லகை ஆளுகின்ற ஆளும் வர்க்கக் கும்பல் எந்தவித பொறுப்புணர்வுமின்றி ஆட்சியை நடத்திக் கொண்டுள்ளது. மக்கள் அடிமை முறைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சுற்றுச் சூழல் மிக மோசமாக நாசமாகிக் கொண்டுள்ளது. மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிவது அன்றாட நிகழ்வாக மாறிக் கொண்டுள்ளது.

எதிர்காலம் பற்றி எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல் உள்ளது. சுற்றுச் சூழல் முற்றாக நாசமாகிக் கொண்டிருப்பது பற்றி ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. இந்த சுற்றுச் சூழல் நாசமாவதைத் தடுத்து நிறுத்தக் கூடிய எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுப்பதற்கு உலக ஆளும் வர்க்கம் தயாராக இல்லை. பூமியில் புதைந்துள்ள கரிம எரிபொருள் எடுப்பதை விரைவுபடுத்தி வருகிறோம்! அதை எந்த வரம்புமற்று சுவீகரித்து வருகிறோம்! இவை தவிர, காணுயிர்கள் சுவீகரிப்பு பூதாகரமாகப் பெருகி வருகிறது! ஃப்ராய்டிய மரண விருப்பத்தால் பீடிக்கப்பட்டுள்ளது போல புதுப் புதுப் போர்களை நடத்தி வருகிறோம்! அபோகலிப்சோவின் நான்கு குதிரை ஓட்டிகளைப் போல – ஆக்கிரமிப்பு, போர், வறட்சி மற்றும் மரணம் – இவற்றுடன் 21-ம் நூற்றாண்டிற்குள் பாய்ச்சலில் சென்று கொண்டுள்ளோம்!

ஆள்பவர்கள் யார்? கார்ப்பரேட் நிறுவனங்களின், உலக கோடீசுவர வர்க்கத்தின் ஏவல், எடுபிடி நாய்கள்! இந்த கையளவேயான கார்ப்பரேட்டுகளின் தற்கொலைப் பாதையான பேரழிவுப் பாதையில் ஆட்சியாளர்கள் உலகை இழுத்துச் செல்கின்றனர். கார்ப்பரேட் பகாசுர சூறையாடலை சீர்திருத்துவது பற்றி கூட இந்த ஆட்சியாளர்களின் திட்டத்திலேயே இல்லை. மாறாக இந்த சூறையாடலுக்குப் பணிந்து சேவை செய்கின்றனர்.


படிக்க : இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !


இந்த பகாசுர சூறையாடலால் உலக மக்கள் சொல்லொனா துன்ப துயரங்களுக்கு ஆளாக்கப் படுகிறார்கள்! இதனால் மரபான சட்ட முறையிலான ஆட்சியை நடத்த முடிவதில்லை. ஒரு பாசிசக் கொடுங்கோண்மை ஆட்சி தேவைப்படுகிறது! அங்கு கோடீசுவர ஆளும் வர்க்க கும்பல் உல்லாச ஊதாரி வாழ்க்கை நடத்தும்! உழைப்பாளிகளோ அடிமைகளாக நடத்தப்படுவார்கள்!

மனித உரிமைகளும் இயற்கை நீதிகளும் செல்லாக்காசாக இருக்கும்! 24 மணி நேரமும் 365 நாட்களும் பெரியண்ணனின் கண்காணிப்பின் கீழ் உலக மக்கள் உழல வேண்டும்! அரசே சாவு வியாபாரிகளாகவும், போர் மட்டுமே அதன் தொழிலாகவும் இருக்கும்! மாற்றுக் கருத்துக்களுக்கு இம்மியளவும் இடமிருக்காதது மட்டுமல்ல அவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக்கப்பட்டு நரவேட்டையாடப்படுவார்கள்!

ஏகாதிபத்தியங்களின் இலாப வெறிக்காக தூண்டிவிடப்படும் உள்நாட்டுப் போர்களாலும், சுற்றுச் சூழல் நாசத்தாலும் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்படும் மக்கள், அகதிகளாக, அந்த மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளில் இப்படிப்பட்ட நாசங்கள் இல்லயே என அங்கு தஞ்சம் புகச் சென்றால் அங்கு நுழைய விடாமல் விரட்டியடிப்பார்கள்!

அன்றாடம் அகதிகள் செத்து மடியும் நெஞ்சை உலுக்கும் செய்திகள் தினசரி நிகழ்வுகளாக எவ்வித எதிர்ப்புமின்றி, பதைபதைப்புமின்றி கடந்து சென்று கொண்டிருக்கின்றன! இன்றைக்கு இப்படிப்பட்ட கொடுமைகள் நமக்கில்லை என மகிழ்ந்து கொண்டுள்ள உல்லாச ஊதாரி கும்பல் நாளை இதே கொடுமைகளுக்குப் பலியாகி செத்து மடியும் அவலத்தைக் காண உலகில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி!

தண்டிக்கப்பட்டு கைவிடப்பட்ட கோடானு கோடி மக்கள் தமது எதிர் காலம் பற்றித் தெரிந்து வைத்துள்ளனர். அவர்களுக்கான எதிர்காலம் இப்போதே வந்து விட்டது. நமது தலைமுறையின் மிக முக்கியமான பதிப்பாளரும் ஆஸ்த்திரேலிய குடிமகனுமான ஜூலியன் அசாஞ்சேவை அகதி என்று கூடப் பார்க்காமல் சர்வதேச சட்ட விதிகளை மீறி பிரிட்டன் அரசு கைது செய்தது! ஏகாதிபத்தியங்கள் நடத்தும் ரகசிய சதிச் செயல்களை விக்கி லீக்ஸ் என்ற இணைய இதழில் அம்பலப்படுத்தி உலக மக்களை எச்சரித்த அவரை கைது செய்ய அலைபாய்ந்த அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்த பிரிட்டன் அரசு அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடிவு செய்த செய்தி நமக்கெல்லாம் தெரிந்த ஒரு உதாரணம் தான்!

உலக சாவு வியாபாரிகளின் ரகசிய சதித் திட்டங்களை, பழிவாங்கும் நடவடிக்கைகளை, அவர்களின் இழிவான பண்புகளை, கார்ப்பரேட்டுகளின் – அரசுகளின் ஊழல் கிரிமினல் குற்றங்களை அம்பலப்படுத்தும் யாராயிருந்தாலும் அவர்கள் கிரிமினல்களாக முத்திரை குத்தப்பட்டு வேட்டையாடப் படுவார்கள் என்றால் எத்தனை பத்திரிகையாளர்கள் தமது உயிருக்குத் துணிந்து உண்மைகளை வெளிக்கொண்டு வருவார்கள் என எதிர் பார்ப்பீர்கள்? இன்றைக்கு ஜனநாயகத்தின் தூண் என சொல்லப்படும் பத்திரிகை தர்மம் கிரிமினல் குற்றமாக்கப்பட்டு விட்டது! (இந்தியாவிலும் பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் நினைவுக்கு வருகிறதா?)

அசாஞ்சே பக்கவாத பாதிப்புக்குள்ளாகி உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது ஒரு பொருட்டல்ல! அவர் அமெரிக்க குடிமகன் இல்லை என்பதோ அவரது விக்கி லீக்ஸ், அமெரிக்க பதிப்பகம் இல்லை என்பதோ ஒரு பொருட்டல்ல! அசாங்கே தஞ்சம் புகுந்து 7 ஆண்டுகள் வாழ்ந்து வந்த ஈகுடேரிய தூதராலயத்தில் பாதுகாப்புப் பணி புரிந்த ஸ்பெயின் நாட்டின் யுசி குலோபல் (UC Glopal) நிறுவனம் தனிப்பட அசாஞ்சேயும் அவரது வழக்குரைஞரும் பேசியதை அவர்களுக்கே தெரியாமல் சட்ட விரோதமாகப் பதிவு செய்து அமெரிக்காவிடம் கொடுத்தது.

Julian-Assange
ஈக்வடார் தூதரகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து செல்லப்படும் அசாஞ்சே.

இது சர்வதேச விதி மீறல்! யாரிடம் போய்ச் சொல்வது? அசாஞ்சேக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்யப்பட்டது! அவரது வழக்கு விசாரணை ஒரு மோசடி நாடகம்! ஒருமுறை இந்தக் கட்டுரையாளர் நீதிமன்றம் சென்று விசாரணையைப் பார்த்த போது எந்தக் குற்றமுமற்ற, ஹீரோவான அசாஞ்சே, கேளிக்குறிய நபராக எந்த ஜனநாயக உரிமைகளும் அற்றவராக நடத்தப்பட்டார்! அவரை நடத்திய விதத்தில் ஒரு செய்தி சொல்லப்பட்டது! அதாவது, நீ எங்களை அம்பலப்படுத்தினால், நாங்கள் உங்களை ஒழித்துவிடுவோம் என்பதுதான்! (மோடி அரசின் செயல்பாடு போலவே இருக்கிறதே என உங்கள் மனதில் ஓடுகிறதா?)

சீனாவின் பரந்து விரிந்த வியர்வைக் கூடங்களான தொழிலகங்களிலோ துருப்பிடித்துப் போன டெட்ராய்டின் கார்ப்பரேட் நிறுவனங்களிலோ தொழிலாளர்கள் வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போதாத அற்பக் கூலிக்கு அல்லற்படுகின்றனர். அங்கு பணிப்பாதுகாப்புமில்லை, தொழிற்சங்கங்களுமில்லை! வணிக ஒப்பந்தங்கள், ஆலை மூடல்கள், உயரும் வட்டி வீதம், விலைவாசி உயர்வு என அனைத்தும் தொழிலாளர்களை அழித்தொழித்து வருகின்றன! (இந்தியாவின் நிலைமைகளை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறதா?) அவர்களுக்கும் தமது எதிர்காலம் தெரிகிறது!

வட்டி விகிதம் அதிகரிப்பது மறுதலையாக கூலியைக் குறைக்கிறது. பல பத்தாண்டுகளாக கூலி உயராமல் தேங்கியுள்ளது! இது வேலையின்மையையும், அதனால் தனிநபரின் கடனையும் அதிகரித்து விட்டது! உணவு மற்றும் பிற அடிப்படைத் தேவைகளின் விலை உயர்ந்துவிட்டது! வட்டி விகிதத்தை உயர்த்துவது பொதுவில் பொருளாதார மந்தத்தை உருவாக்கும்! ஆனால் கார்ப்பரேட் பகாசுரக் கொள்ளையர்கள் டிராகுலாக்களைப் போல தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சுவதிலேயே வெறி பிடித்து அலைகின்றனர்! பணவீக்கம் முதலீட்டிலான இலாபத்தைக் குறைப்பதால், ஆலையில் போடப்படும் மூலதனம் குறைகிறது!

கூலி உயர்வதால் விலைகள் உயர்வதில்லை! விலை உயர்வுக்கு சந்தையில் பொருள் வரத்து குறைவதுதான் முக்கிய காரணம்! மறுபுறம் எரிபொருள் விலை உயர்வாலும் கார்ப்பரேட்டுகளின் இலாப வெறியாலும் பொருட்களின் விலை அதிகரிக்கிறது! இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்க பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை உயர்த்தி வரலாறு காணாத இலாபத்தை ஈட்டியுள்ளனர்! (இந்தியாவிலும் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் கார்ப்பரேட்டுகள் பெரும் லாபம் சம்பாதித்து உலகப் பணக்கார வரிசையில் சேர்ந்திருப்பதை பல கட்டுரைகளில் வினவே அம்பலப்படுத்தியுள்ளது!)

அமெரிக்க பொருளாதார பகுப்பாய்வகத்தின் கூற்றுப்படி, வரி செலுத்துவதற்கு முன்பான இலாப விகிதம் 25% அதிகரித்தது, அதாவது 2.81 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 1976-க்குப் பின் இதுவே மிக அதிக ஆண்டு இலாபம்! 1948 முதல் மத்திய வங்கி இலாபம் பற்றி பகுப்பாய்வு செய்யத் தொடங்கியதிலிருந்து கடந்த ஆண்டு வரி செலுத்திய பின்பான இலாப விகிதம் மிக அதிக அளவாக 37% அதிகரித்துள்ளது.


படிக்க : இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2


அமெரிக்காவின் டிரஸ்டுகளுக்கு எதிரான சட்டம் மற்றும் ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை பணவீக்கத்தின் பாதிப்புகளைச் சற்று மட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைக்கும்! பொருட்களை கட்டுப்பாட்டுடன் பகிர்ந்தளிக்கையில் பணவீக்கம் குறையும். இதே போல கூலியையும் விலையையும் உயர்த்தாமல் அதே நிலையில் இருத்தும் போது பண வீக்கம் குறையும்.

நாட்டுடமையாக்கள், பொதுத் துறைகளை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றுவதை – பொது சுகாதாரம், வங்கி முதலியன – கைவிடும் போது விலைவாசி குறையும்! ஆனால் கோடீசுவரர்கள் தமது இலாபத்தைக் குறைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஏற்கமாட்டார்கள்! தமது ஏகபோகத்தை பாதுகாப்பார்கள்! பொதுத் துறைகளை தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பார்கள்! கோடீசுவரர்களின் செய்தி இதுதான்: ‘பொருளாதாரம் எங்களின் இலாபத்திற்காகத் தான் இயங்குகிறது, உங்களுக்காக இல்லை!’.

ஆயிரக்கணக்கான கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரைனுக்கு வழங்குவதால் போரைத் தொடர்ந்து கொண்டுள்ள உக்ரேனியர்களுக்கும் அவர்களது எதிர்காலம் பற்றித் தெரியும்! அரசின் தலையாய வணிகமே போர்தான்! சாவு வியாபாரிகள்! போர்த் தளவாட உற்பத்தி ஆலைகள் கொழிக்கின்றன! இராணுவத்திற்கான வரவு செலவு பட்ஜெட் விரிவடைகிறது! இன்றைய தேதிக்கு அமெரிக்கா நாளொன்றுக்கு 13 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களைக் கொடுத்து உதவுகிறது! இது மொத்தமாக உதவி செய்ய உறுதியளித்த 5,500 கோடி டாலரில் ஒரு பகுதிதான்!

(தொடரும்…)

(குறிப்பு: கிரிஸ் ஹெட்ஜெஸ் என்ற புலிட்சர் பரிசு பெற்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையினைத் தழுவியது. இவர் தி நியூயார்க் டைம்ஸ் இதழில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர். Scheer Post-ல் 2020ல் வெளியான கட்டுரை. முதலாளித்துவ எழுத்தாளர்களே முதலாளித்துவத்தின் தோல்வியை எழுதுகின்றனர். அது நீடிக்கக் கூடாது என்கின்றனர்.)


நாகராசு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க