கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்நிலையானது மாறியுள்ளது. அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
கொரோனா பெருந்தொற்றை இந்த ஒன்றிய அரசு கையாண்ட லட்சணம் நம் அனைவருக்கும் நன்கு தெரியும். கொரோனா முதல் அலையின்போது ஒரு கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபயணமாகவே தாங்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றனர். வீட்டிற்கு சென்ற பலர் பசியாலும் உடல் நல பிரச்சினைகளாலும் தங்கள் உயிரை இழந்தனர். அதனால் இன்று அவர்கள் பல மைல்கள் கடந்து வேலை செய்வதை விரும்புவதில்லை.
கொரோனாவின் தொடர்ச்சியான தாக்கத்தாலும் ஆபத்தான மற்றும் உத்தரவாதமற்ற வேலை நிலைமையாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்களது கிராமங்களுக்கு அருகிலேயே, கிடைக்கும் வேலைகளை செய்து வருகிறார்கள். குடும்பத்துடன் இருக்க முடிவதால் ஓரளவு மனநிம்மதியை அளிப்பதாக கூறுகின்றனர்.
14 கோடி புலம்பெயர் தொழிலாளர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் சில மோசமான வேலை நிலைமைகளை எதிர் கொள்பவர்களாகவும் அவர்கள் எந்த ஒரு ஒப்பந்த முறையிலும் இல்லாதவர்களாகவும் இருக்கின்றன. இவர்களில் ஒரு சில தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
படிக்க :
♦ செயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்
♦ “அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !
பல புலம்பெயர் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் சேர்வது மிகவும் அரிதாகவே உள்ளது. காரணம், இவர்கள் முறைசாரா வேலைகளில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். முறையான தொழிலாளர்களில் 4% பேர் உடன் ஒப்பிடும்போது, முறைசாரா தொழிலாளர்கள் 23% ஊதியத்தை குறைவாகவே பெறுகின்றனர். 2020-ல் மத்திய மற்றும் மாநில அரசுகள் இவர்களுக்கு ஒரு சில நல திட்டங்களை அமல்படுத்தினாலும் அது மோசமான மற்றும் சீரற்ற முறையிலேயே  இருந்தது.
இந்தியாவின் ஜவுளி மையமான சூரத்தில்(குஜராத்), உள்ளூர் ஜவுளி தொழிலாளர்களுக்காக  ப்ரவாசி ஷ்ராமிக் சூரக் ஷா மன்ச் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இது 2020-ல்தான் முறையான தொழிற்சங்கமாக பதிவு செய்யப்பட்டது. இதில் 5000-க்கு  மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த அமைப்பு தொழிலாளர்களின் ஒரு சில பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு அதை தீர்த்து வைத்து வருகிறது. இவ்வாறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என தொழிற்சங்கங்கள் அமைவது அரிதாகவே உள்ளது. அப்படி அமைந்தாலும் அதில் புலம்பெயர் தொழிலாளர்கள் சேருவதும் இல்லை.
பல மைல்களை கடந்து வந்து வேலை செய்வதை காட்டிலும் தான் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையில் வேலை செய்வதையே புலம்பெயர் தொழிலாளர்கள் விரும்புகின்றனர். குறைவான சம்பளமாக இருந்தாலும் சரி அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் வசிப்பதையே விரும்புகின்றனர்.
மேற்சொன்ன  நிகழ்வானது பல மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஈர்ப்பதாகவும்; குறிப்பாக மீன்பிடித்தல், விவசாயம் மற்றும் கட்டுமானம் போன்ற துறையில் உள்ள தொழிலாளர்களை ஈர்ப்பதாகவும் சர்வதேச இடப்பெயர்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் ராஜன் கூறுகிறார். XLRI – சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டின் பேராசிரியரான சுந்தர், “வரவிருக்கும் ஆண்டுகளின்  சமூக மூலதனம் மிகவும் முக்கியமானதாக மாறும்” என்று கூறுகிறார்.
நம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பே தொழிலாளர்கள்தான். ஆனால், இன்று மாநில அரசும், மத்திய அரசும் கார்ப்பரேட்டின் நலன்களுக்காக பல தொழிலாளர்களை கடுமையாக வஞ்சித்து வருகிறது. இருப்பினும் இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து பல இடங்களில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டமானது இத்துடன் நின்றுவிடாமல், நாளை படைக்கவிருக்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் புரட்சியாக மாறவேண்டும்.

தேன்மொழி

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க