டந்த மே 18, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். 2009 ஆம் ஆண்டு, சிங்கள இராணுவத்தால் புலிகளோடு சேர்த்து, ஈழத் தமிழ் மக்களும் கொடிய இனப்படுகொலைக்கு உள்ளான நாள். மறக்க முடியாத “மே” அது. 13 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு மே மாதமும் இலங்கை உழைக்கும் மக்களின் வரலாற்றில் குறித்துவைத்துக் கொள்ள வேண்டிய நாளாக அமைந்திருக்கிறது. முந்தைய மே, மாளாத துயரத்தின் வடு. இன்றைய மே துளிர்விடும் புதிய நம்பிக்கையாக இருக்கிறது.
எந்த மஹிந்த இராஜபக்சே, சிங்களப் பேரினவாதத்துக்கு தலைமை தாங்கி இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை இறுதிப் போரில் கொன்றொழித்தானோ, அதே இராஜபக்சேவை இன்று ஆட்சியைத் துறந்தோடிவிட்டு, மறைந்து வாழும்படி செய்துவிட்டார்கள் சிங்கள உழைக்கும் மக்கள்.
இனவெறி-மதவெறியை ஒழித்துக் கட்டிவிட்டு, ஒரு புதிய ஜனநாயக இலங்கையை படைக்க விரும்பிய அனைத்து இலங்கை புரட்சிகர-ஜனநாயக சக்திகளுக்கும் பெருமகிழ்ச்சியை வழங்கியிருக்கிறது இனம் கடந்த உழைக்கும் மக்களின் பேரெழுச்சி.
“இலங்கையில் இன முரண்பாடுதான் பிரதான முரண்பாடு. சிங்களவர்கள் மத்தியில் ஜனநாயக சக்திகளே கிடையாது. அனைவரும் ஈழத்தமிழருக்கு பகையாளிகள். சிங்களவர்கள் எக்காலத்திலும் தமிழர்களோடு இணையவே மாட்டார்கள். தமிழர்களும் எக்காலத்திலும் சிங்களவர்களோடு இணைய முடியாது” – என்று கூறிவந்த தமிழினவாதிகளின் வாயில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது மூவின மக்களின் வர்க்க ஒற்றுமை.
இந்தச் சூழலில், தனித் தமிழீழக் கோரிக்கை இலங்கை மற்றும் இங்குள்ள தமிழினவாதிகளால் முன்னைக் காட்டிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. (கவனமாக ‘விவாதம்’ என்ற வரம்போடு நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். அதற்கான காரணத்தை நாம் கடைசியில் விளக்குவோம்.)
படிக்க :
♦ புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ
ஆனால் இப்பொழுதுகூட வர்க்க ஒற்றுமையை மறுக்கின்ற, வெறுக்கின்ற அவர்களது இழிந்த இனவாதக் கண்ணோட்டத்தை விட்டொழித்தபாடில்லை. இச்சூழலில் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்டிருக்கிற அநீதியான இனப்படுகொலைக்கு நீதி வழங்கவும் அவர்களது தன்னுரிமைக் கோரிக்கையை வென்றெடுக்கவும் எந்த பாதையில் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை நாமும் பேச வேண்டியிருக்கிறது.
***
1980கள் முதல் புதிய ஜனநாயகம் இதழும் எமது தோழமை அமைப்புகளும் ஏற்கெனவே இதுகுறித்து தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம் அவை தமிழினவாதிகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றன; எம்மையும் எமது தோழமை அமைப்புகளையும் தமிழீழத்தின் எதிரிகளாகவும் அவர்கள் சித்தரித்தார்கள். ஆனால் நமது நிலைப்பாடுகள் எவ்வளவு சரியானவை என்பதை இலங்கையின் வர்க்கப் போராட்டம் பறைசாற்றிவிட்டது.
2013 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழில், “ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்” என்று தலைப்பிட்ட கட்டுரையில், ஈழம் தொடர்பான பு.ஜ. மற்றும் பு.ஜ. தோழமை அமைப்புகளின் நிலைப்பாட்டை சுருக்கமாக விளக்கியிருப்போம். பொருத்தம் கருதி, அக்கட்டுரையின் ஒருபகுதியை இங்கு நீண்ட மேற்கோளாகத் தருகிறோம் :
“ஈழ இனச் சிக்கலுக்குத் தமிழீழத் தனியரசுதான் எல்லா நிலைகளிலும் எப்போதும் ஒரே தீர்வு என்று கூறுவதைத்தான் ம.க.இ.க.-வினர் ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர, தமிழீழத் தனியரசுக்கு எதிரானவர்கள் என்பது உண்மையில்லை. இது நாம் இப்போது எடுக்கும் முடிவல்ல. முன்பே எழுதியிருப்பதுதான். “அப்படியானால், தமிழீழத் தனியரசுக்காக ஏன் போராடவில்லை, இனிமேலாவது அதற்காகப் போராடுவீர்களா” என்று கேட்டு ம.க.இ.க.-வை மடக்குவதாக எண்ணிக் கொண்டு தமிழினவாதிகள் வாதாடக் கூடும்.
தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கைக்காக இரண்டு காரணங்களுக்காக ம.க.இ.க.-வினர் போராடவில்லை. தமிழினவாதிகளின் பார்வையில் தமிழீழத் தனியரசு என்பதுதான் ஈழ இனச் சிக்கலுக்கு ஒரே கோரிக்கை, ஒரே தீர்வு; அதனால்தான் அதை மட்டுமே முன் வைக்க வேண்டும் என்கிறார்கள். அது குட்டி முதலாளிய வர்க்கத்தின் பகுத்தறிவுக்குப் புறம்பான, குறுந்தேசிய இனவாதப் பார்வையிலானது.
ம.க.இ.க. வினரின் பார்வையில் – இதுதான் அறிவியல்பூர்வமானது, பாட்டாளி வர்க்கப் பார்வையிலானது – தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாக ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமைக் கோரிக்கையையும், அதற்கான போராட்டத்தையும் நாம் முன்னெடுக்கிறோம்.
பிரிந்து போகும் உரிமையை ஒதுக்கிவிட்டு, மறுத்துவிட்டு வெறுமனே தன்னுரிமைக்காக ம.க.இ.க.வினர் நிற்கவில்லை. ஆகவேதான் தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கையைத் தனியே முன்வைத்துப் போராட வேண்டியதன் அவசியம் இல்லை.
தமிழீழத் தனியரசு கோரிக்கையை மட்டுமே முன்வைத்து, அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார்கள், தமிழினவாதிகள். பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் அவ்வாறு செய்ய முடியாது, செய்யக் கூடாது, செய்யவுமில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்துபட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான்  அந்நாட்டை ஆளும் பாசிச அரசு. அதற்கு எதிராக ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனித்தனிப் பொதுவுடைமைக் கட்சி வைத்து, தனித்தனித் திட்டமும் இலக்கும் வைத்துப் புரட்சி செய்வது; அவ்வாறான தனித்தனி புரட்சிகளில் தேசிய இனங்கள் வெற்றிபெற்று, தனித்தனியே சோசலிசத்தைக் கட்டியமைத்த பின்னரோ, அதற்கு முன்னரோ  ஐக்கியப்படுவது என்று பேசுவது மார்க்சிய – லெனினியப் பார்வையே கிடையாது.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவுகூர்ந்து, பேரணியாகச் செல்லும் சிங்கள் மக்கள். இடம், காலிமுகத்திடல் மைதானம்.
அந்நாட்டை ஆளும் பாசிச அரசுக்கு எதிராக ஒரே புரட்சிகரப் பொதுவுடைமைக் கட்சியைக் கட்டுவது; அக்கட்சி, எல்லா தேசிய இனங்களுக்கும் சமவுரிமையை மட்டுமல்ல, ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை உறுதிப்படுத்துவது; அக்கட்சி ஒடுக்கும் (சிங்களத்) தேசிய இனத்தவரிடையே ஈழத் தமிழர்  தன்னுரிமையையும், ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் தேசிய இனத்தவரிடையே ஐக்கியத்தையும் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் அந்நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்திப் புதிய ஜனநாயகப் புரட்சியை முடிப்பதுதான் அக்கட்சியின் இலக்காகவும் திட்டமாகவும் இருக்கும் என்பதுதான் மார்க்சிய – லெனினியப் பார்வை.
இந்த மார்க்சிய-லெனினியப் பார்வையை மறுப்பதற்காகத் தமிழினவாதிகள் பலவாறு புளுகித் திரிகிறார்கள். “சிங்களப் பெருந்தேசிய இனத்து மக்களுக்கும்  அவர்களை ஆளும் பாசிச அரசுக்கும் வேறுபாடே கிடையாது; பகை முரண்பாடும் கிடையாது; பெருந்தேசிய இனத்து மக்கள் அனைவரும் ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு எதிரானவர்கள்; இலங்கையின் இரு தேசிய இனப் பாட்டாளி மக்களும் ஐக்கியப்பட மாட்டார்கள்; இலங்கையில் ஈழத் தமிழ் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் அமைப்புகள் எதுவும் சிங்களவர் மத்தியில் கிடையாது” ஆகிய தமிழினவாதிகளின் கருத்துக்களைப்  பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் ஏற்கவில்லை. ஏனென்றால், தமிழினவாதிகள் கூறிவரும் மேற்கண்ட கருத்துகளில் உண்மையில்லை.
இந்தியாவின் ஈழ ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில், நோக்கில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டு நின்றிருக்கிறார்கள். 1983-இல் இருந்து தொடர்ந்து நடந்து வந்த ஈழப்போர் காரணமாக இலங்கையில் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் முற்றியபோது   சிங்கள, தமிழ் மக்கள் அமைதியை வேண்டி நின்றபோது அதையே முன்வைத்து அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டார், சந்திரிகா  குமாரதுங்கே. அவரைத் தேர்ந்தெடுத்து அமைதி, போர்நிறுத்தம், பேச்சு வார்த்தையை ஆதரித்ததில் சிங்களரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள். சிங்கள இன வெறியர்களினால் அம்முயற்சி சிதறடிக்கப்பட்டது வேறு விடயம். 2004 சுனாமியின் பேரழிவுகளை எதிர்கொள்வதில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள்.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளின் அரசியல்  பொறுப்பாளர் நடேசனின் மனைவியாகிய சிங்களப் பெண்ணைப் போன்று தமிழ்த் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் சிங்களவர்களும், சிங்களவர் மற்றும் ஈழத் தமிழர்களைக் கொண்ட குழுக்களும் அங்குண்டு. தமிழ்த் தேசிய இன மக்களின் மனித உரிமைக்காகவும் இலங்கைப் பாசிச அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடிக் கொல்லப்பட்டவர்களும் பத்திரிகையாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் சிங்களவரிடையே உண்டு. ஈழ விடுதலைப் போராட்டங்கள் நடந்த அதே காலகட்டத்தில், இலங்கைப் பாசிச அரசால் ஈழத் தமிழர்கள் மட்டும் கொன்று குவிக்கப்படவில்லை. பல்லாயிரம் சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வெள்ளை வேன் வேட்டை இன்னமும் தொடர்கிறது. 75,000 சிங்கள இளைஞர்கள் இந்தக் காலத்தில் காணாமல் போயிருக்கிறார்கள் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பு இலங்கைப் பாசிச அரசுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
ஆகவே, அரசியல் காரணங்களுக்காக சிங்களவரும் ஈழத் தமிழரும் ஐக்கியப்படுவது சாத்தியமே இல்லாதது அல்ல.”
***
ஆம், “சாத்தியமே இல்லாதது அல்ல” என்று அன்று நாம் கூறினோம். இன்று சாத்தியப்பட்டிருப்பதை கண்ணெதிரே பார்க்கிறோம்.
“கோத்தபய பதவி விலக வேண்டும்; போராட்டக்காரர்களைத் தாக்கிய மஹிந்த தண்டிக்கப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இச்சூழலில், சிங்கள-தமிழ் மக்களின் பொது எதிரியான இராஜபக்சே கும்பலுக்கு எதிரான போராட்டத்தில், தமிழினப் படுகொலைக் குற்றத்திற்கும் சேர்த்து அக்கும்பல் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும்; தமிழ் மக்களின் தன்னுரிமை கோரிக்கையும் வலுவாக இணைக்கப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் அரசியல் போராட்டங்களை நடத்துவதற்கு உகந்த தருணம் இது. நிச்சயம் அவை சிங்கள உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெறும்.
ஆனால் நிலைமை வேறுமாதிரியாக உள்ளது. சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய தென்னிலங்கையில்தான் போராட்டங்கள் வீச்சாக நடந்துவருகின்றன. தமிழர்கள் அடர்த்தியாக வாழும் வடக்கு-கிழக்கு பகுதிகளில், தொடக்கம் முதலே பெருமளவில் மக்கள் போராட்டங்களைக் காண முடியவில்லை.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை தமிழ் மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வருவதால், அதற்கு பழகிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். மேலும், தமிழ் மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய வடக்கு-கிழக்கு பகுதிகளில்தான் பெருமளவு இலங்கை இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. இனப்படுகொலைக்கு பிறகு அம்மக்கள் மத்தியில், அரசை எதிர்த்த போராட்டங்களில் பங்குபெற ஒருவித அச்சம் நிலவுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவைகளை முதன்மையான காரணங்களாக நம்மால் கருதமுடியாது.
தமிழ் மக்களிடையே இயங்குகிற செல்வாக்கு பெற்ற அரசியல் அமைப்புகள் – சிறுகுழுக்களாக உள்ள புரட்சிகர-ஜனநாயக அமைப்புகள் விதிவிலக்காக இருக்கலாம் – எவையும் அம்மக்களை போராடுவதற்கு திரட்டவில்லை; அவ்வாறு செய்வதற்கு விரும்பவும் இல்லை என்பதுதான் முதன்மைக் காரணம். குறிப்பாக தமிழின அமைப்புகளையே சொல்கிறோம்.
இப்போது மட்டுமல்ல, இலங்கை வரலாற்றிலேயே, இத்தமிழினவாத அமைப்புகள் ஒருநாளும் இருதேசிய இனத்து உழைக்கும் மக்களின் பொதுக்கோரிக்கைகளுக்காக, தமிழர்களைத் திரட்டிப் போராடியதில்லை. இனப் பிரச்சினையை மட்டுமே, அதுவும் தங்களது குறுகிய இனவாதக் கண்ணோட்டத்திலும் பிழைப்புவாத நோக்கங்களுக்காகவும் மட்டுமே முன்வைத்து களமாடியுள்ளார்கள்.
இன, மத முரண்பாடுகளைக் கடந்து உழைக்கும் வர்க்கமாக மக்கள் போராடிவரும் இச்சூழலிலும், தமிழினவாதிகள் பேசுவதை அறிந்தால் நம்மால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
2009 ஆம் ஆண்டு வெளியான புதிய ஜனநாயகம் வெளியீடு.
திருக்குமரன் என்ற தமிழினவாதி தமிழ் யூடியூப் சானலுக்கு தான் அளித்த பேட்டியொன்றில், “சிங்களர்கள் மூன்றுவேளை சோற்றுக்காக போராடுகிறார்கள். அவர்களால் மூன்று வேளை சோறில்லாமலும் ஏசி இல்லாமலும் இருக்க முடியாது. தமிழர்களுக்காக என்றாவது, சிங்களவர்கள் போராடியிருக்கிறார்களா, எனவே தமிழ் மக்கள் அவர்களை நம்பக்கூடாது” என்று பேசுகிறார். தோழர்களே, இது ஈனப் புத்திகொண்ட ஒருவரது பேச்சுமட்டுமல்ல. பல தமிழ்த்தேசியவாதிகள் இதே அலைவரிசையில் பயணிப்பதை நாம் எடுத்துக் காட்ட முடியும்.
“(வடக்கில்) நாங்கள் உணவுக்காக போராடவில்லை, நீதிக்காக போராடுகிறோம்” என்று தமிழ்த்தேசியவாதிகளால் நடத்தப்படும் “தமிழ் கார்டியன்” (Tamil Guardian) என்ற இணையப் பத்திரிகை எழுதிருந்தது.
அதேபோல, “தமிழ்நெட்” (Tamilnet) என்ற மற்றொரு இணையப் பத்திரிகையின் ஆசிரியர் இவ்வாறு எழுதுகிறார் : “இலங்கைத் தீவில் எழுந்திருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில், சிங்கள தேசத்தோடு ஈழத்தமிழ்தேசம் ஒருகுடையின் கீழ் அணிவகுப்பது முற்றிலும் பொருத்தமற்றது” … “இன அழிப்பு ஒற்றையாட்சி அரசின் பொருளாதாரத்தைக் காப்பதற்காக, இன அழிப்புத் தேசத்தோடு ஒருகுடையின் கீழ் ஈழத்தமிழர் அணிதிரள்வதென்பது, இன அழிப்பு மறுப்புக்கு ஒப்பாகிவிடும்”
மேற்கண்ட இணையதளங்கள் மட்டுமல்ல, “கூர்மை” (Koormai), “ஈழப்பார்வை” (Eeelamview) என தமிழினவாதிகள் நடத்துகின்ற பெரும்பாலான இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்கள் ஆகியவை சுருதியும் இலயமும் மாறாமால் ஒரேமாதிரி வாசிக்கின்றன.
“1990களிலிருந்தே இலங்கையில் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டவர்கள் தமிழர்கள்தான். தமிழர்களாகிய நாம் 20 ஆண்டுகளுக்கு மேலாக இதனை அனுபவித்து வருகிறோம். சிங்கள மக்கள் இப்பொழுதுதான் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று இனவாத நஞ்சைக் கக்குகிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிவஞானம் சிறீதரன்.
இவர்கள் சொல்லும் “சோத்துப் பிரச்சினை” சிங்களவர்களுக்கு மட்டுமல்ல, தமிழினத்துப் பாட்டாளிகளுக்கும்தான். பொருளாதர நெருக்கடி வெடித்ததிலிருந்து, இதுவரை 73 தமிழர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள் (ஜூன் 01 வரையான கணக்கீடு). ஆனால் “சோத்துப் பிரச்சினை” தமிழர்களுக்கு பெரிதல்லவாம், இதற்காக எக்காரணம் கொண்டும் சிங்களவர்களோடு சேர்ந்துவிடாதீர்கள் என்று உயிர்போக கத்துகிறார்கள் இனவாதிகள்.
இந்த இனவாதக் கூச்சலுக்கு ஒரு “வர்க்க உள்ளடக்கம்” உள்ளது தோழர்களே. அதுதான் மேட்டுக்குடி வர்க்கத் திமிர். “தமிழன்” என்ற இனத்தோல் போர்த்துக் கொண்டு, தமிழின பாட்டாளியிடம் இனவாத ஊளையிடுகின்றன இந்த மேட்டுக்குடி நரிகள்.
இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழினவாதிகள் நேரடியாக பேசுகிறார்கள் என்றால், தமிழ்நாட்டு தமிழினவாதிகளோ அதையே மென்மையாகவும் பகிரங்கமாக வெளியில் தெரியாத வண்ணமும் பேசுகிறார்கள். இவர்களில் யாரும், சிங்கள பேரினவாத பாசிஸ்டுகளான இராஜபக்சேக்களுக்கு எதிராகவோ, பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வேண்டியோ போராடிவரும் பெரும்பான்மை சிங்களவர்களோடு தமிழர்களும் இணைந்து போராடவேண்டும் என்று கோரவில்லை. மாறாக, இப்பொழுதும் தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து போராடமுடியாது என்று பேசிவருகிறார்கள்.
சரி, தமிழர்களுக்கு “சோத்துப் பிரச்சினை” பெரிதல்ல, தனி ஈழப் பிரச்சினையைத்தான் பேசவேண்டும் என்று கதைப்பவர்கள், இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அதற்காகவேணும் தமிழ்மக்களைத் திரட்டி போராடியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், சிங்களர்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து போராட விடமால், இனவாத வேலியிட்டு தடுப்பதன் மூலம் சிங்கள ஆளும் வர்க்கத்தையும் அரசுக் கட்டமைப்பையும் பாதுகாப்பதே இந்த கும்பல்கள்தான்.
தமிழன் பிணங்களை வைத்து நாடாளுமன்ற பதவி சுகம் காணவும், புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் நிதி வசூலித்துப் பொறுக்கித் திண்பதற்காகவும் “இனவாதம்” அவர்களுக்கு தேவைப்படுகிறது. இதற்கு உலைவைக்கும் “வர்க்க ஒற்றுமை” அதனால்தான் அவர்களுக்கு கசக்கிறது.
படிக்க :
♦ இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-1
♦ இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!
சிங்களப் பேரினவெறியோ, குறுந்தேசிய தமிழினவாதமோ, இனி நீண்டகாலம் இனவாத அரசியலுக்கு உழைக்கும் மக்களை பலியாக்க முடியாது. வர்க்கப் போராட்டச் சூறாவளியில், இந்த ‘அற்பப் பதர்கள்’ தாக்குப்பிடிக்க முடியாது.
“சிங்களர்களை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது” என்று வியக்கிறார்கள் தமிழ் மக்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சிங்களர்களும் நினைவேந்துகிறார்கள். தற்போது சிங்கள-தமிழ் உழைக்கும் மக்களிடையே ஐக்கியமானதொரு சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இனியும் இன உரிமைப் போர்வையில், தமிழினவாதிகள் முன்வைக்கும் “பிளவு அரசியல்” எடுபடாது.
இனவாத அரசியல் தலைமைகளிடம் தமிழ் மக்கள் சரணடைந்து கிடக்கப் போவதில்லை. தென்னிலங்கை மக்களுடன் ஒன்றிணைந்து போராடுவதற்காக, வடக்குப் பகுதியின் மாணவர் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக கிடைக்கும் செய்திகள் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.
சிங்கள-தமிழ் மக்களின் ஒன்றுபட்ட வர்க்கப் போராட்டமே, ஏகாதிபத்திய மேலாதிக்கத்திலிருந்தும் சுரண்டலிலிருந்தும் இலங்கையை விடுவிப்பதோடு, தமிழ் மக்களுக்கும் தன்னுரிமையைப் பெற்றுத்தரும்.

செவ்வந்தி

1 மறுமொழி

  1. சிறப்பாக உள்ளது. வாழ்க”,வையகம்! ,வாழ்க “,வளமுடன்! ,. உலகமே ஒன்றுபடும் கண்டிப்பாக அடித்தள உழைக்கும் உண்மை மக்கள் விரைவில் ஒன்று சேர்வார்கள். நன்றிகள். “,.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க