தொழிலை வைத்து யாரையும் பிரித்து பார்க்க முடியாது. பாலியல் தொழில் என்பதும் ஒரு தொழிலே. சட்டத்தின்படி பாலியல் தொழிலாளிகள், அவர்களின் குழந்தைகள் மரியாதையுடனும் கண்ணியத்துடன், சமமாக நடத்தப்பட வேண்டும். விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் 18 வயதிற்கு மேற்பட்டோரை போலீசுத்துறை தொந்தரவு செய்யவோ, கிரிமினல் நடவடிக்கை எடுக்கவோக் கூடாது என்று கடந்த மே மாத இறுதியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது ஏதோ முற்போக்கானது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஜனநாயக சக்திகள் வரவேற்கின்றனர். ஆனால், காமவெறிக் கொண்ட மிருகங்களுக்கு பெண்களை மேலும் இறையாக்க, பாலியல் சுரண்டலை தொழிலாக அடையாளப்படுத்தி இருப்பதே இந்த தீர்ப்பாகும். இதை தொழில் என்று சொல்வதே வெட்கக்கேடான விஷயம்தான்.
காலம் காலமாக பெண்கள் ஆணாதிக்க சமூகத்தால் உடல் ரீதியாக சுரண்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், அதை நிறுவனமயமாக்க துடிக்கிறது நீதிமன்றம். பெண்கள் குடும்ப வறுமையின் காரணமாக விருப்பம் இல்லாமலும், வலுகட்டாயமாகவும் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்பது கொஞ்ச நஞ்சம் அல்ல.
ஆணின் இஷ்டபடி நடந்துக்கொள்ள வேண்டும். அவன் என்ன சொன்னாலும் அப்படியே செய்ய வேண்டும். சில சமயம் அவர்களை அடித்து துன்புறுத்தி உடலுறவில் ஈடுபடுத்துவார்கள். கூட்டுப் பாலியல் துன்புறுதலுக்கும் ஆளாக்கபடுவார்கள். வித விதாமான உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவார்கள். பல நேரங்களில் அவர்களை இச்சைக்கு பயன்படுத்தி கொண்டு காசு கொடுக்காமல் விரட்டியடிப்பார்கள். இவ்வாறு பல வகையில் சித்திரவதை கொடுமைகளை அனுபவித்து துரத்தியடிக்கப்படும் இவர்கள் உடல் ரீதியாக சுரண்டப்படுவது மட்டும் அல்லாமல் பல்வேறு பல்வினை நோய்களுக்கும் ஆளாக்கபடுகின்றனர்.
இவை மட்டுமின்றி பாலியல் படங்களில் நடிக்கும் பெண்கள் மீதும் ஏராளமான பாலியல் வக்கிரங்களும் தொடுக்கப்படுகின்றன. உலகளவில் பெரும் சந்தையை கைபற்றி இருக்கும் இத்தகைய பாலியல் படங்களில் நடிக்கும் பெண்களின் உடலை பலியாக்கி கொழுத்து கொண்டிருக்கின்றனர் இடைத்தரகர்கள்.
சமீபத்தில் விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த சாம் வின்செண்ட் மற்றும் சரவணன் என்ற இரண்டு போலீசு அதிகாரிகளும், மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்கள் என்ற பெயரில் 5 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளனர். விபச்சார தடுப்பு பிரிவில் நியமிக்கப்பட்ட போலீசு அதிகாரிகளே விபச்சாரத்தை நடத்தி வருவது என்பது போலீசு உதவி இல்லாமல் பாலியல் தொழில் எங்கும் நடைபெற முடியாது என்பதை நமக்கு காட்டுகிறது.
பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபட வைத்து பணம் சம்பாரிக்கும் இடைதரகரிடம் லஞ்சம் வாங்கி கொண்டு பெரும்பாலும் அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். பல நேரங்களில் இந்த அதிகாரிகளே பெண்களை தன்னுடைய இச்சைக்கு பயன்படுத்தி கொள்ளும் கொடூரங்களும் அரங்கேறுகின்றன.
விஜய் ஆண்டனி நடித்த திமிரு பிடித்தவன் படத்தில் வரும் ஒரு காட்சியில், பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணிடம் கதாநாயகன் அறிவுரை சொல்லுவான். அதில் “நீங்கலாம் உங்கள அழிச்சிகிட்டு இந்தமாறி தப்புபன்ற ஆளுக்கு தீனி போடுறதால்தான் இரவில் கூடப் பாதுகாப்பா பெண்கள் தனியாக நடந்து செல்ல முடிகிறது. இதுவும் ஒரு சமூக சேவைதான்” என்று பாலியல் தொழிலை புனிதப்படுத்தி பேசியிருப்பான்.
இங்கு கூட சில ஆட்கள் பாலியல் தொழில் இருப்பதால்தான் பாலியல் வன்கொடுமைகள் குறைவாக நடக்கிறதென்று ஞாயவாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி வியாக்கியானம் பேசும் நபர்களின் பேச்சுக்கு பின்னால் ஒளிந்து இருப்பது பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டும் வக்கிரப் புத்திதான். பெண்களை நுகர்வு பொருட்கள் ஆக்கி விதவிதமான முறையில் பாலியல் உறவுகளை வைத்துக் கொள்ள தூண்டும் முதலாளித்துவமும், பெண் என்றால் காமத்திற்கானவள் என்று போதிக்கும் பார்ப்பனிய – ஆணாதிக்க சமூக கட்டமைப்பும் இருக்கும் வரை பாலியல் வன்கொடுமைகள் குறைய வழியேதுமில்லை.
2011-ஆம் ஆண்டே பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், உத்தரவை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. எனவே 2021-ஆம் ஆண்டு உடனடியாக, பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ரேஷன் அட்டை வழங்க வேண்டுமென மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வேலையை தொடங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்குவது மூலம் முறைப்படி அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட அரசு அங்கீரம் வழங்கியுள்ளது.
பண்டைய காலத்தில் இந்துமத கோவில்களுக்கு நேர்த்திக் கடனாக விடப்படும் பெண்களை தேவதாசி என்று அடையாளப்படுத்தி அவர்களுக்கு கோவிலில் இடம் ஒதுக்கி அடைத்து வைத்து பிராமணன், கோவில் தர்மகர்தா, அரசன், அமைச்சர், குறுநில மன்னன் மற்றும் பிற ஆதிக்கச்சாதி ஆண்கள் முதலானோர்க்கு காமக்கிழதியாக பணியாற்ற வைத்திருந்தது அன்றைய ஆளும் வர்க்கம். அதையேதான் இப்போது பெண்களின் வறுமையை பயன்படுத்தி கொண்டு அவர்களை பாலியல் தொழிலுக்குள் தள்ளி அவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து அரசின் அங்கீகாரத்தோடு அவர்கள் சுரண்டப்படுவதற்கான வழியை திறந்து விட்டுள்ளது நீதிமன்றம்.
இப்போது பாலியல் தொழிலாளர்கள் நிலையை பற்றி கவலை கொள்ளும் நீதிமன்றம் இந்த நிலைக்கு அவர்கள் வரக்காரணம் என்ன என்பதை பற்றி ஒருபோதும் யோசிப்பதில்லை. அவர்கள் பாலியல் சுரண்டலுக்குள் மேலும் தள்ளும் வழியைதான் நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரசு செய்ய வேண்டியது என்ன? பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மீட்டெடுத்து உளவியல் ரீதியாக பயிற்சி அளிப்பது, அவர்களுக்கு கல்வி, வேலை மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவது போன்ற நடவடிக்கைகள் மூலம் அவர்களை பாலியல் தொழில் என்னும் புதைகுழியில் இருந்து மீட்டெடுப்பதற்கான வேலையைதான் அரசு செய்ய வேண்டும்.
ஆனால், அரசோ பாலியல் தொழிலை நிறுவனமயமாக்குவதன் மூலம் பெண்கள் மற்றும் மாணவிகளை கடத்தி வந்து வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடவைத்து பணம் சம்பாரிக்கும் முதலைகளின் பசிக்கு மேலும் தீனி போட்டுள்ளது. இனி அதிகப்படியான பெண்களை பாலியல் தொழிலை நோக்கி தள்ளப்படும் சூழ்நிலைக்குதான் இந்நீதிமன்ற தீர்ப்பு அடிகோளியுள்ளது.
மாணவிகளை ஆடையோடு தொட்டால் அது பாலியல் குற்றமல்ல, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனுக்கு தண்டனையாக 6 மாதத்துக்கு அம்மாவட்ட பெண்களின் துணியை இலவசமாக துவைத்து தரவேண்டும், பாலியல் தொந்தரவு செய்தவனை அண்ணா என்று அழைத்து ராக்கி கட்ட வேண்டும் என பாலியல் குற்றங்களுக்கு தொடர்ச்சியாக கீழ்த்தரமான தீர்ப்புகளை வழங்கி வருகின்றன நீதிமன்றங்கள். அந்த வரிசையில் பாலியல் சுரண்டலை தொழிலாக அடையாளப்படுத்தும் இத்தீர்ப்பு என்பது நீதிமன்றத்தின் ஆணாதிக்க தன்மையை நமக்கு திரைமறைவின்றி அம்பலபடுத்தி காட்டுகிறது.
முட்டாள் (நீதி)பதிகள்