<< முந்தைய பாகம்
யற்கை பல்வேறு நிறங்களை உடையது. அதில் கருப்பு நிறம் அனைத்து வண்ணங்களையும் உள்ளடங்கியது. இன்றைய சமூக நிகழ்வுகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், வறுமைப்பட்டவர்கள், கல்வியறிவற்றவர்கள், நாகரீகம் அல்லாதவர்கள், அழகற்றவர்கள் ஆகியோருக்கான குறியீட்டு நிறமாகவே சித்தரிக்கப்படுகிறது.
திருமண சந்தையில் பணம் என்பதைப் போலவே, அதற்கு சற்றும் குறையாத அழுத்தத்துடன் பெண்ணின் நிறமும் தீர்மானிக்கிற சக்தியாக விளங்குகிறது. அதாவது சாதாரண மனிதனின் அழகுணர்ச்சியைப் பொறுத்தமட்டில், கருப்பு என்பது அழகற்ற நிறமாகும். இக்கருத்து சமூகத்தின் பொதுச் சிந்தனையில் நிரப்பப்பட்டிருக்கிறது.
ஒரு சமூகத்தின் வாழ்க்கை நெறிகளை வரலாற்றுப் போக்கில் அளவிட்டு அறிய உதவும் சான்றுகளில் இலக்கியம் முதன்மையானது. தமிழ்ச் சமூகம் மிக நீண்ட இலக்கிய மரபினை உடையதாக இருக்கிறது.
படிக்க :
♦ “கற்பழிப்பா” ? பாலியல் வல்லுறவா ? || வி.இ.குகநாதன்
♦ பாரதத்தின் ‘கற்பு’, இந்தியாவின் ‘கற்பழிப்பு’ – ஆர்.எஸ்.எஸ் பித்தலாட்டம்!
தொல்காப்பியம், திருக்குறள் போன்ற தொன்மையான தமிழ் நூல்களில் கருப்பு நிறம் குறித்த பாகுபாடோ, உயர்த்தி தாழ்த்திக் கூறுதலோ கிடையாது. தொல்காப்பியத்தில், “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள” எனத் தொடங்கும் செய்யுளை பலரும் நிறப் பாகுபாட்டைக் குறிப்பதாகக் கருதுகின்றனர். ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டியது, தமிழில் “கறுப்பு” என்பது கறுவுதல் – பகை கொள்ளுதல் என்று பொருள்தரும். “கருப்பு” என்பதுதான் நிறத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
தொல்காப்பியத்தின் அச்செய்யுள், “பகை கொள்வதையும், சினம் கொள்வதையும் (சிவத்தல்), கடுங்கோபம் (வெகுளி),” ஆகியவற்றைக் குறிக்கிறது.
அதே போல திருக்குறளில்,
“கறுத்தின்னா செய்த அக்கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்”
என்ற குறளும் கறுத்தல் என்பதை பகை கொள்ளுதல் என்றே பொருள்படும். ஆகவே இவை கருப்பு நிறத்தை குறைத்து மதிப்பிடும் செய்யுள்கள் அல்ல.
இவ்விரு நூல்களுக்குப் பின் தோன்றிய மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியவற்றில் மனித உடல் சார்ந்த வர்ணனைகள் இருக்கின்றன. ஆனால் அவையனைத்தும் உடல் சார்ந்தும், அவர்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருந்துகிறது. உயர்வு, தாழ்வு, என்ற கருத்தோட்டங்கள் இந்த வருணைகளில் காணப்படவில்லை .
ஆனால் பக்தி இலக்கியங்களில் நிறங்கள் இடம்பெற்றுள்ளன. பக்தி இலக்கியங்களில் நாம் காணும் மற்றொரு செய்தி கருப்பு நிறம் போற்றுதலுக்குரிய நிறமாய் குறிப்பிடப்படுகிறது. திருமாலை ஆண்டாள் “கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக்கிடப்பேன்” என்கிறார்.
தன்மீதுபட்ட ஒளியைப் பளபளப்புடைய கருப்புநிற மனிதத்தோல் எதிரொளி செய்துகாட்டும் என்பதை கம்பரும் சேக்கிழாரும் விவரிப்பது தனி அழகாகும் என்று தனது “பண்பாட்டு அசைவுகள்” எனும் நூலில் பேராசிரியரும், தமிழகத்தின் முன்னணி ஆய்வாளருமான தொ. பரமசிவம் அவர்கள் குறிப்பிடுகிறார்.
ஆகவே, பண்டைய தமிழ்ச் சமூகம் நிறத்தின் அடிப்படையில் எந்த பாகுபாட்டையும் காட்டவில்லை. ஆனால் இன்று கருத்த நிறத்தை சமூகம் பார்க்கும் விதம் மோசமானதாகவே இருக்கிறது. அழகுணர்ச்சியில் நிறப் பாகுபாடு புகுந்தமுறை என்பது தனியாக ஆய்வு செய்யத்தக்க ஒன்றாகும்.
நிர்வாணம் அசிங்கமல்ல அதிகாரம் :
“ஆடைதான் பெண்ணின் கவசம். அது லேசாக விலகினாலோ, ஏதேனும் ஒரு கயவனால் அது நீக்கப்பட்டாலோ, அல்லது தனது ஆடையில்லாத புகைப்படம் பொதுவெளியில் வெளியானாலோ அது ஒரு பெண்ணிற்கு மிகப்பெரும் அவமானம்” என்பது ஒரு பொதுப்புத்தியாக உலகம் முழுவதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அது இன்றளவும் நீடிக்கிறது. அதன் விளைவாகத்தான் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்கள் சமூகத்தின் புறக்கணிப்பு அச்சம் மற்றும் அவமான உணர்ச்சியாலும் தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ளும் அவலம் இன்னும் நீடிக்கிறது.
“எந்திரன்” எனும் திரைப்படத்தில், நிர்வாணமாக இருக்கும் ஒரு பெண்ணை, உயிர் காக்கும் நோக்கோடு விபத்தில் இருந்து காப்பாற்றிய ‘சிட்டி’ எனும் எந்திரனை, மனித உணர்வுகளை அறியாத ஒரு இயந்திரமாகக் காண்பித்து, அந்தப் பெண் செய்யாத தவறுக்காக, பொதுச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட அவமான உணர்ச்சிக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்வதை மனித உணர்வாகவும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்பாராத சந்தர்ப்பத்திலோ, ஆணாதிக்கத் திமிரின் வன்முறையாலோ நடத்தப்படும் வன்முறை மற்றும் ‘அவமானப்படுதல்’ காரணமாக உயிரை விடுவது என்பதன் புரிதல் என்ன ? தன் உடலை ஒரு  ஆண் பார்ப்பது, அதாவது அத்துமீறி பார்ப்பதே தனக்கு அவமானம் என்கிற எண்ணம் மட்டுமல்ல, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு பெண்ணை “நடத்தை கெட்டவளாக”, “கெட்டுப் போனவளாக”, “ஆண்களின் இச்சைக்கு இடம் கொடுத்தவளாக” சித்தரித்து இழிவுபடுத்தும் பொதுச் சமூகத்தின் இழிவான எண்ணமும் முக்கியக் காரணம். வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கும், மனச்சிதைவு அடைவதற்கும் பின்னால் இந்த எண்ணம் தானே இருக்கிறது?
பாலியல் வன்கொடுமை என்பது அதை செய்யும் ஆணிற்கான அவமானமே அன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான அவமானம் இல்லை. பெண்களுக்கெதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தியா போன்றொரு நாட்டில், “நடந்தது உன் தவறல்ல.. உன் மானம் உன் உடலில், உன் யோனியில் இல்லை” என்ற நம்பிக்கை வார்த்தைகளும் தான் தேவைப்படுகின்றன.
காலா திரைப்படத்தில், போலீஸ்காரர்கள் தன் பேண்ட்டை உருவிய பிறகும், கையை கூனிக் கொண்டு நிற்காமல், பேண்ட்டை எடுத்து மறைக்கக் கூட முயலாமல், தனது உடலை வைத்து தன்னை அவமதிக்க நினைத்தவனை, அது எனக்கு அவமானம் அல்ல, உன் புத்திக்கு உரைக்கும் வகையில் பதிலடி கொடுக்கிறே பார் என லத்தியை எடுத்து அதே போலீசுக்காரனைத் தாக்கும் பாயல் கதாப்பாத்திரங்களால் தான் பாலியல் வன்முறையை ஒழித்துக் கட்ட முடியும்.
ஆடை – அதிகார வர்க்கம் தன் அதிகாரத்தை செலுத்தும் ஓர் கருவி :
ஆளும் வர்க்கங்களும் அதிகார வர்க்கமும் தமது அதிகாரத்தை அடுத்தவர் மீது செலுத்துவதற்கான ஒரு கருவியாக ஆடை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவமதிக்கப்படுவதற்கு, ஒடுக்குவதற்கும், கூனிக் குறுகச் செய்வதற்கும் நிர்வாணம் குறித்த அவமான உணர்ச்சி அதிகாரத்தால் பயன்படுத்தப்படுகிறது.
அதனால் தான், உலகம் முழுவதிலும் இராணுவ ஆக்கிரமிப்பு நடக்கும் இடங்களில் எல்லாம் பெண்கள் துகிலுறியப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள். காலா படத்தில் வரும் பாயல் போல அந்த அதிகாரத் திமிரை பொதுவெளியில் அம்பலப்படுத்தும் நோக்கோடு, “Indian Army Rape us” என்று இந்திய இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மணிப்பூர் தாய்மார்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.
மணிப்பூரில் தங்ஜம் மனோரமா என்ற பெண்ணை விசாரணைக்காக அழைத்துச் சென்ற இந்திய ராணுவம், அவரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொன்று வீசியது. இதற்கு எதிரான போராட்டம் மணிப்பூர் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. அது வெறுமனே மனோரமாவுக்காக நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. மணிப்பூரில் இராணுவம் தொடர்ந்து பெண்களின் மீதான பாலியல் வன்முறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்ததற்கு எதிர்வினையாகவே அத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன.
அதற்கெதிராக போராடத் திரண்டவர்களில், 12 பெண்கள் இந்திய இராணுவ அலுவலகத்தின் முன் தங்கள் ஆடைகளைக் களைந்து இந்திய இராணுவத்திற்கு எதிரான தங்கள் போராட்டத்தை தொடங்கினர். “அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கிறது. எங்களிடம் எங்கள் உடல்தான் இருக்கிறது. உடலே எங்கள் ஆயுதம். நாங்கள் மனோரமாவின் தாய்மார்கள். இந்திய ராணுவம் எங்களையும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கட்டும்” என்ற கோஷத்துடன் உடலை ஆயுதமாக்கி போராட்டம் நடத்தினர்.
அந்த பெண்களின் போராட்டம், ‘ட்ரெஸ்ஸை அவுத்துப் போட்டு’ செய்யும் போராட்டம் அல்ல. அதிகார வர்க்கத்தின் துகிலுறிப்பு ஆயுதத்திற்கு எதிராக தங்கள் நிர்வாணத்தை ஆயுதமாகப் பயன்படுத்தினர் அந்தத் தாய்மார்கள்.
உலகம் முழுக்க பெண்ணின் உடலை அவமானப்படுத்துவதையே, ஒரு சமூகத்தையோ, பெண்களையோ ஒடுக்குவதற்கான ஒரு ஆயுதமாக அதிகார வர்க்கம் பார்க்கிறது. சமீபத்தில் வந்த “ஜெய்பீம் ” படத்தில் கூட லாக்கப்பில் இருக்கும் பெண்ணை ஆடை அவிழ்ப்பது தான் அவரை நிலைகுலையச் செய்யும் ஆயுதம் என்பதை தன்னளவில் அந்த போலீசு கும்பல் நடைமுறைப்படுத்துவதை காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
இந்தியாவிலோ கூடுதலாக, பெண்ணுடல் ஒரு குடும்பத்தின் கௌரவமாக, பரம்பரை மானமாகப் பார்க்கப்படுகிறது. இங்கிருந்துதான் ஆடை குறித்த அரசியலும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் துவங்குகிறது.
இன்னும் ஆழமாகப் பரிசீலிப்போமானால் பெண்ணுடல் மீதான அதிகாரம் என்பது சொத்துடைமை கொண்ட வர்க்கங்கள், முதலாவதாக தங்களது சொத்துடைமையை பாதுகாப்பதற்கான ஆயுதமாகவும், இரண்டாவதாக சொத்தில்லாத வர்க்கத்தை ஒடுக்குவதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு நடக்கும் சாதி ஆணவப் படுகொலைகள் முதலாவதற்கும், இராணுவத்தாலும் ஆதிக்கச் சாதியினராலும் ஒடுக்கப்பட்ட சாதியினரோ, இனத்தவர்களோ பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுவது இரண்டாவதற்கும் கண்கூடான உதாரணங்கள் ஆகும்.
பெண்களை ஒடுக்கும் வேறுவிதமான நைச்சியமான ஆயுதங்கள் :
“ஒரு பெண் இப்படித்தான் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டும்” என்று ஒரு ஆண் மூலம் சொல்வது ஒருவகை அரசியல். இது வெளிப்படையான அரசியல். இதற்கு உடனே எதிர்வினைகள் கிளம்பி அத்தகைய கருத்துக்கள் நொறுக்கப்பட்டு விடும். இதையே ஒரு பெண் மூலம் சொல்வது இன்னொரு வகை அரசியல். இதற்கும் கொஞ்சம்  தாமதமான, கொஞ்சம் மென்மையான எதிர்வினைகளை கிளப்பி அவை புறம் தள்ளப்பட்டும் விடும்.
ஆடை படத்தில் பெண்ணியவாதியாக காட்டப்படும் காமினி – அதாவது, பெண்ணுக்கு எதிரான அத்தனை பிற்போக்குத்தனங்களையும் எதிர்க்கும், சுதந்திரமாய் வாழும் ஒரு பெண் – மூலமே பெண்கள் அடங்கிச் செல்ல வேண்டும் என்று சொல்வதுதான் புதிய வகையான நைச்சியமான அரசியல்.
இது முன்னதைப் போன்ற எந்தவொரு பெரிய எதிர்வினைகளையும் கொண்டு வராது. ஏனென்றால் இதைச் சொல்வதே ஒரு தைரியமான பெண்தானே? அதுவும் அத்தனை பிற்போக்குத்தனங்களையும் எதிர்த்து வாழ்ந்த ஒரு பெண்ணாயிற்றே? அதுவும் அவள் சாதாரணமாக சொல்லவில்லை. ஒரு பதறவைக்கும் சம்பவத்திற்கு பிறகே இதை சொல்கிறாள் என்றால் அதை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியுமா? ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்? ‘அவளே சொல்லிட்டா பாத்தல?’ என்று விதிவிலக்குகளைக் காட்டி பெண்களை ஒடுக்கும் இந்த மூன்றாவது வகை அரசியல்தான் மிகவும் ஆபத்தானது.
இட ஒதுக்கீடு தேவையில்லை என்று ஒரு ஒடுக்கப்பட்ட மாணவனையே சொல்ல வைப்பது போன்றது இது. ஸ்டெர்லைட் தேவை என்று தூத்துக்குடி மக்களையே சொல்ல வைத்து வீடியோ எடுப்பது போன்றது இது. ஆடை படம் முடிவதும் இதே தொணியில்தான்.
000
நம் நாட்டில் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் பாலியல் வன்புணர்வுகள் நிகழ்கின்றன. ஒரு பெண் ஒவ்வொரு கணத்திலும் பாதிக்கப்படக்கூடியவள்; அது காலையோ அல்லது மாலையோ எதுவாயினும் ஒன்றே. இதற்குள் தான் சமூகம் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய பாலியல் வன்முறைகள் அனைத்தும் இயல்பானவையாக மாற்றப்படுகின்றன. சமீபத்தில் இறந்த சின்மயா பள்ளி மாணவியிடம், “ பேருந்தில் இடிக்கிறார்களே, அது போல இதையும் கடந்து போ” என்று பாலியல் வன்முறையை இயல்பாக்கி ஒரு பெண் தலைமை ஆசிரியர் கூறியது ஒரு உதாரணம். அந்தத் தலைமை ஆசிரியையான மீரா ஜாக்சன் இன்றைய சமூக நிலைமையை பிரதிபலிக்கும் கண்ணாடி.
இங்கு தேவையானது, பாலியல் வன்முறையாளர்களைத் தண்டிப்பது மற்றும் பெண்கள் குறித்த ஆண்களின் மனநிலைமையை மாற்றுவது தானேயன்றி, பாதிக்கப்பட்டவர்களிடம் பாலியல் வன்முறையை இயல்பான ஒன்றாகக் கருதி கடந்து போகச் சொல்பவர்களின் உபதேசங்கள் அல்ல.
பெண்கள் மேற்கத்திய ஆடை அணிவதோ, இரவில் பயணம் செய்வதோ, நள்ளிரவு வரை வெளியில் இருப்பதோ பாலியல் வன்முறைகளுக்கான காரணம் இல்லை. இந்தியாவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில், வர்க்கம் மற்றும் மதங்களைக் கடந்து எங்கும் எல்லா இடங்களிலும் இம்மாதரியான எண்ணங்கள் நிரம்பி இருக்கிறது. இவை எதுவும் செய்யாத பெண்களே பெருமளவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆகவே பிரச்சினை வன்முறையைச் செலுத்துவோரான ஆண்களிடம் உள்ளது.  அவர்களுக்கு இந்தச் சமூகம் ஊட்டி வளர்க்கும் ஆணாதிக்கச் சிந்தனையில்தான் பிரச்சினை பொதிந்துள்ளது.
பெண்ணின் உடலின் மீது தாம் அதிகாரம் செய்வதற்கான உரிமை இருப்பதாகத் தான் ஆணாதிக்கச் சிந்தனை ஒரு ஆணுக்குப் போதிக்கிறது. அவர்களது பொருளாதார ரீதியான தற்சார்பின்மை, அவளை தமது உடமையாக அல்லது தாம் ஆக்கிரமிக்கத்தக்க ஒரு பொருளாகப் பார்க்கிறது.
படிக்க :
♦ பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !
♦ பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம் !
ஒரு பெண் ஒரு ஆணின் இச்சைக்குக் கீழ்படிவதற்கு அழுத்தம் கொடுக்கப்படலாம். அதற்கு அப்பெண் முடியாது என்று  சொல்லிவிட்டாலோ, அமைதி காத்தாலோ அவளுக்கு உடன்பாடில்லை என்பதுதான் பொருள்.
அதே சமயத்தில் ஒரு பெண் கொலை மிரட்டல், வன்முறை மிரட்டலுக்குப் பயந்தோ, பொருளாதார ரீதியாக வேலைபறிப்பு, வருமான இழப்பு, வாழ்வாதார இழப்பு என்ற வகையிலோ, கலாச்சாரரீதியாக, நிர்வாண புகைப்படம், பொதுவெளியில் அவமதித்தல் என்ற வகையிலோ நேர்மறையாகவோ, மறைமுகமாகவோ மிரட்டப்பட்டு ஒப்புக் கொள்ளச் செய்யப்பட்டாலோ, அல்லது அவள் அமைதியாக இருந்தாலோ அப்பெண்ணிற்கு உடன்பாடில்லை என்றுதான் பொருள். “No means No”. ஆனால், “மவுனம் சம்மதம்” என சினிமா டயலாக்குகளை அடித்து சீண்டலைத் தொடர்வது, வற்புறுத்துவது ஆகியவையெல்லாம் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுகள்.
மொத்தத்தில், பெண் உடல் அதிகாரம் செலுத்துவதற்கான பொருள் அல்ல. அவளது ஆடையும் அவமானப்படுத்துவதற்கான ஆயுதமும் அல்ல.
இந்திய சமூகமே, பெண்களை யாரும் கொண்டாட வேண்டாம். அவள் உடலைப் புனிதப்படுத்த வேண்டாம். உங்கள் கவுரவங்களை அவள் உடலில் கொண்டுபோய் பாதுகாக்க வேண்டாம். அவள் அவளாகவே இருக்கட்டும்.  இந்தப் புரிதலை எல்லோரிடத்திலும் விதைப்போம் !
(முற்றும்)
சிந்துஜா
சமூகச் செயற்பாட்டாளர்.
disclaimer

4 மறுமொழிகள்

 1. சிறப்பு தோழர்.
  வாசிப்புக்கும் கருத்தறிவதற்கும் சிறப்பான நடையில் கட்டுரை அமைந்துள்ளது.
  தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியைக் கொண்டிருக்கிறது. ஒரு நல்ல எழுத்தாளரைச் சமூகம் பெற்றிருப்பதை உணர்கிறேன்.
  நன்றி
  அரியநாச்சி

 2. தலைப்பு நெருடலாக மட்டுமல்ல அடுத்த கேள்விக்கு அழைத்துச்செல்கிறது.பெண்களின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல எனில் எதற்கானது? அது ஏன் பெண்களையும் அவர்களது உடலையும் வேறுபடுத்தியிருக்கறீர்கள்?உள்ளே நிறைய எழுதியிருக்கறீர்கள்.இறுதியில் எந்த சமூகம் இத்தனை கொடுமைகளுக்கும் காரணமோ அந்த ‘இந்திய சமூகத்திடம்’ கோரிக்கை வைத்திருக்கிறீர்களே இது முரண்பாடாக தெரியவில்லையா? சமூகத்தை ஒரு புரட்சியின் மூலம் மாற்றுவதே பிரச்னைகளுக்கு தீர்வு.அதில் பாலினம் பார்க்காமல் கலந்துகொள்ளும்போதுதான் சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடவேண்டும் என்ற உணர்வு வரும்.

  • உங்களது கருத்துகளை வரவேற்கின்றேன் ஜோசப். ஆனால் எந்த சமூகத்தின் மீது கேள்வியோ அங்கு தான் அதை பன்படுத்த வேண்டியதன் அவசியம் இருக்கிறது. ஆ
   க நீங்கள் சொல்வது போல இருபாலரும் இணைந்து மட்டுமே அதை சாத்தியப்படுத்த இயலும். இணைவோம் மாற்றத்தை நோக்கி பயணத்துடன்.

 3. நன்றி அரியநாச்சி தங்களை போன்றோரின் பாராட்டுக்கள் என் எழுத்துகளை மேலும் மேலும் சென்மைப்படுத்தும் என்று நம்புகிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க