பாலின சமத்துவமின்மை : 146 நாடுகளில் இந்தியா 135வது இடம்!

வறுமை, பாலின சமத்துவமின்மை அதிகரித்து கொண்டே செல்லும் இந்த அபாயகரமான நிலைமையிலும் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துமதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

0

ஜூலை 13 அன்று ஜெனிவாவில் வெளியிடப்பட்ட உலக பொருளாதார மன்றத்தின் (WEF) பாலின இடைவெளி அறிக்கை 2022-ன் படி, பாலின சமத்துவத்தின் அடிப்படையில் 146 நாடுகளில் 135-வது இடத்தில் இந்தியா உள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காங்கோ, ஈரான் மற்றும் சாட்(மத்திய ஆப்பிரிக்கா) ஆகிய 146 நாடுகளின் குறியீட்டில் 11 நாடுகள் மட்டுமே இந்தியாவிற்கு கீழே தரவரிசையில் உள்ளன.

பாலின சமத்துவ நாடாக ஐஸ்லாந்து தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் உள்ளது.

WEF அறிக்கை படி, தொழிலாளர் ஆற்றலில் பாலின இடைவெளி அதிகரித்து வருவதால், வாழ்க்கைச் செலவு நெருக்கடி உலகளவில் பெண்களை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலின இடைவெளியை குறைக்க இன்னும் 132 ஆண்டுகள் ஆகும்.


படிக்க : முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை || உலகப் பட்டினிக் குறியீடு


கொரோனா பெரும்தொற்று பாலின சமத்துவத்தை ஒரு தலைமுறைக்கு பின்னுக்குத் தள்ளிவிட்டதாக கூறியது. இந்த அறிக்கை நான்கு பரிமாணங்களில் பாலின சமத்துவத்தை ஆய்வு செய்கிறது: பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, கல்வி அடைதல், ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வு மற்றும் அரசியல் அதிகாரம். உடல்நலம் மற்றும் உயிர்வாழும் துணைக் குறியீட்டில், இந்தியா 146-வது இடத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

2021-ம் ஆண்டிலிருந்து மீண்டு வரும் நிலையில், ‘பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு’ என்ற பரிமாணத்தில் இந்தியா தனது செயல்திறனில் மிகவும் நேர்மறையான மாற்றத்தை பதிவு செய்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் ஆண்கள் (-9.5 சதவீத புள்ளிகள்) மற்றும் பெண்கள் (-3 சதவீத புள்ளிகள்) தொழிலாளர்-பங்கேற்பு சுருங்கியது.

தெற்காசியா (62.3%) அனைத்து பிராந்தியங்களிலும் மிகப்பெரிய பாலின இடைவெளியைக் கொண்டுள்ளது. அளவிடப்பட்ட அனைத்து பாலின இடைவெளிகளிலும் குறைந்த மதிப்பெண்கள் மற்றும் 2021 முதல் பெரும்பாலான நாடுகளில் சிறிய முன்னேற்றம் உள்ளது. தற்போதைய வேகத்தில், பிராந்தியத்தில் பாலின இடைவெளியை சரிசெய்வதற்கு 197 ஆண்டுகள் ஆகும்.

பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் தொழில் மற்றும் தொழில்நுட்ப பாத்திரங்களில் பெண்களின் பங்கு அதிகரிப்புடன் பொருளாதார பாலின இடைவெளி 1.8% குறைக்கப்பட்டுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட 146 நாட்டுகளின் பொருளாதாரங்களில், ஐந்தில் ஒன்று மட்டுமே கடந்த ஆண்டில் பாலின இடைவெளியை 1% ஆகக் குறைக்க முடிந்தது என்று WEF தெரிவித்துள்ளது.

“தொற்றுநோயின் போது தொழிலாளர்களுக்கு ஏறபட்டு மிகப்பெரிய பாதிப்புகளுக்கு பிறகு வாழ்க்கைச் செலவு நெருக்கடி பெண்களை விகிதாசாரமாக பாதிக்கிறது” என்று WEF நிர்வாக இயக்குனர் சாடியா ஜாஹிடி கூறினார்.

“இதனை சரிசெய்ய அரசாங்கமும் வணிகமும் இரண்டு வகை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்: எதிர்காலத் தொழில்களில் பெண்களின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்களுக்கு பெண்கள் திரும்புவதை ஆதரிக்கும் இலக்கு கொள்கைகள். இல்லையெனில், எதிர்கால பொருளாதார வருவாயை இழக்க நேரிடும்” என்று அவர் கூறினார்.


படிக்க : உலகப் பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியாவிற்கு 150-வது இடம் !


தற்போதைய முன்னேற்ற விகிதத்தில், அரசியல் அதிகாரமளிக்கும் பாலின இடைவெளியை குறைப்பதற்கு 155 ஆண்டுகள் ஆகும். பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு பாலின இடைவெளியை குறைப்பதற்கு 151 ஆண்டுகள் ஆகும். 29 நாடுகள் முழு சமநிலையை அடைந்திருந்தாலும், கல்வி அடைவதில் பாலின இடைவெளியை குறைக்க இன்னும் 22 ஆண்டுகள் ஆகும். 140-க்கும் மேற்பட்ட நாடுகள் குறைந்தபட்சம் 95% சுகாதார இடைவெளிகளை சரிசெய்துவிட்டாலும், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வதில் பின்னடைவு என்பது தலைகீழாக இருக்கலாம்.

வறுமை, பாலின சமத்துவமின்மை அதிகரித்து கொண்டே செல்லும் இந்த அபாயகரமான நிலைமையிலும் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துமதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த எதார்த்த முரண்பாட்டிற்கு என்ன காரணம். முதலாளித்துவம் சுரண்டலை அதிகரிக்க அதிகரிக்க வறுமையின் பிடியில் மக்கள் வதைபடுவது மேலும் மேலும் அதிகரித்து கொண்டேதான் இருக்கும். இந்த காரணத்தினால் மட்டுமே பாலின சமத்துவமின்னை, வறுமை, உடல்நடக்குறைபாடுகள் ஆகியவை அதிகரிக்கின்றன.


சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க