் பெண்ணின் ஆடை அவமானத்திற்குரியதாகவும், அவள் அடையாளங்களை தோல்வியின் சின்னங்களாகவும் சொல்லப்படுகிறது.

இயக்குனர் சங்கரின் படங்களில் சொல்லவே வேண்டியதில்லை. அவரது சிவாஜி எனும் படத்தில் கதாநாயகனின் நிறம் கருப்பாக இருந்தாலும் அது அழகு என்று காட்டுவதும் பெண்ணின் கருப்பு நிறம் கேலிக்கூத்தக்கப்படுவதையும் காணலாம். அங்கவை, சங்கவை என்ற இரண்டு கதாபாத்திரங்கள் மூலம் சங்கர் அவமானப்படுத்தியிருப்பது தமிழகத்தின் பெரும்பான்மைப் பெண்களைத்தான்.

இதே போன்று “ஐ ” படத்தில் கதாநாயகி கருப்பாக இருக்கும் பொது அந்த கதாநாயகன் அவளை பார்க்காமல் ஒதுக்குவதும் பின் பேர்னஸ் கிரீம் போட்டவுடன் கதாநாயகி வெள்ளையானதும் அவர்களுக்கு காதல் மலர்வது போன்று காட்சிப்படுத்தி இருப்பதன் நோக்கம் தான் என்ன ? இது நிறத் தீண்டாமை தானே !

தமிழ் சமூகத்தில் கருப்பின் அர்த்தம் தான் என்ன ? கருப்பு நிறங்களின் சங்கமம், பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நிறம், நீதியின் நிறம் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால், எதார்த்தத்தில் கருப்பு எதன் வெளிப்பாடாக கட்டமைக்கப்படுகிறது ?

கருப்பு ஆடையை நல்ல நிகழ்ச்சிக்கு அணியக் கூடாது. ஏன் என்றால் அபசகுனமாம். அப்படியானால் கருத்த நிறத்தையுடையவன் ? கருப்பு நிறத்தை சிறுமைப்படுத்தும் திரைப்படங்கள் நம் மனதில் எதைக் கட்டமைக்க விரும்புகின்றன? இச்சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் நிறத்தை தாழ்வானதாக சித்தரிப்பதன் மூலம் இந்தச் சமூகத்தின் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை கட்டமைக்கின்றன. இவற்றின் வெற்றிதான் பார்ப்பனியத்தின் வெற்றியை நீடிக்கச் செய்கிறது.

ஆனால் கருப்பு நிறத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்திலோ அப்படி ஒரு நிலைமை இன்றுவரை ஏற்படவில்லை. ஆனால், பெரும்பான்மை வெள்ளை நிறத்தவர் வாழும் அமெரிக்காவில், இத்தகைய போக்கிற்கு எதிராக குரல்கள் எழுந்திருக்கின்றன.

அமெரிக்காவில், கடந்த 2015-ம் ஆண்டில், வழக்கறிஞராக இருந்து செயல்பாட்டாளரான மாறிய ஏப்ரல் ரெய்ன் என்பவர் டிவிட்டரில், “#OscarsSoWhite” என்ற ஹாஷ்டேக் மூலம்  அங்கிருக்கும் வெள்ளை நிற வெறியை எல்லோரின் கவனத்திற்கும் கொண்டு வந்தார். கடந்த 2016-ம் ஆண்டுக்கு ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டபோது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, சிறந்த நடிப்புக்கான அனைத்து 20 பரிந்துரைகளும் வெள்ளை நடிகர்களுக்கே வழங்கப்பட்டது. அதை அம்பலப்படுத்தி ஏப்ரல் ரெய்ன் கிளப்பிய விவாதம் , உண்மையில் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.

இதே போல, ஹாலிவுட் நடிகரான டாம் குரூஸ் தனது மூன்று கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்தற்கு அவர் கூறிய காரணங்களும் ஹாலிவுட்டில் நீடிக்கும் வெள்ளை மேலாதிக்கத்தை அம்பலப்படுத்தியது. “கோல்டன் குளோப்ஸ் விருதிற்கான தேர்தெடுக்கும் குழுவில் பன்முகத்தன்மை இல்லாமை மற்றும் கறுப்பின உறுப்பினர்கள் ஜூரியில் இல்லாததன் காரணமாக அந்த விருது அதன் பொலிவையும் மதிப்பையும் இழந்துவிட்டது” என்றார்.

இப்படிப்பட்ட குரல் தமிழ்நாட்டு சினிமாத்துறையிலோ அல்லது பொதுச் சமூகத்திலோ ஒலிக்குமா? கருப்பு நிறத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தில் இக்குரல்கள் எழாதது எதைக் காட்டுகிறது என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

(தொடரும்)

சிந்துஜா
சமூகச் செயற்பாட்டாளர்

2 மறுமொழிகள்

  1. சரளமான எளிமையான மொழிநடையை பாராட்டத்தூண்டுகிறது.ஆனால் உள்ளடக்கம் குட்டிமுதலாளிய சிந்தனையை உயர்த்தி பிடிப்பதாக தோன்றுவதால் எச்சரிக்கையோடு படிக்க வேண்டும்.அடுத்து பல படங்களை சொன்ன நீங்கள் பிங்க் இந்தி படம் மற்றும் அதன் தழுவலான நேர்கொண்ட பார்வையிலும் நேர்த்தியாக இதே பிரச்னை பேசப்பட்டதே ஆர்ட்டிகல் 15 ஐபிசி 375 போன்ற இந்தி படங்கள் கூட நியாயமாக விவாரதித்துள்ளார்கள்.அதே சமயம் தொலைக்காட்சி தொடர்களில் பெண்களை கேவலமாக வக்ரமாக அடிமைத்தனத்தை போற்றும் விதமாக வருவதை பற்றியும் எழுத வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க