இட ஒதுக்கீட்டைத் தடை செய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் இந்த அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது கறுப்பின மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகும். அமெரிக்கச் சமூகத்தில் நிலவும் இனப் பாகுபாட்டைப் பாதுகாத்து நிலை பெறச் செய்வதற்கான பாசிச‌ இனவெறி நடவடிக்கையாகும்.

0

மெரிக்காவில், கடந்த ஜூன் 29 அன்று, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பல்கலைக்கழக சேர்க்கையில் இனத்தை ஒரு காரணியாகக் கருத முடியாது என்று‌ அது கூறியுள்ளது.

அமெரிக்காவில் இட ஒதுக்கீட்டை உறுதியான நடவடிக்கை (affirmative action) என்று கூறுவார்கள். இதனை நேர்மறை பாகுபாடு (positive discrimination) என்றும் அழைப்பார்கள்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக நடத்தப்பட்டனர். அங்கு சட்டரீதியாக அடிமை முறை ஒழிக்கப்பட்டுப் பல ஆண்டுகளாகியும் இன்னும் இனப் பாகுபாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதன் காரணமாக, கறுப்பின மற்றும் இலத்தீன் இன மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகப்படுத்தும் பொருட்டு, அங்கு உறுதியான நடவடிக்கை கொள்கைகள் (affirmative action efforts) என்ற பெயரில் இன அடிப்படையிலான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாணவர் சேர்க்கையின்போது அவர்கள் இனத்தை அறிந்து கொள்ளும் வகையில் விண்ணப்பப்படிவங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். கல்வி நிறுவனங்களில் பன்முகத்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முறை 1960-களில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.


படிக்க: அமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் !


கன்சர்வேடிவ் சட்ட நிபுணரான எட்வர்ட் ப்ளூம் தலைமையில் இயங்கும் “நியாயமான சேர்க்கைக்கான மாணவர்கள்” (Students for Fair Admissions) என்ற அமைப்பு இன அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று இரண்டு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்தது. இவ்வமைப்பு இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் அமைப்பாகும்.

ஹார்வர்டின் சேர்க்கைக் கொள்கை ஆசிய அமெரிக்க (Asian Americans) விண்ணப்பதாரர்களுக்கு எதிராகச் சட்டவிரோத பாகுபாடு காட்டுவதாகக் கூறி ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் வெள்ளை மற்றும் ஆசிய அமெரிக்க விண்ணப்பதாரர்களுக்கு எதிராகச் சட்டவிரோத பாகுபாடு காட்டுவதாகக் கூறி மேலுமொரு வழக்கு  தொடரப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் ஹார்வர்ட் தொடர்பான வழக்கில்  6-2 என்ற கணக்கிலும், வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்திற்கு எதிரான வழக்கில் 6-3 என்ற கணக்கிலும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது.

தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட்ஸ் தனது தீர்ப்பில் “மாணவர்களை தனிநபர்களாக அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும்; இனத்தின் அடிப்படையில் அல்ல. பல பல்கலைக்கழகங்கள் நீண்ட காலமாக இதற்கு நேர்மாறாகச் செய்துள்ளன. அவ்வாறு செய்ததன் மூலம், ஒரு தனிநபரை மதிப்பிடுவதற்கு அவரது திறமைக்கு மாறாக அவரது தோலின் நிறத்தை உரைகல்லாக பயன்படுத்தியுள்ளனர். நமது அரசியலமைப்பு அதைச் சகித்துக்கொள்ளாது” என்று கூறியுள்ளார்.


படிக்க: கருத்துரிமை, ஊழல், சுரண்டல், நிறவெறி – தோழர் கலையரசனின் உலகச் செய்திகள் !


அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் “அமெரிக்காவில் பாகுபாடு இன்னும் நீடிக்கிறது. இன்றைய தீர்ப்பு அதை மாற்றிவிடாது. இது அனைவரும் அறிந்த உண்மையாகும்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்துள்ளார். அவர்‌ “அனைத்து மாணவர்களுக்கும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய உறுதியான நடவடிக்கை (affirmative action) போன்ற கொள்கைகள் அவசியம். சமத்துவ சமூகத்தை நோக்கிய பாதையில் உறுதியான நடவடிக்கை (affirmative action) ஒருபோதும் முழுமையான தீர்வாக இருக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் பெரும்பாலான முக்கிய நிறுவனங்களிலிருந்து பல தலைமுறையாகத் திட்டமிட்டு விலக்கப்பட்ட எங்களுக்கு, நாங்களும் தகுதியானவர்கள் தான் என்று நிரூபித்துக் காட்ட இது எங்களுக்கு வாய்ப்பளித்தது” என்று கூறியுள்ளார்.

பாசிஸ்ட் டொனால்ட் டிரம்ப் “இது அமெரிக்காவுக்கு ஒரு சிறந்த நாள்” என்று இத்தீர்ப்பு குறித்துக் கூறியுள்ளார்.

ஏற்கனவே அரிசோனா, கலிபோர்னியா, புளோரிடா, இடாஹோ, மிச்சிகன், நெப்ராஸ்கா, நியூ ஹாம்ப்ஷயர், ஓக்லஹோமா மற்றும் வாஷிங்டன் ஆகிய ஒன்பது மாகாணங்களில் பொதுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது கறுப்பின மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகும். அமெரிக்கச் சமூகத்தில் நிலவும் இனப் பாகுபாட்டைப் பாதுகாத்து நிலை பெறச் செய்வதற்கான பாசிச‌ இனவெறி நடவடிக்கையாகும்.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க